Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 30

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 30

87
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 30 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 30 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 30: மயூரசன்மன்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 30

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 30: மயூரசன்மன்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 30

அந்தக் காட்டுமலைப் பாதையில் சற்று நேரம் குதிரைகள் மெதுவாகக் காலடி வைக்கும் சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. பிரயாணிகள் இருவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள். பரஞ்சோதியின் மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. பெரிய மீசையுடனும், பிரம்மாண்டமான தலைப்பாகையுடனும் தன் பக்கத்தில் குதிரை மீது வரும் மனிதன் யாராயிருக்கும்? அவன் போர் முறைகளில் கை தேர்ந்த மகாவீரன் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்துக்குள் தன்னை என்ன பாடுபடுத்தி வைத்துவிட்டான்? சடக்கென்று குதிரை மேலிருந்து தன்னை அவன் இழுத்துக் கீழே தள்ளியதையும், மார்பின்மேல் ஒரு கண நேரம் மலைபோல் உட்கார்ந்திருந்ததையும், மறுபடியும் தான் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று கீழே தள்ளி இரும்புக் கையினால் தன் கழுத்தைப் பிடித்து நெரித்ததையும் நினைக்க நினைக்கப் பரஞ்சோதிக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கின. அதே சமயத்தில் மேற்கூறிய செயல்களில் அந்த வீரன் காட்டிய லாகவமும் தீரமும் சாமர்த்தியமும் அந்த வீரனிடம் பயபக்தியை உண்டு பண்ணின. ஆஹா! இப்படிப்பட்ட ஒரு மகா வீரனுடைய சிநேகம் தனக்கு நிரந்தரமாகக் கிடைக்குமானால் அது எப்பேர்ப்பட்ட பாக்கியமாயிருக்கும்?

திருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வந்தபோது வழியில் சிநேகமான புத்த பிக்ஷுவுக்கும் இந்த வீரனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? பிக்ஷு எவ்வளவோ தன்னிடம் அன்பாகப் பேசியிருந்தும், எவ்வளவோ ஒத்தாசை செய்திருந்தும் அவரிடம் தனக்கு ஏற்படாத பக்தியும் வாத்ஸல்யமும் தன்னைக் கீழே தள்ளி மேலே உட்கார்ந்த இந்த மனிதனிடம் உண்டாகக் காரணம் என்ன? அதே சமயத்தில், அவன் கிளம்பும்போது புத்த பிக்ஷு கூறிய எச்சரிக்கை மொழிகளும் நினைவுக்கு வந்தன. “வழியில் சந்திக்கும் யாரையும் நம்பாதே! சத்ருவாக நடித்தாலும் மித்திரனாக நடித்தாலும் நீ போகுமிடத்தையாவது ஓலை கொண்டு போகும் விஷயத்தையாவது சொல்லிவிடாதே! அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்துகொள்ள ஆசை கொண்டவர்கள் ஆயனரைத் தவிர இன்னும் எவ்வளவோ பேர் உண்டு. அதற்காக அவர்கள் உயிர்க்கொலை செய்யவும் பின்வாங்கமாட்டார்கள். எனவே நீ போகும் காரியம் இன்னதென்பதைப் பரம இரகசியமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதை உன்னிடமிருந்து தெரிந்து கொள்வதற்குப் பலர் பலவிதமான சூழ்ச்சிகளைச் செய்யலாம். அதிலெல்லாம் நீ ஏமாந்து விடக்கூடாது…”

இவ்விதம் புத்த பிக்ஷு கூறியதைப் பரஞ்சோதி நினைவு கூர்ந்து ஒருவேளை தன் அருகில் இப்போது வந்து கொண்டிருப்பவன் அத்தகைய சூழ்ச்சிக்காரர்களில் ஒருவன்தானோ, தன்னைக் குதிரையிலிருந்து கீழே இழுத்துத் தள்ளிப் படாதபாடுபடுத்தியதெல்லாம் ஒருவேளை பிக்ஷுவின் ஓலையைக் கவர்வதற்காகச் செய்த பிரயத்தனமோ என்று எண்ணமிட்டான். ஓலை தன் இடைக்கச்சுடன் பத்திரமாய்க் கட்டப்பட்டிருப்பதைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அதைத் தன்னிடமிருந்து கைப்பற்றுவது எளிதில்லை என்று உணர்ந்து தைரியமடைந்தான். அப்போது சற்று தூரத்தில் ஒரு நரி சோகமும் பயங்கரமும் நிறைந்த குரலில் ஊளையிடும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷத்தில் முறைவைப்பதுபோல் அநேக நரிகள் சேர்ந்தாற்ப் போல் ஊளையிடும் சத்தம் கேட்கத் தொடங்கியபோது, பரஞ்சோதிக்கு ரோமம் சிலிர்த்துத் தேகமெல்லாம் வியர்த்தது. ஒரு கூட்டம் நரிகளின் ஊளை நின்றதும் இன்னொரு கூட்டம் ஊளையிட ஆரம்பிக்கும். இவ்விதம் நரிகள் கூட்டம் கூட்டமாக முறைவைத்து ஊளையிடும் சத்தமும், அந்த ஊளைச் சத்தமானது குன்றுகளில் மோதிப் பிரதிபலித்த எதிரொலியுமாகச் சேர்ந்து அந்தப் பிரதேசத்தையெல்லாம் விவரிக்க முடியாதபடி பயங்கரம் நிறைந்ததாகச் செய்தன.

இத்தனை நேரமும் மௌனமாய் வந்த வீரன், “தம்பி! இப்பேர்ப்பட்ட காட்டு வழியில் முன்னிருட்டு நேரத்தில் தன்னந்தனியாக நீ புறப்பட்டு வந்தாயே, உன்னுடைய தைரியமே தைரியம்! என் நாளில் எத்தனையோ தடவை நான் தனி வழியே பிரயாணம் செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே இந்தப் பிரதேசத்தில் சற்று முன்னால் கதி கலக்கம் உண்டாகி விட்டது!” என்றான். அப்போது பரஞ்சோதி சிறிது தயக்கத்துடன், “ஐயா! என்னைக் கண்டதும் தாங்கள் ‘பிசாசு! பிசாசு!” என்று அலறிக் கொண்டு குதிரைமேலிருந்து விழுந்தீர்களே? அது ஏன்? உண்மையாகவே பயப்பட்டீர்களா? அல்லது என்னைக் கீழே தள்ளுவதற்காக அப்படிப் பாசாங்கு செய்தீர்களா? சற்று முன்னால் அப்படி அலறி விழுந்தவர், இப்போது கொஞ்சம் கூடப் பயப்படுவதாகத் தெரியவில்லையே!” என்றான்.

“ஆஹா! அது தெரியாதா உனக்கு? ஒருவன் தனி மனிதனாயிருக்கும் வரையில் ஒரு பிசாசுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாது. தனி மனிதனைப் பிசாசு அறைந்து கொன்று விடும். ஆனால், இரண்டு மனிதர்கள் சேர்ந்து விட்டால், இருநூறு பிசாசுகளை விரட்டியடித்து விடலாம்! இந்த மலைப் பிரதேசத்தில் இருநூறாயிரம் பிசாசுகள் இராவேளைகளில் “ஹோ ஹா!” என்று அலறிக் கொண்டு அலைவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு பிசாசுகளும் சேர்ந்து வந்தாலும், இரண்டு மனிதர்களை ஒன்றும் செய்ய முடியாது! தம்பி! இந்தப் பிரதேசத்தைப் பற்றிய கதை உனக்குத் தெரியுமா?” என்று குதிரை வீரன் கேட்டான். “தெரியாது; சொல்லுங்கள்!” என்றான் பரஞ்சோதி. அதன்மேல் அந்த வீரன் சொல்லிய வரலாறு பின்வருமாறு:

ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் வடதேசத்திலிருந்து வீரசன்மன் என்னும் பிராம்மணன் தன் சீடனாகிய மயூரசன்மன் என்னும் சிறுவனுடன் காஞ்சி மாநகருக்கு வந்தான். அவ்விருவரும் ஏற்கெனவே வேத சாஸ்திரங்களில் மிக்க பாண்டித்தியம் உள்ளவர்கள். ஆயினும் காஞ்சி மாநகரின் சம்ஸ்கிருத கடிகை (சர்வகலாசாலை)யைச் சேர்ந்த மகா பண்டிதர்களால் ஒருவருடைய பாண்டித்தியம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகுதான் அந்தக் காலத்தில் வித்தை பூர்த்தியானதாகக் கருதப்பட்டது. அதற்காகவே வீரசன்மனும் மயூரசன்மனும் காஞ்சிக்கு வந்தார்கள். ஒருநாள் அவர்கள் காஞ்சியின் இராஜவீதி ஒன்றில் போய்க் கொண்டிருந்தபோது, பல்லவ மன்னனின் குதிரை வீரர்கள் சிலர் எதிர்ப்பட்டார்கள். வீதியில் நடந்த வண்ணம் ஏதோ ஒரு முக்கியமான சர்ச்சையில் ஈடுபட்டிருந்த குருவும் சிஷ்யனும் குதிரை வீரர்களுக்கு இடங்கொடுத்து விலகிக் கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட குதிரைவீரன் ஒருவன் குதிரை மேலிருந்தபடியே வீரசன்மனைக் காலால் உதைத்துத் தள்ளினான். குருவுக்கு இத்தகைய அவமானம் நேர்ந்ததைக் கண்டு சகியாத சிஷ்யன் அந்த வீரன் கையிலிருந்த வாளைப் பிடுங்கி வீசவே அவன் வெட்டுப்பட்டுக் கீழே விழுந்தான். மற்றக் குதிரை வீரர்கள் மயூரசன்மனைப் பிடிக்க வந்தார்கள். அவர்களிடம் அகப்பட்டால் தன் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை அறிந்த மயூரசன்மன், கையில் பிடித்த வாளுடன் கீழே விழுந்த வீரனின் குதிரைமீது தாவி ஏறி தன்னைப் பிடிக்க வந்தவர்களையெல்லாம் வீராவேசத்துடன் வெட்டி வீழ்த்திக் கொண்டு காஞ்சி நகரை விட்டு வௌியேறினான்.

பல்லவ ராஜ்யத்துக்கே அவமானம் விளைவிக்கத் தக்க இந்தக் காரியத்தைக் கேட்டு, மயூரசன்மனைக் கைப்பற்றி வருவதற்காக இன்னும் பல குதிரை வீரர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால், அவர்களிடம் அவன் அகப்படவில்லை. கடைசியில், மயூரசன்மன் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸரீ பர்வதத்தை அடைந்து, அங்கேயுள்ள அடர்ந்த காட்டில் சிறிது காலம் பல்லவ வீரர்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். பின்னர், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மலைச் சாதியரைக் கொண்டு ஒரு பெரிய சைனியத்தைத் திரட்டியதுமல்லாமல் அங்கே சுதந்தர ராஜ்யத்தையும் ஸ்தாபித்தான். பின்னர், அந்தப் பெரிய சைனியத்துடனே, காஞ்சியில் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழி வாங்கும் பொருட்டுப் புறப்பட்டு வந்தான். மயூரசன்மனின் சைனியமும் காஞ்சிப் பல்லவ சைனியமும் இந்த மலைக்காட்டுப் பிரதேசத்திலே தான் சந்தித்தன. ஏழு நாள் இடைவிடாமல் யுத்தம் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் போரில் மாண்டார்கள். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மலைப் பிரதேசத்தையெல்லாம் நனைத்தது.

அப்படி இரத்த வெள்ளம் ஓடிய இடத்திலேதான் சில காலத்துக்குப் பிறகு இந்தப் புரசங்காடு முளைத்தது. மேற்சொன்ன பயங்கர யுத்தம் நடந்த அதே பங்குனி மாதத்தில் ஒவ்வொரு வருஷமும் புரசமரங்களின் இலை உதிர்ந்து இரத்தச் சிவப்பு நிறமுள்ள பூக்கள் புஷ்பிக்கின்றன. அந்தப் போரில் இறந்த ஆயிரக்கணக்கான வீரர்களின் ஆவிகள் இன்னமும் இங்கே உலாவிக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்துக் கிராம ஜனங்கள் நம்புகிறார்கள். ஆவிக் குதிரைகளின் மீதேறிய ஆவி வீரர்கள் வாள்களையும் வேல்களையும் ஏந்தி ‘ஹா ஹா’ என்று கூவிக்கொண்டு இந்த நிர்ஜனப் பிரதேசத்தில் அலைவதாகவும், யாராவது பிரயாணிகள் இரவு வேளையில் தனி வழியே வந்தால் அவர்களைக் கொன்று இரத்தத்தைக் குடித்துத் தாகத்தைத் தணித்துக் கொள்வதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்!

மேற்படி வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதிக்குக் கொஞ்சம் நஞ்சம் பாக்கியிருந்த பயமும் போய் விட்டது. அங்கே ஆவிகள் அலைவது பற்றிய கதையெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்ற உறுதி ஏற்பட்டது. “என்னைக் கண்டதும் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் செத்துப்போன வீரனின் பிசாசுதான் வந்து விட்டதென்று நினைத்து அப்படி உளறி அடித்துக்கொண்டு விழுந்தீரோ?” என்று கூறி நகைத்தான்.

“இரத்தமும் சதையுமுள்ள மனிதனோடு நான் சண்டை போடுவேன். வில்போர், வாள்போர், வேல்போர், மல்யுத்தம் எது வேண்டுமானாலும் செய்வேன். ஆனால், ஆவிகளோடு யார் போரிட முடியும்?” என்று அவ்வீரன் சிறிது கடுமையான குரலில் கூறவே பரஞ்சோதி பேச்சை மாற்ற எண்ணி, “இருக்கட்டும் ஐயா! இங்கே நடந்த யுத்தத்தின் முடிவு என்ன ஆயிற்று? யாருக்கு வெற்றி கிடைத்தது?” என்று கேட்டான். “மயூரசன்மனுடைய சைனியத்தைப்போல் பல்லவ சைனியம் மூன்று மடங்கு பெரியது. ஆகையால், பல்லவ சைனியம் தான் ஜயித்தது. மயூரசன்மனை உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் கைப்பற்றிப் பல்லவ மன்னன்முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள்…!” “அதன் பிறகு என்ன நடந்தது?” என்று மிகுந்த ஆவலுடன் கேட்டான் பரஞ்சோதி. “என்ன நடந்திருக்குமென்று நீதான் சொல்லேன்!” என்று அவ்வீரன் கூறிப் பரஞ்சோதியின் ஆவலை அதிகமாக்கினான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 29
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 31

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here