Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 39

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 39

77
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 39 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 39 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 39: கமலியின் மனோரதம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 39

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 39: கமலியின் மனோரதம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 39

விவரிக்க முடியாத இன்பத்தையும் வேதனையையும் ஒருங்கே தந்த மேற்கூறிய நிழல் நினைவுகளைப் பொறுக்க முடியாமல், பின்புறக் கதவை ஓசைப்படாமல் மெதுவாய்த் திறந்து கொண்டு பூந்தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். அப்போது இரவில் மூன்றாம் ஜாமம் நடந்துகொண்டிருந்தது. பிறைச் சந்திரன் விரித்த இளம் நிலவின் மோகன ஒளியில் அந்தப் பூந்தோட்டம் கனவு உலகத்தில் காணும் ஒரு காட்சி போல் தென்பட்டது.

பூந்தோட்டத்தில் உலாவி வர எண்ணிப் புறப்பட்ட சிவகாமி, வீட்டுச் சுவரோரமாகச் சற்றுத் தூரம் சென்றபோது, பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். கமலியும் கண்ணபிரானும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த அறையின் பின்புறப் பலகணி வழியாக அவர்களுடைய பேச்சுத் தெளிவாகக் கேட்டது. அந்தப் பக்கம் போகமல் திரும்பிவிடவேண்டுமென்று எண்ணிய சிவகாமியின் செவியில் “மாமல்லர்” “குமார சக்கரவர்த்தி” என்ற வார்த்தைகள் விழுந்தன. பிறகு அவளுடைய கால்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டன. பலகணியின் அருகில் சுவர் ஓரமாக நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள்.

“மாமல்லருக்குப் பெண் கொடுக்கிறேன் என்று பாண்டிய மன்னர் தூது அனுப்பியதில் என்ன ஆச்சரியம்? பூலோகத்திலுள்ள ராஜ ராஜாக்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று அவருக்குப் பெண் கொடுக்கப் போட்டியிடமாட்டார்களா?” என்றாள் கமலி.

“மாமல்லருக்குச் சீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று மகாராணிக்கு ஆசை. மூன்று தேசத்து ராஜாக்களுக்குத் திருமணத் தூது அனுப்ப வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள்ளே இந்த யுத்தம் வந்து விட்டதால் அது தடைப்பட்டுப் போயிற்று. இப்போது பாண்டிய ராஜாவே தூது அனுப்பியிருப்பதில் மகாராணிக்கு அசாத்திய சந்தோஷம்!” என்றான் கண்ணபிரான்.

“சரி; அப்புறம் என்ன நடந்தது?” என்று கமலி கேட்டாள்.

“அரண்மனையில் மாமல்லரை விட்டேன் உடனே, தாயாருக்கும் பிள்ளைக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது!..”

“சண்டையா! எதற்காக?”

“குமார சக்கரவர்த்தியிடம் ‘கல்யாணம்’ என்று யாராவது சொன்னாலே, அவருக்குப் பிரமாதமான கோபம் வந்து விடுகிறது. ‘இதற்குத்தானா இவ்வளவு அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? போர்க்களத்திலிருந்துதான் ஏதோ செய்தி வந்திருக்கிறதாக்கும் என்று நினைத்தல்லவா ஓடி வந்தேன்?’ என்று அவர் மகாராணியிடம் கோபமாகப் பேசினார்…! கமலி! உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா? மிகவும் முக்கியமான இரகசியம் கேட்டால் பிரமித்துப் போவாய்!” என்றான் கண்ணன்.

“பெண்பிள்ளைகளிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்று உனக்குத் தெரியாதா, கண்ணா?” என்றாள் கமலி.

“ஓஹோ! நீ பெண்பிள்ளையா? மறந்து போய்விட்டேன்!” என்று கண்ணன் நகைத்துக் கொண்டே கூறினான்.

“ஆமாம்! நீ ஆண்பிள்ளை என்பதையும் மறந்து போய் விடுவாய்! யுத்தம் வருகிறதல்லவா?”

“யுத்தம் வரட்டும்! அப்போது தெரிகிறது யார் ஆண்பிள்ளை, யார் பெண்பிள்ளையென்று! நீ என் காலில் விழுந்து, ‘கண்ணா! யுத்தத்துக்குப் போகாதே!’ என்று கதறப் போகிறாய். நான் உன்னை உதறித் தள்ளிவிட்டுப் போகப் போகிறேன்….”

“அப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாய் உன் மனத்தில்? யுத்தம் கிட்டி வரும்போது நீ போகாவிட்டால் நானே உன்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமாட்டேனா?… கல்யாணம் ஆன பிறகு நீ இப்படிப் பயங்கொள்ளியாகப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் குமாரச் சக்கரவர்த்தி ‘கல்யாணம்’ என்றாலே எரிந்து விழுகிறார் போலிருக்கிறது!”

“இப்படித்தானே நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்? யுத்தம் வந்திருக்கிறபடியால் குமார சக்கரவர்த்தி கல்யாணம் வேண்டாம் என்கிறார் என்றுதான் எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; பிசகு கமலி, பெரும் பிசகு!”

“எது பிசகு, கண்ணா?”

“எல்லாரும் நினைத்துக்கொண்டிருப்பது பிசகு. மாமல்லர் கல்யாணப் பேச்சை வெறுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது பெரிய இரகசியம் அதிலும் உன் தங்கச்சி சிவகாமியைப் பற்றிய இரகசியம் கமலி!”

“என்ன? என்ன? என் தங்கச்சியைப்பற்றி எனக்குத் தெரியாத இரகசியம் என்ன இருக்கிறது? ஏதாவது இசை கேடாகச் சொன்னாயோ, பார்த்துக்கொள்!”

“இசைக்கேடு ஒன்றுமில்லை; பெருமையான விஷயந்தான்!… சொன்னால், எனக்கு என்ன தருகிறாய்?”

“சொல்லிவிட்டுக் கேள்! பொருளைப் பார்த்து விட்டல்லவா விலையைத் தீர்மானிக்க வேண்டும்?” என்றாள் கமலி.

“அப்புறம் ஏமாற்றக்கூடாது, தெரியுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி, வீரத்தில் அர்ஜுனனையும், அழகில் மன்மதனையும் ரதம் ஓட்டுவதில் கண்ணபிரானையும் ஒத்தவரான மாமல்ல நரசிம்மர், உன்னுடைய தங்கச்சி சிவகாமியின்மேல் காதல் கொண்டிருக்கிறார், கமலி!” “ஆ!: என்னும் சத்தம் மட்டுந்தான் கமலியின் வாயிலிருந்து வந்தது. அவள் ஆச்சரியத்தினால் திகைத்து விட்டாள்.

வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவகாமியின் நெஞ்சில் அந்த ‘ஆ!’ சத்தமானது கூரிய அம்பைப்போல் புகுந்தது. தன்னிடம் இவ்வளவு ஆசையும் நம்பிக்கையும் வைத்துள்ள அருமைத் தோழியிடம் தனது அந்தரங்கத்தை வெளியிடாமல் இத்தனை நாளும் ஒளித்து வைத்திருந்தது பற்றி அவள் வெட்கினாள். அறைக்குள்ளே சம்பாஷணை மேலும் தொடர்ந்து நடந்தது.

“கமலி! நான் சொன்ன செய்தி உனக்கு அதிசயமாயிருக்கிறதல்லவா?” என்று கண்ணபிரான் கேட்டான்.

“அதிசயம் என்ன? நம்முடைய குமார சக்கரவர்த்தி புத்திசாலி என்றுதான் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன்? அதனால்தான் அவருக்கு என் தங்கச்சியின் மேல் மனம் சென்றது” என்று கமலி சமத்காரமாக விடை சொன்னாள்.

“ஓஹோ! அப்படியா? நீயும் உன் தங்கையும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இந்த வேலை செய்தீர்கள் போலிருக்கிறது! உன்னுடைய வலையில் என்னை நீ போட்டுக் கொண்டாய்! உன் தங்கச்சி மாமல்லரையே வலை போட்டுப் பிடித்துவிட்டாள்!”

“என்ன சொன்னாய்?” என்று கமலி கம்பீரமாகக் கேட்டு விட்டு மேலும் சொல்லம்புகளைப் போட்டாள்.. “நானா உன்னைத் தேடி வந்து என்னுடைய வலையில் போட்டுக் கொண்டேன்? நானா வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் உன்னைத் தொடர்ந்து வந்து கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘கண்ணே! பெண்ணே! நீ கருணை செய்யாவிட்டால் நான் உயிரை விடுவேன்!’ என்று கதறினேன்? நானா ‘என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கெஞ்சினேன்?…”

“இல்லை, கமலி, இல்லை! நீ உன்னுடைய கண்ணாகிற வலையை வெறுமனே விளையாட்டுக்காக விரித்தாய்! அதிலே நானாக ஓடிவந்துதான் அகப்பட்டுக் கொண்டேன்!”

“நம்முடைய கதை இருக்கட்டும் மாமல்லருக்கும் என் தங்கைக்கும் நேசம் என்கிற விஷயம் உனக்கு எப்படித் தெரிந்தது? அதைச் சொல்லு!” என்றாள் கமலி.

“ஆ! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா, என்ன? கள்ளனுக்குத் தெரியாதா கள்ளனின் சமாசாரம்? நான் உன்னை உன் தகப்பனார் வீட்டில் அந்தக் காலத்தில் என்னமாய்ப் பார்த்தேன்! ஞாபகம் இருக்கிறதா? அம்மாதிரியே உன் தங்கையை இப்போது மாமல்லர் ஆர்வத்தோடு பார்க்கிறார்.”

“இவ்வளவுதானா?”

“இன்னும் என்ன வேண்டும்? நாவுக்கரசர் மடத்தில் அபிநயம் பிடித்தானதும் உன் தங்கை மூர்ச்சையாகி விழுந்து விட்டாள் என்று சொன்னேனல்லவா? உடனே மாமல்லர் ஓடிவந்து சிவகாமியைத் தூக்கி ஆயனர் மடியின்மீது வைத்தார். கமலி அப்போது அவருடைய கைகளும் தேகமும் எப்படிப் பதறின தெரியுமா? இதுவரையில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமாயிருந்தது. இன்றைக்குத் தான் சர்வ நிச்சயமாயிற்று.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. விம்மலுடன் அழுகை வரும்போலிருந்தது. சமாளித்துக்கொண்டு மேலும் நடந்த சம்பாஷணையைக் கேட்டாள்.

“இவ்வளவு கூர்மையாய்க் கவனித்தாயே; நீ ரொம்பப் புத்திசாலிதான்! மாமல்லரும் பாக்கியசாலிதான்!” என்றாள் கமலி.

“மாமல்லர் பாக்கியசாலி என்றா சொல்கிறாய்? இதனால் ஏற்படப் போகிற சங்கடங்களையெல்லாம் நினைத்தால்…”

“சங்கடம் என்ன வந்தது?”

“குமார சக்கரவர்த்தியின் கல்யாணம் என்றால், நம்முடைய கல்யாணத்தைப்போல் என்று நினைத்துக் கொண்டாயா? எத்தனை எத்தனையோ யோசனைகள் செய்வார்கள்…”

“கண்ணா! என் தங்கையை மட்டும் சாமானியமான பெண் என்று நினைத்தாயா? தமயந்தியை மணந்துகொள்ளத் தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் சிவகாமியைத் தேடிக் கொண்டு வரமாட்டார்களா? ஏதோ தமயந்தி மனம் வைத்து நள மகாராஜனுக்கு மாலையிட்டாள்!..”

“ஆனால் தமயந்தி அரண்மனையில் பிறந்த ராஜ குமாரியாச்சே, கமலி!”

“என் தங்கை ஆயிரம் ராஜகுமாரிகளுக்கு இணையாவாள். கண்ணா! நீ வேணுமானாலும் பார்! என்னுடைய மனோரதம் ஒருநாள் கட்டாயம் நிறைவேறப் போகிறது!”

“அது என்ன மனோரதம் கமலி?”

“இந்த யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மாமல்லருக்கு மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. தங்க ரதத்தில், நவரத்ன சிங்காசனத்தில் அமர்ந்து நரசிம்ம சக்கரவர்த்தி இராஜவீதிகளில் பவனி வருகிறார். அவருக்குப் பக்கத்தில், தேவேந்திரனுக்கு அருகில் இந்திராணியைப் போல் என் தங்கை சிவகாமி அமர்ந்திருக்கிறாள். தங்க ரதத்தின் முன் தட்டில் நீ ஜம் என்று உட்கார்ந்து ரதத்தை ஓட்டிக்கொண்டு வருகிறாய். நான் அரண்மனைக் கோபுர வாசலில் மேல் மாடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ரதம் அரண்மனை வாசலில் வந்து நின்றதும் கூடைகூடையாக மல்லிகை மலர்களையும் சண்பகப் பூக்களையும் அவர்கள்மேல் கொட்டுகிறேன். நடுவில் உன் தலையிலும் ஒரு கூடைப் பூவைக் கவிழ்க்கிறேன் இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் என் மனோரதம், கண்ணா!”

“கமலி, உன் மனோரதம் நிறைவேறினால் எனக்கும் அளவில்லாத சந்தோஷந்தான்” என்றான் கண்ணன்.

சிவகாமி திரும்பித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். இருதயத்தின் அடிவாரத்திலிருந்து பொங்கி வந்த விம்மலையும் அழுகையையும் ஆனமட்டும் முயன்றும் அவளால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

இரவு நாலாவது ஜாமத்தில், விழிப்புமில்லாமல் நித்திரையுமில்லாமல் அரைத் தூக்க நிலையில் சிவகாமி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும்போது, முன்னர் அவள் மனக் கண்முன் தோன்றிய நிழல் தோற்றங்கள் உருவம் எடுக்க ஆரம்பித்தன. ஒரு செண்பக மரத்தின் கிளையில் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து ஒன்றோடொன்று கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் தீப்பட்டு எரியத் தொடங்குகின்றன. ஆண் புறாவானது பெண் புறாவைப் பார்த்து, “நீ இங்கேயே இரு; நான் திரும்பி வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்!” என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்கிறது. அது போன வழியையே பெண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் புறா திரும்பி வருமா? வந்து, பெண் புறாவைத் தப்பவைக்குமா? இதை அறிய முடியாதபடி பெண் புறாவை நாலாபுறமும் புகை வந்து சூழ்ந்துவிடுகிறது. அந்த நேரத்தில் அவ்விதம் புகையினால் சூழப்பட்டிருப்பது பெண் புறா அல்ல தானே என்று சிவகாமி பிரமையுறுகிறாள்.

கற்பனை உலகக்காட்சி மாறுகிறது மல்லிகைத் தோட்டத்தில் ஆணும் பெண்ணுமாக ஒரு கலைமானும் ஒரு புள்ளிமானும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. விளையாட்டின் இடையே புள்ளிமானானது மல்லிகைப் புதருக்கு அருகில் மறைந்து நிற்கிறது. மல்லிகைப் புதரில் பூத்துச் சிரித்திருந்த வெள்ளி மலர்களுக்கும், புள்ளிமானின் மீது அள்ளித் தெளித்திருந்த வெள்ளிப்பொட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கலைமான் புள்ளிமானைத் தாண்டிக் கொண்டு அப்பால் போகிறது. அதைக் கண்டு புள்ளிமான் சிரிக்கிறது. இப்படி அவை விளையாடிக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் ஒரு மல்லிகைப் புதரில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்கள் ஜொலிப்பதைக் கண்டு அதிசயித்தது. பிறகு, அவை நட்சத்திரங்கள் அல்ல, – அனல் கட்டிகள் என்று தோன்றியது. பின்னர், அந்த இரண்டு அனல் கட்டிகளும், ஒரு பெரிய புலியின் இரண்டு கண்கள்தான் என்று தெரியவே, பெண் மானின் சகல நாடியும் ஒடுங்கிவிட்டது. கலைமானைக் கூவி அழைக்க அது முயன்றது. ஆனால், அதன் தொண்டையிலிருந்து சத்தமே உண்டாகவில்லை. மேலே என்ன ஆயிற்று? புள்ளிமான் தப்பித்துச் சென்றதா? கலைமானுடன் சேர்ந்ததா? அதுதான் தெரியவில்லை. அத்தகைய பயங்கர அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த பெண்மான் உண்மையில் மான் அல்ல. தானே அந்த மான் என்று மட்டும் சிவகாமிக்கு அந்தக் கணத்தில் தெரிய வந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 38
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here