Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 40

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 40

72
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 40 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 40 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 40: கட்டாயப் பிரயாணம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 40

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 40: கட்டாயப் பிரயாணம்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 40

மகேந்திர விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிய பரஞ்சோதி அன்று பகலெல்லாம் பிரயாணம் செய்து, வடபெண்ணையுடன் பாபாக்கினி நதி கலக்கும் இடத்திலுள்ள புத்த விஹாரத்தைச் சூரியாஸ்தமன நேரத்தில் அடைந்தார்கள். விஹாரத்தின் வாசலில் புத்த பிக்ஷு ஒருவர் நின்று கொண்டிருந்தார். மாலை நிறத்து மஞ்சள் வெயிலில் பிக்ஷுவின் காவி உடையானது தங்க நிறமாகப் பிரகாசித்தது. பரஞ்சோதி குதிரையிலிருந்து இறங்கிப் பிக்ஷுவை அணுகியதும், அவர் இவனை என்னவோ கேட்டார். அவர் பேசிய பாஷை பரஞ்சோதிக்குப் புரியவில்லை. ஆனாலும் தான் யார் என்பதை விசாரிக்கிறார் என்று ஊகித்துக் கொண்டு தமிழிலேயே, தான் நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவதாகவும் தன்னை இவ்விடம் தங்கி வழி கேட்டுக் கொண்டு போகும்படி நாகநந்தியடிகள் பணித்தார் என்றும் கூறினான்.

நாகநந்தி என்று கேட்டதும் அந்தப் பிக்ஷுவின் முகத்தில் மாறுதல் காணப்பட்டது. சமிக்ஞையினால் “கொஞ்சம் இங்கேயே இரு!” என்று பரஞ்சோதிக்குச் சொல்லிவிட்டு, பிக்ஷு உள்ளே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பிவந்து பரஞ்சோதியை விஹாரத்துக்குள் அழைத்துச் சென்றார். அந்தப் பௌத்த விஹாரம் காஞ்சியில் பார்த்த இராஜ விஹாரத்தைப் போலக் கல், மரம், சுண்ணாம்பினால் கட்டப்பட்டதல்லவென்பதையும், குன்றிலே குடைந்து காஞ்சி இராஜ விஹாரத்தைப் போல் இது அவ்வளவு பெரிதாக இல்லை; அவ்வளவு விலையுயர்ந்த பூஜாத்திரவியங்களும் இங்கே காணப்படவில்லை. ஆனால் விஹாரத்தின் அமைப்பு முறை அதே மாதிரி இருந்தது. நடுவில் பிக்ஷுக்கள் கூடிப் பிரார்த்தனையும் தியானமும் செய்வதற்குரிய சைத்யமும் அதன் பின்பக்கத்துப் பாறைச் சுவரில் பிரம்மாண்டமான புத்தர் சிலையும் இருந்தன. அந்தப் புத்தர் சிலையும், சிலைக்கு மேலே கவிந்திருந்த போதி விருட்சமும், புத்தர் மீது புஷ்பமாரி பொழிந்து கொண்டிருந்த கந்தர்வ வடிவங்களும், – எல்லாம் பாறையில் குடைந்து அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார தீபங்கள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. புத்தபகவானுக்கு எதிரில் பலவித வர்ண மலர்கள் தனித் தனிக் கும்பலாகக் குவிக்கப்பட்டுக் கண்ணைக் கவரும் காட்சியளித்தன. புஷ்பங்களின் நறுமணத்துடன் அகிற்புகையின் வாசனையும் சேர்ந்து சிந்தையை ஒருமுகப்படுத்த உதவி செய்தது.

சைன்யத்துக்கு இருபுறத்திலும் புத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கும் மாணாக்கர்கள் கல்வி பயில்வதற்கும் உரிய குகை அறைகள் குடையப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தின் கோடியில் மச்சுப்படிகள் போன்ற படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்தப் படிகளின் வழியாகப் பரஞ்சோதியைப் பிக்ஷு அழைத்துச் சென்றார். கீழேயுள்ள அறைகளைப்போல் மேலேயும் பாறையில் குடையப்பட்ட அறைகள் காணப்பட்டன. அவற்றில் விசாலமான அறை ஒன்றில் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த பெரிய புத்த பிக்ஷுவிடம் பரஞ்சோதி அழைத்துச் சென்று விடப்பட்டான்.

அந்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு அவர்தான் என்பதைப் பரஞ்சோதி ஊகித்துக்கொண்டு அவரைக் கை கூப்பி வணங்கினான்.

“புத்தம் சரணம் கச்சாமி,” “தர்மம் சரணம் கச்சாமி,” “சங்கம் சரணம் கச்சாமி” என்று தலைமைப் பிக்ஷு கூறி மூன்று முறை புத்தபகவானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பரஞ்சோதியைப் பார்த்துத் தமிழ்ப் பாஷையில் “குழந்தாய்! நீ யார்? என்ன காரியமாக வந்தாய்? யார் உன்னை அனுப்பினார்கள்?” என்று கேட்டார்.

பரஞ்சோதி நாகநந்தியடிகள் தன்னை ஓலையுடன் அனுப்பி வைத்ததுபற்றி விவரமாகக் கூறினான். நாகநந்தி கொடுத்தனுப்பிய ஓலை எங்கே? அந்த ஓலையை நான் பார்க்கலாமா?” என்று பிக்ஷு கேட்டார்.

“மன்னிக்க வேண்டும் ஓலையை சத்யாச்ரயரைத் தவிர வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாதென்று நாகநந்தியடிகளின் கட்டளை” என்றான் பரஞ்சோதி. சத்யாச்ரயர் என்ற பெயரைக் கேட்டதும் பிக்ஷுவின் முகத்தில் ஒரு மர்மமான புன்னகை தோன்றியது. அதைப் பரஞ்சோதி கவனித்தானாயினும் அதன் பொருளை அறிய முடியவில்லை.

“நாகநந்தியடிகள் என்ன கட்டளையிட்டாரோ, அவ்விதமே செய். இன்றிரவு இங்கேயே படுத்துக்கொள். ஸரீ பர்வதத்துக்குப் போகும் வழியெல்லாம் இப்போது அபாயம் நிறைந்ததாயிருக்கிறது. இன்று ராத்திரியே அவ்விடத்துக்குப் போகும் வீரர்கள் சிலர் இங்கே வரக்கூடும். அவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உனக்கு வழி காட்டுவதுடன் பத்திரமாகவும் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்!” என்று ஆசார்ய பிக்ஷு கூறி, இன்னொரு பிக்ஷுவைப் பார்த்துச் சமிக்ஞை செய்தார். அவர் பரஞ்சோதியை அங்கிருந்து அழைத்துச் சென்று உணவருந்தச் செய்த பிறகு, கீழே ஓர் அறையில், அவன் படுத்துக் கொள்வதற்கு இடம் காட்டினார். சென்ற இரவில் நல்ல தூக்கம் இல்லாமையாலும் நெடுந்தூரப் பிரயாணத்தினாலும் களைப்புற்றிருந்த பரஞ்சோதி இன்று படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கலானான்.

தோளைப் பிடித்து யாரோ குலுக்குவதறிந்து பரஞ்சோதி திடுக்கிட்டுக் கண் விழித்தான். முதல்நாள் அவனை மடத்துக்குள் அழைத்து வந்த பிக்ஷுதான் அவனை எழுப்பிக் கொண்டிருந்தார் பக்கத்தில் பெரிய பிக்ஷுவும் நின்றார். “தம்பி! நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவோர் புறப்படுகிறார்கள் நீயும் கிளம்பு” என்றார் பெரிய பிக்ஷு. பரஞ்சோதி அவசரமாக எழுந்து தலைமாட்டில் வைத்திருந்த ஓலைக் குழாயை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிக்ஷுக்களைப் பின்தொடர்ந்து மடத்தின் வாசலுக்கு வந்தான்.

அங்கே அவனுடைய குதிரையைத் தவிர இன்னும் ஆறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் அருகில் ஆஜானுபாகுவான வீரன் ஒருவனும் நிற்பதைக் கீழ் வானத்தில் தோன்றிய பிறைமதியின் மங்கிய நிலவொளியில் பரஞ்சோதி கண்டான். “இந்த வீரர்கள் அவசர காரியமாக ஸரீ பர்வதத்துக்குப் போகிறார்கள். இவர்களுடன் போனால் குறுக்கு வழியாக வெகு சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்று பெரிய பிக்ஷு கூறினார். “மனத்தில் காரணம் தெரியாத தயக்கத்துடன் பரஞ்சோதி குதிரைமீது ஏறினான். குதிரைகள் வடபெண்ணை நதிக்கரையோடு மேற்குத் திசையை நோக்கி விரைந்து சென்றன.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 39
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 41

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here