Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 43

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 43

76
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 43 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 43 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 43: மர்ம ஓலை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 43

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 43: மர்ம ஓலை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 43

இராஜாதிராஜனான புலிகேசி மன்னன் ஒல்லியாக உயர்ந்த ஆகிருதியும், வற்றி உலர்ந்து எலும்புகள் தெரிந்த தேகமும் உடையவனாக இருந்தான். அவனுடைய முகத்தோற்றம் இரும்பையொத்த நெஞ்சத்தையும், தயைதாட்சண்யம் இல்லாத கடூர சுபாவத்தையும் பிரதிபலித்தது. கோவைப் பழம்போல் சிவந்து அனல் கக்கிய அவனுடைய கண்களைப் பார்க்கும் போது, கழுகின் கண்களைப் போன்று தூரதிருஷ்டியுடைய கண்கள் அவை என்று தோன்றியது. புலிகேசியின் முகத்தைப் பார்த்ததும் நமக்கு ஒருகணம் திகைப்பு ஏற்படுகிறது. ‘ஆ! இந்த முகத்தை இதற்கு முன்னால் எங்கேயாவது பார்த்திருக்கிறோமா என்ன?’ என்று வியப்புறுகிறோம். ‘கம்பீரக்களையுடன் கடூரம் கலந்த இந்த முகத்தையும் அறிவொளியுடன் கோபக் கனலைக் கலந்து வீசும் இந்தக் கண்களையும் வேறு எங்கேயும் பார்த்திருக்க முடியாது’ என்று தீர்மானிக்கிறோம். ‘இத்தகைய முகம் வேறு யாருக்காவது இருப்பதென்றால், அது யமதர்ம ராஜனாகத்தான் இருக்க வேண்டும்!” என்ற முடிவுக்கு வருகிறோம். புலிகேசியின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பரஞ்சோதியும் அதே முடிவுக்குத்தான் வந்தான்.

பரஞ்சோதியைப் பிடித்துக்கொண்டு வந்த வீரர்களின் தலைவன் சத்யாச்ரய புலிகேசிக்கு வணக்கம் செலுத்திவிட்டு, வடபெண்ணை நதிக்கரையிலுள்ள பௌத்தமடத் தலைவர் இந்த வாலிபனைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகச் சொன்னதிலிருந்து நடந்தவற்றை விவரமாகக் கூறிவந்தான். அவன் சொல்லிமுடிப்பதற்குள்ளே புலிகேசி பொறுமை இழந்தவனாய், “அதெல்லாம் இருக்கட்டும்; இவன் யார்? எதற்காக இவனைக் கொண்டுவந்தீர்கள்?” என்று கோபக் குரலில் கர்ஜித்தான்.

வீரர் தலைவன் நடுங்கிய குரலில், “நாகநந்தி பிக்ஷுவிடமிருந்து சத்யாச்ரயருக்கு ஓலை கொண்டு வந்ததாக இந்த வாலிபன் சொல்லுகிறான். இதோ அந்த ஓலை!” என்று கூறி, பரஞ்சோதியிடமிருந்து வழியில் கைப்பற்றிய ஓலையைப் புலிகேசியிடம் சமர்ப்பித்தான். புலிகேசி ஓலையைப் பிரித்து, கவனமாகப் படித்தான். அப்போது அவனுடைய முகத்தில் வியப்புக்கும் குழப்பத்துக்கும் அறிகுறிகள் ஏற்பட்டன. ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்தபிறகும் தெளிவு ஏற்பட்டதாகத் தோன்றவில்லை. அவன் ஓலையைப் படித்தபோது, அவனுக்கு எதிரில் இருந்த படைத் தலைவர்கள் அவனுடைய முகத்தையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

பரஞ்சோதியோ சொல்லமுடியாத மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அவன் நாகநந்தியின் ஓலையை எடுத்துக் கொண்டு கிளம்பியபோது, இம்மாதிரி பகைவர்களிடம் சிறைப்பட்டு எதிரி அரசன் முன்னால் நிற்க நேரிடுமென்று நினைக்கவே இல்லை. அந்த எதிரியின் பாசறையில் வஜ்ரபாஹுவைச் சந்தித்ததும், அவன் போகிறபோக்கில், “சத்யாச்ரய புலிகேசியிடம் உண்மையை உள்ளபடி சொல்லு!” என்று கூறியதும் அவனுடைய மனக் குழப்பத்தை அதிகமாக்கின.

இன்னும் நாகநந்தி தன்னிடம் ஓலையைக் கொடுத்த போது கூறிய வார்த்தைகள் நினைவு வந்தபோது அவன் தலையே கிறுகிறுக்கும் போல் ஆகிவிட்டது. ‘இந்த ஓலையை நீ சத்யாச்ரயரிடமே கொடுக்க வேண்டும்; வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது. சத்யாச்ரயரை ஒருவேளை நீ வழியிலேயே சந்தித்தாலும் சந்திக்கலாம். எப்போது எந்தக் கோலத்தில் அவர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவரை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நீ அதிசயப்படாதே!’ – இவ்விதம் நாகநந்தி பிக்ஷு கூறியது அவனுக்கு நினைவு வந்தது. ‘நாகநந்தி கூறிய சத்யாச்ரயர் இந்த வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியா? நாம் கொண்டு வந்த ஓலையில் உள்ள விஷயம் அஜந்தா வர்ணக் கலவை சம்பந்தமானதுதானா? அல்லது, ஒரு பெரிய மர்மமான சூழ்ச்சியில் நாம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமா?’ என்று பரஞ்சோதி எண்ணியபோது, அவன் அறிவு குழம்பியது.

புலிகேசி சட்டென்று தலையைத்தூக்கி, எதிரே இருந்த படைத்தலைவர்களைப் பார்த்து, “இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? என்று கேட்டான். உடனே, “உங்களால் ஒரு நாளும் ஊகம் செய்ய முடியாது” என்று தானே மறுமொழியும் கூறிவிட்டு, இடிஇடியென்று சிரித்தான். இடிமுழக்கம் நிற்பதுபோலவே சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, காவலர்களுக்கு நடுவில் கட்டுண்டு நின்ற பரஞ்சோதியை உற்று நோக்கினான். புலிகேசியினுடைய கழுகுக் கண்களின் கூரிய பார்வை பரஞ்சோதியின் நெஞ்சையே ஊடுருவுவது போலிருந்தது.

புலிகேசி அவனைப் பார்த்துக் கடுமையான குரலில், “பிள்ளாய்! உண்மையைச் சொல்! நீ யார்? எங்கு வந்தாய்? இந்த ஓலையைக் கொடுத்தது யார்? இதிலுள்ள விஷயம் இன்னதென்று உனக்குத் தெரியுமா?” என்று சரமாரியாகக் கேள்விகளைப் போட்டான். அந்தக் கேள்விகளில் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதவனாய் பரஞ்சோதி மௌனம் சாதித்தவண்ணம் நின்றான். அதனால் புலிகேசியின் கோபம் கணத்துக்குக் கணம் பொங்கிப் பெருகிற்று. அதைப் பார்த்த படைத் தலைவர்களில் ஒருவன், “பிள்ளையாண்டான் செவிடு போலிருக்கிறது!” என்றான். இன்னொருவன், “ஊமை!” என்றான். மற்றொருவன், “அதெல்லாம் இல்லை பையனுக்கு நம்முடைய பாஷை புரியவில்லை! அதனால்தான் விழிக்கிறான்!” என்றான்.

அப்போது புலிகேசி, “ஆமாம்; அப்படித்தான் இருக்க வேண்டும். ஜைன முனிவர்கள் கோபித்துக் கொண்டு போனதில் அதுதான் ஒரு சங்கடம். அவர்கள் இருந்தால் எந்த பாஷையாக இருந்தாலும் மொழிபெயர்த்துச் சொல்லி விடுவார்கள். போகட்டும், இவனைக் கொண்டுபோய்ச் சிறைப்படுத்தி வையுங்கள், பிறகு பார்த்துக் கொள்வோம்!” என்று கூறியவன், திடீரென்று, “வேண்டாம், இவன் இங்கேயே இருக்கட்டும். சற்று முன்பு வந்திருந்த வீரன் வஜ்ரபாஹுவை உடனே போய் அழைத்து வாருங்கள்!” என்றான்.

வஜ்ரபாஹுவை அழைக்க ஆள் போனபிறகு, புலிகேசி படைத் தலைவர்களைப் பார்த்துக் கூறினான். “இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? கேளுங்கள் அதிசயத்தை! இந்த ஓலை கொண்டுவருகிற பையனிடம் அஜந்தா வர்ண இரகசியத்தைச் சொல்லி அனுப்ப வேணுமாம். இரண்டு வருஷம் நான் அஜந்தா குகைகளிலேயே வசித்திருந்தும் அந்தப் புத்த பிக்ஷுக்களிடமிருந்து வர்ண இரகசியத்தை என்னால் அறிய முடியவில்லை. பிக்ஷுக்கள் அவ்வளவு பத்திரமாக அஜந்தா வர்ண இரகசியத்தைப் பாதுகாக்கிறார்கள். அப்படியிருக்க இந்தப் பிள்ளையிடம் அதைச் சொல்லி அனுப்பும்படி இந்த ஓலையில் எழுதியிருக்கிறது. எழுத்தோ நம் பிக்ஷு எழுதியதாகவே தோன்றுகிறது. இதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர், மைத்ரேயரே!” என்று சொல்லிக் கொண்டே, புலிகேசி மன்னன் அந்த ஓலையை ஒற்றர் படைத் தலைவனிடம் நீட்டினான்.

மைத்ரேயன் ஓலையை வாங்கிக் கவனமாகப் படித்தான். பின்னர் சக்கரவர்த்தியைப் பார்த்து, “சத்யாச்ரயா! இதில் ஏதோ மர்மமான செய்தி இருப்பதாகத் தெரிகிறது. பையனை விசாரிக்கிறபடி விசாரித்தால் தெரிகிறது!” என்றான்.

“அழகுதான், மைத்ரேயரே! பையனை எப்படி விசாரித்தாலும் அவன் சொல்கிறது நமக்கு விளங்கினால் தான் உபயோகம்? அதற்காகத்தான் வஜ்ரபாஹுவை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றான் புலிகேசி.

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வஜ்ரபாஹு கூடாரத்துக்குள் நுழைந்தான். புலிகேசியின் அருகில் வந்து வணங்கி, “இராஜாதி ராஜனே! மறுபடியும் ஏதாவது ஆக்ஞை உண்டா?” என்று கேட்டான்.

“வஜ்ரபாஹு, உம்மைப்போலவே இந்தப் பையனும் எனக்கு ஓர் ஓலை கொண்டு வந்திருக்கிறான். ஆனால், அதிலுள்ள விஷயம் மர்மமாக இருக்கிறது. ஓலையை யார் கொடுத்தார்கள், யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்பதை விவரமாக விசாரித்துச் சொல்லும், அதற்காகத்தான் உம்மை மீண்டும் தருவித்தேன்” என்றான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியின் பக்கம் திரும்பி உற்றுப் பார்த்து, “ஆகா! இந்தப் பையனா? இவனை நான் முந்தாநாள் இரவு மகேந்திர மண்டபத்தில் பார்த்தேனே! இவனைப் பார்த்ததுமே எனக்கு சந்தேகம் உண்டாயிற்று. விசாரித்தேன்; ஆனால், பையன் அமுக்கன்; மறுமொழியே சொல்லவில்லை!” என்றான்.

“இப்போது விசாரியும், மறுமொழி சொல்லாவிட்டால் நாம் சொல்லச் செய்கிறோம்” என்றான் வாதாபி அரசன்.

“மன்னர் மன்னா! இவன் சுத்த வீரனாகக் காண்கிறான். இவனைப் பயமுறுத்தித் தகவல் ஒன்றும் அறிய முடியாது. நானே விசாரித்துப் பார்க்கிறேன்” என்று வஜ்ரபாஹு கூறி விட்டு பரஞ்சோதியை நோக்கி, “தம்பி! நான் அப்போதே சொன்னேனல்லவா, அதன்படி சத்யாச்ரயரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு! பயப்பட வேண்டாம். நான் உன்னை தப்புவிக்கிறேன்” என்றான்.

அதற்குப் பரஞ்சோதி, “ஐயா! எனக்குப் பயமே கிடையாது எதற்காகப் பயப்படவேண்டும்? உயிருக்குமேலே நஷ்டமாகக் கூடியது ஒன்றுமில்லை அல்லவா? இந்த ஓலையை நாகார்ஜுன பர்வதத்துக்குக் கொண்டுபோய்ச் சத்யாச்ரயரிடம் கொடுக்கும்படி நாகநந்திபிக்ஷு கூறினார். நீங்கள் சொல்லுகிறபடி இவருக்குத்தான் இந்த ஓலை என்றால், பெற்றுக்கொண்டு விடை எழுதிக் கொடுக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு திரும்புகிறேன். அல்லது இந்த ஓலை இவருக்கு அல்ல என்றால் ஓலையைத் திருப்பிக் கொடுக்கட்டும் வேறு என்ன நான் சொல்லக்கூடும்?” என்றான்.

வஜ்ரபாஹு புலிகேசியைப் பார்த்து, “அரசர்க்கரசரே! ஓலையை நாகநந்தி பிக்ஷுதான் கொடுத்ததாகவும், அதில் ஏதோ அஜந்தா வர்ணச் சேர்க்கையைப்பற்றி எழுதியிருப்பதாகவும் பிள்ளையாண்டான் சொல்கிறான். அந்த ஓலையை நான் சற்றுப் பார்வையிடலாமா?” என்று கேட்டான்.

புலிகேசி ஓலையை வஜ்ரபாஹுவிடம் கொடுத்து, “இதிலிருந்து தெரியக்கூடியது ஒன்றுமில்லை நீர் வேணுமானாலும் பாரும்” என்றான்.

வஜ்ரபாஹு ஓலையில் சிறிது நேரம் கவனம் செலுத்தி விட்டு, “பிரபு! நாகார்ஜுன பர்வதத்திலுள்ள புத்த சங்கராமத்தின் தலைவரின் திருநாமம் சத்யாச்ரய பிக்ஷு தானே?” என்று கேட்டான்.

“ஆமாம், அதனால் என்ன?”

“இந்த ஓலை அவருக்கே இருக்கலாம் அல்லவா?” “இருக்கலாம்; ஆனால், நாகநந்தி அவருக்கு இம்மாதிரி விஷயத்தைப் பற்றி எழுத நியாயமே இல்லையே?”

“பிரபு! இந்த ஓலையைப் படித்ததும் நாகநந்தி பிக்ஷு கூறிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. கிருஷ்ணா நதிக் கரையோடு வேங்கி ராஜ்யத்தின்மேல் படையெடுத்துச் செல்லும் தங்கள் சகோதரருக்கும் செய்தி அனுப்பவேண்டும் என்று அவர் சொன்னார். ஒருவேளை தங்கள் சகோதரர் விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு இதில் ஏதாவது செய்தி இருக்கலாம் அல்லவா?” இதைக் கேட்டதும் புலிகேசியின் முகம் பிரகாசமடைந்தது.

“வஜ்ரபாஹு! நீர் மகா புத்திசாலி நம்முடனேயே நீர் இருந்து விடலாமே? பல காரியங்களுக்கு அனுகூலமாயிருக்கும்” என்றான்.

பிறகு, தன் படைத் தலைவர்களிடம் சிறிது கலந்து யோசித்து விட்டு, “எப்படியும் விஷ்ணுவர்த்தனனுக்கு நான் ஓலை அனுப்ப வேண்டியிருக்கிறது. ஓலையுடன் ஒன்பது வீரர்கள் போகட்டும். அவர்களுடன் இந்தப் பையனையும் அனுப்புங்கள். இவனுடைய ஓலையின் விஷயம் என் தம்பிக்கும் விளங்காவிட்டால், இவனை உடனே சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டு அனுப்புங்கள்!” என்றான். பிறகு வஜ்ரபாஹுவை நோக்கி, “இந்த விஷயத்தைப் பையனிடம் சொல்லும்” என்று ஆக்ஞாபித்தான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியிடம், “தம்பி! நாகார்ஜுன மலைக்கு இங்கிருந்து சக்கரவர்த்தியின் ஓலையுடன் ஒன்பது வீரர்கள் நாளைக் காலையில் போகிறார்கள். அவர்கள் உன்னையும் அழைத்துப் போவார்கள். நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். நாளை இராத்திரி உன்னை அநேகமாக நான் வழியில் சந்திப்பேன்” என்றான்.

பரஞ்சோதி அகமும் முகமும் மலர்ந்தவனாய், “ஐயா! தங்களுடன் பிரயாணம் செய்வதாயிருந்தால் நரகத்துக்கு வேணுமானாலும் நான் வரச் சித்தம். தங்களிடம் கதை கேட்க அவ்வளவு ஆவலாக இருக்கிறது!” என்றான்.

“பையன் என்ன சொல்கிறான்?” என்று புலிகேசி கேட்டதற்கு, “பிள்ளையாண்டான் பலே கைகாரன்; தான் கொண்டுவந்த ஓலை தங்களுக்கு இல்லையென்றால் தன்னிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்கிறான். இளங்கன்று பயமறியாது என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு!” என்றான் வஜ்ரபாஹு.

புலிகேசி சிரித்துவிட்டு, “அப்படியா? நல்லது; ஓலையைப் பையனிடமே கொடுத்து வைக்கலாம். இப்போதைக்கு அவனுடைய கட்டையும் அவிழ்த்து விடுங்கள்!” என்றான். ஓலையைப் பரஞ்சோதியிடம் கொடுத்ததோடு, அவனுடைய கட்டுக்களையும் உடனே அவிழ்த்து விட்டார்கள். பிறகு, அவனைச் சக்கரவர்த்தியின் சமூகத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள்.

மறு நாள் அந்தி மயங்கும் சமயத்தில் பரஞ்சோதியும் அவனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்ற ஒன்பது வீரர்களும் காட்டு மலைப் பாதையில் ஒரு குறுகிய கணவாயைத் தாண்டி, அப்பால் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பழைய பாழடைந்த வீட்டை அடைந்தார்கள். அந்த வீட்டின் வாசல் திண்ணையில் ஒரு முதிய கிழவன் உட்கார்ந்திருந்தான். தலையும் தாடியும் நரைத்த அக்கிழவன் உலகப் பிரக்ஞையே அற்றவனாய்க் கையிலிருந்த ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தான். பத்துக் குதிரைகள் சேர்ந்தாற்போல் வந்து அவ்வீட்டின் வாசலில் நின்றதைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை.

அந்த வீரர்களில் ஒருவன் கிழவனை என்னவோ கேட்க, அவன் இரண்டொரு வார்த்தையில் மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் ஜபமாலையை உருட்டலானான். அன்றிரவு அந்தப் பாழ் வீட்டிலேயே தங்குவதென்று அவ்வீரர்கள் முடிவு செய்தார்கள். தங்களில் நாலு பேரை நாலு ஜாமத்துக்குக் காவல் செய்யவும் ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லாரையும்விட அதிகக் களைப்புற்றிருந்த பரஞ்சோதிக்குப் படுத்தவுடனேயே கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. தூக்கத்தில் ஆழ்வதற்கு முன்னால் அவன் மனத்தில் கடைசியாக ‘வஜ்ரபாஹு இன்றிரவு சந்திப்பதாகச் சொன்னாரே? இனி எங்கே சந்திக்கப் போகிறார்?’ என்ற எண்ணம் தோன்றியது.

பரஞ்சோதி அன்றைக்கும் தூக்கத்தில் கனவு கண்டான். புலிகேசியின் கூரிய கழுகுப் பார்வை ஒரு கணம் அவன் நெஞ்சை ஊடுருவிற்று. ‘இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!’ என்று புலிகேசி கட்டளையிடுகிறான். பரஞ்சோதி தன்னை இடற வந்த யானையின் மீது வேலை எறிந்துவிட்டு ஓடுகிறான். யானை அவனை விடாமல் துரத்தி வருகிறது. கடைசியில், அது கிட்ட நெருங்கிவிட்டது . யானையின் தும்பிக்கை தன் தோளில் பட்டதும், பரஞ்சோதி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான். பார்த்தால் யானையின் முகம் அந்த வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து ஜபமாலை உருட்டிக் கொண்டிருந்த கிழவனின் முகமாகவும், துதிக்கை அக்கிழவனின் கையாகவும் மாறியிருக்கின்றன. இது கனவில்லை; உண்மையாகவே அந்தக் கிழவன் தன்னைத் தொட்டு எழுப்புகிறான் என்பதைப் பரஞ்சோதி உணர்ந்ததும் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 42
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 44

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here