Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 44

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 44

102
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 44 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 44 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 44: மாயக் கிழவன்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 44

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 44: மாயக் கிழவன்

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 44

கிழவனுடைய கையில் வேல் ஒன்று இருப்பதையும், அதைப் பெற்றுக்கொண்டு தன்னுடன் கிளம்பி வரும்படி கிழவன் சமிக்ஞை செய்வதையும், பலகணி வழியாக வந்த நிலவின் மங்கிய ஒளியில் பரஞ்சோதி உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டான். பரஞ்சோதி சிறிது தயங்கியபோது, கிழவன் அவனுடைய ஒரு கையைத் தன்னுடைய இடது கையினால் அழுத்திப் பிடித்தான். உடனே, பரஞ்சோதிக்குப் பழைய ஞாபகம் ஒன்று வரவே, அந்த மாயக் கிழவன் கொடுத்த வேலை வாங்கிக்கொண்டு துள்ளி எழுந்தான். இருவரும் வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வெளியே வந்தார்கள். பரஞ்சோதி தன்னுடைய குதிரையும் இன்னொரு குதிரையும் அங்கே சேணம் பூட்டி ஆயத்தமாக நிற்பதைக் கண்டான். இருவரும் குதிரைகள் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார்கள்.

பரஞ்சோதி எதிர்பார்த்ததுபோல், கிழவனுடைய குதிரை உடனே பாய்ச்சலில் கிளம்பவில்லை. பரஞ்சோதிக்கு முதுகுப் புறத்தைக் காட்டிய வண்ணம் அவன் ஏதோ செய்து கொண்டிருந்தான். எனவே, பரஞ்சோதியும் தன்னுடைய குதிரையை இழுத்துப் பிடிக்க வேண்டியதாயிற்று. தாமதம் செய்துகொண்டிருந்த கிழவன் நடுவில், “தம்பி! என்னை யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டான்.

“தாடியைப் பார்த்து முதலில் ஏமாந்துதான் போனேன். கையைப் பிடித்து அழுத்தியதுந்தான் தெரிந்தது. பிசாசுக்குப் பயப்படாத சூரர் வஜ்ரபாஹு தாங்கள்தானே?” என்றான் பரஞ்சோதி.

உரத்த சத்தத்துடன் சிரித்துக்கொண்டு கிழவன் திரும்பிய போது அவன் முகத்திலிருந்த நரைத்த தாடியைக் காணவில்லை. தாடி நீங்கிய முகம் வீரன் வஜ்ரபாஹுவின் முகமாகக் காட்சி அளித்தது. “யோசித்துச் சொல்லு, அப்பனே! என்னோடு வருவதற்கு உனக்குச் சம்மதமா?” என்று வஜ்ரபாஹு கேட்க, பரஞ்சோதி, “எனக்கு வரச் சம்மதந்தான். உங்களுக்குத்தான் இங்கிருந்து போகும் உத்தேசம் இல்லை போலிருக்கிறது!” என்றான்.

“ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?”

“பின்னே, இப்படிச் சத்தம் போட்டுப் பேசுகிறீர்களே? அவர்கள் விழித்துக்கொள்ள மாட்டார்களா!”

“அவர்களை எழுப்புவதற்காகவேதான் இரைந்து பேசுகிறேன். தூங்குகிறவர்களை ஏமாற்றிவிட்டு ஓடித் தப்பித்துக் கொண்டான் என்ற அவப் பெயர் அச்சுதவிக்கிராந்தனுடைய வம்சத்தில் உதித்த வீரன் வஜ்ரபாஹுவுக்கு வரப்படுமா?” என்று கூறி, எதையோ நினைத்துக்கொண்டவன்போல் இடி இடியென்று சிரித்தான்.

இதற்குள் வீட்டு வாசலில் காவலிருந்த வீரன் குதிரைகளின் காலடிச் சத்தத்தையும் பேச்சுக் குரலையும் கேட்டு வீட்டைச் சுற்றிக் கொல்லைப்புறம் வந்து பார்த்தான். இரண்டு பேர் குதிரை மேலேறிக் கிளம்பிக் கொண்டிருப்பதை அவன் கண்டு, “ஓ!” என்ற கூச்சலுடன் வீட்டுக்குள் ஓடினான். உடனே, அந்த வீட்டுக்குள் வீரர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பும் சத்தமும், “என்ன? என்ன?” என்று கேட்கும் சத்தமும், “மோசம்!” “தப்பி ஓடுகிறார்கள்” என்ற கூக்குரலும் ஒரே குழப்பமாக எழுந்தன.

வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஏறியிருந்த குதிரைகள் முதல் நாள் வந்த பாதையில் திரும்பிச் செல்லத் தொடங்கின. ஆனால், வஜ்ரபாஹு குதிரையை வேண்டுமென்றே இழுத்துப் பிடித்து அதன் வேகத்தைக் குறைத்ததுடன் ஆங்காங்கு நின்று நின்று சென்றான். பரஞ்சோதி இந்த தாமதத்தைப்பற்றிக் கேட்டபோது, “சளுக்கர்கள் நம்மை வந்து பிடிப்பதற்கு அவகாசம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் வழி தப்பி வேறு எங்கேயாவது தொலைந்து போய் விட்டால்…?” என்றான்.

“போய்விட்டால் என்ன?” என்று பரஞ்சோதி கேட்டான்.

“இவ்விடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு மலைக் கணவாய் இருக்கிறதல்லவா? அந்தக் கணவாயில் துர்க்கா தேவி கோயில் ஒன்று இருக்கிறது. நேற்று வரும்போது நீ கவனித்தாயா?”

“இல்லை!”

“நீ எங்கே கவனிக்கப் போகிறாய்? உன்னுடைய கவனமெல்லாம் ஒருவேளை திருவெண்காட்டுக் கிராமத்திலே இருந்திருக்கும்….”

“என்ன சொன்னீர்கள்?”

“அந்தத் துர்க்கையம்மன் கோயில் வழியாக நான் நேற்றைக்கு வந்தபோது, இன்று சூரியோதய சமயத்தில் அம்மனுக்கு ஒன்பது உயிர்களைப் பலி கொடுப்பதாக வேண்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இவர்கள் வேறு வழியில் போய்விட்டால், என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற முடியாதல்லவா?” ஆனால், மேற்கூறிய கிழவனின் வார்த்தைகள் பரஞ்சோதியின் செவியில் விழுந்தனவாயினும், அவன் மனத்தில் பதியவில்லை.

பெரியதொரு வியப்பு அவனுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. திருச்செங்காட்டங்குடியிலிருந்து அவன் கிளம்பியதிலிருந்து, எத்தனை எத்தனையோ அதிசய சம்பவங்களைப் பார்த்திருக்கிறான். இவ்வளவிலும் இடையிடையே அவனுடைய மனமானது திருவெண்காட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த விஷயம் இந்த வேஷதாரி வஜ்ரபாஹுவுக்கு எப்படித் தெரிந்தது என்று நினைத்து, பரஞ்சோதி ஆச்சரியக்கடலில் மூழ்கினான்.

பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஒரு மலைக் கணவாயை அடைந்தார்கள். அவர்கள் இதுகாறும் வந்த பாதையானது அங்கே குறுகி இருபுறமும் செங்குத்தாக, ஓங்கி வளர்ந்த பாறைச் சுவர்களின் வழியாகச் சென்றது. கணவாயைத் தாண்டியதும், ஒரு பக்கம் மட்டும் பாறைச் சுவர் உயர்ந்து, இன்னொரு பக்கம் அகல பாதாளமான பள்ளத்தாக்காகத் தென்பட்டது.

இந்த இடத்துக்கு வந்ததும் வஜ்ரபாஹு தன் குதிரையை நிறுத்தினான்; பரஞ்சோதியையும் நிறுத்தும்படிச் செய்தான். காலை நேரத்தில் குளிர்ந்த இளங்காற்று மலைக் கணவாயின் வழியாக ஜிலுஜிலுவென்று வந்தது. பட்சிகளின் மனோகரமான குரல் ஒலிகளுடன் தூரத்திலே குதிரைகள் வரும் காலடி சத்தம் டக், டக், டக், டக் என்று கேட்டது. “தம்பி! உன்னை மறுபடியும் கேட்கிறேன்; அந்தச் சளுக்க வீரர்கள் வருவதற்குள்ளே தீர்மானமாகச் சொல். உனக்கு என்னோடு வருவதற்கு இஷ்டமா?” என்று வஜ்ரபாஹு கேட்டான்.

“உங்களோடுதான் வந்துவிட்டேனே? இனிமேல் திரும்பிப் போக முடியுமா?”

“உனக்கு இஷ்டமில்லாவிட்டால் இப்போதுகூட நீ திரும்பிப் போய் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம்”

“சேர்ந்துகொண்டு…”

“அவர்கள் போகும் இடத்துக்கு நீயும் போகலாம்.”

“அவர்கள் எங்கே போகிறார்கள்?”

“நாகார்ஜுன மலைக்குப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் போகப் போவது யமலோகத்துக்கு!”

“அங்கே அவர்களை அனுப்பப் போவது யார்!”

“உனக்கு இஷ்டமிருந்தால் நீயும் நானுமாக; இல்லாவிட்டால் நான் தனியாக..”

“பரஞ்சோதி சிறிது யோசித்துவிட்டு, “தாங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.

“பல்லவ சைனியத்தின் பாசறைக்கு!”

“ஆஹா! நான் நினைத்தபடிதான்!” என்றான் பரஞ்சோதி.

“உனக்கு எப்படித் தெரிந்தது?”

“நேற்றெல்லாம் யோசனை செய்ததில் தெரிந்தது.”

“இன்னும் என்ன தெரிந்தது?”

“தாங்கள் காஞ்சிச் சக்கரவர்த்தியின் ஒற்றர் என்றும் தெரிந்தது.”

“தம்பி! உன்னை என்னவோ என்று நினைத்தேன் வெகு புத்திசாலியாக இருக்கிறாயே?”

“ஐயா! நான் தங்களுடன் வந்தால் பல்லவ சைனியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்வார்களா?” என்று கேட்டான் பரஞ்சோதி.

“கட்டாயம் சேர்த்துக்கொள்வார்கள் கரும்பு தின்னக் கூலியா? உன்னைப் போன்ற வீரனைப் பெறப் பல்லவ சைனியம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!” என்றான் வஜ்ரபாஹு.

பரஞ்சோதி இதற்கு மறுமொழி சொல்லவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, “அப்பனே! என்ன யோசிக்கிறாய்?” என்று வஜ்ரபாஹு கேட்டான்.

“என்னிடமுள்ள ஓலையை என்ன செய்வது என்றுதான்!”

“அதோ தெரிகிற பள்ளத்தாக்கிலே ஓடுகிற தண்ணீரிலே போடு. அதனால் இனிமேல் பிரயோஜனம் ஒன்றுமில்லை.”

“நாகநந்தியும் ஆயனரும் எவ்வளவு ஏமாற்றமடைவார்கள்?”

“ஆம்; நாகநந்தி பெரிய ஏமாற்றந்தான் அடைவார்!” என்று கூறிவிட்டு, வஜ்ரபாஹு ‘கலகல’வென்று சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“இப்படிப்பட்ட கும்பகர்ணனாகப் பார்த்து, அந்தப் புத்த பிக்ஷு ஓலையைக் கொடுத்தாரே என்றுதான்.”

“ஐயா! தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் இப்படியே நாகார்ஜுன மலைக்குப் போய் நாகநந்தியின் ஓலையைக் கொடுத்து விட்டுப் பின்னர் பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வருகிறேன்.”

“வீண் வேலை, அப்பனே! நாகநந்தி உன்னிடம் கொடுத்த ஓலை அக்கினிக்கு அர்ப்பணமாகிவிட்டது!”

“என்ன சொன்னீர்கள்!”

“நாகநந்தியின் ஓலை தீயில் எரிந்துபோய்விட்டது என்றேன்.”

“இதோ என்னிடம் இருக்கிறதே!”

“அது நான் எழுதிவைத்த ஓலை, தம்பி!”

“என்னுடைய சந்தேகம் சரிதான்!” என்று பரஞ்சோதி கூறி ஓலைச் சுருளை எடுத்து வீசிப் பள்ளத்தாக்கில் எறிந்தான். “அன்றிரவு தீபத்தில் மயக்க மருந்து சேர்த்து என்னைத் தூங்க வைத்துவிட்டுத்தானே ஓலையை எடுத்தீர்கள்?” என்று கேட்டான்.

“உன்னுடைய வேலின் முனையைப்போலவே உன் அறிவும் கூர்மையாகத்தான் இருக்கிறது!” என்றான் வஜ்ரபாஹு.

வஜ்ரபாஹுவை ஆச்சரியமும் பக்தியும் ததும்பிய கண்களினால் பரஞ்சோதி பார்த்து, “ஐயா! நாகநந்தி என்னிடம் அனுப்பிய ஓலையில் என்ன எழுதியிருந்தது?” என்று கேட்டான்.

“புலிகேசியைக் காஞ்சி மாநகருக்கு உடனே வந்து, தென்னாட்டின் ஏக சக்ராதிபதியாக முடிசூட்டிக் கொள்ளும்படி எழுதியிருந்தது!”

“அடடா! அப்படிப்பட்ட துரோகமான ஓலையையா நான் எடுத்துக்கொண்டு வந்தேன்? ஐயோ! என்ன மூடத்தனம்!” என்று புலம்பினான் பரஞ்சோதி.

“போனதைப்பற்றி அப்புறம் வருத்தப்படலாம் இதோ சளுக்க வீரர்கள் யமனுலகம் போக அதிவேகமாக வருகிறார்கள். நீ என்ன செய்யப் போகிறாய்?” என்று வஜ்ரபாஹு கேட்டான்.

“தங்கள் விருப்பம் எப்படியோ, அப்படி!”

“சரி, இந்தக் கணவாயின் இருபக்கமும் நாம் இருவரும் நிற்கலாம். முதலில் வருகிறவன் மார்பில் உன்னிடமுள்ள ஈட்டியைப் பிரயோகம் செய். அப்புறம் இந்த வாளை வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த வரையில் பார்!” என்று வஜ்ரபாஹு கூறி, தான் வைத்திருந்த இரண்டு வாள்களில் ஒன்றைக் கொடுத்தான். பரஞ்சோதி ஆர்வத்துடன் அந்த வாளை வாங்கிக் கொண்டு தன்னுடைய ‘கன்னி’ப் போருக்கு ஆயத்தமாய் நின்றான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 43
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 45

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here