Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 5

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 5

109
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 5 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 5 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 5: செல்லப்பிள்ளை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 5

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 5: செல்லப்பிள்ளை

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 5

பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை பரஞ்சோதி. சோழநாடு முழுதும் உறையூர்ச் சோழ மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த பழைய காலத்தில் பரஞ்சோதியின் மூதாதைகள் இராஜ சேவையில் ஈடுபட்டுப் படைத் தலைவர்களாயிருந்தார்கள். சோழ வம்சம் பழம்பெருமை இழந்து, பல்லவர் ஆட்சி ஓங்கியபோது மாமாத்திரர் குலமும் அதன் சிறப்பை இழந்தது, சென்ற சில தலைமுறைகளாக மாமாத்திரர் போர்த் தொழிலையும் எல்லைக் காவல் தொழிலையும் கைவிட்டு விவசாயத் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.

இத்தகைய குலத்திலே பிறந்த பரஞ்சோதி குழந்தைப் பிராயத்திலேயே, தந்தையை இழந்து, தாயாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். ‘முரடன்’, ‘பொல்லாதவன்’ என்று அக்கம் பக்கங்களில் பெயர் வாங்கினான். சண்டை என்பது அவனுக்குச் சர்க்கரையும் பாலுமாக இருந்தது. போர்த் தொழிலுக்குரிய சாதனங்களில் இயற்கையாக அவன் புத்தி சென்றது. வீராதி வீரர்களென்று புகழ் பெற்ற அவனுடைய மூதாதைகளின் வீர இரத்தம் பரஞ்சோதியின் தேகத்தில் அலை மோதிக்கொண்டு ஓடியது. கழி விளையாட்டு, கத்தி விளையாட்டு, மல்யுத்தம், வேல் எறிதல் ஆகியவற்றில் அவன் அதிவிரைவாகத் தேர்ச்சிபெற்றான்.

பரஞ்சோதியின் தாயார் வடிவழகி அம்மை தன் ஏக புத்திரனிடம் உயிரையே வைத்திருந்தாள். ஆனாலும், பரஞ்சோதியின் முரட்டுக் காரியங்கள் அவளுக்குப் பெரிதும் கவலையை அளித்தன. அந்த மூதாட்டி சிவபக்திச் செலுத்துவதிலும் கலைச் செல்வத்திலும் சிறந்த குடும்பத்திலே பிறந்தவள். அவளுடைய தமையனார் திருவெண்காட்டுப்பதியில் புகழுடன் வசித்த மருத்துவர்; சிவநேசச் செல்வர். தெய்வத் தமிழ் மொழியை நன்கு பயின்றிருந்ததோடு வடமொழியிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். வைத்தியக் கலையில் தேர்ச்சிபெற்று நோய் தீர்ப்பதில் வல்லவராய் இருந்தார்.

அந்தச் சிவபக்தரின் மூத்த பெண்ணுக்கு உமையாள் என்று பெயர். அழகிலும் குணத்திலும் அவள் இணையற்று விளங்கியது போலக் கல்வியிலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினாள். இந்தத் திருவெண்காட்டுப் பெண்ணைத் தன் மகனுக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்று பரஞ்சோதியின் அன்னை அந்தரங்கத்தில் ஆசைகொண்டிருந்தாள். ஆனால், நிறைவேறுமா என்ற சந்தேகமும் கவலையும் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்தன. பல துறைகளிலும் புலமை மிகுந்த அவளுடைய தமையனார் இந்த முரட்டுப் பிள்ளைக்குத் தம் அருமைப் பெண்ணைக் கொடுப்பாரா?

பரஞ்சோதியைக் கல்வி கேள்விகளில் வல்லவனாக்க அவனுடைய தாயார் எவ்வளவோ பிரயத்தனம் செய்தாள், ஆனால், பரஞ்சோதிக்குக் கல்வி கற்பிக்க முயன்ற அண்ணாவிகள் எல்லாரும் தோல்வியே அடைந்தனர். அவர்களில் ஒருவராவது அதிக காலம் நீடித்து அந்த முயற்சியைச் செய்யவில்லை. ஒவ்வொருவரும் சிலகாலம் முயன்று பார்த்தபிறகு, அந்த மூதாட்டியிடம் வந்து, “அம்மா! உங்கள் புதல்வன் வெகு புத்திசாலி; ஏகசந்தக்கிராஹி என்றே சொல்லலாம். எந்த விஷயத்தையும் கவனம் செலுத்தி ஒரு தடவை கேட்டால் போதும் உடனே தெரிந்து கொள்கிறான். ஆனால் அந்த ஒரு தடவை அவனைக் கவனித்துக் கேட்கும்படி செய்வதற்குள்ளே எங்கள் பிராணன் போய்விடுகிறது. அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி எங்களுக்கு இல்லை” என்று சொல்லிவிட்டு போனார்கள். இரண்டொரு அண்ணாவிமார் பரஞ்சோதி விஷயத்தில் தண்ட உபாயத்தைக் கையாளப் பார்த்தார்கள். அதன் பயனாக அவர்கள் அவனுடைய தாயாரிடம் சொல்லிக் கொள்ளமலே ஊரைவிட்டுப் போகும்படி நேர்ந்துவிட்டது!

இதனாலெல்லாம் பரஞ்சோதியின் தாய் மிகவும் கவலை கொண்டிருந்தாள். ஒரு வருஷம் பொங்கல் பண்டிகைக்காகப் பரஞ்சோதியும் வடிவழகி அம்மையும் திருவெண்காட்டுக்குப் போயிருந்தார்கள். அங்கே பரஞ்சோதி உமையாளைப் பார்த்தான். உமையாளின் கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு நடப்பதைக் கேட்டான். தன் மாமனும் தாயாரும் தன்னைப் பற்றி வருத்தத்துடனும் கவலையுடனும் பேசிக் கொண்டிருந்ததும் அவன் காதில் விழுந்தது. எல்லாவற்றையும் சேர்த்து, நிலைமையை ஒருவாறு தெரிந்து கொண்டான்.

அவர்கள் திருவெண்காட்டிலிருந்து திரும்பித் திருச்செங்காட்டங்குடிக்கு வந்தபிறகு, ஒருநாள் பரஞ்சோதியின் தாயார் தரையில் படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். எங்கேயோ வெளியே போய்விட்டு வந்த பரஞ்சோதி இதைப் பார்த்து, தாயாரின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அன்னை எதற்காக அழுகிறாள் என்று அவன் கேட்கவில்லை. அவளுக்குச் சமாதானமும் சொல்லவில்லை. “அம்மா! நான் ஒன்று சொல்கிறேன்; நீ அதற்குத் தடை சொல்லக்கூடாது” என்றான். அன்னை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “என்னடா, என் கண்ணே!” என்றாள். “நான் காஞ்சி மாநகருக்குப் போகப் போகிறேன்” என்று பரஞ்சோதி சொன்னதும், திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள். “எதற்காக?” என்று கேட்டாள். “கல்வி கற்பதற்காகத்தான், அம்மா! இத்தனை நாளும் நான் கல்வி கற்காமல் வாணாளை வீணாய்க் கழித்து விட்டதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!” என்றான் பரஞ்சோதி.

தாயாருக்கு ஆனந்தக் கண்ணீரும் துக்கக் கண்ணீரும் சேர்ந்தாற்போல் கண்களில் துளித்தன. “கல்வி கற்பதற்குக் காஞ்சிக்குப் போவானேன் இங்கேயே படிக்கக் கூடாதா, குழந்தாய்?” என்றாள். “இந்த ஊரில் இருக்கும் வரையில் எனக்குப் படிப்பு வராது. நல்ல கல்விப் பயிற்சி பெறவேண்டுமென்றால், காஞ்சி மாநகருக்குத் தான் போகவேண்டுமென்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்தப் பரத கண்டத்திலேயே காஞ்சியில் உள்ளவை போன்ற கல்லூரிகளும் கலைக்கூடங்களும் வேறெங்கும் இல்லையாம். நான் எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன் அம்மா!” என்றான் பரஞ்சோதி.

பரஞ்சோதி கூறியது உண்மைதான் அந்த நாளில் காஞ்சி மாநகரமானது கலைமகளுக்கு உறைவிடமாயிருந்தது. வடமொழிக் கல்வி அளித்த வேத கடிகைகளும், தமிழ்க் கல்வி பயில்வித்த திருமடங்களும், பௌத்தர்களின் மதபோதனைக் கல்லூரிகளும், சமண சமயப் பள்ளிகளும் காஞ்சியில் நிறைந்திருந்தன. இன்னும் சித்திரம், சிற்பம், சங்கீதம் ஆகிய அருங்கலைகளைப் பயில்வதற்குச் சிறந்த கலைக் கழகங்களும் இருந்தன. இவற்றையெல்லாம்விட காஞ்சி மாநகருக்குப் பெருஞ்சிறப்பு அளித்து தமிழகமெங்கும் பெருங்கிளர்ச்சி உண்டாக்கிய சம்பவம் ஒன்று சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவம் மகா வீரரும் மகா புத்திமானும் சகலகலா வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி, திருநாவுக்கரசரின் மகிமையினால் சமண மதத்தைத் துறந்து சிவநேசச் செல்வரானதுதான்.

மருள் நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் சிலகாலம் தர்மசேனர் என்ற பெயருடன் சமண சமயப் போதகர்களில் புகழ்பெற்றவராய் விளங்கினார். பின்னர், அவருடைய சகோதரி திலகவதியாரின் சிவபக்தி காரணமாக அவர் சமண மதத்தைத் துறந்து சிவனடியாரானார். அதுமுதல், தேனினும் இனிய தமிழ்மொழியில் சிவபக்தி ததும்பும் பண்களையும் தாண்டகங்களையும் அமுத வெள்ளமாகப் பொழிந்து வந்தார். அந்தத் தெய்வீகப் பாடல்களின் மகிமையில் ஈடுபட்ட மகேந்திர சக்கரவர்த்தியானவர், ‘நான் நாட்டுக்கரசன், தாங்கள் நாவுக்கரசர்’ என்று மருள்நீக்கியாரைப் போற்றியதோடு, சமண மதத்தையே துறந்து சிவநேசராகிவிட்டார். இந்த வரலாறு தமிழகமெங்கும் பரவியிருந்தது. மேற்கூறிய, அதிசயங்களைப் பற்றியே இந்தக் காலத்தில் எங்கெங்கும் வியப்புடன் ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியினது வேண்டுகோளின்பேரில் நாவுக்கரசர் காஞ்சியில் திருமடம் ஸ்தாபித்திருக்கிறார் என்றும், அந்த மடத்தில் தெய்வத் தமிழ்மொழியும், தெய்வீக இசைப்பாடல்களும் கற்பிக்கப்படுகின்றன என்றும் நாடெங்கும் பிரசித்தமாகியிருந்தன. இந்தச் செய்திகள் எல்லாம் பரஞ்சோதியின் காதிலும் விழுந்திருந்தபடியால்தான், ‘கல்வி கற்கக் காஞ்சிக்குப் போகிறேன்’ என்று அவன் தாயாரிடம் கூறினான்.

ஏக புதல்வனைப் பிரிந்திருக்க வேண்டுமென்பதை நினைத்து வடிவழகி அம்மை பெரும் வேதனையை அடைந்த போதிலும், ‘கல்வி கற்கப் போகிறேன்’ என்று பரஞ்சோதி கூறியது அவளுக்கு ஒரு பக்கத்தில் அளவில்லாத மகிழ்ச்சியையும் அளித்தது. தாயாரின் சம்மதத்தைத் தெரிந்து கொண்டதும் பரஞ்சோதி, “அம்மா! நீ மாமாவிடம் சொல்லி நான் கல்வி கற்றுத் திரும்பி வரும்வரையில் உமையாளுக்குக் கலியாணம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிய போது, மகனுடைய மன நிலையை அறிந்து கொண்டு அன்னை மீண்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். பரஞ்சோதியின் தீர்மானத்தை அறிந்து அவனுடைய மாமனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். அந்தச் சிவபக்தர் திருநாவுக்கரசரைத் தரிசித்து அவருடன் நட்புரிமை பூண்டவராதலால் நாவுக்கரசருக்கு ஓலை எழுதித் தருவதாகச் சொன்னார். தமிழ்க் கல்வியோடு ஏதேனும் ஒரு கலையும் அவன் கற்று வரவேண்டுமென்றும் இதன் பொருட்டுத் தம்முடைய பழைய சிநேகிதரான ஆயனருக்கு ஓலை தருவதாகவும் கூறினார். பரஞ்சோதியின் மன நிலையை அறிந்துகொண்டு அவன் கல்வி பயின்று திரும்பியதும் உமையாளை அவனுக்கே மணம் செய்து தருவதாகவும் உறுதி கூறினார்.

நல்லநாள், நல்ல வேளையில் பரஞ்சோதி அன்னையிடமும் மாமனிடமும் ஆசிபெற்று, மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு காஞ்சி மாநகருக்குப் புறப்பட்டான். புறப்படும்போது, கடைசியாக அவனுடைய மாமன் கூறிய புத்திமதி என்னவென்றால், “அப்பா, பரஞ்சோதி! தூரவழி போகும்போது கையில் வேலுடன் நீ புறப்படுவது நியாயந்தான். ஆனால் வழிப்பிரயாணத்துக்கு மட்டும் வேலைத் துணையாக வைத்துக் கொள், காஞ்சி மாநகரை அடைந்ததும், வேலைத் தலையைச் சுற்றி வீசி எறிந்துவிடு. அப்புறம் கல்வி கற்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்து” என்பதுதான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 4
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 6

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here