Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 6

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 6

90
0

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 6

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 6: மர்மக்கயிறு

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 6

சிறைக்கூடத்தின் இருள் சூழ்ந்த அறைக்குள்ளே கோரைப் பாயில் தன்னந்தனியாகப் படுத்திருந்த பரஞ்சோதிக்கு மேற்கூறிய மாமனுடைய புத்திமதி நினைவுக்கு வந்தது. காஞ்சி மாநகரை அடைந்ததும் மாமனுடைய புத்திமதியின் பிரகாரம் அவன் வேலை வீசி எறியத்தான் செய்தான்! ஆனால், அந்தப் பொல்லாத வேல் மதங்கொண்ட யானையின் மீது விழுந்து தொலைத்தது! அதனுடைய பலன்தான் தன்னைச் சிறையிலே கொண்டுவந்து சேர்த்தது என்பதை எண்ணியபோது பரஞ்சோதிக்குச் சிரிப்பு வந்தது. காஞ்சி மாநகர் சேர்ந்த முதல்நாள் இரவைத் தான் சிறைச்சாலையில் கழிக்க வேண்டியிருந்தது என்பதை அவனுடைய தாயும் மாமனும் அறிந்தால் என்ன நினைப்பார்கள்? தான் காஞ்சிக்குப் புறப்பட்ட சமயத்தில், வீட்டுச் சுவருக்கு அப்பால் தனியாக நின்று கனிவும், கண்ணீரும் ததும்பிய கண்களினால் விடை கொடுத்த உமையாளுக்குத் தான் என்னமாயிருக்கும்?

காஞ்சியில் தமிழ்க் கல்வியும், சிற்பக் கலையும் கற்றுக் கொண்டு திரும்பி ஊருக்குப் போனதும், இந்த முதல்நாள் சம்பவத்தைச் சொன்னால், அவர்கள் ஒருவேளை நம்ப மறுத்தாலும், மறுக்கலாம். இன்று மத்தியானம் தன்னிடம் யாராவது, இப்படியெல்லாம் நடக்கும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க முடியுமா? சட்டென்று பரஞ்சோதிக்கு ஒரு விஷயம் நினைவு வந்தது. அந்த புத்த சந்நியாசி என்ன சொன்னார்? இன்று இரவு உனக்கு ஒரு கஷ்டம் வரும் என்று சொன்னாரல்லவா? அது உண்மையாகி விட்டதே! உண்மையிலேயே அவர் முக்காலமும் உணர்ந்த முனிவரா? அன்று நண்பகலில் அந்தப் புத்த சந்நியாசியை அவன் சந்தித்த சம்பவத்தை நினைத்துக்கொண்டு பரஞ்சோதி தனக்குத் தானே நகைத்துக்கொண்டான் அந்தச் சம்பவம் பின்வருமாறு.

காலையெல்லாம் வழி நடந்த பிறகு, காஞ்சி நகர் இன்னும் ஒரு காத தூரத்தில்தான் இருக்கிறது என்று பரஞ்சோதி தெரிந்து கொண்டு சற்று இளைப்பாறிச் செல்லலாமென்று சாலை ஓரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டான். அவனுடைய தலை மாட்டில் மூட்டையும் அவன் பக்கத்தில் வேலாயுதமும் கிடந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் சாலையோடு ஒரு புத்த சந்நியாசி வருவதை அவன் பார்த்தான். புத்தர்கள் அல்லது சமணர்களுடைய கூட்டுறவு கூடாதென்றும், அவர்களைக் கண்டால் தூர விலகிப்போய்விட வேண்டுமென்றும் அவனுடைய மாமனும் அன்னையும் மிகவும் வற்புறுத்திக் கூறியிருந்தார்கள். எனவே, தூரத்தில் புத்த சந்நியாசியைக் கண்டதும் பரஞ்சோதி கண்களை மூடிக் கொண்டான். அவர் தன்னைத் தாண்டிச் சாலையோடு தொலை தூரம் போகும் வரையில் தூங்குவது போல் பாசாங்கு செய்ய அவன் தீர்மானித்திருந்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு அருகில் வந்து யாரோ நிற்பது போலவும் தன்னை உற்றுப் பார்ப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். பரஞ்சோதி அஞ்சா நெஞ்சம் படைத்த வாலிபன்தான் ஆனாலும் கண்ணைத் திறந்ததும் எதிரில் கண்ட காட்சி அவனைத் துணுக்குறச் செய்தது. புத்த சந்நியாசி அவனுக்கு அருகில் வந்து நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தோற்றம் அவனுக்கு அச்சத்தை அளித்தது. அதைக் காட்டிலும் அவர் கையில் வாலைப் பிடித்துத் தலைகீழாகத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த பாம்பு அதிக அருவருப்பையும் பயங்கரத்தையும் அளித்தது.

ஐந்து அடி நீளமுள்ள நாகசர்ப்பம் அது; ஆனால், உயிர் இல்லாதது! அதனுடைய உடலில் இரத்தம் கசிந்தது. பரஞ்சோதி பரபரப்புடன் எழுந்து, “அடிகளே! இது என்ன வேடிக்கை? எதற்காகச் செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? தூர எறியுங்கள்!” என்றான். “பிள்ளாய்! இவ்வாறு காட்டுப் பிரதேசத்தில் தனியாகப் படுத்து உறங்கலாமா? இத்தனை நேரம் இந்த நாக சர்ப்பம் உன்னைத் தீண்டியிருக்குமே. நல்ல சமயத்தில் நான் வந்து இதை அடித்தேனோ, நீ பிழைத்தாயோ?” என்று சொல்லி விட்டு, புத்த சந்நியாசி அந்தச் செத்த பாம்பை தூர எறிந்தார்.

பரஞ்சோதி தன் முகத்தில் தோன்றிய புன்சிரிப்பை மறைத்துக்கொண்டு, “அப்படியா அடிகளே! நான் ஒரு தாய்க்கு ஒரே பிள்ளை. என்னை நீங்கள் காப்பாற்றியதற்காக என் தாயார் தங்களுக்கு ரொம்பவும் நன்றி செலுத்துவாள்” என்றான். பிறகு அவன் மூட்டையையும் வேலையும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று, “தங்கள் திருநாமம் என்னவோ? என் தாயாரிடம் எப்போதாவது தங்களைப்பற்றிச் சொல்ல நேர்ந்தால்?…என்பதற்குள் பிக்ஷு குறுக்கிட்டு, “நாகநந்தி என்பார்கள்; நீ எவ்விடத்துக்குச் செல்கிறாய் தம்பி?” என்று கேட்டார். “காஞ்சிக்குப் போகிறேன்” என்று பரஞ்சோதி கூறியதும் “நானும் அங்கேதான் போகிறேன்! வழித்துணை ஆயிற்று, வா, போகலாம்!” என்றார் நாகநந்தி அடிகள்.

இருண்ட சிறையில் கோரைப்பாயில் படுத்திருந்த பரஞ்சோதி, ‘அந்தப் புத்த பிக்ஷுவுக்கு நாகநந்தி, என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்! அவர் முகத்தைப் பார்த்தாலே நாகப் பாம்பின் ஞாபகம் வருகிறது!” என்று எண்ணமிட்டான். நாகநந்தி அடிகள் வருங்காலத்தை ஞான திருஷ்டியினால் அறிந்துதான் சொன்னாரோ, அல்லது குருட்டம் போக்காய்ச் சொன்னாரோ, அவருடைய ஜோசியத்தில் முற்பகுதி நிறைவேறிவிட்டது. தான் இப்போது ஒரு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். அவருடைய ஜோசியத்தின் இன்னொரு பகுதியும் நிறைவேறுமா? ‘புத்த பகவான் அருளால் அந்தக் கஷ்டம் நீங்கும்!” என்று சொன்னது பலிக்குமா? ஆம்; பலிக்கத்தான் வேண்டும்.

உண்மையில் பரஞ்சோதி தன்னுடைய நிலைமையைக் குறித்து அதிகக் கவலைப்படவில்லை. ஏதோ தவறுதலினால் தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றும் உண்மை தெரியும்போது தன்னை நிச்சயம் விடுதலை செய்து விடுவார்கள் என்றும் உறுதியாக நம்பினான். எனவே, இன்றிரவு நிம்மதியாகத் தூங்குவதுதான் சரி. ஆனால், ஏன் தூக்கம் வரமாட்டேன் என்கிறது? ஓகோ! எல்லாம் இந்த ஒரு சாண் வயிறு செய்யும் காரியந்தான். இராத்திரி ஒன்றும் சாப்பிடவில்லையல்லவா? பசி வயிற்றைக் கிள்ளுகிறது! அதனால்தான் தூக்கம் பிடிக்கவில்லை. நல்ல காஞ்சி நகரம்! நெடுந்தூரம் யாத்திரை செய்து வந்த அதிதிகளை இராப்பட்டினி போட்டுக் கொல்லுகிற இந்த நகரத்தைப்பற்றி என்னத்தைச் சொல்வது! காஞ்சி நகரை அணுகியபோது அந்தத் திகம்பர ஜைன முனிவர் எதிர்பட்டார் அல்லவா? அந்த இராப்பட்டினிக்காரனின் முகதரிசனத்தின் பலன்தான் இன்றிரவு தனக்கு அன்னம் அபாவமாய்ப் போய்விட்டது போலும்…!

மேற்சொன்னவாறு பரஞ்சோதி சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அந்த அறையில் உண்டான ஒரு மாறுதல் அவனுடைய கவனத்தைச் சட்டென்று கவர்ந்தது. சற்று முன் வரையில் இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் இப்போது கொஞ்சம் வௌிச்சம் காணப்பட்டது. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று அதிசயித்துப் பரஞ்சோதி மேலே பார்த்தான்; கூரையில் இருந்த சிறு துவாரத்தின் வழியாகச் சந்திர கிரணம் உள்ளே புகுந்து வந்ததுதான் என்று தெரிந்தது. இத்தனை நேரம் இல்லாமல் இப்போது திடீரென்று மேற்படி துவாரம் எப்படி ஏற்பட்டது என்று ஒரு கணம் பரஞ்சோதிக்கு வியப்பாயிருந்தது. “இல்லை, இல்லை! துவாரம் எப்போதும் இருந்திருக்க வேண்டும்; ஆனால் துவாரத்துக்கு நேராக இப்போதுதான் சந்திரன் வந்திருக்கிறது!” என்று தனக்குத்தானே சந்தேக நிவர்த்தி செய்து கொண்டான். ஆம்; பூரணச் சந்திரனுடைய மோகன நிலவானது வௌி உலகத்தையெல்லாம் அப்போது சொப்பன சௌந்தரிய லோகமாகச் செய்து கொண்டிருக்கிறது! அந்த விஷயத்தைத் தனக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காகவே மேற்கூரைத் துவாரத்தின் வழியாக அந்தச் சந்திர கிரணம் உள்ளே புகுந்து வருகிறது போலும்…!

ஆகா! இது என்ன? உள்ளே வரும் நிலவு வௌிச்சம் இவ்வளவு அதிகமாகி விட்டதே! துவாரம் பெரிதாகியிருப்பது போல் தோன்றுகிறதே! அடடே! முதலில் பார்த்தபோது ஒரு கைகூட நுழையமுடியாத சிறு துவாரமாயிருந்தது இப்போது ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாகிவிட்டதே! இது என்ன இந்திர ஜாலமா? அல்லது மகேந்திர ஜாலமா? மகேந்திர சக்கரவர்த்தியின் காஞ்சி மாநகரம் மாய ஜால நகரமாயிருக்கிறதே! ஐயையோ! இது என்ன பயங்கரம்?.. பரஞ்சோதியின் மூச்சு ஒரு நிமிஷம் நின்று போய்விட்டது! மேற்கூரைத் துவாரத்தின் வழியாக நௌிந்து நௌிந்து கீழே வந்தது ஒரு நீளமான பாம்பு!.. இல்லை, இல்லை! பாம்பு இல்லை!… அது வெறும் கயிறுதான்! சீ! இன்று மத்தியானம் அந்த புத்த பிக்ஷு செத்த பாம்புடன் வந்து தன்னைத் திடுக்கிடச் செய்தாலும் செய்தார்! கயிற்றைப் பார்த்தால்கூடப் பாம்பு மாதிரி தோன்றுகிறது.

மேற்கூரைத் துவாரத்தின் மர்மம் இப்போது புலப்பட்டது. யாரோ வேண்டுமென்றுதான் கூரையில் துவாரம் செய்திருக்கிறார்கள். அதன் வழியாக கயிற்றை உள்ளே விடுகிறார்கள்!..எதற்காக? வேறு எதற்காக இருக்கும்? தன்னைத் தப்புவிப்பதற்காகத்தான்! ஆனால், முன்பின் தெரியாத இந்தப் பெரிய நகரில் தன்னிடம் அவ்வளவு சிரத்தை கொண்டிருப்பவர்கள் யார்? தான் அந்தச் சிறைச்சாலை அறையில் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது? இதற்குள்ளாகக் கயிற்றின் முனை கீழே அவன் கைக்கு எட்டும் தூரத்துக்கு வந்துவிட்டது. இன்னும் கீழே வந்து தரையையும் தொட்டுவிட்டது, பிறகு, அந்தக் கயிறு இப்படியும் அப்படியும் அசையத் தொடங்கியது. மேலேயிருந்து கயிற்றை விட்டவர்கள் அதைக் குலுக்குகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. எதற்காக? தன்னை அந்தக் கயிற்றின் வழியாக மேலே வரும்படி சமிக்ஞை செய்கிறார்களா? அப்படித்தான் இருக்க வேண்டும்.

அதிசயமான முறையில் வந்த அந்த உதவியைப் பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று பரஞ்சோதி ஒரு நிமிஷம் யோசனை செய்தான். அதனால் வேறு என்ன தொல்லைகள் விளையுமோ என்பதாக ஒரு பக்கம் அவனுக்கு யோசனையாயிருந்தது. இவ்வளவு சிரத்தை எடுத்துத் தன்னைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள ஒரு பக்கம் அவனுக்குப் பேராவல் உண்டாயிற்று. அதோடு, இன்னொரு முக்கிய காரணமும் சேர்ந்தது! அது அவனுடைய வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த பசிதான்! பரஞ்சோதி கயிற்றை அழுத்தமாய்ப் பிடித்து இழுத்தான். மேலே அது இறுகக் கட்டியிருக்கிறதென்று தெரிந்தது. தன்னுடைய பாரத்தை அது நன்றாய்த் தாங்கும் என்று நிச்சயமாயிற்று. உடனே கயிற்றின் வழியாக அவன் மேலே ஏறத் தொடங்கினான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 5
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here