Home Kalki Read Sivagamiyin Sabatham Part 1 Ch 8

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 8

86
0
Read Sivagamiyin Sabatham Part 1 Ch 8 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 1 Ch 8 சிவகாமியின் சபதம் முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை அத்தியாயம் 8: புவன மகாதேவி

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 8

சிவகாமியின் சபதம்

முதல் பாகம்: பரஞ்சோதி யாத்திரை

அத்தியாயம் 8: புவன மகாதேவி

Read Sivagamiyin Sabatham Part 1 Ch 8

மாமல்லர் தந்தையின் சொற்படி அரண்மனை நிலாமுற்றத்தைக் கடந்து சென்று, உள் வாசலை நெருங்கியதும், குதிரை மீதிருந்து இறங்கினார். அங்கே சித்தமாய்க் காத்திருந்த பணியாட்கள் குதிரையைப் பிடித்து அப்பாலே கொண்டு சென்றார்கள். பிறகு, மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக, அவ்வளவு விரைவாக நடந்து சென்றார். புதிதாக அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கு நெடுக்குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். நரசிம்மர் அந்தப் பாதைகளின் வழியாக வளைந்து வளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த ஒரு வாசலை அவர் அணுகியதும், “குழந்தாய்! வந்தாயா?” என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.

பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்தரசியான புவன மகாதேவி அந்தப்புர வாசற்படியில் வந்து நின்றார். அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சௌந்தர்யவதனமும், “திரிபுவன சக்கரவர்த்தினி” என்று பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் அவரைக் கொண்டாடுவது முற்றும் பொருந்தும் என்று தெரியப்படுத்தின. “அம்மா!” என்ற குரலுடன் அருகில் வந்த குமாரனைச் சக்கரவர்த்தினி இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு, “குழந்தாய்! இன்றைக்கு…” என்று ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், மாமல்லர், “அம்மா! உங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு வரம் தர வேண்டும்!” என்றார்.

புவனமகாதேவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. “வரமா! நல்லது, கேள்! தருகிறேன் அதற்குப் பிரதியாக நானும் ஒரு வரம் கேட்பேன் அதை நீ தரவேண்டும்!” என்று அன்பு கனிந்த குரலில் கூறினார். மாமல்லர், “பிள்ளை அன்னையிடம் வரம் கேட்பது நியாயம். பிள்ளையிடம் தாய் வரம் கேட்பது எங்கேயாவது உண்டா? முடியவே முடியாது?” என்றதும், புவன மகாதேவியின் முகத்தில் புன்னகை மறைந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள்.

நரசிம்மர் தமது தலை அணியையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துவிட்டுக் கால் கை சுத்தம் செய்துகொண்டு வந்தார். பிறகு இருவரும் அந்தப்புர பூஜா மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். அங்கே, மத்தியில் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் திவ்ய அலங்காரங்களுடன் விளங்கியது. பின்புறச் சுவர்களில் சிவபெருமானுடைய பல வடிவங்களும், பாலகோபாலனுடைய லீலைகளும் வர்ணங்களில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

பூஜையெல்லாம் முன்னமே முடிந்தபடியால், தாயும் மகனும் அந்தத் திருவுருவத்தை வழிபட்டுவிட்டு வௌியே வந்து போஜன மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். உணவருந்த உட்கார்ந்ததும் புவனமகாதேவி, “குழந்தாய்! ஏதோ முக்கியமான செய்தி வந்திருக்கிறதாம்! கோட்டை வாசல் எல்லாம் சாத்தியாகிவிட்டதாம். அரண்மனையெல்லாம் அல்லோலகல்லோலப்படுகிறது. எனக்கு மட்டும் ஒன்றுமே தெரியவில்லை நீயாவது சொல்லக்கூடாதா? பெண்கள் என்றால் மட்டமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவேண்டியதில்லை என்பதாக நீ கூடவா எண்ணம் வைத்திருக்கிறாய்?” என்றார்.

மாமல்லர் உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாட்களைப் பார்த்து விட்டு, “அம்மா! சாப்பிட்டானதும் மேல் மாடத்துக்குப் போய் எல்லா விவரங்களும் சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் இப்போதே கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தினந்தோறும் நான் வந்த பிறகுதான் தாங்கள் இராப் போஜனம் செய்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது அந்த வழக்கத்தை இன்றோடு நிறுத்திவிட வேண்டும்” என்றார். சக்கரவர்த்தினி குமாரனை அன்பு ததும்பிய கண்களால் பார்த்துப் புன்னகை புரிந்தார் ஆனால், மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

காஞ்சி அரண்மனையில் பகல் போஜனம் ராஜரீக சம்பிரதாயங்களுடன் ஆடம்பரமாய் நடப்பது வழக்கம். பெரிய சாம்ராஜ்ய உத்தியோகஸ்தர்கள், அந்நிய நாடுகளிலிருந்து வந்த பிரமுகர்கள், சிவனடியார்கள், வைஷ்ணவப் பெரியார்கள், பிரசித்தி பெற்ற கலைஞர்கள், தமிழ்க் கவிஞர்கள், வடமொழிப் பண்டிதர்கள் முதலியோர் விருந்தாளியாக அழைக்கப்படுவது உண்டு. எனவே பகல் போஜன நேரத்தில் அரண்மனைவாசிகள் ஒருவரோடொருவர் அளவளாவுதல் இயலாத காரியம். மற்றும் பகல் நேரமெல்லாம் சக்கரவர்த்தியும் குமாரரும் ராஜரீக காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, தாயும் பிள்ளையும் சந்திப்பதற்கு இராப் போஜன நேரத்தைச் சக்கரவர்த்தி திட்டம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அரண்மனைமேல் உப்பரிகையின் நிலாமாடத்தில் அவர்கள் மூன்று பேரும் சந்தித்துப் பேசுவது வழக்கமாயிருந்தது.

இன்றைக்குச் சாப்பாடு ஆனதும் தாயும் புதல்வனும் மேல் உப்பரிகைக்குச் சென்று நிலா மாடத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்தார்கள். பால் நிலவில் மூழ்கியிருந்த காஞ்சி நகரமானது அன்றிரவு என்றுமில்லாத அமைதி பெற்று விளங்கிற்று. நரசிம்மவர்மருடைய மனம் அந்நகரின் கீழ்க் கோட்டை வாசலுக்குச் சென்றது. இப்போது அந்தக் கோட்டை வாசலைக் கடந்து ஒரு சிவிகை போய்க் கொண்டிருக்கும். அந்தச் சிவிகையில் ஆயனரும் அவர் மகளும் அமர்ந்திருப்பார்கள். ஆகா! அவர்களுக்குத்தான் இன்றைக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தது! மதயானையின் மீது வேல் எறிந்து அவர்களைக் காப்பாற்றிய வீரன் யாராக இருப்பான்?…

புதல்வன், தானே பேசுவான் என்று புவனமகாதேவி சிறிது நேரம் காத்திருந்தார். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு, “குழந்தாய்!” என்றார். உடனே மாமல்லர் திடீரென்று கனவு கலைந்தவர் போல் திடுக்கிட்டுத் தாயாரைப் பார்த்தார். “அம்மா! அம்மா! நான் உங்களிடம் விரும்பிய வரத்தைக் கேட்டே விடுகிறேன். உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் என்னைக் ‘குழந்தாய்’ என்று கூப்பிடாதீர்கள். நான் இன்னும் பச்சைக் குழந்தையா? பல்லவ ராஜ்யத்திலுள்ள புகழ் வாய்ந்த மல்லர்களையெல்லாம் ஜயித்து ‘மாமல்லன்’ என்று பட்டம் பெற்ற பிறகும், என்னைக் குழந்தை!’ ‘குழந்தை’ என்றால் நான் என்ன செய்கிறது? அப்பாவோ இன்னும் என்னைத் தொட்டிலில் கிடக்கும் குழந்தையாகவே எண்ணி நடத்துகிறார்! உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டு…” “அதற்கு என்ன செய்யலாம்? பெற்றோர்களுக்கு மகன் எப்போதும் குழந்தைதான்” என்ற குரலைக் கேட்டுத் தாயும் மகனும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மகேந்திர சக்கரவர்த்தி பின்னால் வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டு இருவரும் பயபக்தியுடன் எழுந்து நின்றார்கள்.

மகேந்திரர் பளிங்கு மேடையில் அமர்ந்ததும் புவன மகாதேவியும் மாமல்லரும் உட்கார்ந்தார்கள். “தேவி! குழந்தை ஏதாவது சொன்னானா?” என்று சக்கரவர்த்தி கேட்டார். “இன்னும் ஒன்றும் சொல்லவில்லை என்பேரிலும் உங்கள் பேரிலும் குறைதான் சொல்லிக்கொண்டிருந்தான்!” “குறை சொல்லாமல் வேறு என்ன சொல்லட்டும், அப்பா! பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்த செய்தி கிடைத்த பிறகும் நாம் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதா? சேனாபதி கலிப்பகையார் சேனை திரட்டுவதற்குள் கலியுகமே முடிந்துவிடும் போலிருக்கிறதே! இத்தனை நேரம் நமது சைனியம் போருக்குக் கிளம்பியிருக்க வேண்டாமா?” என்று கொதித்தார் மாமல்லர்.

“பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்தார்களா? இது என்ன?” என்று புவனமாதேவி வியப்பும் அவநம்பிக்கையும் தொனித்த குரலில் கேட்டார். “ஆம், தேவி! அற்ப சொற்பமாகப் பிரவேசிக்கவில்லை. பெரும் படைகளுடனே திடீரென்று பிரவேசித்திருக்கிறார்கள்..” “பல்லவேந்திரா! மந்திராலோசனை சபையில் நான் மட்டும் வாயைத் திறக்காமல் இருக்கவேண்டும் என்று ஏன் கட்டளையிட்டிருக்கிறீர்கள்? எல்லாரும் ஏதோ பேசியபோது என் மனம் கொதித்த கொதிப்பை மிகவும் முயன்று அடக்கிக் கொண்டிருந்தேன்…”

மாமல்லரின் பேச்சை மறுத்துச் சக்கரவர்த்தி தமது பட்ட மகிஷியைப் பார்த்துச் சொன்னார்: “தேவி! நரசிம்மன் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறான். வந்திருக்கும் யுத்தம் எப்பேர்ப்பட்டதென்பதை அவன் அறியவில்லை. இரண்டு பேரும் கேளுங்கள் வாதாபி மன்னன் புலிகேசி பெரும் படைகளுடன் துங்கபத்திரை நதியைக் கடந்து நமது ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருக்கிறான். அவனுடைய சைனியத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்களாம். ஆயிரக்கணக்கில் யானைகள் இருக்கின்றனவாம். பெரிய காளைகள் பூட்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் தொடர்ந்து வருகின்றனவாம். பதினாயிரக்கணக்கான குதிரை வீரர்கள் வருகிறார்களாம். வெகு காலமாகவே புலிகேசி இந்த யுத்த ஏற்பாடுகளைச் செய்து வந்திருக்கிறான். நமது ஒற்றர்கள் எப்படியோ ஏமாந்து போயிருக்கிறார்கள். நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம். அந்தச் சைனியத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய படை பலம் தற்போது நம்மிடம் இல்லை. ஆங்காங்குள்ள நம் படைகள் பின்வாங்கி வந்துகொண்டிருக்கின்றன, பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் அபாயம் மிகப் பெரியது. ஆனாலும் நெற்றிக் கண்ணைத் திறந்து திரிபுரத்தை எரித்த பினாகபாணியின் அருளினால் முடிவில் நமக்குத்தான் வெற்றி கிடைக்கப் போகிறது அதைப் பற்றி சந்தேகம் வேண்டியதில்லை!”

தந்தை பேசி முடிக்கும் வரையில் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த நரசிம்மர், “அப்பா! பல்லவ சைனியம் பின் வாங்கி வருகிறதா? இது என்ன அவமானம்? இப்போது எனக்கு அனுமதி கொடுங்கள். அப்பா! நம்மிடம் தற்சமயம் ஆயத்தமாயிருக்கும் படைகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன்!” என்றார். “பொறு நரசிம்மா, பொறு! பல்லவ சைனியத்தை நீ நடத்திச் செல்லும்படியான காலம் வரும். அது வரையில் பொறுமையுடன் நான் சொல்வதைக் கேட்டு நட, இன்றிரவு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்னுடன் வருகிறாயா?” “கேட்க வேண்டுமா? வருகிறேன், அப்பா.” “தேவி! நரசிம்மனை இன்று முதல் நான் ‘குழந்தை’யாக நடத்தப் போவதில்லை; சகாவாகவே நடத்தப்போகிறேன். மந்திராலோசனைகளில் கலந்துகொள்ளும் உரிமையையும் இன்று முதல் அவனுக்கு அளிக்கிறேன். நீயும் இனிமேல் அவனைக் ‘குழந்தை’ என்று அழைக்க வேண்டாம்!” என்றார் சக்கரவர்த்தி. புவனமகாதேவியைப் படுப்பதற்குப் போகச் சொல்லி விட்டுத் தந்தையும் மகனும் அரண்மனையிலிருந்து வெளியேறிச் சென்றார்கள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 7
Next articleRead Sivagamiyin Sabatham Part 1 Ch 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here