Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 14

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 14

63
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 14 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 14 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 14: மகேந்திரர் தவறு

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 14

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 14: மகேந்திரர் தவறு

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 14

சத்ருக்னன் கொடுத்த ஓலைகளைப் படித்து வந்தபோது மகேந்திரருக்கு அடிக்கடி கைகள் நடுங்கின. முதலிலே இரண்டு மூன்று ஓலைகளைச் சற்றுச் சாவகாசமாகப் படித்தார், மற்றவையெல்லாம் விரைவாகப் பார்த்து முடித்தார். கடைசியில் சத்ருக்னனைப் பார்த்து, “சத்ருக்னா! இந்த ஓலைகளை நீ கொண்டு வந்திருக்கக் கூடாது; என்னிடம் கொடுத்திருக்கவே கூடாது!” என்று சோகக் குரலில் கூறினார்.

“பல்லவேந்திரா! மன்னிக்க வேண்டும்!” என்றான் சத்ருக்னன்.

“உன் பேரில் குற்றம் ஒன்றுமில்லை சத்ருக்னா! மன்னிப்புக் கேட்பதற்குரிய காரியம் எதுவும் நீ செய்யவில்லை. உன்னுடைய கடமையையே நீ செய்தாய், என் மனத்துக்கு அது எவ்வளவு வேதனை தரும் காரியம் என்பது உனக்கு எப்படித் தெரியும்? அரண்மனைத் தோட்டத்திலே ஓர் அழகான பூஞ்செடி முளைத்தது. அரண்யத்தின் நடுவிலே ஒரு மனோகரமான மலர்க் கொடி தழைத்தது. இரண்டும் இளந்தளிர்கள் விட்டு வளர்ந்தன. பருவ காலத்தில் அரும்பு விட்டுப் பூத்து குலுங்கின. அந்தப் பூஞ்செடியையும் மலர்க் கொடியையும் வேரோடு பிடுங்கி நெருப்பிலே போட்டுப் பொசுக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. சத்ருக்னா! அது எவ்வளவு குரூரமான பொறுப்பு என்பதை நீ கொண்டு வந்த இந்த ஓலைகளிலிருந்து நன்றாக அறிகிறேன்…” மகேந்திர பல்லவர் பெருமூச்சு விட்டுவிட்டு, “சத்ருக்னா! மாமல்லரின் கோமள இருதயத்தை நான் எவ்வளவு தூரம் புண்படுத்தியிருக்கிறேன், தெரியுமா? எவ்வளவு தூரம் அவன் மன உறுதியைச் சோதித்திருக்கிறேன், தெரியுமா? இதைக் கேள்” என்று கூறி ஓலையிலிருந்து பின்வரும் பகுதியை வாசித்தார்.

‘என் ஆருயிரே! உன்னை வந்து பார்ப்பதற்கு என் உயிர், உடல், ஆவி அனைத்தும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. இந்தக் காஞ்சிக் கோட்டையைப் போல் நூறு மடங்கு கட்டும் காவலுமுள்ள கோட்டைக்குள்ளே என்னை வைத்திருந்தாலும் எல்லாக் கட்டுக் காவலையும் மீறிக்கொண்டு உன்னிடம் நான் பறந்து வந்து விடுவேன். கடல்களுக்கு நடுவிலுள்ள தீவில் இராவணன் சீதையைச் சிறை வைத்தது போல் உன்னை, யாராவது வைத்திருந்தால் அங்கேயும் உன்னைத் தேடி வந்தடைவேன். சொர்க்க லோகத்திலே இந்திரனும், பாதாள லோகத்திலே விருத்திராசுரனும் உன்னைச் சிறைப்படுத்தியிருந்தாலும், நான் உன்னை வந்து அடைவதைத் தடைப்படுத்த முடியாது. ஆனால் இதையெல்லாம் காட்டிலும் பெரிதான தடை வந்து குறுக்கிட்டிருக்கிறது. அது என் தந்தையின் கட்டளைதான். தாம் அனுமதி அளிக்கும் வரையில் காஞ்சிக் கோட்டையை விட்டு வெளியே போகக் கூடாதென்று மகேந்திர பல்லவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். சிவகாமி! இந்த உலகத்தில் என்னால் செய்ய முடியாத காரியம் ஒன்று உண்டு என்றால், அது என் தந்தையின் கட்டளையை மீறுவதுதான்.

நெற்றிக் கண் படைத்த சிவபெருமான் என் முன்னால் பிரத்தியட்சமாகி, மகேந்திர பல்லவரின் கட்டளைக்கு விரோதமாக ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால், ஒருநாளும் அதை நான் செய்ய மாட்டேன். அவ்வளவு தூரம் என் பக்திக்கு உரியவரான என் தந்தை இப்போது என்னை எப்பேர்ப்பட்ட கொடுமைக்கு ஆளாக்கி விட்டார் தெரியுமா? என்னுடைய உயிரைக் காட்டிலும் எனக்குப் பிரியமான காதலிகள் இருவரையும் நான் சந்திக்க முடியாதபடி செய்துவிட்டார். அந்த இரண்டு காதலிகளில் ஒருத்தி ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமி. அவளை அரண்ய மத்தியிலுள்ள தாமரைக் குளக்கரையில் நான் ஏகாந்தமாகச் சந்திக்க விரும்புகிறேன். இன்னொரு காதலி யார் தெரியுமா? அவள் பெயரை உனக்குச் சொல்லட்டுமா? சொன்னால் நீ அசூயை அடையாமல் இருப்பாயா? அவள் பெயர் ஜயலக்ஷ்மி. அந்தக் காதலியை நான் இரத்தவெள்ளம் ஓடும் யுத்த களத்தின் மத்தியில் சந்திக்க ஆசைப்படுகிறேன். சந்தித்து அவள் என் கழுத்தில் சூடும் வெற்றி மாலையுடனே திரும்பி வந்து உன்னைப் பார்க்க விரும்புகிறேன்!” மகேந்திரர் இவ்விதம் வாசித்து வந்தபோது, சத்ருக்னன் தலைகுனிந்து பூமியைப் பார்த்தவண்ணம் நின்றான்.

“கேட்டாயா, சத்ருக்னா! இப்பேர்ப்பட்ட புதல்வனைப் பெறுவதற்கு நான் எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும்? இராமனைப் பெற்ற தசரதரைவிட நான் பாக்கியசாலி அல்லவா? இராமன் அப்படி என்ன தியாகம் செய்து விட்டான்? இராஜ்யத்தைத் துறந்து சீதையோடும் லக்ஷ்மணனோடும் வனத்துக்குச் சென்றான். இராஜ்யம் ஆளுவதைக் காட்டிலும் வனத்தின் உல்லாச வாழ்க்கையை இராமன் விரும்பியதில் வியப்பு என்ன? ஆனால், தந்தையின் வாக்கைப் பரிபாலனம் செய்யும் பொருட்டு வனத்துக்குப் போவதைக் காட்டிலும் போர்க்களத்துக்குப் போகாமலிருக்க நூறு மடங்கு மன உறுதி வேண்டும். பரிசுத்தமான இளம் உள்ளத்திலே முதன் முதலாகக் காதலித்த பெண்ணைப் பார்க்கப் போகாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு திடசித்தம் வேண்டும்.

இத்தகைய கடும் சோதனையில் நரசிம்மன் தேறியிருக்கிறான் என்பதை நினைக்கும் போது, என் உள்ளம் பூரிக்கிறது. ஆனால் சோதனையை ஏற்படுத்திய நானோ படுதோல்வியடைந்தேன். நரசிம்மனையும் சிவகாமியையும் பிரித்து வைத்திருந்தால், அவர்கள் ஒருவரையொருவர் பார்க்காமலிருந்தால், சிவகாமியின் காதல் வலையிலிருந்து நரசிம்மன் மீண்டு விடுவான் என்று நினைத்தேன். காதலை நெருப்பு என்று கூறுவது முற்றும் பொருத்தமானது. சத்ருக்னா! நெருப்பு சொற்பமாயிருந்தால், காற்று அடித்ததும் அணைந்து விடுகிறது. பெருநெருப்பாயிருந்தால், காற்று அடிக்க அடிக்க நெருப்பின் ஜ்வாலை அதிகமாகிக் கொழுந்துவிட்டு எரிகிறது. நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குப் பிரிவு என்று தோன்றுகிறது. பொய்க் காதலாயிருந்தால், பிரிவினால் அது அழிந்து விடுகிறது. உண்மைக் காதலாயிருந்தாலோ, பிரிவினால் அது நாளுக்கு நாள் வளர்ந்து பெரு நெருப்பாய் மூளுகிறது! நரசிம்மன் விஷயத்தில் அப்படித்தான் நடந்து விட்டது.

நான் எவ்வளவோ யோசனை செய்து போட்ட திட்டங்களையெல்லாம் காமதேவன் தன்னுடைய மெல்லிய பூங்கணை ஒன்றினால் காற்றில் பறக்கச் செய்துவிடுவான் போலிருக்கிறது. சத்ருக்னா! வாதாபி சக்கரவர்த்தியிடம் தோற்றாலும் தோற்கலாம். கேவலம் மன்மதனுடைய மலர்க்கணைக்கா மகேந்திர பல்லவன் தோற்றுவிடுவது? ஒரு நாளும் இல்லை!” என்று கூறி மகேந்திர சக்கரவர்த்தி மீண்டும் சிரித்தபோது அவருடைய சிரிப்பில் எக்களிப்பு தொனித்தது.

“மாமல்லனுக்கு நான் இட்ட கட்டளையை இந்தக் கணமே மாற்றிவிடுகிறேன். சத்ருக்னா! நான் தரும் ஓலையை எடுத்துக் கொண்டு வாயுவேக மனோவேகமாய்க் காஞ்சிக்குப் போக வேண்டும். தலைக்காட்டிலிருந்து துர்விநீதனுடைய சைனியம் காஞ்சியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. அதை எதிர்த்து நிர்மூலமாக்குவதற்கு நரசிம்மன் போர்க்களத்துக்குச் செல்லட்டும். போவதற்கு முன்னால் ஆயனர் வீட்டுக்குப் போய்ச் சிவகாமியைப் பார்த்துவிட்டு போவதாயிருந்தாலும் போகட்டும் அதற்கு நான் குறுக்கே நிற்கப் போவதில்லை!”

இதைக் கேட்டதும், சத்ருக்னனுடைய முகத்திலே தோன்றிய விசித்திரமான புன்னகை, “என்னிடம் கூடவா உங்களுடைய கபட நாடகம்?” என்று கேட்பது போலிருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 13
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 15

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here