Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 15

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 15

65
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 15 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 15 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 15: கிளியும் கருடனும்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 15

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 15: கிளியும் கருடனும்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 15

“கமலி!”

“கண்ணா!”

“எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!”

“ஏன் அப்படி?”

“புதிய தளபதிக்கு வந்த வாழ்வை நினைக்க நினைக்க கோபமாய் வருகிறது.”

“கோபித்து என்ன பயன்? அவர் யுத்தகளத்துக்குப் போய் வீராதிவீரர் என்று பெயர் எடுத்து வந்திருக்கிறார்.”

“யுத்தத்துக்குப் போகவேண்டுமென்று என் மனமுந்தான் துடியாய்த் துடிக்கின்றது.”

“யார் குறுக்கே விழுந்து மறிக்கிறார்கள்?”

“வேறு யார்? மாமல்லர்தான்! மாமல்லருக்கு ஏன் நான் ரதசாரதியானேன் என்று இருக்கிறது, அவராலேதானே நானும் இந்தக் கோட்டைக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது?” “இல்லாமற் போனால் வெட்டி முறித்து விடுவாயாக்கும்!”

“எப்படியும் ஒருநாளைக்கு மாமல்லர் யுத்தத்துக்குப் போகாமல் இருக்கமாட்டார். அப்போது நானும் போகிறேனா, இல்லையா பார்! ஒருவேளை நான் போர்க்களத்தில் வீரசொர்க்கம் அடைந்தால் என்னைப்பற்றிச் சின்னக் கண்ணனுக்குச் சொல்வாயல்லவா?”

“ஆகட்டும், ஆகட்டும்! வீட்டுக்குள்ளே உட்கார்ந்து வீரம் பேசுவதிலே உனக்கு இணை இந்தப் பல்லவ ராஜ்யத்திலேயே கிடையாது என்று கண்ணம்மாளிடம் சொல்கிறேன்.”

“என்ன சொன்னாய்? கண்ணம்மாளா?”

“ஆமாம்; கண்ணம்மாளாய்த்தான் இருக்கட்டுமே?”

“போதும், போதும்! பூலோகத்தில் பெண்களே பிறக்கக் கூடாது என்று நான் சொல்வேன் கூடவே கூடாது.”

“உண்மைதான்! ஆண் பிள்ளைகளைப் போன்ற நிர்மூடர்கள் இருக்கிற உலகத்தில் பெண்களைப் பகவான் படைக்கக்கூடாது தான். உங்களால் நாங்கள் படுகிற கஷ்டம் எவ்வளவு என்பதை உணர்ந்து கொள்ளக்கூட உங்களுக்குச் சக்தி இல்லை.”

“இது என்ன அபாண்டம், கமலி! உங்களை நாங்கள் அப்படி என்ன கஷ்டப்படுத்துகிறோம்?”

“சற்று முன்னால் யுத்தத்துக்குப் போய் நான் செத்துப் போகப் போகிறேன்; நீ வீட்டிலே சுகமாயிரு என்று சொன்னாயே? அது என்னைக் கஷ்டப்படுத்துகிறதல்லவா? தங்கச்சி சிவகாமியை எட்டுமாத காலமாக மாமல்லர் போய்ப் பார்க்காமலிருக்கிறாரே, அது அவளைக் கஷ்டப்படுத்துகிறதாகாதா?”

“எப்போதும் உன் தங்கச்சியைப் பற்றியேதான் உனக்கு யோசனை வேறு நினைவே கிடையாது.”

“ஆமாம், கண்ணா! கொஞ்ச நாளாக நான் அவளைப் பற்றியே தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். யோசிக்க யோசிக்க வருத்தமாயிருக்கிறது. சிவகாமி எதற்காக மாமல்லர் மேல் காதல் கொண்டாள் என்று இருக்கிறது. கிளி கிளியுடனும், குயில் குயிலுடனும் கூடி வாழ வேண்டும். மரக் கிளையில் வாழும் பச்சைக்கிளி உச்சி வானத்தில் பறக்கும் கருடனுக்கு மாலையிட ஆசைப்படலாமா!”

“இதென்ன கமலி, இப்படிப் பேசுகிறாய்? கொஞ்ச நாளைக்கு முன்னாலெல்லாம் நீதானே உன் தங்கைக்கு இணை மூன்று உலகத்திலும் இல்லை என்றும், மன்னாதி மன்னர்களெல்லாம் அவள் காலில் வந்து விழுவார்களென்றும் சொல்லிக் கொண்டிருந்தாய்?”

“ஆமாம், கண்ணா! என் தங்கை மேலுள்ள ஆசையினால் அப்படியெல்லாம் சொன்னேன். ஆசையிருக்குமிடத்தில் அறிவு மழுங்கிவிடும் அல்லவா? ஆர அமர யோசித்துப் பார்த்ததில் இதெல்லாம் நல்லதுக்கில்லை என்று தோன்றுகிறது. நான் சிவகாமிக்கு உடன்பாடாகப் பேசி அவள் ஆசையை வளர்த்து வந்ததும் தப்பு; மாமல்லரின் ஓலைகளை நீ அவளுக்குக் கொண்டு போய்க் கொடுத்துக் கொண்டிருந்ததும் தப்பு!..”

“இப்பேர்ப்பட்ட ஞானோதயம் உனக்கு எப்படி உண்டாயிற்று?” என்று கண்ணன் பரிகாசக் குரலில் கேட்டான்.

“கொஞ்சமாவது வெட்கமில்லாமல் நீ ‘சின்னக் கண்ணன், சின்னக் கண்ணன்’ என்று சொல்கிறாயே, அவன் என் வயிற்றில் வந்த பிற்பாடுதான்!” என்றாள் கமலி.

“இதென்ன கமலி! உன் தங்கை சிவகாமிக்கு மாமல்லரைக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் சின்னக் கண்ணனுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்க வில்லையே?” என்று கூறிக் கண்ணபிரான் ‘கலகல’ என்று சிரித்தான்.

“உனக்கு ஒன்றுமே விளங்காது கண்ணா! குதிரைகளோடு பழகிப் பழகிக் குதிரைகளுக்கு இருக்கிற அறிவுதான் உனக்கும் இருக்கிறது” என்றாள் கமலி.

“இதோ பார், கமலி! நீ என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லு! கேட்டுக் கொள்கிறேன். என் குதிரைகளைப் பற்றி மட்டும் ஒன்றும் சொல்லாதே! குதிரைகளுக்கு உள்ள அறிவு மனிதர்களுக்கு இருந்தால் இந்த உலகம் எவ்வளவோ மேலாயிருக்குமே!” என்றான் கண்ணன்.

குதிரைகளைப் பற்றிக் கமலி கேவலமாகப் பேசியதில் கண்ணனுக்கு மிக்க கோபம் உண்டாகிவிட்டது. பின்பு சற்று நேரம் அவன் எதுவும் பேசாமல் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான். கமலியும் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். எனவே, கண்ணன் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு பேச வேண்டியதாயிற்று.

“நீ என்னதான் சொல்லுகிறாய் கமலி? மாமல்லர் உன் தங்கையைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு என்ன தடை?” என்று கேட்டான்.

“கண்ணா! இத்தனை நாளாக நீ அரண்மனைச் சேவகம் செய்கிறாய். ஆனாலும் அரண்மனை நடைமுறை ஒன்றும் உனக்குத் தெரியவில்லை. இராஜாக்களும் இராஜகுமாரர்களும் கல்யாணம் செய்து கொள்வதென்றால் நீயும் நானும் கல்யாணம் செய்து கொள்வது போலவா? மாமல்லருடைய மகன் ஒரு நாள் இந்தக் காஞ்சி சிம்மாசனத்தில் ஏறவேண்டியிருக்குமல்லவா?”

“இதைத் தெரிந்துகொள்ள அபாரமான அறிவு வேண்டியதில்லை. குதிரைகளுக்கு இருக்கும் அறிவுகூடப் போதுமே!”

“அப்படியானால் அந்த அறிவைச் செலுத்தி இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்! சிற்பியின் மகள் வயிற்றிலே பிறக்கும் பிள்ளையைப் பல்லவ சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க முடியுமா?”

“ஏன் முடியாது? அதிலே என்ன கஷ்டம்? நமது அரண்மனைச் சிம்மாசனம் அப்படி ஒன்றும் அதிக உயரமில்லையே? நான் ஒருவனாகவே தூக்கி அதில் உட்கார்த்தி வைத்துவிடுவேனே?”

“நீ விளையாடுகிறாய், கண்ணா! ஆயனச் சிற்பியின் பேரன் பல்லவ குலத்துச் சிம்மாசனத்தில் ஏறுவதற்கு நாட்டார் – நகரத்தார் சம்மதிப்பார்களா?”

“நாட்டார் – நகரத்தாரைச் சம்மதிக்கச் செய்வது என் பொறுப்பு. கமலி! நீ பார்த்துக்கொண்டே இரு! இரண்டு கையிலும் இரண்டு குதிரைச் சாட்டையை எடுத்துக்கொண்டு போய் நாட்டார் – நகரத்தாரின் முதுகில் வெளுவெளு என்று வெளுத்துச் சம்மதிக்கும்படி செய்கிறேனா, இல்லையா பார்!”

“அது மட்டுமல்ல, கண்ணா! மகேந்திரபல்லவரின் சித்தப்பா பேரன் ஒருவன் வேங்கிபுரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறானே, உனக்குத் தெரியாதா? அந்த ஆதித்தவர்மன் பல்லவ சிம்மாசனத்துக்குப் போட்டிக்கு வர மாட்டானா?”

“வரமாட்டான் கமலி, வரமாட்டான்; வேங்கிபுரம் அடியோடு போய்விட்டது. வேங்கியோடு ஆதித்தவர்மனும் நாசமாய்ப் போய்விட்டான் இனிமேல் வரமாட்டான்!”

“மேலும், நமது குமார சக்கரவர்த்தி மற்ற தேசத்து இராஜகுமாரர்களைப்போல் அல்லவே! ஆசைக்குச் சிவகாமியைக் கல்யாணம் செய்துகொண்டு பட்டத்துக்கு இன்னொரு இராஜகுமாரியைக் கல்யாணம் செய்துகொள்ள மாமல்லர் இணங்கமாட்டார் அல்லவா? அவருடைய சுபாவம் மகேந்திர சக்கரவர்த்திக்கும் நன்றாய்த் தெரியும். ஏகபத்தினி விரதங்கொண்ட இராமனைப் போன்றவர் அல்லவா நமது மாமல்லர்?”

“ஆமாம், கமலி! சந்தேகமே இல்லை மாமல்லர் அது விஷயத்தில் இராமனையும் கண்ணனையும் போன்றவர்தான்!… கோகுலத்துக் கண்ணனை நான் சொல்லவில்லை அந்த அயோத்தி ராமனையும் இந்தக் காஞ்சிக் கண்ணனையும் போன்றவர்!” என்று கண்ணபிரான் தன்னைச் சுட்டிக் காட்டிக் கொள்ளவே, கமலிக்குச் சிரிப்புப் பீரிட்டுக் கொண்டு வந்தது.

சற்றுப் பொறுத்துக் கண்ணபிரான், “கமலி! எனக்கு ஒரே அதிசயமாயிருக்கிறது! இவ்வளவு மர்மமான இராஜரீக விவகாரங்களெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டான்.

“எல்லாம் எனக்கே தெரிந்துவிடவில்லை, கண்ணா! நானாக யோசித்ததில் கொஞ்சம் தெரிந்தது; ஒட்டுக் கேட்டதில் மற்றதெல்லாம் தெரிந்தது.”

“என்னத்தை ஒட்டுக் கேட்டாய்? எப்போது கேட்டாய்?”

“நாலைந்து நாளைக்கு முன்னால் நீ வீட்டில் இல்லாத போது இங்கே ஒரு மனிதர் வந்திருந்தார், கண்ணா! அவரும் மாமாவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிவகாமியின் பெயர் காதில் விழவே நான் சுவர் ஓரமாய் நின்று கேட்டேன். இந்த விஷயமெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள் அதோடு…”

“அதோடு என்ன கமலி?”

“இன்னொரு முக்கிய விஷயமும் பேசினார்கள்.”

“சொல்லு!”

“சிவகாமிக்கு மாமல்லர் ஓலை எழுதுவதும், அதை நீ கொண்டு போய்க் கொடுத்து வருவதும் உன் அப்பாவுக்குத் தெரிந்திருக்கிறது. அதைப்பற்றி அந்தப் புதுமனிதரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்!”

“ஆஹா! அந்தக் கிழ கோட்டான், அந்த இராவண சந்நியாசி, அந்த ருத்ராட்சப் பூனை அப்படியா செய்து கொண்டிருக்கிறது?” என்றான் கண்ணபிரான். அவனுடைய தந்தையைப் பற்றித்தான் அவ்வளவு மரியாதையான வார்த்தைகளைச் சொன்னான்! கமலி அவனுடைய வாயைப் பொத்தினாள். “அந்தப் புது மனிதர் யார் தெரியுமா, கமலி!” என்று கண்ணன் கேட்டான்.

“தெரியாது அதற்கு முன்னால் அவரை நான் பார்த்ததே இல்லை” என்றாள் கமலி.

அந்தச் சமயத்தில் தெருவில் விரைவாக குதிரை பாய்ந்துவரும் சத்தம் கேட்டது. கண்ணன், கமலி இருவரும் பலகணி வழியாய் வீதியில் பார்த்தார்கள். நாலுக்கால் பாய்ச்சலில் சென்ற குதிரை மீது ஒருவன் போய்க் கொண்டிருந்தான். அவனுடைய முகம் ஒரு கணம் கண்ணன் வீட்டுப் பக்கம் திரும்பி மறு கணம் எதிரே நோக்கியது.

கமலி, “கண்ணா! அவர்தான்! அந்தக் குதிரையில் போகிறவர்தான் அன்றைக்கு வந்து மாமாவுடன் பேசிக் கொண்டிருந்தவர்! அவர் யார், உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“தெரியும், கமலி! அவர்தான் ஒற்றர் தலைவன் சத்ருக்னன். மகேந்திர சக்கரவர்த்தியிடம் போய்விட்டுத் திரும்பி வருகிறான். ஏதோ விசேஷச் செய்தி கொண்டு வருகிறான். இதோ போய்த் தெரிந்துகொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கண்ணன் வெளியேறினான்.

ஒரு நாழிகைக்கெல்லாம் அந்த வீட்டுவாசலில் ‘கடகட’ என்ற சத்தத்துடன் ரதம் வந்து நின்றது. கண்ணபிரான் ரதத்தின் முன் தட்டிலிருந்து குதித்து உள்ளே ஓடிவந்து, சமையற்கட்டிலிருந்து வந்து கொண்டிருந்த கமலியின் மேல் மோதிக் கொண்டான்.

“அவ்வளவு என்ன அவசரம்?” என்றாள் கமலி.

கண்ணபிரான், “என்ன அவசரமா? யுத்தத்துக்குப் போகிற அவசரந்தான்!” என்றான்.

“என்ன, யுத்தத்துக்குப் போகிறாயா?” என்று கமலி பாய்ந்து வந்து கண்ணன் கழுத்தைத் தன் இரு கரங்களாலும் சேர்த்துக் கட்டிக் கொண்டாள்.

“ஆமாம், கமலி! ஒற்றர் தலைவன் சத்ருக்னன் மகேந்திர சக்கரவர்த்தியிடமிருந்து ஓலை கொண்டு வந்திருக்கிறான். மாமல்லர் போர்க்களத்துக்குப் போகச் சக்கரவர்த்தி அனுமதி கொடுத்து விட்டார். இன்னும் அரை நாழிகையில் மாமல்லர் கிளம்புகிறார், கமலி!…”

“நீயும் கிளம்புகிறாயா, கண்ணா! நிஜமாகவா?”

“இது என்ன கேள்வி, கமலி! மாமல்லர் போனால் நான் அவருடன் போகாமல் எப்படி இருக்க முடியும்?”

“மாமல்லர் சக்கரவர்த்தியின் திருக்குமாரர்; நாளைக்குப் பல்லவ சிம்மாசனத்தில் ஏறப்போகிறவர். அவர் போர்க்களத்துக்குப் போய் யுத்தம் செய்ய வேண்டும், நீ ஏன் போக வேண்டும்? எந்த ராஜா வந்தாலும் எந்த ராஜா போனாலும் நமக்கு என்ன வந்தது?”

“இது என்ன, கமலி? நேற்றுவரை நீ இப்படியெல்லாம் பேசினதே இல்லையே? நாம் பிறந்த நாட்டுக்கு அபாயம் வந்திருக்கும்போது, நமக்கென்ன என்று நாம் வீட்டில் இருப்பதா?”

“நாட்டுக்கு அபாயம், நகரத்துக்கு அபாயம் என்று ஓயாமல் சொல்கிறாயே, கண்ணா! அப்படி என்ன அபாயம் வந்துவிட்டது?”

“பல்லவ நாட்டுக்கு இது பொல்லாத காலம், கமலி. வடக்கேயிருந்து வாதாபி புலிகேசி மிகப் பெரிய சைனியத்துடன் வந்து கொண்டிருக்கிறார். அந்தச் சைனியத்தைத்தான் சக்கரவர்த்தி தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் பக்கத்தில் கங்க நாட்டு ராஜாவுக்கு அதற்குள் அவசரம் பொத்துக் கொண்டுவிட்டது. புலிகேசிக்கு முன்னால் தான் காஞ்சிக்கு வந்துவிட வேண்டுமென்று மேற்குத் திக்கிலிருந்து படை எடுத்து வந்து கொண்டிருக்கிறான். கங்க நாட்டு ராஜாவின் பெயர் என்ன தெரியுமா, கமலி! துர்விநீதன்! – துரியோதனனுடைய மறு அவதாரம் இவன்தான் போலிருக்கிறது. இந்தத் துர்விநீதனை எதிர்க்கத்தான் மாமல்லர் கிளம்புகிறார், கமலி! நானும் கிளம்புகிறேன். இத்தனை நாளும் நான் எப்போது வரும் என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் வந்திருக்கிறது. மனப்பூர்வமாக, உற்சாகமாக எனக்கு விடை கொடுத்து அனுப்பு!”

“கண்ணா! நான் என்ன செய்யட்டும்? என் மனத்தில் ஏனோ உற்சாகமில்லை. என் தங்கை சிவகாமியை நினைக்க மனச்சோர்வு அதிகமாகிறது. அவளுடைய தலைவிதி என்னவோ என்று எண்ண எண்ண, ஏக்கமாயிருக்கிறது.”

“ஆகா! முக்கியமான விஷயத்தைச் சொல்லாமல் விட்டு விட்டேனே? மகேந்திர சக்கரவர்த்தியைப் பற்றி நீ என்னவெல்லாமோ சந்தேகப்பட்டாய் அல்லவா, கமலி! அதெல்லாம் சுத்தத் தப்பு! சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பி இருக்கிறார், தெரியுமா? மாமல்லரைப் போர்க்களத்துக்குப் போவதற்கு முன்னால் நேரே ஆயனர் வீட்டுக்குச் சென்று ஆயனரையும் சிவகாமியையும் உடனே காஞ்சிக் கோட்டைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார். ஒருவேளை நானே அவர்களை ரதத்தில் ஏற்றிக் கொண்டு வந்து இங்கே விட்டுப் போனாலும் போவேன். மகேந்திரப் பல்லவரைப் பற்றி இப்போது என்ன சொல்கிறாய், கமலி! அவர் நல்லவரா, பொல்லாதவரா?” என்று கண்ணபிரான் தலைநிமிர்ந்து கர்வத்துடன் கேட்டான்.

“எப்படியாவது எல்லாம் நன்றாக முடியட்டும். கண்ணா; நீயும் போர்க்களத்திலிருந்து க்ஷேமமாய்த் திரும்பி வர வேண்டும்!” என்று கமலி கூறியபோது, அவள் கண்களிலிருந்து அருவி பெருகியது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 14
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 16

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here