Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 16

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 16

130
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 16 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 16 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 16: முற்றுகைக்கு ஆயத்தம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 16

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 16: முற்றுகைக்கு ஆயத்தம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 16

கண்ணபிரானும் கமலியும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில் அரண்மனை அந்தப்புரத்தின் முன் வாசல் மண்டபத்தில் அமர்ந்து, மகேந்திர பல்லவரின் பட்ட மஹிஷியான புவன மகாதேவியும், மாமல்ல நரசிம்மரும், தளபதி பரஞ்சோதியும் வார்த்தையாடிக் கொண்டிருந்தார்கள். “தேவி! சென்ற எட்டு மாதங்களாக இந்தக் கோட்டைக்குள்ளே அடைபட்டுக் கிடக்க நேர்ந்ததன் பொருட்டுக் குமார சக்கரவர்த்தி ஓயாமல் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறாரே? அவர் குறைப்படுவதற்குக் காரணம் ஒன்றுமே இல்லை. கோட்டை மதில், நகரம் எல்லாவற்றையும் நான் நன்றாய்ச் சுற்றிப் பார்த்தாகிவிட்டது. இந்தக் காஞ்சிக் கோட்டையை ஏறக்குறையப் புதிய கோட்டையாகவே செய்து விட்டிருக்கிறார். தேவேந்திரனும் விருத்திராசுரனும் சேர்ந்து படையெடுத்து வந்தாலும் கூடக் காஞ்சிக் கோட்டைக்குள்ளே புக முடியாது; வாதாபி புலிகேசியும் தலைக்காட்டுத் துர்விநீதனும் என்ன செய்துவிடப் போகிறார்கள்!” என்று தளபதி பரஞ்சோதி கூறினார்.

“கோட்டையை அவ்வளவு பலப்படுத்த மாமல்லன் என்னென்ன காரியங்கள் செய்திருக்கிறான்? நீதான் எனக்குச் சொல்லவேண்டும், பரஞ்சோதி! மாமல்லன் எனக்கு ஒன்றுமே சொல்வதில்லை. அந்தப்புரத்திற்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டிய அபலை ஸ்திரீக்கு யுத்த விஷயங்கள் என்ன தெரியப் போகிறது என்று அவருக்கு எண்ணம்!” என்றாள் மகேந்திர பல்லவரின் பட்டமஹிஷி.

“அம்மா! அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கும் அபலை ஸ்திரீ உண்மையில் தாங்களா? நானல்லவா பெண்ணிலும் கேடானவனாகக் கோட்டைக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறேன்! மகேந்திர பல்லவர் இப்படி என்னை வஞ்சிப்பார் என்று நான் நினைக்கவில்லை!” என்று கூறி மாமல்லர் கைகளைப் பிசைந்து கொண்டார்.

“குழந்தாய்! உன் தந்தையைப் பற்றி எதுவும் சொல்லாதே! அவர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அது முன் யோசனையுடனும் தீர்க்க திருஷ்டியுடனும் இருக்கும்…” என்று புவன மகாதேவி கூறுவதற்குள் பரஞ்சோதி, “உண்மை தேவி! உண்மை! மகேந்திர சக்கரவர்த்தியைப் போல் மதிநுட்பமும் முன்யோசனையும் உள்ளவர்களை ஈரேழு பதினாலு உலகத்திலும் காண முடியாது என்று நான் சத்தியம் செய்வேன்!” என்றார்.

“ஒருவருக்கு இரண்டு பேராய்ச் சேர்ந்து கொண்டீர்கள் அல்லவா? அப்படியென்றால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்ளுகிறேன். மகேந்திர பல்லவர் ரொம்பவும் முன் யோசனையுடன் காரியங்களைச் செய்கிறவர்தான்; சந்தேகமில்லை. ஆனால், அவருடைய தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜா இன்னும் அதிக முன் யோசனை உள்ளவர். ஆகையினால்தான் அவர் துர்விநீதனுடைய தந்தைக்குப் பட்டங்கட்டி வைத்தார். அவரே நேரில் கங்கதேசம் சென்று தம் கையினாலேயே மகுடம் சூட்டினார்! அந்தக் காரியத்துக்கு எவ்வளவு நன்றாய் இப்போது துர்விநீதன் நன்றி செலுத்துகிறான் பாருங்கள்! சிங்கமும் சிங்கமும் சண்டை போட்டுக் கொண்டிருக்குபோது நடுவில் நரி நுழைவது போல், புலிகேசி படையெடுத்திருக்கும் சமயம் பார்த்துத் துர்விநீதனும் பல்லவ ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான்! அவசர அவசரமாக எங்கும் இராத் தங்காமல் துர்விநீதன் தன் சைனியத்துடன் வந்து கொண்டிருக்கிறான்! இது தெரிந்தும், நான் இந்தக் கோட்டைக் குள்ளே அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது! நீங்கள் சக்கரவர்த்தியின் மதிநுட்பத்தையும் தீர்க்காலோசனையையும் பற்றி பேசுகிறபோது, எனக்கு உடம்பெல்லாம் பற்றி எரிகிறது!” என்று மாமல்லர் கூறுகையில், அவருடைய கண்கள் நெருப்புத் தணலைப் போல் சிவந்து தீப்பொறியைக் கக்கின.

“குழந்தாய்! வீணாக நொந்து கொள்ளாதே! கங்கபாடி அரசனின் நன்றியற்ற துரோகச் செயலை நினைத்தால் எனக்கும் கோபமாய்த் தானிருக்கிறது! அதற்காக என்ன செய்யலாம்? எதற்கும் காலம் வரவேண்டுமல்லவா?” என்றாள் புவனமகாதேவி.

“தேவி! துர்விநீதனுக்குத் தக்க தண்டனை கொடுக்க இதற்குள்ளாகவே சக்கரவர்த்தி திட்டம் போட்டிருப்பார்; சந்தேகமில்லை” என்றார் தளபதி பரஞ்சோதி.

“சக்கரவர்த்தி திட்டம் போட்டிருப்பார்; அதை நிறைவேற்றவும் செய்வார். ஆனால் நான் ஒருவன் எதற்காக யுவ மகாராஜா, குமார சக்கரவர்த்தி, மாமல்லன் முதலிய பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கிறேன்? அம்மா! பாரதக் கதையில் வரும் உத்தர குமாரனைவிடக் கேடானவன் ஒருவன் உண்டு என்றால், அவன் நான் தான். உத்தர குமாரனாவது போர்க்களத்துக்குப் போய்விட்டுத் திரும்பி ஓடிவந்தான். நானோ அரண்மனையை விட்டு வெளிக் கிளம்பவே இல்லை. மகாபாரதக் கதையை எழுதியதுபோல் இந்தக் காலத்து கதையை யாராவது எழுதினால், என்னுடைய வீரத்தையும் தீரத்தையும் எவ்வளவு பாராட்டுவார்கள்? ஆனாலும் நான் சாந்தமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் இருவரும் சேர்ந்து உபதேசிக்கிறீர்கள்!” என்று கூறியபோது, வீர மாமல்லரின் கண்களில் நீர் ததும்பி நின்றது.

அவருடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாதவராயிருந்த பரஞ்சோதி சக்கரவர்த்தினியை நோக்கி, “தேவி! பல்லவ குமாரர் தம்மை உத்தர குமாரனுடன் ஒப்பிட்டுக் கொள்வது கொஞ்சமும் பொருத்தமாயில்லை. மற்ற எல்லாரும் போருக்குப் போனபோது உத்தர குமாரன் என்ன செய்து கொண்டிருந்தான்? தன்னுடைய தங்கை உத்தரகுமாரி நாட்டியம் கற்றுக் கொள்வதைப் பார்த்துக் கொண்டு காலம் கழித்தான். மாமல்லர் அப்படிக் காலம் கழிக்கவில்லையே!” என்றார். இவ்விதம் அவர் சொல்லி வருகையில் மூன்று பேருக்கும் சிவகாமியின் நாட்டியக் கலை விஷயம் ஞாபகம் வந்தது மாமல்லரின் முகம் சுருங்கியது.

பரஞ்சோதி தாம் நடனக் கலையைப் பற்றிப் பிரஸ்தாபித்தது உசிதத் தவறு என்பதை உணர்ந்து கொண்டு, “மேலும், யுத்தம் இன்னும் ஆரம்பமாகக்கூட இல்லையே? மகாபாரத யுத்தத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிய யுத்தம் இனிமேல் தானே நடக்க இருக்கிறது? மாமல்லர் வீரச் செயல்கள் புரிவதற்கு இனி மேல்தானே சந்தர்ப்பங்கள் வரப் போகின்றன?” என்றார்.

“போதும், போதும்! எத்தனை யுத்தம் நடந்தால்தான் என்ன? எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் வந்தால்தான் என்ன? அப்பா என்னை இந்தக் கோட்டைக்குள்ளேயே பூட்டி வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்?” என்று மாமல்லர் கொதிப்புடன் கேட்டார்.

புதல்வனின் மன நிலையைக் கண்ட அன்னை பேச்சை மாற்ற விரும்பி, “பரஞ்சோதி! கோட்டையைப் பத்திரப் படுத்துவதற்கு மாமல்லன் செய்திருக்கும் காரியங்களைப் பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே?” என்றாள்.

“தேவி! நமது கோட்டை மதிலைச் சுற்றியுள்ள அகழியைத் தாங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?” “ஆமாம்; எட்டு மாதங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். சக்கரவர்த்தி புறப்பட்டுச் சென்ற பிறகு நான் அரண்மனையை விட்டு வெளிக் கிளம்பவே இல்லை.”

“நானும் எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்ததுதான். முன்னே பார்த்தபோது சிறு கால்வாய் மாதிரி இருந்தது. இப்போது பார்த்தால் சமுத்திரம் மாதிரி அலைமோதிக் கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் முதலைகள் வாயைப் பிளந்து கொண்டு காணப்படுகின்றன. வாதாபிச் சைனியத்தில் எத்தனை பேருக்கு இந்த அகழியில் மோட்சம் கிடைக்கப் போகிறதோ!” என்றார் பரஞ்சோதி.

“அகழியில் அவர்கள் இறங்கினால் தானே? பாலங்கள் அமைத்துக் கொண்டு வந்தால்? அல்லது படகிலே வந்தால்?”

“தேவி! அகழியின் அருகில் வருகிறவர்கள் மீது அம்புகளைப் பொழிய ஐயாயிரம் வில் வீரர்கள் மதில் சுவர்கள் மீது மறைந்து காத்திருப்பார்கள்! அப்படியும் அகழியைத் தாண்டி வருகிறவர்களுக்கு மதில் சுவருக்கும் அகழிக்கும் மத்தியில் எத்தனையோ அதிசயங்கள் காத்துக் கொண்டிருக்கும். வெளிக்குத் தெரியாத பள்ளங்களில் அவர்கள் விழுந்து காலை ஒடித்துக் கொள்வார்கள். ஆங்காங்கே கண்ணுக்குத் தெரியாதபடி விரித்திருக்கும் வலைகளிலும் பொறிகளிலும் சிக்கிக் கொள்வார்கள். இவற்றையெல்லாம் மீறி வந்து மதில்சுவர் மேல் ஏற முயலும் சளுக்க வீரர் தலைகளின் மீது மதில்சுவரின் மேல் வைத்திருக்கும் பாறாங்கற்கள் உருண்டுவிழும்!”

“வாதாபிச் சைனியம் கடலைப்போல் பெரியதென்று சொல்கிறார்களே, பரஞ்சோதி! லட்சக்கணக்கான வீரர்கள் மனம் வைத்தால் அகழியை ஆங்காங்கே தூர்த்து வழி ஏற்படுத்திக் கொள்ளலாமல்லவா!”

“ஆமாம் தேவி! அகழியைத் தூர்க்கலாம்; ஆனால் கோட்டை மதிலை அவ்வளவு சுலபமாக இடிக்க முடியாது!”

“கோட்டை வாசலுக்கு எதிரே அகழியைத் தூர்த்துக் கொண்டு யானைகளை ஏவினால் என்ன செய்கிறது? மத்த கஜங்களின் தாக்குதலுக்கு எதிரே கோட்டையின் மரக் கதவுகள் என்ன செய்யும்?” என்று பட்டமகிஷி கேட்ட போது, பரஞ்சோதி எதையோ நினைத்துக் கொண்டவர்போல் சிரித்தார்.

“அப்பா! ஏன் சிரிக்கிறாய்?” என்றாள் சக்கரவர்த்தினி.

“தாங்கள் கேட்டதை நினைத்துத்தான் சிரிக்கிறேன். உண்மைதான் தேவி! வாதாபி வீரர்கள் அப்படித்தான் செய்யப் போகிறார்கள். நமது கோட்டை வாசல்களுக்கு எதிரே அகழியைத் தூர்க்கப் போகிறார்கள் அல்லது பெரிய பெரிய மரங்களை வெட்டிக் கொண்டு வந்து பாலம் போடப் போகிறார்கள். போட்டுவிட்டுக் கோட்டைக் கதவுகளைத் தகர்க்க யானைகளை ஏவப் போகிறார்கள். அந்த யானைகளுக்கு முதலில் மதுவைக் கொடுத்து விட்டுத்தான் ஏவப்போகிறார்கள்! ஆனால், ஆகா! அந்த யானைகள் எப்பேர்ப்பட்ட அதிசயத்தை அனுபவிக்கப் போகின்றன?

கோட்டை வாசலின் மேல்மண்டபத்திலிருந்தும் பக்கத்து மதில் சுவர்களின் மேலிருந்தும் வஜ்ராயுதம் விழுவது போல் வேல்கள் வந்து அவற்றின் தலைமீது விழும்போது, அந்த மதுவுண்ட யானைகள் பயங்கரமாய்ப் பிளிறிக் கொண்டு திரும்பி ஓடி வாதாபி வீரர்களை துவைத்து நாசமாக்கப் போகிற காட்சியை நினைத்துப் பார்க்கையிலே எனக்குச் சிரிப்பு வருகிறது! இது மட்டுமா? மேலேயிருந்து விழுகிற வேல்களுக்குத் தப்பிச் சிற்சில யானைகள் வந்து கதவிலே மோதக் கூடுமல்லவா? அதனால் கோட்டைக் கதவு பிளக்கும் போது அந்த யானைகளுக்கு மகத்தான அதிசயம் காத்திருக்கும் தேவி! வெளிக் கதவு பிளந்ததும், உள்ளே நீட்டிக் கொண்டிருக்கும் வேல் முனைகள் அவற்றின் மண்டையைப் பிளக்கும்போது ஆகா, அந்த யானைகள் வந்த வேகத்தைக் காட்டிலும் திரும்பி ஓடும் வேகம் அதிகமாயிராதா?” என்றார் பரஞ்சோதி.

“அப்படியா?” என்று மாமல்லரின் அன்னை அதிசயத்துடன் கேட்டாள்.

அதுவரையில் மௌனமாயிருந்த மாமல்லர் அப்போது சம்பாஷணையில் சேர்ந்து, “ஆம் அம்மா! ஆனால், இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் மூல காரணம் யார் தெரியுமா? நமது தளபதி பரஞ்சோதிதான்! இவர் முதன் முதலில் காஞ்சியில் புகுந்த அன்று மதயானையின் மேல் வேல் எறிய, யானை திரும்பி ஓடிற்றல்லவா? அதற்கு மறுநாளே இந்தக் காஞ்சி மாநகரிலுள்ள கொல்லர்கள் எல்லோரும் வேல் முனைகள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்! தளபதி அன்று செய்த காரியத்தினாலேதான், வாதாபியின் யானைப் படையை எதிர்ப்பதற்குத்தக்க யோசனை அப்பாவின் மனத்தில் உதயமாயிற்றாம். இதையெல்லாம் அப்பாவே என்னிடம் சொன்னார்!” என்று மாமல்லர் பெருமையுடன் கூறிப் பரஞ்சோதியை அன்புடன் தழுவிக் கொண்டார்.

“தேவி! இந்த எட்டு மாதத்தில் காஞ்சி நகர்க் கொல்லர்கள் செய்திருக்கும் வேலையை நேற்று நான் பார்த்தேன். லட்சோபலட்சம் வேல்களைச் செய்து குவித்திருக்கிறார்கள். காஞ்சி நகர் கொல்லர்கள் வெகு கெட்டிக்காரர்கள், அம்மா! நான் கொண்டு வந்திருந்த சோழ நாட்டு வேலைப்போலவே அவ்வளவும் செய்திருக்கிறார்கள். என்னையே அவர்கள் ஏமாறச் செய்து விட்டார்கள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றபோது என்னிடம் கொடுக்கப்பட்ட வேல் என்னுடைய சொந்த வேல் தான் என்று எண்ணி நான் ஏமாந்துபோனேன். இங்கே திரும்பி வந்ததும்தான் என்னுடைய வேலை மாமல்லர் பத்திரமாய் வைத்திருந்தார் என்று தெரிந்தது. எட்டு மாதமும் வீணில் கழித்ததாக மாமல்லர் எண்ணுவது பெரும் பிசகு.

அம்மா! கோட்டை மதில் பாதுகாப்புக் காரியம் மட்டுமல்ல; கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தமாக இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார். காஞ்சி மக்களுக்கு இரண்டு வருஷத்துக்குத் தேவையான தானியங்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. நகருக்குள்ளிருந்த அநாவசியமான மக்கள் எத்தனையோ பேரை வெளியேற்றியாகிவிட்டது. முக்கியமாகக் காஞ்சி நகருக்கே அவலட்சணமாயிருந்த காபாலிகர்களை வெளியேற்றிவது பெரிய காரியம். அதற்குக் குமார சக்கரவர்த்தி வெகு நல்ல யுக்தியைக் கையாண்டார். தேவி! காஞ்சியிலுள்ள மதுபானக் கடைகளையெல்லாம் மூடிவிட வேண்டும் என்று நேற்றைய தினம் கட்டளை போட்டார். இன்றைக்கு அவ்வளவு காபாலிகர்களும் கையில் மண்டை ஓட்டையும் மாட்டுக் கொம்பையும் எடுத்துக் கொண்டு வடக்குக் கோட்டை வாசல் வழியாகப் போய்விட்டார்கள்…!”

இப்படிப் பரஞ்சோதி சொல்லிக் கொண்டே வருகையில் அந்தப்புரத்துச் சேடி ஒருத்தி, அரண்மனை முன்கட்டிலிருந்து உள்ளே வந்து புவனமகாதேவியின் அருகில் நின்று மெதுவான குரலில் ஏதோ கூறினாள். அதைக் கேட்ட தேவி முகத்தில் கிளர்ச்சியுடன், “மாமல்லா! அப்பாவிடமிருந்து செய்தியுடன் சத்ருக்னன் வந்திருக்கிறானாம்!” என்று சொன்னாள். மாமல்லர் பரபரப்புடன் எழுந்து போக முயற்சித்தபோது, “குழந்தாய்! சத்ருக்னன் இங்கேயே வரட்டும். செய்தி என்னவென்று நானும் தெரிந்து கொள்கிறேன்” என்றாள் அன்னை.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 15
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 17

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here