Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 18

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 18

64
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 18 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 18 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 18: பிரயாணம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 18

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 18: பிரயாணம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 18

கார்த்திகை மாதத்தில் ஒருநாள் மாலை நேரத்தில் காஞ்சியிலிருந்து சிதம்பரம் போகும் சாலையில் கூண்டு இல்லாத இரட்டை மாட்டு வண்டி ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதில் சிவகாமியும் அவளுடைய அத்தையும் உட்கார்ந்திருந்தார்கள். வண்டிக்குப் பின்னால் சற்றுத் தூரத்தில் ரதி துள்ளி விளையாடிக் கொண்டும் ஆங்காங்கே சாலைக்குப் பக்கங்களிலே முளைத்திருந்த புல்லை மேய்ந்து கொண்டும் வந்தது. சுகப்பிரம்ம ரிஷி ஒவ்வொரு சமயம் ரதியின் முதுகின் மேல் உட்கார்ந்தும், சில சமயம் சிவகாமியின் தோளின் மேல் உட்கார்ந்தும், சில சமயம் வண்டிக்கு மேலாகப் பறந்தும் ஆனந்தமாகப் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். பின்னால் இன்னும் சற்றுத் தூரத்தில் புத்த பிக்ஷுவும் ஆயனச் சிற்பியாரும் பேசிக் கொண்டு நடந்து வந்தார்கள்.

அந்த வருஷம் ஐப்பசி மாதத்திலேயே மழை பிடித்துக் கொண்டு பதினைந்து நாட்கள் வரையில் விடாமல் பொழிந்தது. அதன் காரணமாக, ஏரிகள், குளங்கள் எல்லாம் தண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்தன. சாலை ஓரத்தில் ஓடைகளில் தண்ணீர் அலைகள் மோதிக் கொண்டிருந்தன. ஆறுகள் வாய்க்கால்களில் இரு கரையையும் தொட்டுக்கொண்டு பிரவாகம் ஓடிக் கொண்டிருந்தது.

நன்செய் வயல்களில் இரண்டாம் போகத்து வேளாண்மை அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. புன்செய்க் காடுகளில் கம்பும் கேழ்வரகும் செழித்து வளர்ந்திருந்தன. சாலையின் இரு புறத்திலும் வளர்ந்திருந்த மரங்களும் ஆங்காங்கே வயல்களுக்கிடையே காணப்பட்ட தென்னந்தோப்பும் வாழைத் தோட்டங்களும் கண்ணைக் குளிர்விக்கும் காட்சியளித்தன. பெரு மழை விட்டுப் பல நாள் ஆகிவிட்டதாயினும், வானத்தில் இப்போதும் மேகத்திரள்கள் காணப்பட்டன. இவை இடையில் தங்குவதற்கு நேரமில்லாத நெடுந்தூரப் பிரயாணிகளைப்போல் ஆகாயத்தில் அதிவேகமாகப் பிரயாணம் செய்தன. சில சமயம் நீர்த்துளிகளை அள்ளித் தெளித்துவிட்டுச் சிதறி மறைந்தன.

நீர் நிலைகளின்மீது தவழ்ந்தும், பசுமையான தோப்புக்களில் புகுந்தும், மழைத்துளிகளை அளாவியும் வந்துகொண்டிருந்த குளிர்ந்த வாடைக் காற்று உடம்பின்மீது பட்டபோது, துணியை இழுத்துப் போர்த்திக்கொள்ளத் தோன்றியது; ஆயினும் அது அபூர்வமான சுகத்தை அளித்தது. அந்தக் குளிர்ந்த வாடைக் காற்றில் அடிபட்டதனால் பட்சிகளுக்குக்கூடத் தொண்டை கட்டிக்கொண்டது போல் தோன்றியது. சாதாரணமாய், ‘கலகல’ என்றும் ‘கிளுகிளு’ என்றும் கேட்கும் புள்ளினங்களின் குரல் ஒலியில் இப்போது ‘கரகரப்பு’ச் சத்தம் கலந்திருந்தது.

வண்டியில் அத்தைக்கும் மருமகளுக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது.

“இன்றைக்கு மழை பெய்யுமா சிவகாமி?” என்று அத்தை கேட்டாள்.

“மலையா? எங்கே இருக்கிறது?” என்றாள் சிவகாமி.

“ஆமாம்; மழையைக் கண்டால் மயிலுக்குக் கொண்டாட்டந்தான்!” என்றாள் அத்தை.

“மாலையில் வெயில் அடித்தால் கொண்டாட்டத்துக்கு என்ன குறைவு?” என்றாள் சிவகாமி.

“என்ன சொன்னாய்?” என்றாள் அத்தை. “என்ன கேட்டீர்கள்?” என்றாள் சிவகாமி.

“கொஞ்சம் செவிமந்தமுள்ள அத்தைக்குப் பேசுவதிலே அதிகப் பிரியம். எனவே, அவ்வப்போது சிவகாமியிடம் ஏதாவது கேட்டுக் கொண்டும் சொல்லிக்கொண்டும் வருவாள். கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சிவகாமி அத்தையின் பேச்சுக்களை மனத்தில் வாங்கிக் கொள்ளாமலேயே ஏதாவது பொருத்தமில்லாத மறுமொழி சொல்லுவாள். அது காதில் நன்றாய் விழாமல் அத்தை வேறு ஒன்றைக் கூறுவாள். இதே ரீதியில் அவர்களுடைய பிரயாணம் நடந்து கொண்டிருந்தது. காஞ்சியிலிருந்து ஏறக்குறைய ஆறு காத தூரம் அவர்கள் பிரயாணம் செய்திருந்தார்கள்.

மாரிக் காலத்து மாலைப் பொழுதில் வெளி உலகமானது எவ்வளவுக்குக் குளிர்ந்திருந்ததோ அவ்வளவுக்குச் சிவகாமியின் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அதில் எரிமலை நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. கொழுந்து விட்டெரியும் ஜ்வாலைகளுடனே அக்கினி ஆறு பிரவகித்துக் கொண்டிருந்தது. மாமல்லரைப்பற்றி நாகநந்தி பிக்ஷு கூறிய விஷயங்கள் அவளுடைய மனத்தில் அத்தகைய பிரளயக் குழப்பத்தை உண்டு பண்ணியிருந்தன.

நம் அன்புக்குரியவர்களைப் பற்றி சாதாரணமாக ஏதேனும் கெடுதலான விஷயத்தைக் கேள்விப்பட்டால் நம் உள்ளம் சுலபத்தில் நம்புவதில்லை. ‘அப்படியெல்லாம் இராது’ என்று மனத்தைத் திருப்தி செய்து கொள்கிறோம். அவதூறு சொல்கிறவர்களிடம் சண்டை பிடிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். ஆனால், எக்காரணத்தினாலாவது நமக்கு வேண்டியவர்களிடம் குற்றம் இருக்கிறதென்று நம்பும்படி நேர்ந்து விட்டால் உள்ளத்தில் கோபம் கொழுந்துவிட்டெரியத் தொடங்குகிறது. வேண்டியவர்கள் மீது மட்டுமல்ல; உலகத்தின் மேலேயே கோபம் கொள்ளுகிறோம். இந்த மனித இயற்கை, காதலர்களின் விஷயத்தில் ஒன்றுக்கு நூறு மடங்கு ஆகிறது.

காதலன் எவனும் தன்னுடைய காதலியைச் சாதாரண மானிடப் பெண்ணாகக் கருதுவதில்லை. தெய்வப் பிறவி என்றே கருதுகிறான். தேவலோகத்தில் அமிர்தபானம் செய்து கொண்டு ஆனந்த அமர வாழ்க்கை நடத்த வேண்டியவள் தன் பேரில் கொண்ட அன்பினாலேயே இந்தப் பூலோகத்திலே வாழ்ந்து வருவதாகக் கருதுகிறான். காதலியோ, குழந்தைப் பிராயத்திலிருந்து தன் மனத்தில் தானே சிருஷ்டி செய்துகொண்டிருந்த இலட்சிய புருஷனுக்குரிய சகல உத்தம குணங்களையும் காதலன்மீது ஏற்றி அவனைக் குற்றங்குறையில்லாத தெய்வீகப் புருஷனாகவே எண்ணிக்கொள்கிறாள். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தினால் அவர்களுடைய நம்பிக்கைக்குப் பங்கம் ஏற்படும்போது மகத்தான ஏமாற்றம் உண்டாகி விடுகிறது. மலையின் சிகரத்திலிருந்து திடீரென்று அதல பாதாளத்தில் விழுகிறவர்களைப்போல் ஆகிவிடுகிறார்கள்.

சிவகாமி தன் இருதயத்தில் ஓர் அற்புதமான திருக்கோயிலை அமைத்து, அதிலே மாமல்ல நரசிம்மரைத் தெய்வங்களுக்கெல்லாம் மேலான பரதெய்வமாகப் பிரதிஷ்டை செய்திருந்தாள். நாகநந்தி கூறிய நஞ்சு தோய்ந்த வார்த்தைகளினால் அந்தத் திருக்கோயில் ஒரு நொடியில் இடிந்து தகர்ந்து விழுந்துவிட்டது! அதிலே பிரதிஷ்டை செய்திருந்த தெய்வச் சிலையும் விழுந்து நொறுங்கிப் பொடிப் பொடியாய்ப் போய் விட்டது. குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறு அவ்வளவு சாமர்த்தியமாகவும் நம்பும்படியாகவும் அமைந்திருந்தது. சிவகாமி அவர் கூறியது அவ்வளவையும் அப்படியே நம்பி விட்டாள். இராஜ்யத்திலே அவ்வளவு பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, மாமல்லர் காஞ்சிக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருப்பதற்கு வேறு காரணம் என்ன இருக்க முடியும்?

போர்க்களத்திலே பரஞ்சோதியின் வீரதீரச் செயல்களைப் பற்றிய வரலாறுகள் காற்றிலே மிதந்து ஆயனரும் சிவகாமியும் வசித்த காட்டுக்குள்ளேகூட எட்டியிருந்தன. அதெல்லாம் உண்மை என்பதைப் பரஞ்சோதியை நேரிலே பார்த்த சிவகாமி தெரிந்துகொண்டிருந்தாள். தமிழ் படிக்கவும் சிற்பம் கற்கவும் வந்த பட்டிக்காட்டுப் பிள்ளை இப்போது பெரிய தளபதி ஆகிவிட்டான். அரங்கேற்றத்தன்று அவன் யானைமீது வேல் எறிந்து தங்களைக் காப்பாற்றிய சம்பவமும் சிவகாமியின் உள்ளத்தில் அழியாதபடி பதிந்திருந்தது. பரஞ்சோதியின் வீர வாழ்க்கையோடு மாமல்லர் கோட்டைக்குள்ளே ஒளிந்திருந்ததை ஒப்பிட்டுப் பார்த்து மாமல்லரைப் ‘பயங்கொள்ளிப் பல்லவன்’ என்று நாடு நகரமெல்லாம் அழைப்பதில் வியப்பில்லை என்று சிவகாமி எண்ணினாள். இதனால், நாகநந்தியின் வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ஒரு விஷயத்தில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு, அதையொட்டிய இன்னொன்றிலும் நம்பிக்கை பிறப்பது இயல்பேயல்லவா? எனவே, மாமல்லரை ‘ஸ்திரீ லோலன்’ என்று நாகநந்தி கூறியதிலும் அவளுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. வீர மன்னர்களுக்குப் பிறந்த தூர்த்தர்களான இராஜ குமாரர்களைப் பற்றி அவள் கதைகளிலே கேள்விப்பட்டதுண்டு. மாமல்லர் அவர்களிலே ஒருவர் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால், அதுவும் உண்மையாகத் தான் இருக்கவேண்டும் என்று இப்போது தோன்றியது. ஆகா! மாய வார்த்தை பேசி ஏழைப் பெண்ணைக் கெடுப்பதிலே அவர் கைதேர்ந்தவராயிருக்க வேண்டும்! கள்ளங்கபடமறியாத தன்னிடம் என்னவெல்லாம் சொல்லி ஏமாற்றினார்? பல்லவ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்திலேயே தன்னை ஏற்றிவைத்து விடுகிறவர்போல் அல்லவா பசப்பினார்! புருஷர்கள்தான் எவ்வளவு நயவஞ்சகர்கள்! அதிலும் இராஜகுலத்தவர் எப்பேர்ப்பட்ட ஈவிரக்கமில்லாத கிராதகர்கள்!

வழி பிரயாணத்தின்போது இந்த மாதிரி எண்ணங்கள் சிவகாமியின் உள்ளத்தில் அடிக்கடி தோன்றி நரகவேதனையளித்தன. சில சமயம் அவளுக்குத் தன்னுடைய மனோராஜ்யத்தில் ஆசையுடன் நிர்மாணித்து வந்த இன்ப வாழ்க்கையாகிய கோட்டை இடிந்து தூளாகிவிட்டபடியால், இனிமேல் தன் வாழ்க்கை என்றென்றைக்கும் சோகமயமாகவே இருக்கும் என்று தோன்றியது. மாரிக்காலத்தின் முடிவில் வானத்தில் சிதறி ஓடிய மேகங்கள் சில மழைத்துளிகளை உதிர்த்துவிட்டுப் போகும் போது தன்னுடைய கதிக்காக உலகமே கண்ணீர் வடிப்பதாக அவள் எண்ணினாள். இந்த ஒரு வாழ்க்கை மட்டுமல்ல; இதற்கு முன்னர் எத்தனை எத்தனையோ ஜன்ம ஜன்மாந்திரங்களிலும் தன்னுடைய வாழ்க்கை இப்படியே சோகமயமாயிருந்ததாகத் தோன்றியது.

ஆனால், இரவில் எங்கேயாவது தங்கியிருந்து விட்டுக் காலையில் மறுபடியும் பிரயாணம் தொடங்கும் போது ஜகஜ்ஜோதியாகச் சூரியன் உதயமாகி மரக்கிளையில் தங்கியிருக்கும் நீர்த்துளிகளை வைரமணிகளாக ஒளி வீசச் செய்யும் காட்சியைப் பார்த்துவிட்டுச் சிவகாமி சிறிது உற்சாகம் கொள்வாள். மாமல்ல நரசிம்மர் பயங்கொள்ளி, தூர்த்தர் என்று ஏற்பட்டதன் பொருட்டுத் தன் வாழ்க்கையை எதற்காகப் பாழாக்கிக் கொள்ளவேண்டும் என்று கருதுவாள். உலகம் எவ்வளவோ விஸ்தாரமானது; பல்லவ இராஜ்யத்துக்கு அப்பாலும் உலகம் இருக்கத்தானே செய்கிறது? தன்னிடம் அற்புதமான நாட்டியக் கலையும் இருக்கிறதல்லவா? அந்தக் கலையைப் பார்த்து அனுபவித்து ஆனந்தமடைய நாகநந்தி சொல்வதுபோல், உலகம் காத்திருக்கிறதல்லவா? எதற்காகத் தன் வாழ்க்கை பாழாகிவிட்டதாக எண்ணிக் கொள்ள வேண்டும்?… இவ்விதம் எண்ணிச் சிவகாமி உற்சாகம் அடையப் பார்ப்பாள். தூர தூர தேசங்களிலே, பெரிய பெரிய சபைகளிலே தான் நாட்டியம் ஆடுவதுபோலவும், கணக்கற்ற ஜனங்கள் கண்டு களித்துத் தன்னைப் பாராட்டி உபசரிப்பது போலவும் கற்பனை செய்துகொண்டு களிப்புறுவாள்.

இத்தகைய மனோபாவத்துடனேயே சிவகாமி தன் தந்தையைப் பெரிதும் வற்புறுத்தி நாகநந்தி பிக்ஷுவின் யோசனையை ஒப்புக்கொள்ளச் செய்தாள். அதன் பேரிலே தான் இந்தப் பிரயாணம் அவர்கள் தொடங்கினார்கள். ஆனால், என்னதான் மனத்தை வேறு விஷயங்களில் செலுத்திப் பார்த்தாலும், எவ்வளவுதான் பிரயத்தனம் செய்து உற்சாகம் கொள்ளப் பார்த்தாலும், சாத்தியமாயில்லை. அவ்வப்போது குமுறிக் கொண்டுவந்த வேதனை உணர்ச்சியை மாற்ற முடியவில்லை. பொங்கியெழுந்த ஆத்திரத் தீயை அணைக்க முடியவில்லை. முக்கியமாக, அந்தி மயங்கி நாற்புறமும் இருள் சூழ்ந்து வந்த நேரங்களில் சிவகாமியினுடைய உள்ளத்தில் வேதனையும் துயரமும் பெருகி அவளைச் சோகக் கடலில் மூழ்கச் செய்தன.

அன்று சாயங்காலம் அவ்வாறு சோகத்தில் ஆழ்ந்த உள்ளத்துடன் சிவகாமி கட்டை வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோது, அவளுடைய நினைவை வேறு பக்கம் திருப்பும்படியான சம்பவம் ஒன்று நேர்ந்தது. சாலையில் அவர்களுக்கெதிரே ஒரு பெரும்படை வந்து கொண்டிருக்கிறதென்பதற்கு அறிகுறிகள் தென்பட்டன. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை, பேரிகை, எக்காளம், சமுத்திரகோஷம் முதலிய வாத்தியங்களில் பேரொலியும், அநேக குதிரைகளும் மனிதர்களும் நடந்துவரும் காலடிச் சத்தமும், போர் வீரர்களுடைய பேச்சுச் சத்தமும், போர் முழக்கங்களின் கோஷமும் கலந்த பேரிரைச்சல் நிமிஷத்துக்கு நிமிஷம் நெருங்கி வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் சைனியத்தின் முன்னணிப் படைவீரர்கள் அவர்களின் கண்ணுக்குத் தென்படலாயினர்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 17
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 19

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here