Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 19

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 19

60
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 19 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 19 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 19: வந்தான் குண்டோதரன்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 19

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 19: வந்தான் குண்டோதரன்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 19

படைகளின் முழக்கத்தைக் கேட்டதும் சற்றுப் பின்னால் வந்துகொண்டிருந்த ஆயனரும் புத்த பிக்ஷுவும் வேகமாக நடந்து வண்டியை நெருங்கி வந்தார்கள். முன்னணிப் படை கண்ணுக்குத் தெரிந்ததும், வண்டி சாலையில் ஒதுக்குப் புறமாக நின்றது. சிவகாமியும் அத்தையும் வண்டியிலிருந்து இறங்கி நின்றுகொண்டார்கள். படை வரும் முழக்கம் அத்தையின் காதில் விழாதபடியால், மற்றவர்களைப் போல் அவளிடம் பரபரப்பு இல்லை.

புத்த பிக்ஷு சாலை ஓரத்து மரத்தின் பின்னால் தெரிந்தும் தெரியாததுமாக நின்றுகொண்டார். அவர் இராஜ வம்சத்தினரைக் கண்ணாலும் பார்ப்பதில்லை என்பது போன்ற விரதங்கள் கொண்டவர் என்பது தெரியுமாதலால் அவர் மறைந்து நிற்பது பற்றி மற்றவர்களுக்கு வியப்பு ஏற்படவில்லை. ஆனால், எல்லோருக்கும் மனம் ஒருவாறு கலக்கமடைந்து தான் இருந்தது. வருகிறது என்ன படை? எங்கே போகிறது? எதற்காக? தெற்கே இருந்து வருகிறபடியால் அது வாதாபிப் படையல்ல என்பது நிச்சயம், பின்னே யாருடைய படை?

காஞ்சியிலிருந்து கிளம்பி வருகிற வழியில் நம் பிரயாணிகள் பெரும்பாலும் யுத்தப் போக்கைப்பற்றியும், யுத்த முடிவு என்ன ஆகும் என்பதைப்பற்றியும் பேசிக்கொண்டு வந்தார்கள். யுத்தத்தை நினைவூட்டும் காட்சிகளே எங்கெங்கும் தோன்றி வந்தன. சாலையில் ஜனநடமாட்டம் அதிகமாயிருந்தது. எல்லோரும் தெற்கு நோக்கிப் போகிறவர்களாகவே இருந்தார்கள். அநேகமாக அவர்கள் அனைவரும் காஞ்சி நகரிலிருந்தும் காஞ்சிக்குச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்தும் யுத்த நிலைமையை முன்னிட்டுப் புறப்பட்டவர்கள். அப்படிப் புறப்பட்டு வந்தவர்களிலே ஸ்திரீகள், குழந்தைகள், வயோதிகர்கள், ஆண்டிப் பரதேசிகள், கூனர், குருடர், காபாலிகர் முதலியோர் அதிகமாகக் காணப்பட்டார்கள்.

முக்கியமாகக் காபாலிகர்கள் வழியெல்லாம் பல்லவ இராஜ குலத்தைச் சபித்துக் கொண்டு போனார்கள். காஞ்சி நகரில் கள்ளுக் கடைகளை மூடித் தங்களை நகரைவிட்டுத் துரத்திய குமார சக்கரவர்த்தியின் பேரில் அவர்கள் தங்களுடைய சாபங்களுக்குள்ளே மிகக் கடுமையான சாபங்களைப் பொழிந்து கொண்டு போனார்கள். நராதமர்களுக்குள்ளே அதமனான மாமல்ல நரசிம்மன் என்னும் சண்டாளனை ரணபத்திர காளிக்குப் பலி கொடுத்து, தாங்கள் மதுபானம் செய்யும் மாட்டுக் கொம்பிலே அவனுடைய இரத்தத்தை ஏந்திக் குடித்துத் தங்களுடைய பயங்கரமான மரண தாகத்தைத் தணித்துக் கொள்ளப் போவதாக அவர்களில் பலர் உரத்த சத்தம் போட்டுச் சபதம் செய்தார்கள். இன்னும் சிலர், மாமல்ல நரசிம்மனையும் தளபதி பரஞ்சோதியையும் சேர்த்துக் கட்டி மயான ருத்திரனுக்குப் பிரீதியாக உயிரோடு கொளுத்தி அவர்களுடைய எலும்புச் சாம்பலைத் தங்கள் உடம்பெல்லாம் பூசிக்கொண்டு உஷ்ணம் தணியப் போவதாகச் சபதம் செய்தார்கள். இந்தச் சாபங்கள், சபதங்கள் எல்லாம் பிராகிருத பாஷையிலும் வேறு கலப்பு மொழிகளிலும் செய்யப்பட்டதானது, அந்தக் காபாலிகர்கள் வடதேசத்திலிருந்தும் மேற்குப் பிராந்தியத்திலிருந்தும் வந்தவர்கள் என்பதைத் தெரியப்படுத்தியது.

சிவகாமிக்கு ஆங்காங்கு வண்டியில் பிரயாணம் செய்தபடியாலும் அவளுடைய உள்ளம் வேறு வேறு உலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபடியாலும், அவளுடைய காதில் அந்தப் பயங்கர சாபங்கள் ஒன்றும் விழவில்லை. ஆனால் ஆயனருடைய காதில் அவை எல்லாம் கர்ண கடூரமாக விழுந்தன. அவற்றைக் கேட்கச் சகிக்காமல் அவர் காதைப் பொத்திக் கொண்டார். புத்த பிக்ஷுவின் செவிகளுக்கு மட்டும் அந்தச் சாபங்கள் எவ்வித அருவருப்பையும் அளித்ததாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக, அவருடைய முகத்தின் கடூரத்தை இன்னும் கடூரமாக்கிக் கொண்டு சில சமயம் புன்னகை தோன்றியது.

பிக்ஷு ஒரு தடவை காபாலிகர் கூட்டத்தில் புகுந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, வெளிவந்து ஆயனரை அணுகியதும், “ஆயனரே! எப்போதாவது நான் புத்த சமயத்தைத் துறந்து சைவனாகும் பட்சத்தில், காபாலிகத்திலேயே சேர்வேன்!” என்றார்.

இதைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஆயனர், “சுவாமி! அத்தகைய எண்ணம் தங்களுக்கு ஏன் வரவேண்டும்? புத்த சமயத்தின் மீது தங்களுக்கு என்ன கோபம்? யுத்தங்களினால் ஏற்படும் சங்கடங்களையும் துன்பங்களையும் பார்க்கப் பார்க்க, புத்த பகவான் காட்டிய அஹிம்சா மார்க்கமே உத்தமமான மார்க்கம் என்றல்லவா எனக்கே இப்போது தோன்றி வருகிறது!” என்றார்.

“அதனாலேதான் நானும் சொல்லுகிறேன், நீங்கள் கால சம்ஹார மூர்த்தியைக் கைவிட்டுப் புத்த பகவானை அடைவதாயிருந்தால், அதற்குப் பிரதியாகக் காபால ருத்திரமூர்த்திக்கும் ஓர் அடியார் வேண்டுமல்லவா?” என்று நாகநந்தி கூறியது ஆயனருக்கு மேலும் மனக் குழப்பத்தை உண்டாக்கிற்று.

சாலைகளில் அபூர்வமாய்த் தெற்கேயிருந்து வரும் பிரயாணிகள் சிலர் காணப்பட்டபோது அவர்களைக் காஞ்சிக்குப் பக்கமிருந்து வருகிறவர்கள் நிறுத்தி “தெற்கே என்ன விசேஷம்?” என்று கேட்பார்கள். அவர்கள் மறுமொழி சொல்லி விட்டுக் காஞ்சி நிலைமையைப் பற்றி விசாரிப்பார்கள். இத்தகைய பேச்சுக்களையெல்லாம் நாகநந்தி ஆங்காங்கு நின்று வெகு சுவாரஸ்யமாகக் கவனிப்பார். இப்படி ஒரு தடவை கூட்டத்தில் நின்று பேச்சு கேட்ட பிறகு, நாகநந்தி, ஆயனர் சிவகாமி இருவர் காதிலும் விழும்படியாக, “நாம் ஒன்று நினைக்க யுத்ததேவன் வேறொன்று நினைக்கிறான் போலல்லவா தோன்றுகிறது? உத்தேசித்தபடி நமது பிரயாணம் நடைபெறாது போலிருக்கிறதே!” என்றார்.

“அப்படியா? புத்த தேவர் என்ன கருணை செய்கிறார்? அவருடைய திருவுள்ளம் என்ன?” என்றார் ஆயனர்.

“அத்தையைப் போல் அப்பாவுக்கும் காது மந்தமாகி வருகிறது!” என்று கூறிச் சிவகாமி புன்னகை புரிந்தாள்.

அந்த நகைச்சுவையை அனுபவித்த நாகநந்தி செவிடருடன் பேசுவது போன்ற உரத்த குரலில், ஆயனரே! நான் புத்த தேவரைச் சொல்லவில்லை: யுத்த தேவனைச் சொல்கிறேன்” என்றார்.

“அப்படியா? யுத்த தேவன் என்ன சொல்கிறார்? நம்மை வழி மறிக்கப்போகிறாரா?”

“அப்படித்தான்!” என்று சொன்ன நாகநந்தி மறுபடியும் மெல்லிய குரலில் கூறினார்; “பல்லவ இராஜ்யத்துக்கு எதிர்பாராத ஆபத்துக்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. மேற்கே இருந்து கங்க நாட்டுச் சைனியம் படை எடுத்து வந்து எல்லைப் புறத்தில் நிற்கிறதாம். தெற்கே பாண்டிய மன்னர் பெரும்படை திரட்டிக் கொண்டு வருகிறாராம். பாண்டியர் சைனியம் கிழக்குச் சோழ நாட்டு எல்லைக்கே வந்துவிட்டதாம், வடதிசையிலிருந்து வரும் வாதாபி சைனியத்தைப் பற்றித்தான் உங்களுக்கே தெரியும். பல்லவ சைனியம் தப்பிப் பிழைப்பதற்கு இன்னும் ஒரே திசைதான் பாக்கியிருக்கிறது…!”

“எந்தத் திசையைச் சொல்லுகிறீர்கள்?” என்று ஆயனர் கேட்டார்.

“கிழக்குத் திசையைத்தான் சொல்லுகிறேன்: கிழக்கே சமுத்திர ராஜனிடம் வேணுமானால் மகேந்திர பல்லவர் அடைக்கலம் புகலாம்.”

“சமுத்திரத்திலே விழுந்து சாகலாம் என்கிறீர்களா? அடிகளே! உங்களுடைய இருதயம் இப்படி ஈரப்பசையே இல்லாத பாலைவனமாக எப்போது ஆயிற்று? என்று ஆயனர் கோபக்குரலில் கூறினார்.

“ஓ! மகா ஸ்தபதியே! என்னை அவ்வளவு நீச குணமுள்ளவன் என்று ஏன் தாங்கள் கருதவேண்டும்? பல்லவ குலம் கடல் தந்த குழந்தையிலிருந்து தோன்றியதாயிற்றே? இப்போது அந்த வம்சத்துக்கு ஆபத்து வந்திருக்கும் சமயத்தில் அந்தக் கடல் அடைக்கலம் தராதா என்று சொன்னேன். கடலில் அடைக்கலம் என்றால் கடலில் முழுகிவிடுதல் என்றுதான் பொருளா? கப்பல் ஏறி இலங்கைக்குப் போய்த் தப்பலாமல்லவா? ஆனால், அதற்கும் ஓர் ஆபத்து இருக்கிறது. இலங்கையில் இப்போதுள்ள அரசன் மகேந்திர பல்லவரின் அருமைச் சிநேகிதன்தான். ஆனால், அவனை இலங்கைச் சிம்மாசனத்திலிருந்து தள்ளிவிட ஒரு பெருங்கலகம் அங்கே நடக்கிறதாம். பாவம்! பல்லவர்களுக்கு வந்திருக்கும் கஷ்ட காலம் அவர்களுடைய சிநேகிதர்களைக் கூடப் பீடிக்கிறதே” என்று கூறிவிட்டுப் புத்த பிக்ஷு ஒரு கோரச் சிரிப்புச் சிரித்தார்.

ஆயனர் அப்போதும் விட்டுக்கொடுக்காமல், “எதற்காக மகேந்திர பல்லவர் இலங்கைக்கு ஓட வேண்டும்? காஞ்சிக் கோட்டை இருக்கிறதல்லவா?” என்றார். “ஆமாம்; காஞ்சிக் கோட்டை இருக்கிறது அதில் எட்டு மாதத்துக்கு முன்பு பயங்கொள்ளிப் பல்லவன் ஒளிந்து கொண்டதுபோல் இப்போது அவனுடைய தந்தையும் ஒளிந்து கொள்ளலாம். வாதாபிப் படை வழி தங்காமல் வந்திருந்தால் கோட்டை ஒரு நொடியில் தகர்ந்து போயிருக்கும். இப்போது கோட்டை பலப்பட்டுவிட்டது. ஆகையால், சில காலம் கோட்டைக்குள் பத்திரமாயிருக்கலாம். வாதாபிப் படை ஆறு மாதமாக வட பெண்ணைக் கரையில் என்ன செய்து கொண்டிருந்தது என்றுதான் தெரியவில்லை!” என்றார் புத்த பிக்ஷு.

இந்த வார்த்தைகள் எல்லாம் சிவகாமியின் செவிகளில் புண்ணில் கோல் இடுவதுபோல் விழுந்தன. ‘கடவுளே! நாக்கிலே விஷமுள்ள இந்த நாகநந்தியின் கர்வத்தை அடக்கமாட்டாயா?’ என்று வேண்டிக் கொண்டாள். புத்த பிக்ஷுவின் விஷயத்தில் சிவகாமியின் மனநிலை சஞ்சலமுள்ளதாயிருந்தது. அவரிடம் காரணமில்லாத அருவருப்பும் இன்னதென்று தெரியாத பயமும் அவள் மனத்தின் ஆழத்தில் குடிகொண்டிருந்தன. மாமல்லரைப்பற்றி அவர் கூறிய செய்திகளைக் கேட்டபின் அவரிடம் அவளுடைய அருவருப்பு அதிகமாயிற்று.

இன்னொரு பக்கம் புத்த பிக்ஷுவின் விசாலமான உலக அனுபவமும், ஆழ்ந்த கலைஞானமும் அவரிடம் அவளுக்குப் பக்தியையும் மரியாதையையும் உண்டு பண்ணியிருந்தன. மேலும், தூர தூர தேசங்களெல்லாம் சென்று அங்கங்கே மகாசபைகளில் நாட்டியம் ஆடி, ‘பரத கண்டத்தின் ஒப்பற்ற நடன ராணி’ என்று பெயரும் புகழும் பெறுவதுபற்றிப் பிக்ஷு அடிக்கடி கூறி அவளுடைய உள்ளத்தில் திக்விஜயப் பகற் கனவுகளை உண்டு பண்ணியிருந்தார். அதெல்லாம் அவருடைய உதவியினாலேதான் சாத்தியமாகக் கூடும் என்பதும் உலகமறியாத சாதுவான தன் தந்தையினால் ஆகாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருந்தன. எனவே புத்த பிக்ஷுவிடம் தன் மனத்தில் குடிகொண்டிருந்த அருவருப்பைப் போக்கிக்கொண்டு அவரிடம் சிநேகபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று அவள் முடிவு செய்திருந்தாள். ஆனாலும், புத்த பிக்ஷு பல்லவ குலத்தைப் பற்றியும் மாமல்லரைப் பற்றியும் அடிக்கடி கூறிய வசைமொழிகள் அவளுடைய சிநேக முயற்சிக்குக் குறுக்கே நின்று அருவருப்பை வளர்த்து வந்தன.

வாதாபிப் படை வடபெண்ணைக் கரையில் ஆறு மாதமாக இருந்ததுபற்றிப் புத்த பிக்ஷு குறிப்பிட்டதும் சிவகாமி ஆத்திரமான குரலில், “சுவாமி! வடபெண்ணைக்குப் போய் வாதாபிப் படைகளை நீங்களே கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே! பல்லவ குலத்தின் மேல் உங்களுக்கு என்ன அவ்வளவு கோபம்?” என்று கேட்டாள்.

பிக்ஷு சாந்தமான குரலில், “பல்லவ குலத்தின் மேல் எனக்கு என்னத்திற்கு அம்மா கோபம்? அவர்களுடைய கையாலாகாத்தனத்தினால் இப்போது நாம் நினைத்து வந்தபடி பிரயாணம் செய்ய முடியாமலிருக்கிறதே என்றுதான் வருத்தமாயிருக்கிறது. சிதம்பரத்துக்குப்போய் அங்கிருந்து கீழைச் சோழ நாட்டு ஸ்தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு நாகப்பட்டினத்தில் நடக்கப்போகும் மகா புத்த சங்கத்துக்கு உங்களை அழைத்துப் போவதாகச் சொன்னேனல்லவா? இப்போது பாண்டிய சைனியம் கீழைச் சோழ நாட்டில் படையெடுத்து வருவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட சமயத்தில் நாம் சோழ நாட்டுக்குப் போவது உசிதமா என்றுதான் யோசிக்கிறேன்” என்று கூறினார்.

“பின்னே, நாம் என்னதான் செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று ஆயனர் கேட்டார்.

“கெடில நதிக்கரையில் ஒரு அமைதியான இடம் இருக்கிறது. தங்களுடைய சிற்பவேலைகளை நடத்துவதற்கும் அங்கே நிறைய வசதி உண்டு. குன்றுகளும் பாறைகளும் ஏராளமாய் இருக்கின்றன. இந்த யுத்தக் குழப்பமெல்லாம் முடியும் வரையில் நீங்கள் அங்கே இருக்கலாமென்று நினைக்கிறேன்” என்றார் பிக்ஷு.

பிக்ஷுவிடம் வரவரச் சந்தேகம் அதிகம் கொண்டுவந்த ஆயனர் “போகப் போகப் பார்த்துக் கொள்ளலாம், சுவாமி!” என்றார்.

இப்படியெல்லாம் அவர்களுக்குள் இரண்டு தினங்களாகச் சம்பாஷணை நடந்திருந்தபடியால், எதிரே படைவரும் சத்தம் கேட்டதும் ஒருவேளை படையெடுத்து வரும் பாண்டிய சைனியந்தானோ அது என்று ஆயனரும் சிவகாமியும் ஐயுற்றார்கள். ஆனால் முன்னணியில் பறந்த கொடியில் ரிஷபத்தைப் பார்த்ததும் பல்லவர் படை என்று எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. படை வீரர்கள் எழுப்பிய கோஷங்கள் இதை உறுதிப்படுத்தின.

“வாதாபி அழிக!” “தலைக்காடு வாழ்க!” “புலிகேசிக்கு நாசம்!” “துர்விநீதனுக்குத் துர்மரணம்!” என்னும் கோஷங்களையும்,

“காஞ்சி வாழ்க!” “மகேந்திர பல்லவர் வாழ்க!” “மாமல்லரின் வீரத் தோள் வெல்க!” என்னும் முழக்கங்களையும் மாற்றி மாற்றி அந்த வீரர்கள் எழுப்பிக் கொண்டு கம்பீரமாக நடந்தார்கள்.

இந்தக் குரல் ஒலிகளுக்கு இடை இடையே பேரிகை முதலிய யுத்த வாத்தியங்கள் எட்டுத் திக்கும் எதிரொலி எழும்படி ஆர்த்தன. மேற்படி கோஷங்கள் எழுந்தபோது மரத்தின் பின்னால் மறைந்திருந்த நாகநந்தியடிகளின் முகத்தை யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால், படமெடுத்து ஆடும் நாக சர்ப்பத்தின் தீக்ஷண்யமான கண்களிலிருந்து தீப்பொறி கிளம்புவதுபோல் அவருடைய கண்களிலிருந்தும் பொறி கிளம்பிக் கொண்டிருந்ததைக் கவனித்திருக்கலாம். படை சின்னப் படைதான்; நாற்பது ஐம்பது குதிரைகளும் இரண்டாயிரம் காலாட்களும் இருக்கலாம். எனவே, அரை நாழிகைக்குள் நமது பிரயாணிகள் நின்றிருந்த இடத்தைத் தாண்டி படை சென்றுவிட்டது. சற்று முன் கலகலப்பாக இருந்த சாலையில் நிசப்தம் குடிகொண்டது. பெரிய நகரத்திலிருந்து திடீரென்று நிர்மானுஷ்யமான காட்டுக்குள் வந்துவிட்டதுபோல் தோன்றியது.

படை வீரர்கள் எழுப்பிய கோஷங்களில் “மாமல்லர் வாழ்க!” “மாமல்லரின் வீரத் தோள் வெல்க!” என்னும் கோஷங்கள் சிவகாமியின் உள்ளத்தில் பெருங்கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. மாமல்லர் பயங்கொள்ளியாயிருந்தால் பல்லவ வீரர்கள் அவரைப்பற்றி இம்மாதிரி வீர கோஷங்களைச் சொல்வார்களா?

“ஆயனரே போகலாமா? அசோகபுரம் இன்னும் ஒரு நாழிகை தூரம் இருக்கிறது!” என்று நாகநந்தியின் குரல் கேட்டது.

“ஆகா! போகலாமே! சிவகாமி! வண்டியில் ஏறிக்கொள், அத்தையையும் ஏறச்சொல்” என்றார் ஆயனர்.

சிவகாமி வண்டியில் ஏறாமலே, “அப்பா! இந்தப் படை வீரர்கள் எங்கே போகிறார்கள்?” என்று கேட்டாள்.

“எனக்குத் தெரியவில்லை, அம்மா! பார்த்தால், யுத்தத்துக்குப் போகும் படையாகத் தோன்றுகிறது. அந்த வீரர்கள் செய்த யுத்த கோஷங்களைக் கேட்டபோது எனக்குக்கூடக் கல்லுளியைப் போட்டு விட்டுக் கத்தியை எடுத்துக் கொள்ளவேண்டுமென்று தோன்றியது. எதற்காக இப்படிப் பயந்து ஊரைவிட்டு ஓடுகிறோம் என்று வெட்கமாயிருக்கிறது” என்றார் ஆயனர்.

“ஆயனரே! இத்தகைய சஞ்சலம் உமக்கு எப்போது வந்தது? சற்று முன்னால் அஹிம்சா மூர்த்தியான புத்த பகவானிடம் உமது அபார பக்தியைத் தெரிவித்துக் கொண்டீரே?” என்றார் புத்த பிக்ஷு. அந்தச் சமயத்தில் சாலையில் படை மறைந்த திக்கிலிருந்து ஒரு தனிக்குதிரை வரும் சத்தம் ‘டக்டக்’ டக்டக்’ என்று கேட்டது வர வர அது சமீபித்து வந்தது. வருகிறது யார் என்று தெரிந்துகொள்வதில் அவர்கள் எல்லாருக்குமே ஆவல் இருந்தபடியால் நின்ற இடத்திலேயே நின்றார்கள்.

குதிரை அவர்களுடைய அருகில் வந்தது. குதிரையின் மேல் இருந்தது இன்னார் என்று தெரிய வந்தபோது ஆயனருக்கும் சிவகாமிக்கும் உண்டான வியப்புக்கு அளவேயில்லை. ஏனெனில், குதிரைமேல் இருந்தவன், அவர்களுடைய அரண்ய வீட்டிற்குப் பரஞ்சோதி வந்த தினத்தில் அவர்களிடம் சொல்லிக் கொள்ளாமலே மாயமாய் மறைந்த குண்டோதரன்தான்.

“குருவே! நான் என்ன தவறு செய்தேன்! என்னை இப்படி அநாதையாய்க் கைவிட்டு விட்டுச் சொல்லாமல் புறப்பட்டு வந்து விட்டீர்களே!” என்று அலறினான் குண்டோதரன்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 18
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here