Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 2

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 2

65
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 2 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 2 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 2: பழைய நண்பர்கள்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 2

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 2: பழைய நண்பர்கள்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 2

ரதம் கோட்டையின் உள் வாசலைக் கடந்து காஞ்சி மாகநகரின் அழகிய விசாலமான வீதிகளில் போகத் தொடங்கியபோது, பரஞ்சோதிக்குப் பழைய நினைவு வந்தது. எட்டு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் இதே அந்தி நேரத்தில், இதே விதமாக பூரணச் சந்திரன் கீழ்வானத்தில் உதயமாகிக் கொண்டிருந்த சமயத்தில், தாம் தெற்குக் கோட்டை வாசல் வழியாகக் காஞ்சி நகருக்குள் பிரவேசித்ததும், அன்றிரவு நிகழ்ந்த சம்பவங்களும் அவர் உள்ளத்தில் விரைவாகத் தோன்றின. அன்று அவர் காஞ்சியில் பிரவேசித்ததற்கும் இன்று பிரவேசித்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்?

“தளபதி! என்ன ஒரேயடியாக மௌனத்தில் ஆழ்ந்து விட்டீர்?” என்று மாமல்லர் கேட்டதும், பரஞ்சோதி சிந்தனை உலகிலிருந்து வெளி உலகத்துக்கு வந்தார்.

“மன்னிக்கவேண்டும், பிரபு! தங்களுடைய அன்பானது அப்படி என்னை மெய் மறக்கச் செய்துவிட்டது. தென்னாட்டிலுள்ள மல்லர்களையெல்லாம் வென்று மகாமல்லர் என்று பட்டம் பெற்ற பல்லவ குமாரனின் பக்கத்தில் சமமாக உட்கார்ந்து போவது நான்தானா என்று எனக்கே சந்தேகமாயிருக்கிறது!”

“நல்ல சந்தேகம்! உமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து செல்வது எனக்கல்லவா கௌரவம்! ராட்சசப் புலிகேசியின் சேனாசமுத்திரத்தை மந்திரகிரியைப் போல் கடைந்து கலக்கிய மகா வீரனல்லவா நீர்? வாதாபி யானைப் படையாகிய மேகத்திரளைச் சிதற அடித்த பெரும் புயற்காற்று அல்லவா நீர்?”

“பல்லவக் குதிரைப் படையின் சாகசச் செயல்களின் புகழ் காஞ்சி வரையில் வந்து எட்டியிருக்கிறதா?” என்று தம்முடைய புகழைப் படையின் புகழாக மாற்றிக் கூறினார் தளபதி.

“ஏன் எட்டவில்லை? வாரந்தோறும் சக்கரவர்த்தி அனுப்பிய ஓலைகளிலிருந்து நீர் தலைமை வகித்த குதிரைப் படையின் வீரச் செயல்களையெல்லாம் அவ்வப்போது தெரிந்து கொண்டோம். தெரிந்த விவரங்களைப் பறையறைந்து நாடு நகரமெல்லாம் தெரியப்படுத்தினோம்!” என்றார் மாமல்லர்.

“ஆஹா! தங்களுடைய அன்பினால் எப்படி மெய்ம்மறந்து போனேன், பார்த்தீர்களா? சக்கரவர்த்தி கொடுத்த ஓலையைத் தங்களிடம் கொடுக்க மறந்துவிட்டேன்!” என்று கூறிக்கொண்டே பரஞ்சோதி இடுப்பில் பத்திரமாகச் செருகியிருந்த ஓலைக் குழாயை எடுத்துக் கொடுத்தார்.

“தளபதி! இது சக்கரவர்த்தி கொடுத்த ஓலைதானே? எங்கேயாவது வழி நடுவில் ஓலை மாறிவிடவில்லையே?” என்று மாமல்லர் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“அந்த வரலாறு கூடத் தங்களுக்குத் தெரியுமா?” என்று பரஞ்சோதி கூறியபோது அவருடைய முகத்தில் மலர்ந்த புன்னகையில் நாணமும் கலந்திருந்தது.

“ஆமாம், தெரியும்! நீர் இங்கிருந்து போகும் வழியில் வஜ்ரபாஹுவைச் சிநேகம் செய்துகொண்டது முதற்கொண்டு எல்லாம் எனக்குத் தெரியும்…!” என்றதும், இரண்டு பேருமே கலகலவென்று நகைத்தார்கள்.

மாமல்லர் மேலும் தொடந்து கூறினார்: “சக்கரவர்த்தி எட்டு மாதத்துக்கு முன்பு இங்கிருந்து கிளம்பியபோது, ‘நானும் வருவேன்’ என்று எவ்வளவோ பிடிவாதம் பிடித்தேன். சக்கரவர்த்தி அதை உறுதியாக மறுத்துவிட்டார். அப்படியானால் வாராவாரம் போர்க் களத்தில் நடப்பதையெல்லாம் விவரமாக எழுதியனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அந்தப்படியே சக்கரவர்த்தி எழுதி அனுப்பி வருகிறார். தளபதி! இன்றைக்குத் தான் நான் உம்மை முதன் முதலில் பார்க்கிறேன். ஆனாலும், நீ எனக்குப் புதியவர் அல்ல. சக்கரவர்த்தி அனுப்பி வந்த ஓலைகளின் மூலமாக உம்முடன் சென்ற எட்டு மாதமும் பழகி வந்திருக்கிறேன். உம்மை இன்று பார்த்ததும், புதிய மனிதராகவே எனக்குத் தோன்றவில்லை. வெகு காலம் பழகிய சிநேகிதராகவே தோன்றியது…!”

“பிரபு, எனக்கும் அப்படியேதான் தோன்றுகிறது. கிளிப் பிள்ளையைப் போல் தாங்கள் சொன்னதையே திருப்பிச் சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மையில், அப்படித்தான். ஏனென்றால், சென்ற எட்டு மாதத்தில் சக்கரவர்த்தி தங்களைப் பற்றி ஏதாவது பேசாத நாளே கிடையாது. அதனால், எனக்கும் தாங்கள் புதியவராகவே தோன்றவில்லை.”

குமார சக்கரவர்த்தி பரஞ்சோதியின் கரங்களை இறுகப் பிடித்துக்கொண்டு, “தளபதி! அப்படியானால் நாம் இருவரும் பாக்கியசாலிகள்தாம். தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கு நம் விஷயத்தில் முற்றும் உண்மையாயிற்று.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

என்று தமிழ்மறை சொல்லுகிறதல்லவா? (சாதாரணமாக, ஒருவரை யொருவர் அடிக்கடி சந்தித்துக் கலந்து பழகுவதனால் நட்பு உண்டாகி வளருகிறது. ஆனால், இரண்டு பேருக்குள் ஒத்த உணர்ச்சி இருக்கும் பட்சத்தில், மேற்சொன்னவாறு கலந்து பழகுதல் இல்லாமலே நட்பாகிய தலைசிறந்த உறவு ஏற்பட்டுவிடும்.) திருக்குறள் ஆசிரியருக்குப் பொய்யாமொழிப் புலவர் என்ற பட்டம் முற்றும் பொருத்தமானது!” என்று உற்சாகமாகக் கூறினார்.

அதற்குப் பரஞ்சோதி, “பல்லவ குமாரரே! மன்னிக்க வேண்டும். நான் கல்வி அறிவு என்பதே இல்லாதவன், பள்ளிக் கூடத்தின் நிழலில்கூட ஒதுங்காதவன். திருவள்ளுவரையும் அறியேன்; அவருடைய திருக்குறளையும் அறியேன். எனக்குக் கல்வி புகட்டும் பொறுப்பைச் சக்கரவர்த்தி தங்களுக்கு அளித்திருக்கிறார். ஓலையைப் படித்துப் பார்த்தால் தெரியும்” என்றார்.

இந்த வார்த்தைகள் குமார சக்கரவர்த்திக்குச் சிறிது கூச்சத்தை உண்டாக்கின. “அதற்கென்ன, தளபதி! சக்கரவர்த்தியின் கட்டளை எதுவானாலும் சந்தோஷமாக நிறைவேற்றி வைக்க நான் கடமைப்பட்டவன்…” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள், தளபதி பரஞ்சோதி, “ஆனால், எனக்குக் கல்வி கற்பிக்கும்படி சக்கரவர்த்தி தங்களுக்கு ஆக்ஞை இட்டிருப்பது என்னுடைய நன்மைக்காக அல்ல; தங்களுடைய நன்மைக்காகத்தான்!” என்றார்.

மாமல்லர் ஒன்றும் விளங்காமல் பரஞ்சோதியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவர் மேலும் கூறுவார்: “ஆம்! பிரபு! தங்களிடத்தில் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றனவாம். ஆனால், பொறுமையும் நிதானமும் மட்டும் குறைவாம். எனக்குக் கல்வி புகட்ட ஆரம்பித்தீர்களானால், உங்களுக்கும் பொறுமை வந்து விடுமாம்! என்னுடைய அறிவுக் கூர்மையில் சக்கரவர்த்திக்கு அவ்வளவு நம்பிக்கை!” என்றதும், மாமல்லர் குபீரென்று சிரிக்க, அதைப் பார்த்துப் பரஞ்சோதி சிரிக்க, இருவரும் சிரிப்பதைப் பார்த்து அடக்கி அடக்கிப் பார்த்தும் முடியாமல் சாரதி கண்ணபிரானும் சிரிக்க, இந்தக் கோலாகலம் என்னத்திற்கு என்று தெரியாமல் ரதத்தை இழுத்துச் சென்ற குதிரைகளும் கனைத்தன.

குதிரைகள் தங்களுக்குச் சுபாவமான இனிய குரலில் கனைப்பதைக் கேட்டு மறுபடியும் ஓர் ஆவர்த்தம் மூவரும் சிரித்தார்கள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 1
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here