Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 21

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 21

85
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 21 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 21 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 21: குதிரை கிடைத்த விதம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 21

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 21: குதிரை கிடைத்த விதம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 21

அத்தை வண்டியில் ஏறிக்கொண்டதும் வண்டி புறப்பட்டது மற்றவர்கள் பின்னால் நடந்து சென்றார்கள். குண்டோதரனும் தன் குதிரையின் தலைக்கயிற்றைப் பிடித்து நடத்திக் கொண்டு வந்தான்.

“அப்பா! குண்டோதரனுக்குக் குதிரை எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லும்படி கேளுங்கள்!” என்றாள் சிவகாமி.

“குண்டோதரனுக்குக் குதிரை ஏறத் தெரியும் என்றே எனக்குத் தெரியாது, அம்மா! குண்டோதரா, நீ எப்போது குதிரை ஏற்றம் கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டார் ஆயனர்.

“குருவே! உலகத்தைத் துறந்து காவித் துணி புனைந்த புத்த பிக்ஷுக்கள்கூட இந்த நாளில் குதிரை ஏறுகிறார்களே! இந்தக் குதிரை கூட ஒரு இளம் புத்த பிக்ஷு ஏறிக்கொண்டு வந்ததுதான். குருவே! அந்த இளம் பிக்ஷுவை ஏரியிலே தள்ளிவிட்டு நான் குதிரை மேல் ஏறி வந்துவிட்டேன்!” என்று குண்டோதரன் கூறிக் கலகலவென்று சிரித்தான்.

குண்டோதரன் சொல்லுவதெல்லாம் நாகநந்திக்குக் கோபம் மூட்டுவதாயிருப்பதைக் கண்ட ஆயனர், “குண்டோதரா! இது என்ன? என் சிஷ்யன் என்று பெயர் வைத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்யலாமா? கொஞ்சமும் நன்றாயில்லையே?” என்றார்.

சிவகாமி “அப்பா! குண்டோதரன் அப்படியெல்லாம் ஒன்றும் செய்திருக்கமாட்டான், வேடிக்கைக்காகச் சொல்கிறான்” என்றாள்.

“இல்லை, இல்லை! நிச்சயமாகத்தான் சொல்கிறேன். இங்கேயிருந்து இரண்டு காத தூரத்தில் சாலை ஓரமாக ஒரு ஏரி இருக்கிறதே, நீங்கள் பார்க்கவில்லையா? அந்த ஏரியிலே தான் அந்த இளம் பிக்ஷுவைத் தள்ளினேன்’ என்றான் குண்டோதரன்.

நாகநந்தி பெரிதும் கலக்கமடைந்த குரலில் ஆயனருக்கு மட்டும் கேட்கும்படியாக, “சிற்பியாரே! என்ன நடந்தது என்று விவரமாய்க் கேளுங்கள்!” என்றார்.

ஆயனர் அவ்விதமே விவரமாய்ச் சொல்லும்படி கேட்டதன் மேல் குண்டோதரன் சொன்னான்; “உங்களை வீட்டில் காணாமல், “அடடா! நம்முடைய குரு இப்படி நம்மைக் கைவிட்டு விட்டுப் போய்விட்டாரே!” என்று நான் கவலையுடன் மரத்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தேன். பல குதிரைகள் வரும் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு மரத்தடியில் மறைவிலிருந்தபடி பார்த்தேன். வந்தவர்கள் அனைவரும் அவசரமாய்த் திரும்பிப் போய் விட்டார்கள், ‘அடடா! இவ்வளவு குதிரைகளில் நமக்கு ஒரு குதிரை கிடைத்தால் நமது குருவைப் போய்ப் பிடித்து விடலாமே? கால்நடையாகப் போய்ப் பிடிக்க முடியுமா?’ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், ஒரு இளம் புத்த பிக்ஷு சற்று தூரத்திலிருந்த இன்னொரு மரத்தடியின் மறைவிலிருந்து வெளியே வந்தார். அந்த வீட்டுக்கு நாகநந்தி அடிகள் வந்திருந்தாரா என்று என்னைக் கேட்டார். அப்போது தாமரைக் குளக்கரையில் இந்த அடிகளைப் பார்த்த நினைவு எனக்கு வந்தது. ‘அவர் பெயர் என்னவோ எனக்குத் தெரியாது, ஒரு பிக்ஷுவைத் தாமரைக் குளக்கரையில் கண்டேன்’ என்றேன். இளம் பிக்ஷு சற்று யோசித்து விட்டுக் கிளம்பினார். வழித்துணை கிடைத்தது என்ற சந்தோஷத்துடன் நானும் அவருடன் கிளம்பினேன். ஆனால் அந்த இளம் பிக்ஷு என்னை ஏமாற்றிவிட்டார். கொஞ்ச தூரம் போனதும் காட்டின் மறைவில் கட்டியிருந்த இந்தக் குதிரைமேல் ஏறிக்கொண்டு என்னிடம் சொல்லிக் கொள்ளக்கூடச் செய்யாமல் வேகமாகப் போய்விட்டார். ஆகா! யாரை நம்பினாலும் நம்பலாம்; புத்த பிக்ஷுக்களை மட்டும் நம்பக்கூடாது! இதோ நம்முடன் வரும் அடிகள் நீங்கலாகச் சொல்கிறேன்” என்றான் குண்டோதரன்.

ஆயனர், “குண்டோதரா! பெரியோர்களாகிய புத்த பிக்ஷுக்களைப்பற்றித் தூஷணை சொல்லாதே! பிறகு நீ என்ன செய்தாய் என்று சொல்லு!” என்றார்.

“நானா? நான் என்ன செய்வது, குருவே! ‘நமக்குக் குதிரை இல்லாமற்போனால் போகட்டும்; கடவுள் கொடுத்த இரண்டு கால்கள் இருக்கிறதல்லவா?” என்று எண்ணிக்கொண்டு கிளம்பினேன். இரண்டு நாள் பிரயாணம் செய்ததில் கால் வலி கண்டு இன்று மத்தியானம் ஏறிக் கரையில் சாலை ஓரமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது பாருங்கள், அதே இளம் பிக்ஷு குதிரை மேல் வந்தார். ‘அடிகளே! இதென்ன, எனக்கு முன்னால் கிளம்பினீர்கள் பின்னால் வருகிறீர்களே!’ என்று கேட்டேன். என்னைப் பார்த்ததில் அவருக்கு அதிக ஆச்சரியமாய்ப் போய்விட்டது. ‘ஆமாம், அப்பா! இந்தக் காலத்தில் கால்நடைப் பிரயாணத்தை விடக் குதிரைப் பிரயாணம்தான் அதிக ஆபத்தாயிருக்கிறது. பல்லவ ராஜாங்கம்தான் தரித்திரம் பிடித்த ராஜாங்கமாயிருக்கிறதே? எங்கேயாவது குதிரையைக் கண்டால் யுத்தத்துக்கு வேண்டுமென்று கைப்பற்றிக் கொள்கிறார்களாமே? அதற்காகப் பயந்து பயந்து வரவேண்டியதாயிருந்தது!” என்றார். அப்புறம் பிக்ஷு குதிரை மேலும் நான் கால்நடையாகவும் கொஞ்சதூரம் வந்தோம். அப்போது பிக்ஷு அடிக்கடி ‘தாகமாயிருக்கிறது’ ‘தாகமாயிருக்கிறது’ என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மேல் எனக்கு மிகவும் பரிதாபம் உண்டாகி விட்டது. ‘அடிகளே! இந்தத் திவ்யமான ஏரியில் தண்ணீர் குடித்துத் தாகம் தணித்துக் கொள்ளுங்களேன்!’ என்று சொல்லி அவரைக் குதிரை மேலிருந்து ஒரு தள்ளுத் தள்ளினேன் பிக்ஷு ஏரியில் விழுந்தார். அடடா! என்ன ஆனந்தமாக அவர் ஏரித் தண்ணீர் குடித்தார் தெரியுமா…”

இதைக்கேட்ட சிவகாமியினால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ஆயனர், “அம்மா, இதென்ன அசந்தர்ப்பமான சிரிப்பு?” என்று அதட்டிவிட்டு, “அட பாவி! அப்புறம் என்னடா செய்தாய்?” என்று குண்டோதரனைப் பார்த்துக் கேட்டார்.

“குருவே! புத்த பிக்ஷுவுக்குத் தண்ணீர் கொடுத்துத் தாகத்தைத் தணிப்பது பாவமா?” என்றான் குண்டோதரன்.

“அப்புறம் என்ன செய்தாய், சொல்!” என்று ஆயனர் மிகவும் கடுமையான குரலில் கேட்டார்.

“என்ன செய்தேனா? பிக்ஷுவுக்கு நீந்தத் தெரியாதென்று தெரிந்ததும் கரையிலே கிடந்த அவருடைய மேல் வஸ்திரத்தை எடுத்து அதன் ஒரு முனையைக் கரையிலிருந்த மரத்தின் வேரில் கட்டினேன். இன்னொரு முனையை அவர் பிடித்துக்கொண்டதும், ‘பிக்ஷுவே! மெதுவாகக் கரையேறிவந்து சேருங்கள்! நான் போகிறேன்!’ என்றேன். அப்போது அவர், ‘ஐயோ! ஓலை! ஓலை!’ என்று அலறினார். ‘என்ன ஓலை?’ என்று கேட்டேன். ‘நாகநந்திக்குக் கொண்டுவந்த ஓலை! கரையிலே கிடக்கிறதா, பார்!’ என்றார். கரையிலே பார்த்தேன் ஒரு ஓலை கிடந்தது. அதை எடுத்து அவருக்குக் காட்டி, ‘ஓலை பத்திரமாயிருக்கிறது கவலை வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுக் குதிரை மேல் ஏறிக் கொண்டேன். அவ்வளவுதான்; இங்கே வந்து சேர்ந்தேன்” என்று குண்டோதரன் தன் கதையை முடித்தான்.

குரோதம் நிறைந்த குரலில் நாகநந்தி, “ஆயனரே! தயவு செய்து உமது சீடனிடமிருந்து ஓலையை வாங்கிக் கொடுங்கள்!” என்றார்.

ஆயனரும் கலக்கத்துடன், “குண்டோதரா! என் பெயரைக் கெடுக்கவா நீ என் சீடனானாய்? நல்ல காரியம் செய்தாய்! போகட்டும், இவர்தான் நாகநந்தியடிகள், அந்த ஓலையைக் கொண்டு வந்திருக்கிறாயா? இப்படிக் கொடு!” என்றார்.

“குருவே! அப்படியா? நான் நினைத்தது நிஜமாய்ப் போயிற்றே? இவர்தானா நாகநந்தியடிகள்! சுவாமி! இதோ ஓலை!” என்று குண்டோதரன் நாகநந்தியடிகளிடம் ஓலையைக் கொடுத்தான். அதை அவர் மௌனமாக வாங்கிக் கொண்டு சாலை மரங்களின் வழியாக வந்து கொண்டிருந்த நிலாக் கிரணங்களின் உதவியினால் படிக்க முயன்றார் ஆனால் படிக்க முடியவில்லை என்று தெரிந்தது. பிக்ஷுவின் நடை முன்னைக் காட்டிலும் வேகத்தையடைந்தது. அந்தச் சாலையில் வண்டிச் சத்தத்தையும் குதிரையடிச் சத்தத்தையும் மனிதர் காலடிச் சத்தத்தையும் தவிர மற்றபடி நிசப்தம் குடிகொண்டது. மனிதரின் பேச்சுச் சத்தம் அடியோடு நின்றது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 20
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here