Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 23

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 23

59
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 23 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 23 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 23: தோற்றது யார்?

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 23

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 23: தோற்றது யார்?

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 23

சிவகாமிக்கு அன்றிரவு வெகு நேரம் வரையில் தூக்கம் வரவில்லை; அன்று குண்டோதரன் கூறிய விஷயங்களையெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள். குமார சக்கரவர்த்தியைப் பற்றி நாகநந்தி கூறிய அவதூறுகளைத் தான் முழுதும் நம்பிவிட்டதை நினைந்து வெட்கினாள். நாகநந்தியின் பேரில் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. அவருடைய பொய் மொழிகளைக் குறித்துக் கேட்டு, அவரை ஏளனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் மனதில் பொங்கிக் கொண்டிருந்தது.

இத்தகைய எண்ணங்களுக்கிடையில் மாமல்லரின் விருப்பத்தின்படி தான் அரண்ய வீட்டில் இல்லாமற் போனது பற்றி அவருடைய கோபம் எத்தகையதாயிருக்குமோ என்ற கவலையும் தோன்றிக் கொண்டிருந்தது. அதை அவ்வளவு மன்னிக்க முடியாத பெருங்குற்றமாக மாமல்லர் கொள்ள மாட்டார் என்று அவள் தன்னைத்தானே ஆறுதல் செய்து கொண்டாள். இவ்விதம் பலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்து கடைசியில் தன்னையறியாது மேலிட்டு வந்த களைப்பினால் கண்ணயர்ந்தாள்.

அவள் அரைத் தூக்கமாயிருந்தபோது சமீபத்தில் எங்கேயோ பெருங் கூக்குரலைக் கேட்டுத் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தாள். கவனித்துக் கேட்ட போது, ‘குய்யோ முறையோ’ என்று குண்டோதரன் ஓலமிடும் சத்தமும், அத்துடன், டக் டக் டக் டக் என்று குதிரை பாய்ந்து செல்லும் சத்தமும் கலந்து கேட்டன. அயர்ந்து தூங்கிய ஆயனரைச் சிவகாமி எழுப்பினாள். இருவரும் வாசலில் வந்து பார்த்தபோது அங்கே ஓலமிட்டுக் கொண்டிருந்த குண்டோதரன், “ஐயோ! குருவே; என்னுடைய குதிரையைப் பிக்ஷு திருடிக் கொண்டுபோய் விட்டார்!” என்று கூச்சலிட்டான்.

ஆயனர் அவனுக்கு, “அப்பனே! அந்தக் குதிரை உன்னுடையதல்லவே!” என்று சமாதானம் சொல்லிப் பார்த்தார்.

குண்டோதரன், “அப்படித்தான் நாகநந்தி குதிரையைத் திருடிக்கொண்டு போனாரே? என் மேல் என்னத்திற்காகப் பாம்பைப் போடவேண்டும்!” என்று அலறினான்.

“அது என்ன சமாசாரம்?” என்று ஆயனர் கேட்டதற்கு குண்டோதரன் கூறிய விவரமாவது;

புத்த பிக்ஷு இரகசியமாய் எழுந்து வந்து வாசலில் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதன் மேல் ஏறிக்கொண்டார். அதே சமயத்தில் தற்செயலாகக் கண் விழித்த குண்டோதரன் ஓடிப்போய்க் குதிரையைப் பிடித்தான். பிக்ஷு தம் கையிலிருந்த ஒரு பையை அவிழ்த்து அதற்குள்ளிருந்து எதையோ எடுத்து அவன் மேல் வீசினார். அது ஒரு நாகப்பாம்பு என்று கண்டதும், குண்டோதரன் அலறிக் கொண்டு அப்பால் ஓட, குதிரையை விட்டுக்கொண்டு பிக்ஷு போய்விட்டார்.

குண்டோதரனுடைய வார்த்தையில் ஆயனருக்கும் சிவகாமிக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஏதோ உளறிக் கொட்டுகிறான்; ஒருவேளை கனவு கண்டானோ என்னவோ என்று நினைத்தார்கள். குண்டோதரன், “குருவே! என்னுடைய அருமைக் குதிரையை விட்டுவிட்டு என்னால் இருக்க முடியாது. எப்படியாவது திரும்பப் பிடித்துக் கொண்டு வந்து சேர்வேன்!” என்று சொல்லிவிட்டு, குதிரை போன திசையில் அவனும் ஓடி மறைந்தான்.

ஆயனரும் சிவகாமியும் அசோகபுரத்துக்கு வந்து புத்த விஹாரத்தில் வசிக்கத் தொடங்கி ஐந்து தினங்கள் ஆயின. முதல் மூன்று நாள் விசேஷம் ஒன்றும் நடைபெறவில்லை. சிவகாமிக்குப் பொழுதுபோவது கஷ்டமாயிருந்தது. ஆயனருக்கோ அதைவிடக் கஷ்டமாயிருந்தது. ஆனால், புத்த பிக்ஷுவின் துணையை நம்பி வந்தவர்களாகையால், அவருடைய யோசனை இல்லாமல் மேலே எங்கே போவது என்பதை ஆயனரால் நிச்சயிக்கக் கூட முடியவில்லை. குண்டோதரன் கூறிய விவரங்களைக் கேட்ட பிறகு சிவகாமிக்கு ‘மேலே போகும் ஆவலே இல்லாமல் போய் விட்டது. “திரும்பிக் காஞ்சிக்குப் போனால் என்ன?” என்ற எண்ணம் அடிக்கடி தோன்றியது.

இந்த நிலைமையில், அவர்கள் அசோகபுரத்துக்கு வந்த நாலாம் நாள் இரவு சில அபூர்வ சம்பவங்கள் நடைபெற்றன. அன்று அஸ்தமன நேரத்தில் எங்கேயோ வெகு தூரத்தில் வான முகட்டின் அருகில், இடைவிடாமல் இடி இடிப்பது போன்ற சத்தம் முதலிலே வெகு இலேசாகக் கேட்டது. உற்றுக் கேட்கக் கேட்க, சத்தம் அதிகமாகி வந்ததாகத் தோன்றியது. சற்றுநேரத்துக்கெல்லாம் அதுவே சமுத்திர கோஷம்போல் தொனிக்கத் தொடங்கியது. முதலில் தூரத்திலிருந்த சமுத்திரம் வரவர நெருங்கி வருவது போலவும் இருந்தது. திடீரென்று சத்தம் பெரிதாகி அருகிலே நெருங்கி, பல்லாயிரம் பேர் தடதடவென்று ஓடி வருவது போன்ற சத்தமாக மாறிற்று.

ஆயனரும் சிவகாமியும் உள்ளேயிருந்து வாசற் பக்கம் ஓடி வந்து பார்த்தார்கள். சற்றுத் தூரத்தில் மரங்களின் இடுக்கு வழியாகச் சிதம்பரம் சாலை தெரிந்தது. அதிலே அநேகம் பேர் தலைகால் தெரியாமல் ஓடிக்கொண்டிருந்த காட்சி புலப்பட்டது. அந்தக் கூட்டத்தின் நடுவே அம்பாரி வைத்த பெரிய யானை ஒன்று அதிவிரைவாக நடந்து சென்றது. அதைச் சூழ்ந்து ஏழெட்டுக் குதிரைகளும் சென்றன. குதிரைகள் மேல் ஆயுதபாணிகளான ஆட்கள் இருந்தார்கள். அதே கூட்டத்தில் ஒரு புறத்தில் உயரமான கொடிமரம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிய சிலர் காணப்பட்டார்கள். அந்தக் கொடி தாறுமாறாய்க் கிழிந்திருந்தது. அதற்குப் பிறகு அன்றிரவெல்லாம் பத்துப் பத்துப் பேராகவும், ஐம்பது நூறு பேராகவும், அதற்கு மேற்பட்ட கூட்டமாகவும் அடிக்கடி சாலையில் மனிதர்கள் தடதடவென்று ஓடிய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

சில சமயம் அசோக ஸ்தம்பத்தைச் சுற்றிக்கொண்டு புத்த விஹாரம் இருந்த பாழும் வீதி வழியாகவும் சிற்சில கூட்டத்தார் ஓட்டமும், நடையுமாகச் சென்றதைச் சிவகாமி கவனித்தாள். இதையெல்லாம் பற்றிச் சிவகாமி ஆயனரைக் கேட்க, அவர், “எங்கேயோ யுத்தம் நடந்திருக்கிறது, அம்மா! யுத்தத்தில் ஒரு கட்சி தோற்றுவிட்டதாகத் தெரிகிறது. தோற்றவர்கள்தான் இப்படி நிலை குலைந்து ஓடுவார்கள்” என்றார்.

“அப்பா! தோற்றவர்கள் பகைவர்களாகத்தான் இருக்க வேண்டும். ஓடுகிறவர்களைப் பார்த்தால், பல்லவ வீரர்களாகத் தோன்றவில்லையல்லவா?” என்றாள் சிவகாமி.

“நாம் என்னத்தை அம்மா கண்டோம்? இருட்டிலே என்ன தெரிகிறது! மாமல்லர் படைத் தலைமை வகித்த கட்சி ஜயித்திருக்க வேண்டுமென்றுதான் நானும் கருதுகிறேன்” என்றார் ஆயனர்.

இவ்வளவு தடபுடலும் இரவு முடிந்து பொழுது விடிவதற்குள்ளாக நின்றுவிட்டது. சூரியோதயத்துக்குப் பிறகு சத்தம், சந்தடி, ஓட்டம் ஒன்றுமேயில்லை. சிவகாமி புத்த விஹாரத்தின் வாசலில் நின்று சாலையை நோக்கிய வண்ணம் இருந்தாள். யாராவது அந்தப் பக்கம் வரமாட்டார்களா? வந்தால் நேற்று இரவு நிகழ்ச்சிகளைப் பற்றி அவர்களிடம் விசாரிக்கலாமே என்று காத்திருந்தாள். சூரியன் உதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். காலையிலிருந்து குடிகொண்டிருந்த நிசப்தம் சட்டென்று கலைந்தது. சாலையோடு குதிரைகள் பாய்ந்து வரும் சத்தம் கேட்டது.

அடுத்தாற்போல் குதிரைகளும் காணப்பட்டன; அப்பா! எவ்வளவு குதிரைகள்? பத்து, ஐம்பது, நூறு, ஆயிரம்கூட இருக்கும் போலிருக்கிறதே? அவ்வளவு குதிரைகள் மீதும் வேலும் வாளும் பிடித்த வீரர்கள் எவ்வளவு உற்சாகமாக அமர்ந்திருக்கிறார்கள்? அந்தக் குதிரைப் படையின் மத்தியில் ஒரு கம்பீரமான கருநிறக் குதிரையின் மேல் ஒரு வீரன் ரிஷபக் கொடியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், சிவகாமியின் உள்ளமும் தோள்களும் பூரித்தன. அவள் நினைத்தபடியே பகைவர்கள் தான் தோற்று ஓடுகிறார்கள் என்றும் பல்லவ சைனியந்தான் ஓடும் பகைவர்களைத் தொடர்ந்து செல்கிறதென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.

அந்தப் பெரிய குதிரைப்படை சாலையோடு போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு தனிக் குதிரைகளும், அவற்றின் பின்னால் ஒரு ரதமும் விரைந்து வருவது காணப்பட்டது. இதென்ன விந்தை? அந்த இரு குதிரைகளும் ரதமும் சாலையிலிருந்து குறுக்கே திரும்பி அசோக ஸ்தம்பத்தையும் சிவகாமி இருந்த புத்த விஹாரத்தையும் நோக்கி வருகின்றனவே? குறுக்கு வழியாக அந்தத் தெருவில் புகுந்து சென்று சாலை ஏறி முன்னால் போன குதிரைப் படையைப் பிடிப்பதற்காக இவர்கள் இப்படி வருகிறார்கள் போலிருக்கிறது!

ஆஹா! அந்த முதல் குதிரைமேல் வருகிறது யார்? தன் கண்கள் காண்பது உண்மையா? சிவகாமியின் இருதயம் அப்படியே நின்றுவிடும் போலிருந்தது! ஆம்; அதன்மேல் வந்தவர் மாமல்ல நரசிம்மர்தான்! விஹாரத்தின் வாசலில் நின்ற சிவகாமி திடீரென்று மாமல்லரைக் குதிரை மீது பார்த்ததும், எங்கிருந்தோ, எதனாலோ அவளுடைய கண்களில் கண்ணீர் வந்து நிறைந்து விட்டது. உணர்ச்சி மிகுதியினாலும், காரணந்தெரியாத நாணத்தினாலும், சிவகாமி சட்டென்று திரும்பி, உள்ளே போவதற்குக் காலை எடுத்து வைத்தாள். அதே சமயத்தில் ‘ஆ!’ என்ற குரல் ஒலியும், வேகமாக வந்த குதிரையைத் திடீரென்று இழுத்துப் பிடித்து அது தட் தட் என்று கால்களைத் தட்டிக் கொண்டு நிற்கும் சத்தமும் கேட்டன. சிவகாமி வீதிப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.

மாமல்லருடைய கண்கள் தீவிரமான நோக்குடன் அவளுடைய நெஞ்சையே ஊடுருவது போல் பார்த்தன. அந்தப் பார்வையில் சொல்ல முடியாத வியப்பும் மகிழ்ச்சியும் அளவிடக் கூடாத அன்பும் ஆத்திரமும் கலந்திருந்தன. இதெல்லாம் ஒரே ஒரு கணந்தான்; மறுகணத்தில் குதிரை மீண்டும் காற்றாய்ப் பறந்து சென்றது. மாமல்லருக்குப் பின்னால் வந்த தளபதி பரஞ்சோதியும் சிவகாமியைப் பார்த்த போதிலும் அவருடைய குதிரை ஒரு கணமும் நிற்காமல் மேலே சென்றது. அவர்களுக்குப் பின்னால் வந்த ரதத்தைக் கண்ணபிரான் தான் ஓட்டி வருகிறான் என்று தெரிந்ததும் சிவகாமி மீண்டும் வாசற்புறத்துத் தூணண்டை வந்து நின்று, ரதத்தை நிறுத்தும்படி கையினால் சமிக்ஞையும் செய்தாள்! கண்ணபிரான் குதிரைகளை இழுத்துப் பிடித்து ரதத்தை நிறுத்தினான். குதிரைகள் திடீரென்று நின்றபடியால், அச்சு முறிவது போன்ற சடசட சத்தத்துடன் ரதம் ‘தடக்’ என்று நின்றது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 22
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here