Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 25

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 25

84
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 25 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 25 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 25: திருப்பாற் கடல்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 25

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 25: திருப்பாற் கடல்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 25

புள்ளலூர்ச் சண்டையைப் பற்றிக் குண்டோதரன் கூறிய விவரங்களைக் கேட்கக் கேட்க, மேலும் மேலும் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்னும் ஆவல் ஆயனருக்கும் சிவகாமிக்கும் பொங்கிப் பெருகியது. முக்கியமாகப் போர்க்களத்தில் மாமல்லர் நிகழ்த்திய அதி அற்புத தீரச் செயல்களைப் பற்றிக் கேட்பதில் சிவகாமி அடங்காத தாகம் கொண்டிருந்தாள். குண்டோதரனும் குதூகலத்துடன் அந்த வீரச் செயல்களை வர்ணித்தான்.

“ஆஹா! போர்க்களத்தில் எதிரிகளுக்கிடையில் புகுந்து மாமல்லர் வீர வாளைச் சுழற்றியபோது எப்படியிருந்தது தெரியுமா? அது கேவலம் வாளாகவே தோன்றவில்லை. திருமாலின் சக்ராயுதத்தைப் போலவே சுழன்று ஜொலித்தது! அந்த வாளிலிருந்து கணந்தோறும் நூறு நூறு மின்னல்கள் மின்னின. ஒவ்வொரு மின்னலும் ஒவ்வோர் எதிரியின் தலையைத் துண்டித்து எறிந்தது…”

இப்படி வர்ணித்துக் கொண்டே இருந்த குண்டோதரன் திடீரென்று நிறுத்தி, “குருவே! (“விஹாரம்” என்பது புத்தபெருமானின் கோயிலும் பௌத்த பிக்ஷுக்கள் தங்கும் மடமும் சேர்ந்து அமைந்தது. ‘சைத்யம்’ என்பது புத்த பகவானின் தனிப்பட்ட ஆலயமாகும்.) இந்த விஹாரத்திலிருந்த வயோதிக புத்த பிக்ஷு எங்கே?” என்று கேட்டான்.

“அப்பனே! நாங்கள் வந்ததிலிருந்து அவர் பெரும்பாலும் இங்கே இருப்பதில்லை. அநேகமாக சைத்யத்திலேயே இருக்கிறார். தினம் இரண்டு தடவை இங்கே வந்து எங்களுக்கு என்ன வேண்டும் என்று விசாரித்துவிட்டுப் போய்விடுகிறார்!” என்றார் ஆயனர்.

“குருவே! அவரை அவசரமாகப் பார்க்க வேண்டும், பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

குண்டோதரன் விஹாரத்திலிருந்து கிளம்பி வாசலில் வந்தபோது சூரியன் அஸ்தமித்து அந்தி மயங்கிக் கொண்டிருந்த நேரம். ஆனால், அன்று சாதாரண அந்தி நேரமாகக் காணப்படவில்லை. இரவானது திடீரென்று இருண்டு திரண்டு நாற்புறமும் சூழ்ந்து வந்ததாகத் தோன்றியது. இதற்குக் காரணம் என்னவென்று குண்டோதரன் வானத்தை நோக்கியபோது, வடக்குத் திக்கில் மைபோல் கறுத்துக் கொண்டல்கள் திரள் திரளாக மேலே எழுந்து வருவதைக் கண்டான். “ஆஹா! இன்றிரவு பெருங்காற்றும் மழையும் திருவிளையாடல் புரியப் போகின்றன. பகலெல்லாம் அவ்வளவு புழுக்கமாயிருந்த காரணம் இதுதான் போலும்!” என்று குண்டோதரன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவர்கள் தங்கியிருந்த விஹாரத்திலிருந்து சற்றுத் தூரத்தில் தனித்திருந்த பாழடைந்த புத்த சைத்யத்தைக் குண்டோதரன் நெருங்கியபோது உள்ளேயிருந்து பேச்சுக்குரல் வந்தது. வெளியிலேயே இருள் கவிழ்ந்து சூழ்ந்திருந்த நிலையில், சைத்யத்துக்குள் குடிகொண்டிருந்த அந்தகாரம் எப்படியிருந்திருக்கவேண்டுமென்று சொல்ல வேண்டியதில்லை. அந்தக் கன்னங்கரிய இருளின் உதவியால் குண்டோதரன் பேச்சுக் குரல் வந்த இடத்துக்கு வெகு சமீபத்தில் போய் மூச்சுக்கூடக் கெட்டியாக விடாமல் தூண் மறைவில் நின்றான்: பின்வரும் சம்பாஷணை அவன் காதில் விழுந்தது.

“உடனே, இந்தக் கணமே, அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்புங்கள். பொழுது விடிவதற்குள்ளாக வராக நதியைத் தாண்டிவிட வேண்டும். வழியிலுள்ள கிராமங்களில் வண்டி கிடைத்தால் ஏற்றிக்கொண்டு போங்கள். எப்படியும் நாளைச் சூரியோதயத்துக்குள் வராக நதியைத் தாண்டி விடுங்கள்.”

“அவர்கள் கிளம்ப மறுத்தால்…?”

“தொல்லைதான், ஏதோ ஒரு பிசகினால் நான் போட்ட திட்டமெல்லாம் வீணாய்ப்போய்விட்டது. ஆனாலும், புத்த பகவான் அருளால் எல்லாம் ஒழுங்காகிவிடும். அவர்களிடம் எதையாவது சொல்லிப் புறப்படச் செய்யுங்கள். இங்கே பெரிய சண்டை நடக்கப் போவதாகச் சொல்லுங்கள். இதெல்லாம் ஒன்றும் பலிக்காவிட்டால், திருப்பாற்கடல் உடைப்பு எடுத்துக் கொண்டு விட்டதாகச் சொல்லுங்கள்!”

“சுவாமி! இது என்ன சொல்கிறீர்கள்?”

“ஆம்; திருப்பாற்கடல் ஏற்கனவே அலைமோதிக் கொண்டிருக்கிறது. புத்தபகவான் கருணையினால் இன்று மழை பெய்தால் கட்டாயம் கரை உடைத்துக் கொள்ளும்…” என்று கூறி நாகநந்தி தமது ஆழ்ந்த பயங்கரக் குரலில் சிரித்தார். புத்த பிக்ஷு மேலும் கூறிய மொழிகள் முன்னைக் காட்டிலும் மெதுவான குரலில் வெளிவந்தன! “அப்படியும் அவர்கள் கிளம்பாமல், உடைப்பு எடுத்து வெள்ளமும் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? விஹாரத்தில் இன்னும் ஒரு தெப்பம் மீதி இருக்கிறதல்லவா? அதில் ஏற்றிக்கொண்டு, போன மாதம் பார்த்த பாறை மேட்டுக்குப் போய்ச் சேருங்கள். மற்றவர்கள் எப்படியானாலும் சிவகாமியைக் கட்டாயம் காப்பாற்றியாக வேண்டும், தெரியுமா சுவாமி!”

மேற்படி சம்பாஷணையில் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, குண்டோதரனுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. நாகநந்தியின் சிரிப்பு அவனுடைய தேகத்தைச் சிலிர்க்கச் செய்தது. அன்று ராத்திரி ஏதோ பெரிய விபரீதம் ஏற்படப் போகிறதென்பதையும், அதைத் தடுக்கவேண்டிய பொறுப்பு தன்னுடைய தலையில் சாய்ந்திருக்கிறதென்பதையும் அவன் உணர்ந்தான். அந்தக் காரியத்தில் தனக்கு உதவி புரியும்படி தான் வழிபடும் தெய்வமாகிய பழனிமலையில் வீற்றிருக்கும் முருகக் கடவுளை வேண்டிக்கொண்டான்.

சம்பாஷணை முடிந்ததும் பிக்ஷுக்கள் இருவரும் சைத்யத்திலிருந்து வெளியில் வந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து குண்டோதரனும் வந்தான். இதற்குள்ளாக மாலை போய் இரவு வந்து நன்றாக இருட்டிவிட்டது. வடகிழக்கிலிருந்து திரண்டு வந்த மேகங்கள் வானத்தைப் பெரும்பாலும் மூடியிருந்தாலும், தெற்கிலும் மேற்கிலும் இன்னும் சில நட்சத்திரங்கள் தெரிந்தன. சைத்தியத்திலிருந்து வெளியேறிய பிக்ஷுக்களில் ஒருவர் அருகிலிருந்த விஹாரத்தை நோக்கிச் சென்றார். மற்றொருவர் சைத்யத்தைச் சுற்றிக் கொண்டு தென்மேற்குத் திசையை நோக்கிச் சென்றார்.

ஒரு கணம் குண்டோதரனுடைய மனத்தில் ஒரு போராட்டம் நிகழ்ந்தது. விஹாரத்துக்குப் போய் ஆயனருக்கு எச்சரிக்கை செய்ய வேண்டாமா என்று எண்ணினான். ஆனால், என்ன விதமாக எச்சரிக்கை செய்வது? எப்படியும் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று மேற்படி பிக்ஷுக்களின் சம்பாஷணையிலிருந்தே நன்கு தெரிந்தது. எனவே, அச்சந்தர்ப்பத்தில் தன்னுடைய வேலை நாகநந்தியைப் பின் தொடர்வதுதான் என்று குண்டோதரன் தீர்மானித்தான். அவ்விதமே அவரைப் பின்தொடர்ந்து குண்டோதரன் சற்று தூரத்திலேயே நடந்து சென்றான். கொஞ்ச தூரம் போனதும் ஒரு மரத்தின் பின்னால் கட்டியிருந்த குதிரையை அவிழ்த்து அதில் நாகநந்தி ஏறிக் கொண்டார்.

ஆஹா! திருட்டுபோன குதிரை மறுபடியும் கிடைக்கப் போகிறது! என்று குண்டோதரன் எண்ணிக் கொண்டான். கணத்துக்குக் கணம் வேகமாகிக்கொண்டிருந்த காற்றினாலும் இருட்டினாலும் நாகநந்தி குதிரை மேல் ஏறியபோதிலும் மெதுவாகவே போக வேண்டியிருந்தது. எனவே அவரைத் தொடர்ந்து போவது கஷ்டமில்லை. சில சமயம் குதிரை அடிச் சத்தம் முன்னால் கேட்கிறதோ பின்னால் கேட்கிறதோ என்பது சந்தேகமாயிருந்தது. இரண்டு பக்கத்திலும் கேட்பது போலவும் இருந்தது. இது வீண் பிரமை என்று எண்ணிக் கொண்டு மேலே சென்றான்.

ஏறக்குறைய மூன்று நாழிகை வழிவந்த பிறகு, எதிரே நீண்ட மலைத்தொடர் போன்ற ஓர் இருண்ட கரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் தென்பட்டது. அதே சமயத்தில் கண்ணைப் பறிக்கும் மின்னல்களுடனும், அண்டம் அதிரும் இடி முழக்கங்களுடனும் மழை பெய்யத் தொடங்கியது. மின்னல் வெளிச்சத்தில் நாகநந்தி மேட்டின் ஓரமாக இருந்த ஒரு மரத்தில் குதிரையைக் கட்டிவிட்டு அந்தக் கரையின் மேல் ஏறுவது குண்டோதரனுக்குத் தெரிந்தது. அதே இடத்தில் மேட்டின் மீது அவனும் ஏறினான். மழையில் நனைந்த காரணத்தினால் கரையின் மண் சேறாகி வழுக்கத் தொடங்கிவிட்டபடியால் மேட்டில் ஏறுவது சுலபமாயில்லை. கடைசியில், கரையின் அடியிலிருந்து வளர்ந்திருந்த மரத்தின் உதவியால் கஷ்டப்பட்டு ஏறிக் குண்டோதரன் கரை உச்சியை அடைந்தபோது, பளீரென்று வீசிய மின்னல் வெளிச்சத்தில் ஓர் அபூர்வ பயங்கரக் காட்சி தென்பட்டது.

கரைக்கு அப்பால் இருந்த திருப்பாற் கடல் என்னும் ஏரி புயற்காற்றினால் கொந்தளித்தது. ஒரு மகா சமுத்திரத்தைப்போல் அலை மோதிக் கொண்டு காட்சி அளித்தது. கொந்தளித்து எழுந்த அலைகள் மின்னல் வெளிச்சத்தில் வெள்ளை வெளேரென்று ஜொலித்தபடியால், உண்மையிலேயே திருப்பாற்கடல் என்னும் பெயர் அந்த ஏரிக்கு அச்சமயம் மிகவும் பொருத்தமாயிருந்தது. அதே நேரத்தில் குண்டோதரன் நின்ற இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் அவனுடைய உடம்பின் இரத்தத்தையெல்லாம் சுண்டச் செய்யும்படியான இன்னொரு பயங்கரத் தோற்றமும் தென்பட்டது. அலைமோதிய ஏரிக்கரையில் கையை உயரத் தூக்கிக் கொண்டு நின்ற நாகநந்தி, ‘ஹா ஹா’ என்று பேய்க் குரலில் சிரித்த சத்தமானது, புயல் முழக்கத்தின் ஓசையையும் அலைகளின் ஆரவார ஒலியையும் அடக்கிக் கொண்டு மேலெழுந்தது. நாகநந்திக்குப் பக்கத்தில் ஏரிக்கரையைப் பிளந்து கொண்டு ஒரு சிறு கால்வாய் வழியாகத் தண்ணீர் ஓட ஆரம்பித்தது. நாகநந்தி அடிகளின் காலடியில் ஒரு மண்வெட்டி கிடந்தது!

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 24
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 26

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here