Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 27

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 27

62
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 27 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 27 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 27: மாமல்லர் எங்கே

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 27

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 27: மாமல்லர் எங்கே

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 27

குண்டோதரனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டுக் குதிரை மேல் விரைந்து சென்ற மனிதர் யார் என்பதை நேயர்கள் ஊகித்துத் தெரிந்துகொண்டிருப்பார்கள். சிற்பம், சித்திரம், சங்கீதம் முதலான லளித கலைகளில் வல்லவராயிருந்தது போலவே யுத்தத் தந்திரக் கலையிலும் தேர்ச்சி பெற்றவரும், மாறுவேடம் பூணுவதில் நிகரற்ற சாமர்த்தியம் வாய்ந்தவரும், வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியத்தை வடபெண்ணைக் கரையில் எட்டு மாதம் நிறுத்தி வைத்தவருமான மகேந்திர பல்லவ சக்கரவர்த்திதான். காஞ்சிக் கோட்டையிலிருந்து வடதிசையை நோக்கிக் கிளம்பியது முதல் மகேந்திர பல்லவர் கையாண்ட யுத்த தந்திரங்கள் இதைப் போல் பல சரித்திரங்கள் எழுதுவதற்குப் போதுமானவையாகும். நாகநந்தி என்னும் புத்த பிக்ஷுவின் வேஷம் பூண்டிருந்தவர் புலிகேசியின் அந்தரங்க நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒற்றர் என்று அவர் ஊகித்திருந்தார். அதைப் பரஞ்சோதி கொண்டு போன ஓலையிலிருந்து உறுதிப்படுத்திக் கொண்டார். நாகநந்தியின் கையெழுத்தையும் இலச்சினையையும் மேற்படி ஓலையிலிருந்து தெரிந்து கொண்டது அவருக்குப் பல விதங்களிலும் உபயோகமாக இருந்தது. அந்த உபயோகங்களில் ஒன்றுதான், பல்லவ ராஜ்யத்தின் எல்லைப்புறத்தில் காத்திருந்த கங்கநாட்டுத் துர்விநீதனை அவசரமாகக் காஞ்சி மாநகரை நோக்கி முன்னேறச் செய்தது.

புலிகேசியின் மாபெரும் சைனியத்திற்குப் பின்வாங்கிக் காஞ்சிக் கோட்டைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த மகேந்திர பல்லவர் தாம் கோட்டைக்குள் புகுந்து கொள்வதற்கு முன்னால் ஒரு பெரு வெற்றியடைந்து பல்லவ வீரர்களுக்கும் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் மக்களுக்கும் உற்சாகம் ஊட்டவேண்டுமென்று தீர்மானித்தார். போருக்குத் துடிதுடித்துக் கொண்டிருந்த குமார சக்கரவர்த்தியின் ஆத்திரத்துக்கு ஒரு போக்குக காட்டவும் இந்தச் சந்தர்ப்பத்தைச் சக்கரவர்த்தி பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். எனவே, நாகநந்தி எழுதியதுபோல் துர்விநீதனுக்கு உடனே காஞ்சியை நோக்கி முன்னேறும்படி ஓலை எழுதி அனுப்பினார். அதைப் பார்த்துவிட்டே துர்விநீதன் தன் சிறிய சைனியத்துடன் காஞ்சியை நோக்கி விரைந்து வந்தான்.

குண்டோதரன் கொடுத்த ஓலையைப் படித்ததும் நாகநந்திக்கு ஏற்பட்ட அளவில்லாத வியப்பையும் நேயர்கள் கவனித்திருப்பார்கள். அவருடைய ஓலையின்படி முன்னேறி வருவதாக துர்விநீதன் அதில் எழுதியிருந்தபடியால், தாம் அத்தகைய ஓலை ஒன்றும் அனுப்பவில்லை, இதில் ஏதோ சூழ்ச்சி நடந்திருக்கிறதென்று தீர்மானித்துக் கொண்டு நாகநந்தி குண்டோதரன் கொண்டு வந்த குதிரையில் ஏறிச் சென்று புள்ளலூர்ப் போர்க்களத்தை அடைந்தார். அதற்குள்ளாக, கங்கநாட்டுச் சைனியம் தோல்வி அடைந்து சேனாவீரர்கள் சிதறி ஓட ஆரம்பித்து விட்டார்கள். அந்த நிலைமையில், துர்விநீதனுடைய உயிரைக் காப்பாற்றுவது ஒன்றுதான் தாம் செய்யக்கூடியது என்பதை உணர்ந்த நாகநந்தி, அவனைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தெற்குத் திசையை நோக்கி விரைந்து ஓடினார்.

இந்தப் புள்ளலூர் யுத்தத்தில் மாமல்லரையும் பரஞ்சோதியையுமே முழுதும் நம்பி மகேந்திர பல்லவர் விட்டுவிடவில்லை. பொறுக்கி எடுத்த ஆயிரம் குதிரை வீரர்களுடன் புள்ளலூர்ப் போர்க்களத்துக்கு வந்து சேர்ந்தார். எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத சமயத்தில் வந்து தாக்கியபடியால், கங்கர் படை பீதியடைந்து ஓடலாயிற்று. புதிதாக வந்த குதிரைப்படைத் தலைவன் வஜ்ரபாகுவை மாமல்லர் சந்தித்தபோது, அந்த வீரன்தான் தம் தந்தையென்று அறிந்தார். அதனால் அவருடைய ஆத்திரம் அதிகமாயிற்று. இந்த ஒரு போரிலாவது தம்மை முழுதும் நம்பி விட்டுவிடக் கூடாதா என்று தந்தையிடம் சண்டை பிடித்த பிறகு, சிதறி ஓடும் கங்கர் படையைத் துரத்திச் சென்று நிர்மூலமாக்க அனுமதி கேட்டார். ஒரு நிபந்தனையுடன் சக்கரவர்த்தி அதற்கு அனுமதி கொடுத்தார். அந்த நிபந்தனை என்னவென்றால், ‘தென்பெண்ணை நதி வரையில் எதிரிகளைத் துரத்திச் செல்லலாம்; நதியைக் கடந்து அப்பால் போகக் கூடாது’ என்பதுதான். எதிரிகளைத் துரத்திச் செல்லும்படி மாமல்லரைத் தென் திசைக்கு அனுப்பிவிட்டு மகேந்திரர் திரும்பி போய்விடவில்லையென்பதைச் சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். நாகநந்தியின் கொடூரச் சூழ்ச்சிகளை எதிர்ப்பதற்குக் கள்ளங்கபடமற்ற இளம் பிள்ளையான மாமல்லரையே நம்பி விட்டுவிட முடியுமா?

குண்டோதரனுக்கு எச்சரிக்கை செய்துவிட்டுக் கிளம்பிய மகேந்திர பல்லவர், இருட்டையும் புயலையும் பெரு மழையையும் பொருட்படுத்தாமல் தென்கிழக்குத் திசையை நோக்கிச் சென்றார். உதயமாவதற்கு ஒரு ஜாமம் இருக்கும் போது, தென்பெண்ணை நதிக் கரையை அடைந்தார். அப்போது மழையின் வேகம் குறைந்து வானத்தில் மேகங்கள் கலைந்து நட்சத்திரங்கள் கூடத் தெரிந்தன. அந்த இலேசான வெளிச்சத்தில் நதியும் நதிக்கரையும் அப்போது அளித்த காட்சியை வர்ணிப்பது இயலாத காரியம். நதியின் இரு கரையையும் தொட்டுக்கொண்டு ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் நொங்கும் நுரையுமாகப் பிரவாகம் போய்க் கொண்டிருந்தது. நேற்று அல்லது முந்தைய தினமாயிருந்தால் அத்தகைய பெரும் பிரவாகம் கூடச் சற்றுத் தூரத்திலிருந்த பார்வைக்கு தெரிந்திராது. அடர்ந்த தோப்புகளினால் அது மறைக்கப்பட்டிருக்கும், ஆனால் இப்போது நதிக்கரையில் நெருங்கி வளர்ந்திருந்த அவ்வளவு விருட்சங்களும் முறிந்து விழுந்து கிடந்தன!

மகேந்திரர் நதிக்கரையை நெருங்கியதும், முறிந்து விழுந்து கிடந்த மரங்களுக்கு மத்தியிலிருந்து குதிரை ஒன்று வெளியே வந்தது அதன் மேல் இருந்தவன் சத்ருக்னன். “பிரபு! இன்றிரவு நான் பட்ட கவலை என்றைக்கும் பட்டதில்லை. தங்களைத் தனியே அனுப்பிய என்னுடைய அறிவீனத்தை நினைத்து நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் புயலிலும் மழையிலும் தாங்கள் எப்படி வழி கண்டுபிடித்து வந்து சேர்ந்தீர்கள்?” என்றான் சத்ருக்னன்.

“நானும் எத்தனையோ இரவுகளைப் பார்த்திருக்கிறேன், சத்ருக்னா! ஆனால் இன்றைய இரவைப் போன்ற பயங்கரத்தைக் கண்டதில்லை. போகட்டும், நீ இங்கே காத்திருந்ததில் பயன் உண்டா?” என்று மகேந்திர பல்லவர் கேட்டார்.

“ஆம், பிரபு! இங்கேதான் அவர்கள் நதியைக் கடந்து சென்றார்கள்” என்றான் சத்ருக்னன்.

“துர்விநீதன் இருந்தானா? பார்த்தாயா?”

“வெகு சமீபத்தில் நின்று பார்த்தேன்; துர்விநீதன் யானை மீதிருந்தான். மற்றவர்கள் ஏழெட்டுப் படகுகளில் சென்றார்கள். அப்போது புயல் ஆரம்பிக்கவில்லை கிட்டத்தட்ட அவர்கள் அக்கரையை அடைந்தபோதுதான் காற்று ஆரம்பித்தது. கரை ஓரம் போய்விட்டபடியால் தட்டுத் தடுமாறிக் கரையேறிவிட்டார்கள். அப்போது நதியில் பிரவாகமும் இவ்வளவு இல்லை.

“நீ சொன்ன இடத்துக்குத்தான் அவர்கள் போயிருக்கவேண்டும். பின்னால் படகு ஒன்றும் விட்டுவிட்டுப் போகவில்லையா?”

“ஒரு படகை விட்டுப் போனார்கள் அதை நீங்களும் நானும் எடுத்துக்கொண்டு போய்ப் பிக்ஷுவைத் திண்டாடச் செய்யலாமென்று நினைத்தேன். ஆனால் புயல் நம்மையும் திண்டாட விட்டுப் படகை அடித்துக்கொண்டு போய் விட்டது!”

“நல்லதாய்ப் போயிற்று, சத்ருக்னா! துர்விநீதனைத் தொடர இப்போது அவகாசமில்லை. அதைவிட முக்கியமான வேலை இருக்கிறது. மாமல்லனும் பரஞ்சோதியும் எங்கே இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டாயல்லவா?”

“இந்த நதிக்கரையில்தான் கிழக்கே அரை காத தூரத்தில் இருக்கிறார்கள். ஆ! இந்தப் பெரும் புயலில் அவர்கள் என்ன பாடுபட்டார்களோ; தெரியவில்லை!”

“உடனே அவர்கள் இருக்குமிடம் போகவேண்டும். பொழுது விடிவதற்குள் அவர்கள் தென் பெண்ணையைக் கடந்து விட வேண்டும். உன் குதிரையின் உடம்பில் சக்தி இன்னும் இருக்கிறதா, சத்ருக்னா? என் குதிரை ரொம்பவும் தளர்ந்து விட்டது.”

“என் குதிரை இன்னும் போகும் பிரபு! இதன்மேல் ஏறிப் போங்கள், நான் இங்கேயே இருக்கிறேன்”

“இல்லை, இரண்டு பேருந்தான் போகவேண்டும்…”

“பிக்ஷு இங்கு வந்தால்…?”

“பிக்ஷு இங்கு வரமாட்டார், சத்ருக்னா! நிச்சயமாக இன்னும் சில நாளைக்கு வரமாட்டார்.”

“ஏன் பிரபு!”

“உன் சீடன் குண்டோதரன் அவரைத் தூக்கித் திருப்பாற்கடல் உடைப்பில் போட்டுவிட்டான்!”

“என்ன? என்ன?”

“அதோ அந்தச் சத்தம் உன் காதில் விழுகிறதா, சத்ருக்னா?”

“சத்ருக்னன் உற்றுக் கேட்டுவிட்டு, “ஆம் பிரபு! சமுத்திர கோஷம் மாதிரி இருக்கிறது! மறுபடியும் மழையா?” என்றான்.

“மழைச் சத்தம் அப்படியிராது திருப்பாற்கடல் உடைத்துக் கொண்டு விட்டது. நாளைப் பொழுது போவதற்குள் வராக நதியிலிருந்து தென்பெண்ணை வரையில் ஒரே பிரளயந்தான்!”

“ஐயையோ? மாமல்லர்…?” என்று அலறினான் சத்ருக்னன்.

“வா! போகலாம்! மாமல்லனையும் பரஞ்சோதியையும் எச்சரித்துக் காப்பாற்றலாம்!” என்றார் மகேந்திரர்.

“சுவாமி, குண்டோதரன்?”

“குண்டோதரன் திருப்பாற்கடல் உடைப்பை அடைக்க முயற்சி செய்தான். அது முடியாத காரியம்; ‘ஓடிப்போய் ஆயனரையும் சிவகாமியையும் காப்பாற்று’ என்று எச்சரிக்கை செய்துவிட்டு வந்தேன், என்ன செய்தானோ?”

“ஆஹா! அவர்கள் வேறு அகப்பட்டுக் கொண்டார்களா? இன்றைக்கு உண்மையிலேயே மிகப் பயங்கரமான இரவுதான்!” என்று சத்ருக்னன் கூறி குதிரையைப் போகும்படி முடுக்கினான்.

“இது பயங்கரமான இரவானாலும் ஒரு பயன் கிடைத்தது சத்ருக்னா! புலிகேசியை வெல்வதற்கு இன்னொரு ஆயுதத்தைக் கண்டுபிடித்தேன்!” என்றார் சக்கரவர்த்தி.

“பிரபு தாங்கள் உண்மையிலேயே விசித்திர சித்தர்தான்!” என்று சத்ருக்னன் வியப்புடன் கூறினான்.

இரு குதிரைகளும் நதிக்கரையோரமாகக் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றன. வழியெல்லாம் முறிந்து கிடந்த மரங்களைத் தாண்டிப் போவதில் அவர்களுக்கு எவ்வளவோ சிரமம் ஏற்பட்டது. எனினும், பொழுது புலரும் சமயத்தில் அவர்கள் பல்லவ சைனியத்தின் பாசறையை வந்தடைந்தார்கள். அல்லோல கல்லோலமாய்க் கிடந்த அந்தப் பாசறையில் நுழைந்ததும், பல்லவ வீரர்களுக்கெல்லாம் வந்திருப்பவர் மகேந்திர சக்கரவர்த்தி என்பது தெரிந்து விடவே, பலமான ஜயகோஷம் எழுந்தது. மகேந்திரர், தளபதி பரஞ்சோதியைப் பார்த்தவுடனே, அவருக்குப் பேச இடங்கொடாமல், “தளபதி! உடனே புறப்பட வேண்டும். இன்னும் ஒரு நாழிகைக்குள் தென் பெண்ணையைக் கடந்து அக்கரை போகவேண்டும். நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தட்டும், நீந்தத் தெரியாதவர்கள் மரம் மட்டை எதையாவது பிடித்துக்கொள்ளட்டும்! குதிரைகள், யானைகள் எல்லாவற்றையும் ஆற்றில் அடித்து விடுங்கள் ஆயுதங்கள், சாமக்ரியைகள் எது போனாலும் போகட்டும்; மனிதர்கள் பிழைத்தால் போதும்!” என்றார்.

இந்த விசித்திரமான கட்டளையைக் கேட்டுத் திகைத்து நின்ற பரஞ்சோதியைப் பார்த்து, “ஓஹோ! காரணம் தெரியவேண்டுமா? திருப்பாற்கடல் உடைத்துக்கொண்டு விட்டது! அதோ வினாடிக்கு வினாடி அதிகமாகும் கோஷத்தைக் கேளும்; இன்னும் ஒரு ஜாமத்திற்குள்ளே வெள்ளம் இங்கே வந்துவிடும்!” என்றார்.

பரஞ்சோதியின் முகத்தில் அப்போது சொல்ல முடியாத பீதி தோன்றியது. “பிரபு…பிரபு!..” என்று மேலே பேச முடியாமல் அவர் தயங்கி நிற்பதைக் கண்டு, “என்ன விசேஷம், தளபதி! மாமல்லன் எங்கே?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“நேற்று இருட்டிய பிறகு அசோகபுரத்துக்குப் புறப்பட்டுப் போனார் பிரபு! அங்கே…அங்கே…” என்று மேலும் சொல்வதற்குப் பரஞ்சோதி தயங்கினார்.

“தெரிந்து கொண்டேன், தளபதி! அசோகபுரத்திலே ஆயனர் இருக்கிறார்; அந்தச் சிற்ப சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்காகக் குமார சக்கரவர்த்தி புறப்பட்டுப் போனார்! நல்லது. மாமல்லனைக் காப்பாற்றும் பொறுப்பு இனி நமக்கு இல்லை; அது ஏகாம்பரநாதனுடைய பொறுப்பு! இங்குள்ள மற்றப் போர் வீரர்களை நாம் காப்பாற்ற முயல்வோம்!” என்றார் மகேந்திரர். மாமல்லரைப் பற்றிய அநாவசியமான கவலை நமது வாசகர்களையும் பீடிக்காமலிருக்கும், பொருட்டு அச்சமயம் அவர் எங்கே இருந்தார் என்பதைச் சொல்லிவிட விரும்புகிறோம்.

கிழக்கு வெளுத்துப் பொழுது புலரத் தொடங்கியிருந்த அந்த நேரத்தில் அசோகபுரத்துப் புத்த விஹாரத்தின் அருகில், மாமல்லர் ஏறியிருந்த குதிரையானது பெருகிவந்த எதிர் வெள்ளத்திலே நீந்தித் திணறிக் கொண்டிருந்தது. விஹாரத்தின் மேல் தளத்திலே ஆயனரும் சிவகாமியும் சிவகாமியின் அத்தையும் நின்று ஆவலுடனும் கவலையுடனும் அவருடைய வருகையை நோக்கிக் கொண்டிருந்தனர். ரதியும் சுகப் பிரம்ம ரிஷியுங்கூட அங்கே காணப்பட்டனர். அதே சமயத்தில் நீர் சூழ்ந்த புத்த விஹாரத்தின் ஓரமாகப் பானைத் தெப்பத்தில் குண்டோதரன் வந்து கொண்டிருந்தான். வீதியிலும் மற்றும் சுற்றுப்புறமெங்கும் வெள்ளம் சுழித்துக் கொம்மாளமிட்டு அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்ததுடன் கணத்துக்குக் கணம் பெருகிக் கொண்டுமிருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 26
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 28

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here