Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 28

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 28

61
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 28 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 28 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 28: சுகரிஷியின் வரவேற்பு

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 28

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 28: சுகரிஷியின் வரவேற்பு

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 28

அதிசயமான பயங்கர சம்பவங்கள் நிகழ்ந்த அன்றிரவில், அசோகபுரத்துப் பாழடைந்த புத்த விஹாரத்தில் என்ன நடந்தது என்று இப்போது பார்ப்போம். அந்த விஹாரத்தில் தன்னந்தனியாக வசித்து வந்த வயோதிக பிக்ஷு இருண்ட சைத்யத்தில் நாகநந்தியுடன் பேசி விட்டுத் திரும்பி வந்தவுடனேயே, ஆயனரிடம் அங்கிருந்து உடனே புறப்பட்டுச் செல்வது நலம் என்று பிரஸ்தாபித்தார். சிவகாமியை அழைத்து ஆயனர் கேட்டபோது, சிவகாமி ஒரே பிடிவாதமாக அங்கிருந்து கிளம்ப முடியாதென்று சொல்லி விட்டாள். அங்கே சண்டை நடக்கலாமென்று பிக்ஷு சொன்னது அங்கே இருப்பதற்கு அவளுடைய ஆவலை அதிகமாக்கிற்று. அப்படி நடக்கும் சண்டையைக் கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற விசித்திரமான ஆசை அவள் உள்ளத்தில் உதித்தது. அந்த ஆசையின் மூலகாரணம் மாமல்லர் போர்க்களத்திலே நிகழ்த்தும் வீரச் செயல்களைப் பார்க்கவேண்டுமென்பதுதான். அவளுடைய கற்பனைக் கண்ணின் முன்னால் போர்க்களக் காட்சிகள் தென்படலாயின. நாலாபுறமும் சூழ்ந்துவரும் எதிரிகளுக்கு மத்தியில் மாமல்லர் தன்னந்தனியாக நின்று வாளைச் சுழற்றி எதிரிகளின் தலைகளை வெட்டி வீழ்த்துவதுபோல் அவள் கற்பனை செய்து கொள்வாள். மறுகணம் அந்தக் கற்பனைக் காட்சியின் கோரத்தைக் காணச் சகியாமல், மனத்தை விட்டு அக்காட்சியை அகற்றி விட முயல்வாள்.

இரவு ஒரு ஜாமம் ஆனபிறகு மறுபடியும் அந்த வயோதிக பிக்ஷு ஓடிவந்து, “அபாயம், அபாயம்! உடனே கிளம்புங்கள்! இல்லாவிட்டால், தப்பிப் பிழைக்க முடியாது!” என்று உரத்த குரலில் பரபரப்புடன் கூறினார்.

“அடிகளே! இன்னும் என்ன புது அபாயம் நமக்கு வரப்போகிறது?” என்று ஆயனர் அவநம்பிக்கையுடன் கேட்டார்.

“இங்கே யுத்தம் நடக்கலாமென்று நான் முன்னே சொன்னது. உண்மையைச் சொன்னால் ஒருவேளை நீங்கள் நம்பமாட்டீர்கள் என்றுதான். திருப்பாற்கடல் ஏரி உடைத்துக் கொள்ளும் போலிருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அதனால் தான் போய்விடலாமென்று யோசனை சொன்னேன் இப்போது உண்மையாகவே ஏரி உடைத்துக்கொண்டு விட்டது உடனே கிளம்புங்கள்!” என்றார்.

“சுவாமி! ஏரி உடைத்துக்கொண்டால் என்ன? அதற்காக நாம் ஏன் ஓடவேண்டும்!” என்று சிவகாமி சாவதானமாகக் கேட்டாள்.

“திருப்பாற்கடல் ஏரியை நீ பார்த்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டாய்! நாளைப் பொழுது விடிவதற்குள் இங்கேயெல்லாம் ஒரே வெள்ளமாயிருக்கும்!” என்றார் பிக்ஷு.

சிவகாமி ஆயனர் பக்கம் திரும்பி, “அப்பா! நான் வெள்ளமே பார்த்ததில்லை. நாம் இங்கேயே இருந்து வேடிக்கை பார்க்கலாம் பிக்ஷு வேணுமானால் போகட்டும்!” என்றாள்.

“பெண்ணே! அறியாமையால் பிதற்றுகிறாய்! வெள்ளம் வந்தால் வேடிக்கையாயிராது! பனை மர உயரம் பிரம்மாண்டமாக வரும். இந்த விஹாரம், சைத்தியம் எல்லாம் மூழ்கிப் போய்விடும் அப்புறம் என்ன வேடிக்கையைப் பார்க்கிறது?”

“சுவாமி! அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்லுகிறீர்களே தங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று ஆயனர் கேட்டார்.

“பத்து வருஷத்துக்கு முன்னால் இப்படித்தான் ஒரு தடவை திருப்பாற்கடல் ஏரி உடைப்பு எடுத்துக் கொண்டது, அப்போது நானே பார்த்திருக்கிறேன். இந்தப் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் செத்துப் போனார்கள். மீதியிருந்தவர்கள் இங்கே குடியிருப்பது அபாயம் என்று வேறு மேட்டுப்பாங்கான இடங்களுக்குக் குடிபோய் விட்டார்கள். அந்த வெள்ளத்திற்குப் பிறகுதான் இந்த அசோகபுரம் இப்படிப் பாழடைந்து கிடக்கிறது!”

இதையெல்லாம் கேட்டபோது ஆயனருக்கும் சிவகாமிக்கும் மனக்கலக்கம் உண்டாயிற்று. ஆயினும், இரவில் கிளம்ப அவர்கள் மனம் இசையவில்லை. அதோடு, அப்போது பெருங்காற்றும் மழையும் ஆரம்பித்திருந்தன. சிவகாமி திடீரென்று நினைத்துக்கொண்டு, “அப்பா! குண்டோதரன் சாயங்காலம் வந்தான்; மறுபடியும் மாயமாய் மறைந்து விட்டானே? இந்தக் காற்றிலும் மழையிலும் எங்கே அகப்பட்டுக் கொண்டானோ, தெரியவில்லையே?” என்று கவலையுடன் கூறினாள்.

“அவனுடைய நடவடிக்கையே இப்போது விசித்திரமாய்த்தானிருக்கிறது!” என்றார் ஆயனர்.

“அதோ கேளுங்கள் சத்தத்தை!” என்றார் பிக்ஷு. ஆம்; அதுவரையில் கேளாத ஒரு புதுவிதமான சத்தம் அப்போது இலேசாகக் கேட்டது. ஆயனருக்கும் சிவகாமிக்கும் மனக் கலக்கம் அதிகமாயிற்று, சிவகாமி, “அது என்ன சத்தம்?” என்றாள்.

“ஏரி உடைத்துக் கொண்டுவிட்டது நாளைப் பொழுது விடிவதற்குள் இங்கே ஒரே வெள்ளமாயிருக்கும்!” என்றார் பிக்ஷு.

“தெருவெல்லாம் தண்ணீர் ஓடுமோ? இந்த விஹாரத்துக்குள்ளே கூட ஜலம் வந்து விடுமோ?” என்றாள் சிவகாமி.

“விஹாரத்துக்குள்ளே மட்டுமில்லை; விஹாரத்துக்கு மேலேயுங்கூட வந்துவிடும்!” என்றார் பிக்ஷு.

“சுவாமி! இப்போது என்ன யோசனை சொல்கிறீர்கள்?” என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.

“இப்போது நான் என்ன யோசனையைச் சொல்வது? சாயங்காலமே போய் விடலாமென்று சொன்னேன்; நீங்கள் கேட்கவில்லை. பக்கத்திலுள்ள கிராமத்துக்குப் போய் ஒரு பானைத் தெப்பம் கொண்டு வருகிறேன். அதுவரையில் நீங்கள் இங்கேயே இருங்கள். இன்றிரவு நாம் தப்பிப் பிழைத்தால், புத்த பகவானுடைய கருணைதான். ஆஹா! நாகநந்தியடிகள் எப்பேர்ப்பட்ட பொறுப்பை என்னிடம் ஒப்புவித்து விட்டுப் போய் விட்டார்?” இவ்விதம் கூறிவிட்டு அந்த வயோதிக புத்த பிக்ஷு நள்ளிரவில் புயலிலும் மழையிலும் விஹாரத்திலிருந்து வெளியில் சென்றார்.

புத்த பிக்ஷு வெளியில் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் அவர் கூறியபடியே உடைப்பு வெள்ளம் அசோகபுரத்தை அடைந்துவிட்டது. முதலில் கொஞ்சமாகத்தான் வந்தது அப்புறம் மளமளவென்று பெருக ஆரம்பித்து விட்டது. விஹாரத்துக் கதவுகளின் இடுக்கு வழியாகத் தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியது. சிறிது நேரத்துக்கெல்லாம் கதவுகளைப் பிளந்து தள்ளிவிட்டு உள்ளே குபுகுபுவென்று பாய ஆரம்பித்தது.

வெள்ளம் பெருகத் தொடங்கியதும் ஆயனர் முதலியோர் முதலில் விஹாரத்தின் வெளிவாசல் திண்ணையில் வந்து நின்றார்கள். ஆனால் மழை, புயல், மின்னல் அசாத்தியமாயிருந்தபடியால் அங்கே நிற்க முடியவில்லை. பிறகு உள்ளே சென்றார்கள்; உள்ளே தண்ணீர் புகுந்ததும் மேடைகளில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். மேடைகளிலும் தண்ணீர் வந்ததும், மேல் தளத்துக்குப் போகும் மச்சுப் படிகளில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். அப்படியும் அவர்களை விடாமல் தண்ணீர் மேலே மேலே வந்து கொண்டிருந்தது.

“அப்பா! என் அசட்டுத்தனத்தினால் உங்களை இந்த கதிக்கு ஆளாக்கினேன்!” என்று சிவகாமி ஆயனரின் கழுத்தைக் கட்டிக் கொண்டு புலம்பினாள். “ஐயோ! இந்த மானையும் கிளியையும் எதற்காக அழைத்து வந்தேன்?” என்று வருந்தி, அவற்றை அன்புடன் தடவிக் கொடுத்தாள். மானும் கிளியும் ஏதோ பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்பதை உணர்ந்து சிவகாமியின் அருகில் வந்து ஒட்டிக் கொண்டு நின்றன. “குழந்தாய்! நீ என்ன செய்வாய்? இப்படி நாம் கூண்டோடு கைலாசம் போகவேண்டுமென்று விதி இருக்கும் போது எப்படித் தடுக்க முடியும்? அந்த நாகநந்தியின் பேச்சைக் கேட்டு இப்படியாயிற்று!” என்று ஆயனர் கூறிச் சிவகாமியின் முதுகில் அருமையுடன் தட்டிக்கொடுத்தார்.

“நாகநந்தியின் மேல் ஒரு தவறுமில்லை; எல்லாம் மாமல்லரால் வந்தது, அப்பா!” என்றாள் சிவகாமி.

சிவகாமியின் உள்ளம் அன்றிரவு அடிக்கடி மாமல்லர்பால் சென்று கொண்டிருந்தது. வாசலில் நின்று தன்னைப் பார்த்தவர், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் போய்விட்டதை நினைத்து அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவர் நின்று பேசித் தங்களையும் கூட அழைத்துப் போயிருந்தால் இப்படி நேர்ந்திராதல்லவா? எனவே இந்த வெள்ளத்தில் நாம் செத்துப் போவதே நல்லது. நம்மை இங்கே பார்த்துவிட்டுச் சென்ற மாமல்லருக்கு, ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் நாம் இங்கேயே வெள்ளத்தில் முழுகிச் செத்துப்போனது தெரியாமல் போகாது. அப்புறம், அவர் வாழ்நாளெல்லாம் இதை நினைத்து நினைத்துத் துக்கப்படுவாரல்லவா? சற்று நின்று சிவகாமியுடன் பேசாமல் வந்து விட்டோமே என்று வருத்தப்படுவாரல்லவா? படட்டும்! படட்டும்! அவ்வளவு கல் நெஞ்சமுடைய மனிதருக்கு இதுவும் வேண்டும்; இன்னமும் வேண்டும்! அப்படி அவரை வருத்தப்படுத்துவதற்காகவே நாம் இங்கே வெள்ளத்தில் செத்துப் போவது நல்லதுதான். ஆனால், பாவம்! – அப்பாவும் அத்தையும் ரதியும் சுகரும் ஏன் இந்தக் கதிக்கு உள்ளாக வேண்டும்? பகவானே! திடீரென்று ஏதாவது ஒரு அற்புதம் நேரக்கூடாதா? தன்னைத் தவிர மற்றவர்கள் உயிர் பிழைக்கக் கூடாதா? நான் மட்டும் சாகக்கூடாதா? தன்னுடைய துரதிர்ஷ்டம், தலைவிதி, அவர்களையும் ஏன் பற்றவேண்டும்?

இப்படிப்பட்ட எண்ணங்களில் எவ்வளவு நேரம் போயிருக்கும் என்று தெரியாது. புயலும் மழையும் கொஞ்சம் ஓய்ந்திருப்பது போலத் தோன்றியது. மச்சுக்குப் போய்ப் பார்க்கலாம் என்று நினைத்து எல்லாரும் மேலே போனார்கள். உண்மையாகவே, புயல் ஓய்ந்து, மழையும் விட்டிருந்தது. சிறு தூறல்தான் தூறியது கீழ்த்திசையில் பரவியிருந்த மங்கலான வெளிச்சம் விரைவில் உதயமாகப் போகிறதென்பதைக் காட்டியது. அந்த உதய நேரத்து ஒளியில் ஆயனர் முதலியோர் சுற்று முற்றும் பார்த்தபோது அவர்கள் என்றும் பாரா அதிசயமான காட்சி தெரிந்தது. எங்கெங்கும் ஒரே தண்ணீர்ப் பிரவாகமாயிருந்தது. சற்றுத் தூரத்திலிருந்த கிராமத்துக் குடிசை வீடுகளின் கூரையைத் தொட்டுக்கொண்டு வெள்ளம் ஓடிற்று. வீட்டுக் கூரைகளும், வைக்கோல் போர்களும், பெரிய பெரிய விருட்சங்களும் அந்தப் பெரு வெள்ளத்தில் மிதந்து சென்றன.

சிவகாமியின் உள்ளத்தின் அந்தரங்கத்தில், ‘ஒருவேளை எங்கிருந்தாவது எப்படியாவது மாமல்லர் நம்மைக் காப்பாற்றுவதற்காக வரக்கூடாதா?” என்ற எண்ணம் தோன்றியது. “வீணாசை!” என்று அவளே தன்னைத்தான் திருத்திக்கொள்ள முயன்றாள். ஆனால், இதென்ன விந்தை! – கனவு காண்கிறோமா? சித்தப் பிரமையா? – அல்லது உண்மைதானா? – நடக்காத காரியம் நடக்கிறதே? – கைகூடாத ஆசை கைகூடுகிறதே? அதோ வெள்ளத்தில் நீந்திக் கொண்டு வரும் குதிரைமேல் இருப்பவர் மாமல்லர்தானே?… கண்களே! சரியாகப் பாருங்கள்! நெஞ்சே! கொஞ்சம் நிதானித்துக்கொள்! ஆம், ஆம்; அவர்தான் சந்தேகமில்லை! நடராஜப் பெருமானே, பராசக்தித் தாயே! அருள் புரியுங்கள்! மீதியுள்ள தூரத்தை அவர் அபாயமில்லாமல் கடந்து வந்து சேர வேண்டுமே? அப்பா! அப்பா யார் வருகிறார் என்று பார்த்தீர்களா? அத்தை! நீ பார்த்தயா? – ரதி! உனக்குக் கண் தெரிகிறதா? சுகப்பிரம்ம ரிஷியே! உமக்கு வாய் அடைத்துப் போய் விட்டதா, என்ன?..

உண்மையில் சுகப்பிரம்ம ரிஷிக்கு வாய் அடைத்துப் போகவில்லை. இரண்டு மூன்று தடவை தலையை இந்தப்புறமும் அந்தப்புறமும் வளைத்துப் பார்த்துவிட்டுச் சுகப்பிரம்மரிஷி “மாமல்லா!” என்று கூவி வரவேற்புக் கூறினார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 27
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 29

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here