Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 29

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 29

85
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 29 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 29 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 29: பானைத் தெப்பம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 29

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 29: பானைத் தெப்பம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 29

சுகரிஷியின் வரவேற்புக் குரலைக் கேட்டதும் மாமல்லரின் முகத்தில் புன்கையின் சாயல் தோன்றியது. சிவகாமி கிளியை அடிப்பதற்காகக் கையை ஓங்க, கிளி அவளுடைய அடிக்குத் தப்பி இறகுகளைச் சட சடவென்று அடித்துக் கொண்டு ஒரு வட்டமிட்டு வந்து சிவகாமியின் தோள்களில் உட்கார்ந்த காட்சி, அவருடைய முக மலர்ச்சியை அதிகமாக்கியது. அச்சமயம் விஹாரத்தின் ஓரமாகப் பானைத் தெப்பத்தில் வந்து கொண்டிருந்த குண்டோதரனை மாமல்லர் பார்த்தார். கையில் சமிக்ஞையினால் “நில்லு!” என்று ஆக்ஞையிட்டார்.

அதே நேரத்தில் மேலேயிருந்து குனிந்து பார்த்த சிவகாமி, “அப்பா! இதோ குண்டோதரனும் வந்து விட்டானே! பானைத் தெப்பம் கொண்டு வருகிறான்!” என்று கூறிக் கையைக் கொட்டி மகிழ்ந்தாள். இரவெல்லாம் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்த கவலையும் பீதியும் மறைந்து இப்போது ஏதோ பெரிய வேடிக்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற குதூகலம் காணப்பட்டது. தெப்பம் விஹாரத்தின் தூண்களின் மீது இடிக்காதபடி குண்டோதரன் அதைச் சாமர்த்தியமாகத் திருப்பி விட்டுக் கொண்டு மாமல்லரின் குதிரையண்டை வந்தான். “பிரபு! படகுக்கு வந்து விடுங்கள்!” என்றான்.

“யார் அப்பா நீ! எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே!” என்று மாமல்லர் கேட்டார்.

“சத்ருக்னனுடைய ஆள், சுவாமி!” என்று கூறிக் குண்டோதரன் தலைப்பில் முடிந்து வைத்திருந்த இலச்சினையைக் காட்டினான்.

“இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?”

“என்னுடைய எஜமானர் உத்தரவின் பேரில் எட்டு மாதமாக இவர்களுடன் இருக்கிறேன், பிரபு!” என்றான் குண்டோதரன்.

“தெப்பம் எப்படி கிடைத்தது?”

“ஒரு வயோதிக புத்த பிக்ஷு தள்ளிக்கொண்டு வந்தார். அவரை வெள்ளத்தில் நான் தள்ளிவிட்டு இதைக் கொண்டு வந்தேன்!”

“பிக்ஷுவையா வெள்ளத்திலே தள்ளினாய்? அட, பாவி! ஏன் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தாய்?”

“தெப்பத்தில் அவருக்கு இடம் காணாதென்று தான்! தங்களையும் சேர்த்துக் கணக்குப் பண்ணிப் பிக்ஷுவுக்கு இடம் காணாதென்று பிடித்துத் தள்ளினேன்!”

“நான் வருவேனென்று எப்படித் தெரியும்?”

“அதுகூடத் தெரியாவிட்டால் மஹேந்திர பல்லவரின் ஒற்றர் படையிலே இருக்க முடியுமா, பிரபு?

மாமல்லர் குதிரையின் முதுகிலிருந்து தாவி, பானைத் தெப்பத்தில் வெகு லாகவமாக ஏறிக்கொண்டார். பிறகு குதிரையின் முகத்தை இரண்டு தடவை தடவிக் கொடுத்து அருமை ததும்பிய குரலில், “தனஞ்செயா! எங்கேயாவது ஓடித் தப்பிப் பிழைக்கப் பார் கடவுள் உன்னைக் காப்பாற்றுவார்!” என்று கூறினார். உடனே, தனஞ்செயன் என்னும் அந்தக் குதிரை, வெள்ளத்தில் வேகமாக நீந்திக் கொண்டு, மரங்கள் இரு வரிசையாகத் தண்ணீருக்கு மேலே தலை நீட்டிக் கொண்டிருந்த சாலையை நோக்கிச் சென்றது.

குண்டோதரனும் மாமல்லரும் பானைத் தெப்பத்தைப் பத்திரமாகச் செலுத்திக் கொண்டு விஹாரத்தண்டை சென்றார்கள். மேல் மச்சில் இருந்தவர்களைத் தெப்பத்தில் இறக்குவதற்கு வெகு பிரயாசையாகப் போய்விட்டது. முக்கியமாக, சிவகாமிதான் அதிகத் தொந்தரவு கொடுத்தாள். சற்று முன்னால் வெள்ளத்திலே சாவதற்குத் துணிந்திருந்தவளுக்கு இப்போது உயிரின் மேலே அளவில்லாத ஆசையும் வெள்ளத்தைக் கண்டு பெரும் பயமும் உண்டாகி இருந்தன. யார் முதலில் தெப்பத்தில் இறங்குவது என்பதிலேயே தகராறு ஏற்பட்டது. ரதியை முதலில் இறக்கப் பார்த்தார்கள் அது ஒரே பிடிவாதம் பிடித்து இறங்குவதற்கு மறுத்தது.

ஆயனர் ரொம்பவும் வற்புறுத்திச் சொன்னதின் பேரில் சிவகாமி இறங்கச் சம்மதித்தாள். மேலேயிருந்து ஆயனரும் அத்தையும் பிடித்து இறக்க கீழே தெப்பத்திலிருந்து மாமல்லர் கைகளினால் அவளைத் தாங்கி இறக்கிவிட்டார். இறங்கியதும் தெப்பம் ஆடியபோது, சிவகாமி ரொம்பவும் பயந்து அலறினாள். மாமல்லர் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உட்காரவைத்துத் தைரியம் சொன்னார். பிறகு, அத்தையும் ஆயனரும் இறங்கியபோது தெப்பம் ஆடியதனாலும் சிவகாமிக்குப் பயம் ஏற்பட்டது. சுகர், மேலே வட்டமிட்டுக் கொண்டே இருந்தவர் எல்லோரும் தெப்பத்தில் இறங்கியதும், தாமும் வந்து ஒரு மூலையில் உட்கார்ந்து அண்ணாந்து பார்த்து, “ரதி! ரதி!” என்று கூவினார். அப்போது தெப்பம் கொஞ்சம் நகரவே, “ஐயோ! ரதியை விட்டு விட்டுப் போகிறோமே” என்று சிவகாமியும் சேர்ந்து அலறினாள்.

ரதி மேலேயிருந்து ஒரே தாவாகத் தாவித் தெப்பத்தில் குதித்தது. அதனுடைய முன்னங்கால் ஒன்று தெப்பத்துக்கு அப்பால் தண்ணீருக்குள் இறங்கிவிடவே, மறுபடியும் சிவகாமி, “ஐயையோ” என்று கூச்சலிட்டாள். எல்லோரும் உட்கார்ந்து எல்லாம் ஒழுங்கான பிறகு, குண்டோதரன், “பிரபு! சற்றே படகை நிறுத்தி வையுங்கள். இதோ வந்து விடுகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தெப்பத்திலிருந்து குதித்து நீந்திக் கொண்டு, விஹாரத்துக்குள்ளே போனான். குண்டோதரனுக்கு ஆபத்து வந்துவிடப்போகிறதே என்ற கவலை சிவகாமியைப் பிடித்தது. அவன் திரும்பி வருவதற்குள், நேரமாக ஆக அவளுடைய ஆர்ப்பாட்டமும் அதிகமாயிற்று.

கடைசியாகக் குண்டோதரன் மேல் மச்சின் வழியாக எட்டிப் பார்த்து, “இதோ வந்துவிட்டேன்!” என்றான். அவன் கையிலே ஒரு மூட்டை இருந்தது. மூட்டையை முதலில் கொடுத்துவிட்டுக் குண்டோதரனும் தெப்பத்தில் இறங்கியதும், “மூட்டையில் என்ன?” என்று ஆயனர் கேட்டார். அத்தை மூட்டையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “அவல்!” என்று தெரிவித்தாள். “இந்த ஆபத்தான சமயத்தில்கூடக் குண்டோதரன் வயிற்றுப் பாட்டை மறக்கவில்லை!” என்று சொல்லிச் சிவகாமி சிரித்தாள்.

“உங்களுக்குத்தான் என் விஷயம் தெரியுமே, அம்மா! நான் எது பொறுத்தாலும் பொறுப்பேன்; பசி மட்டும் பொறுக்க மாட்டேன்!” என்றான் குண்டோதரன்.

“நல்ல முன் யோசனைக்காரன்!” என்றார் மாமல்லர்.

“சமயசஞ்சீவி என்றால் நம் குண்டோதரன்தான்! பிக்ஷு அவல் வைத்திருந்தது உனக்கு எப்படி அப்பா தெரிந்தது?” இப்படிக் குண்டோதரனை எல்லோரும் பாராட்டிய பிறகு, தெப்பத்தில் ஒரு முனையில் குண்டோதரனும், இன்னொரு முனையில் மாமல்லருமாக உட்கார்ந்து தெப்பத்தைச் செலுத்தினார்கள். விரைவாக ஓடிய வெள்ளத்தில் பானைத் தெப்பம் இலகுவாக மிதந்து சென்றது. ஆனால் வழியில் தென்பட்ட மரங்களில் மோதாமலும் வெள்ளத்திலே வந்த கட்டைகள் தாக்காமலும் தெப்பத்தை மிக ஜாக்கிரதையாக விட வேண்டியிருந்தது.

வானத்தில் மேகங்கள் இன்னும் குமுறிக் கொண்டிருந்தன. காற்றின் வேகம் குறைந்து போயிருந்ததென்றாலும், இலேசாக அடித்த காற்று உடம்பில் சில்லென்று பட்டது. அவ்வப்போது நீர்த் துளிகள் கிளம்பிச் சுரீரென்று மேலே விழுந்தன. சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமியின் பயம் பறந்து விட்டது. குதூகலமாய்ச் சிரிக்கவும் விளையாடவும் ஆரம்பித்து விட்டாள். “இப்படியே தெப்பத்தில் எத்தனை நாள் போய்க் கொண்டிருப்போம்?” என்று அவள் மாமல்லரைப் பார்த்துக் கேட்டாள்.

“ஏன்! கஷ்டமாயிருக்கிறதா?” என்றார் மாமல்லர்.

“இல்லை, இல்லை, இந்தத் தெப்போத்ஸவம் முடிந்து விடப் போகிறதே என்றுதான் கவலையாக இருக்கிறது” என்றாள் சிவகாமி.

“முடியக் கூடாதா?”

“ஆமாம்; இப்படியே முடிவில்லாமல் என்றென்றைக்கும் வெள்ளத்தில் மிதந்து போய்க் கொண்டிருந்தால் என்ன?”

“ஒருவேளை நீ நினைத்தபடி நடந்தாலும் நடக்கலாம். இந்த வெள்ளம் நேரே சமுத்திரத்தில் போய்த்தான் சேரும் தெப்பமும் சமுத்திரத்துக்குப் போய்விட்டால்…”

“முடிவேயில்லாமல் மிதந்து கொண்டிருக்கலாமல்லவா?… ஒன்று மட்டும் சந்தேகமாயிருக்கிறது.

“என்ன சந்தேகம், சிவகாமி?”

“இதெல்லாம் கனவா, உண்மையா என்றுதான்”.

“கனவு என்பதாக ஏன் உனக்குத் தோன்றுகிறது?”

“இம்மாதிரி தெப்பத்தில் ஏறி முடிவில்லாத வெள்ளத்தில் மிதந்து செல்வதாக அடிக்கடி நான் கனவு காண்பதுண்டு அதனாலேதான் இதுவும் ஒருவேளை கனவோ என்று சந்தேகப்படுகிறேன்.”

“இந்த மாதிரி சம்பவம் ஒரு நாள் நேரிடக்கூடும் என்று நான் எப்போதும் எண்ணியது கிடையாது. ஆகையால் எனக்கு இது கனவோ என்று சந்தேகமாயிருக்கிறது.”

“ஆனால் என்னுடைய கனவிற்கும் இப்போது நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கனவில் நான் காணும் படகிலே நானும் இன்னும் ஒரே ஒருவருந்தான் இருப்போம், இந்தப் படகிலே பலர் இருக்கிறோம்!”

“அந்த ஒருவர் யார்?”

“சொல்ல மாட்டேன்?”

பொழுது சாயும் சமயத்தில், கொஞ்ச தூரத்தில் பூமியும், பாறைகளும் மரங்களும் அடங்கிய காட்சி காணப்பட்டது. எப்போதும் முடிவில்லாமல் தெப்பத்தில் போய்க் கொண்டிருக்க ஆசைப்பட்ட சிவகாமிக்குக்கூட அந்தக் காட்சி ஆனந்தத்தை அளித்தது. ஒவ்வொருவரும் தத்தம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பலவிதமாகத் தெரிவித்தார்கள். குண்டோதரனுடைய முகத்தில் மட்டும் மலர்ச்சி காணப்படவில்லை.

“குண்டோதரா! இது என்ன இடம் தெரியுமா? இங்கே நாம் இறங்க வேண்டியதுதானே?” என்றார் மாமல்லர்.

“ஆம், பிரபு! இறங்கவேண்டியதுதான் ஆனால் தீவின் ஓரமாக வெள்ளத்தின் வேகம் கடுமை என்று தோன்றுகிறது. பாறைகள் வேறே இருக்கின்றன!” என்றான் குண்டோதரன்.

தெப்பத்தை அவர்கள் அத்தீவை நோக்கிச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தானாகவே வெள்ளத்தின் இழுப்பில் அகப்பட்டுத் தெப்பம் தீவை நோக்கிச் சென்றது. தீவை நெருங்க நெருங்க அதன் வேகம் அதிகமாயிற்று. கரையோரமாக நின்ற சிறு சிறு பாறைகள் தெப்பத்திலிருந்தவர்களின் கண்களுக்குப் பிரம்மாண்ட மலைகளாகத் தோன்றின. பாறைகளின் மீது மோதாமல் தெப்பத்தைத் தீவின் ஓரமாய்ச் செலுத்துவதற்குக் குண்டோதரனும் மாமல்லரும் தங்களாலான மட்டும் முயற்சி செய்தார்கள். ஆனால் தெப்பம் நேரே பாறையில் மோதுவதற்கே போவதுபோல் அதிவேகமாகப் போயிற்று. தெப்பத்திலிருந்தவர்கள் ‘செத்தோம்’ என்று தீர்மானித்தார்கள். சுகப்பிரம்மரிஷி அலறிக்கொண்டு பறந்து போய்ப் பாறையில் உட்கார்ந்து கவலையுடன் பார்த்தார். தெப்பம் பாறையில் மோதிற்று; பானைகள் சடசடவென்று உடைபட்டன. மூங்கில்கள் நறநறவென்று முறிந்தன. தெப்பம் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுத் தபதபவென்று தண்ணீரில் மூழ்கிற்று.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 28
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here