Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 31

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 31

60
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 31 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 31 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 31: மகிழ மரத்தடியில்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 31

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 31: மகிழ மரத்தடியில்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 31

விரைந்து சென்ற வெள்ளத்தின் இரைச்சலைத் தவிர வேறு சத்தம் எதுவும் சற்று நேரத்துக்கு அங்கு இல்லாமலிருந்தது. மாமல்லர் கண் கொட்டாமல் சிவகாமியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். சிவகாமி சிறிது நேரம் தரையைப் பார்ப்பாள்; சிறிது நேரம் வெள்ளத்தையும் வானத்தையும் பார்ப்பாள். இடையிடையே மாமல்லரின் முகத் தாமரையிலும் அவளுடைய இரு விழிகளாகிய கருவண்டுகள் ஒரு கணம் மொய்த்து விட்டு விரைவாக அவ்விடமிருந்து அகன்று சென்றன.

புயலுக்கு முன்னால் ஏற்படும் அசாதாரண அமைதியைப் போன்ற இந்த மௌனத்தைக் கண்டு சுகரிஷியும்கூட வாய் திறவாமல் சிவகாமியின் முகத்தையும் மாமல்லரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். கடைசியில் பொறுமை இழந்தவராய், “இந்த வாய் மூடி மௌனிகளுடன் நமக்கு என்ன சகவாசம்!” என்று சொல்கிறதைப் போல், இறகுகளைச் சட சடவென்று அடித்துக்கொண்டு, அங்கிருந்து பறந்து சென்றார். கிளி அங்கிருந்து அகன்றதும் மாமல்லரும் மௌனத்தைக் கலைக்க விரும்பியவராய், “சிவகாமி! என்ன சிந்தனை செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

சிவகாமி மாமல்லரின் முகத்தை ஏறிட்டு நோக்கி, “சற்று முன்னால் தண்ணீரில் மூழ்கினேனே, அப்படியே திரும்பிக் கரை ஏறாமல் வெள்ளத்தோடு போயிருக்கக்கூடாதா – என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றாள்.

“அப்படியானால் நான் உன்னைத் தேடிக்கொண்டு வந்ததெல்லாம் பிசகு என்று ஏற்படுகிறது. ஆனால், இப்போது கூட ஒன்றும் மோசம் போய்விடவில்லையே? பெரு வெள்ளம் இங்கேயிருந்து வெகு சமீபத்தில்தானே ஓடுகிறது!” என்றார் மாமல்லர்.

“உண்மைதான்! வெள்ளம் வெகு சமீபத்தில் ஓடுகிறது! ஆனால் தானாக வெள்ளத்தில் வீழ்ந்து சாவதற்கு மனம் வருகிறதா? அதுவும் நீங்கள் அருகில் இருக்கையில்” என்று சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பிற்று.

“இது என்ன! ஏதாவது சந்தோஷமாய்ப் பேசலாம் என்று பார்த்தால் நீ இப்படி ஆரம்பித்துவிட்டாயே!” என்றார் மாமல்லர்.

“பிரபு! இன்றைய தினத்தைப் போல் நான் என்றைக்கும் ஆனந்தமாயிருந்தது கிடையாது. அதனாலேதான் இன்றைக்கே என் வாழ்நாளும் முடிந்திருக்கக்கூடாதா என்று தோன்றுகிறது!”

“அழகாயிருக்கிறது நீ ஆனந்தம் கொண்டாடுகிற விதம்” என்றார் நரசிம்மவர்மர்.

“சென்ற ஒரு வருஷகாலமாக நான் அனுபவித்த துன்பத்தையும் வேதனையையும் அறிந்தால் இப்படித் தாங்கள் சொல்லமாட்டீர்கள்?” என்றாள் சிவகாமி.

“துன்பமா? உனக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏதாவது உடம்பு அசௌகரியமா? ஏன் எனக்குச் சொல்லி அனுப்பவில்லை?”

“உடம்புக்கு ஒன்றுமில்லை, பிரபு! உடம்பு மூன்று வேளையும் சாப்பிட்டுக் கொண்டு, ஆடை ஆபரணங்களை அணிந்து கொண்டு சௌக்கியமாய்த்தானிருந்தது, எல்லாத் துன்பத்தையும் வேதனையையும் உள்ளந்தான் அனுபவித்தது!”

“ஆஹா! துன்பமும் வேதனையும் உனக்கேன் வர வேண்டும்? யாராவது உன்னை உபத்திரவப்படுத்தினார்களா என்ன? உன் தந்தை ஆயனர் அதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?”

சிவகாமி எதைக் குறிப்பிட்டு இவ்விதமெல்லாம் பேசுகிறாள் என்பது பல்லவ குமாரருக்குத் தெரிந்துதான் இருந்தது. எனினும், அவள் வாயினால் சொல்லிக் கேட்பதற்காகவே அவ்விதம் புரிந்து கொள்ளாதவர் போலப் பேசி வந்தார். அதற்குச் சிவகாமி, “ஒருவராலும் எனக்கு ஒரு உபத்திரவமும் ஏற்படவில்லை. காட்டிலே வளர்ந்த பேதைப் பெண்ணாகிய எனக்குப் பேசத் தெரியவில்லை. பிரபு! என் மன வேதனைக்கெல்லாம் காரணம் தங்களை மறக்க முடியாமைதான்!” என்று கூறிக் கண்களிலிருந்து கலகலவென்று கண்ணீர் வடித்தாள்.

மாமல்லர் ஆர்வம் பொங்கிய கண்களினாலே அவளைப் பார்த்து “இவ்வளவுதானே, சிவகாமி! அதற்காக இப்போது ஏன் கண்ணீர் விடவேண்டும்? நானுந்தான் உன்னுடைய நினைவினால் எவ்வளவோ வேதனைகளை அனுபவித்தேன்! என்னுடைய ஓலைகளையெல்லாம் நீ படிக்கவில்லையா?”

“தாங்கள் எழுதியிருந்த ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு ஓலையையும் நூறு தடவை ரதிக்குப் படித்துக் காட்டியிருக்கிறேன். ஓலையைப் படிக்கும்போது சந்தோஷமாயிருக்கும். அப்புறம் அவ்வளவுக்கவ்வளவு வேதனை அதிகமாகும்; தங்கள் பேரில் கோபம் கோபமாய் வரும்…”

“சிவகாமி! உனக்கு என்பேரில் கோபித்துக் கொள்ளும் சௌகரியமாவது இருந்தது. எனக்கு அதுகூட இல்லையல்லவா? யாருடைய துன்பம் அதிகம் என்று சொல்!”

“என்பேரில் தாங்கள் கோபித்துக்கொள்ளவில்லையா? அப்படியானால், அசோகபுரத்துப் புத்த விஹாரத்தின் வாசலிலே என்னைப் பார்த்துவிட்டு ஒரு கண நேரங்கூடத் தாமதிக்காமல் போனீர்களே, ஏன்? என்பேரில் இருந்த அன்பினாலேயா?”

“ஆம், சிவகாமி! நான் வரும் வரையில் அரண்ய வீட்டிலேயே இருக்கும்படிச் சொல்லியிருந்தும் நீங்கள் கிளம்பி வந்துவிட்டீர்களே என்று எனக்குச் சிறிது கோபமாய்த்தானிருந்தது. ஆனால் அன்றிரவே புயலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நான் வரவில்லையா? எவ்வளவு முக்கியமான காரியங்களை விட்டு விட்டு வந்தேன்? இப்போதுகூட அங்கே என்ன நடந்திருக்கிறதோ என்னவோ? அதையெல்லாம் மறந்துவிட்டு உன்னுடைய பொன் முகத்திலே ஒரு புன்சிரிப்புக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நீயோ கண்ணீர் விட்டு என்னைக் கலங்க அடிக்கிறாய்!” என்றார் மாமல்லர்.

“எல்லாம் உங்களால் ஏற்பட்ட மாறுதல்தான்; இரண்டு மூன்று வருஷத்துக்கு முன்னாலே ஓயாமல் சிரிப்பும் சந்தோஷமுமாய்த்தானிருந்தேன். காட்டில் யதேச்சையாய்த் திரியும் மானைப் போல் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தேன். என் தந்தைகூட என்னை அடிக்கடி ‘இப்படிச் சிரிக்காதே, சிவகாமி, பாஞ்சாலி சிரித்துத்தான் பாரதப்போர் வந்தது. பெண்கள் அதிகமாய்ச் சிரிக்கக் கூடாது’ என்று எச்சரிப்பதுண்டு. அந்தச் சிரிப்பும் குதூகலமும் இப்போது எங்கோ போய் விட்டது! நினைத்தால் எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது…”

“சிவகாமி! நீ சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்த காலத்தைப் பற்றிப் பேசு! உன் குழந்தைப் பிராயத்தைப் பற்றிச் சொல்லு. அந்த நாட்களைப் பற்றிக் கேட்க வேணுமென்று எனக்கு ஆவலாயிருக்கிறது!” என்றார் நரசிம்மவர்மர்.

மேலும் அவர் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் சிவகாமி சொல்லத் தொடங்கினாள்: “நான் சின்னஞ்சிறு பெண்ணாயிருந்தபோது, என் தந்தையின் செல்வக் கண்மணியாய் வளர்ந்து வந்தேன். அரண்யம் சூழ்ந்த சிற்ப அரண்மனையிலே நான் ராணியாயிருந்து தனி அரசு செலுத்தினேன். என் தந்தையிடம் சிற்ப வேலை கற்றுக் கொண்ட சீடர்கள் என்னிடம் பயபக்தி கொண்ட பிரஜைகளாயிருந்து வந்தார்கள். கண்ணிமையை அசைத்தால் போதும்! அவ்வளவு பேரும் விரைந்து ஓடிவந்து, ‘என்ன பணி?’ என்று கேட்பார்கள். அப்போதெல்லாம் எனக்கும் கவலை என்பதே தெரியாது; துன்பம் என்பதையே நான் அறிந்ததில்லை.

உலகத்திலே எதைப் பார்த்தாலும் எனக்கு வியப்பும் மகிழ்ச்சியுமாயிருக்கும். காலையிலே எழுந்ததும் தகதகவென்று பிரகாசித்துக்கொண்டு உதயமாகும் தங்கச் சூரியனைக் கண்டு ஆனந்திப்பேன். மாமரங்களில் தளிர்த்திருக்கும் இளஞ் சிவப்பு நிறத் தளிர்களைக் கண்டு களிப்படைவேன். மரம் செடி கொடிகளில் புஷ்பிக்கும் விதவிதமான வர்ண மலர்கள் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளிப்பதுண்டு. செடி கொடிகளுக்கு மத்தியில் ஆடிக்கொண்டே பறக்கும் பட்டுப் பூச்சிகளை ஓடிப் பிடிக்க முயல்வேன். அவை என் கையில் அகப்படாமல் தப்பிக் கொள்ளும்போது கலீரென்று சிரிப்பேன். மது உண்ட வண்டுகளின் ரீங்காரத்தைக் கேட்கும் போதெல்லாம் எனக்கும் ஆனந்த போதை உண்டாகிவிடும். காட்டுப் பறவைகள் இசைக்கும் கீதத்தைக் கேட்டுப் பரவசமடைவேன்.

இரவிலே அகண்ட வானத்திலே மின்னும் நட்சத்திரங்களெல்லாம் தங்களுடன் வந்து சேரும்படி என்னைக் கண் சிமிட்டி அழைப்பதுபோலத் தோன்றும். அவற்றின் அழைப்புக்கிணங்கி நானும் மனோரதத்தில் ஏறி உயர உயரப் பறந்து செல்வேன். சில சமயம் சந்திரனைப் பார்த்தால் எனக்கு அன்னப் பட்சியைப் போலிருக்கும். அதன்மேல் ஏறிக் கொண்டு நட்சத்திரங்களுக்கிடையே வட்டமிட்டுக் கொண்டிருப்பேன். சில சமயம் நிலாமதியானது ஒரு அழகிய சிறு தோணியைப்போல் எனக்குத் தோன்றும். அதன்மேல் ஏறிக் கொண்டு வானமாகிய நீலக்கடலில் மிதந்து வருவேன். வழியிலே தென்படும் நட்சத்திரச் சுடர் மணிகளையெல்லாம் கைநிறைய அள்ளி அள்ளி மடியிலே சேர்த்துக் கட்டிக்கொள்வேன்.

இப்படிக் குதூகலமாகக் காலம் போய்க் கொண்டிருக்கையில் என் தந்தை எனக்கு நாட்டியக் கலை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அது முதல் எனக்கு நடனக் கலைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சதா சர்வகாலமும் நாட்டியமாடிய வண்ணமாகவே இருந்தேன். காட்டுக்குள் விளையாடப் போனால் ஆடிக் கொண்டே போவேன்; தாமரைக் குளத்தில் குளிக்கப் போகையில் என் கால்கள் ஜதி போட்டுக் கொண்டே போகும். அந்த நாளில் பூமியும் வானமும் ஒரு பெரிய நடன அரங்கமாக எனக்குக் காட்சி தந்தன.

தடாகத்தில் வண்ணத் தாமரைகள் தென்றல் காற்றில் அசைந்தாடும்போது அவை ஆனந்த நடனமாடுவதாகவே எனக்குத் தோன்றும். வான அரங்கத்தில் விண்மீன்கள் விதவிதமான ஜதி பேதங்களுடன் நடனம் புரிந்துகொண்டு திரும்பத் திரும்பச் சுழன்று வருவதாகத் தோன்றும். இப்படி ஆனந்த வெள்ளத்தில் மிதந்த வண்ணமாக என் வாழ்க்கை நடந்து கொண்டிருந்த காலத்திலேதான் தாங்கள் ஒருநாள் தங்கள் தந்தையாருடன் எங்கள் அரண்ய வீட்டுக்கு வந்தீர்கள்…” என்று கூறிச் சிவகாமி கதையை நிறுத்தினாள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 30
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 32

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here