Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 32

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 32

68
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 32 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 32 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 32: மொட்டு வெடித்தது!

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 32

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 32: மொட்டு வெடித்தது!

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 32

தடாகத்தில் ஒரு அழகிய தாமரை மொட்டு தண்ணீருக்கு மேல் தலை தூக்கி நின்றது. அதன் குவிந்த இதழ்களுக்குள்ளே நறுமணம் ததும்பிக் கொண்டிருந்தது. இரவெல்லாம் அந்த நறுமணம் வெளியில் வருவதற்கு முயன்று நாலாபுறமும் மோதிப் பார்த்தும் வெளியில் வரமுடியாதபடியால் உள்ளுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தது. தாமரை மொட்டுக்கும் அது மிக்க வேதனையளித்தது.

உதய நேரத்தில் நறுமணத்தின் குமுறலும் மோதலும் அதிகமாயின. திடீரென்று கீழ் வானத்தில் ஒரு ஜோதி தோன்றியது. உதயசூரியனின் அமுதனைய கிரணங்கள் தடாகக் கரையில் இருந்த விருக்ஷங்களின் இடையே நுழைந்து வந்து தாமரை மொட்டைத் தொட்டன. அந்த இனிய ஸ்பரிசத்தினால் மொட்டு சிலிர்த்தது; இதழ்கள் விரிந்தன. இரவெல்லாம் உள்ளே விம்மிக் கொண்டிருந்த நறுமணம் விடுதலையடைந்து தடாகத்தையும் தடாகக் கரையையும் வானவெளியையும் நிறைத்தது. அவ்விதமே, சிவகாமியின் இதயமாகிய தாமரை மொட்டுக்குள்ளே இத்தனை நாளும் விம்மிக் குமுறிக் கொண்டிருந்த எண்ணங்களும் உணர்ச்சிகளும் மாமல்லரிடம் தனியாகப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததும், கரையை உடைத்துக் கொண்ட ஏரி வெள்ளத்தைப் போலப் பிரவாகமாய்ப் பெருகின. மாமல்லர் முதன் முதலில் அரண்ய வீட்டுக்கு வந்ததைக் குறிப்பிட்டபோதுதான் சிவகாமியின் வார்த்தைப் பிரவாகம் சிறிது தடைப்பட்டது.

அப்போது கிடைத்த சந்தர்ப்பத்தை மாமல்லர் பயன்படுத்திக் கொண்டு கூறினார்; “ஆம்! எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. நானும் சக்கரவர்த்தியும் முதன் முதலில் உங்கள் அரண்ய வீட்டுக்கு வந்தபோது, உன் தந்தையின் தெய்வச் சிலைகளுக்கு மத்தியிலே நீ நடனமாடிக் கொண்டிருந்தாய். ஆயனர் ஸ்வரக்கோவை பாடிக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தார். எங்களைக் கண்டதும் ஆயனர் பாட்டையும் தாளத்தையும் நிறுத்தினார். நீயும் ஆட்டத்தை நிறுத்தினாய். உன்னுடைய விரிந்த கண்கள் இன்னும் மலருமாறு விழித்து எங்களை நோக்கினாய். என் தந்தை ‘நிறுத்த வேண்டாம்; ஆட்டம் நடக்கட்டும்!’ என்று வற்புறுத்தினார். அதன் மேல் ஆயனர் பாடத் தொடங்க, நீயும் ஆடத் தொடங்கினாய்! ஆட்டம் முடிந்ததும் நான் பலமாகக் கரகோஷம் செய்தேன். நீ மகிழ்ச்சி ததும்பிய கண்களினால் என்னை ஏறிட்டுப் பார்த்தாய். அந்தப் பார்வையில் நாணம் என்பது அணுவளவும் இருக்கவில்லை…”

“பிரபு! தாங்கள் கூறியதெல்லாம் உண்மைதான். அப்போது நான் பன்னிரண்டு பிராயத்துப் பெண்; உலகம் அறியாதவளாயிருந்தேன். தாங்கள் வானத்தில் ஜோதி மயமாய்ப் பிரகாசிக்கும் சூரியன் என்பதையும், நான் கேவலம் பூமியில் புல் நுனியில் நிற்கும் அற்பப் பனித்துளி என்பதையும் அறியாதவளாயிருந்தேன். ஆகையினால், தங்களை ஏறிட்டுப் பார்க்கச் சிறிதும் தயக்கமடையவில்லை. சூரியனை ஏறிட்டுப் பார்க்கத் துணியும் கண்கள் கூடிய சீக்கிரத்தில் கூசிக் குனிய நேரிடுமென்று அறியாமல் போனேன்!…” “சிவகாமி! நான் சூரியனுமல்ல; நீ பனித்துளியுமல்ல. நீ தீபச்சுடர்; நான் அதைச் சுற்றிச் சுற்றி வரும் விட்டில்!..”

“பிரபு! நான் சொல்ல ஆரம்பித்ததை விட்டு வேறு விஷயத்துக்குப் போனது தவறுதான் மன்னியுங்கள். நான் ஆடி நிறுத்தியதும் நீங்கள் கரகோஷம் செய்தீர்கள், எனக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. உங்கள் தந்தை உங்களைப் பார்த்து, ‘சிவகாமியோடு சற்று நேரம் விளையாடிக் கொண்டிரு! ஆயனரோடு பேசியான பிறகு உன்னைக் கூப்பிடுகிறேன்’ என்றார். நீங்கள் என் அருகில் வந்தீர்கள். இருவரும் கைகோத்துக் கொண்டு காட்டுக்குள்ளே குதித்தோடினோம்.

“காட்டிலே நான் பார்த்து வைத்திருந்த அழகான இடங்களையும் செடி கொடிகளையும் காட்டியான பிறகு தங்களை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று நான் வளர்த்து வந்த கிளிகளையும் புறாக்களையும் காட்டினேன். பிறகு என் தந்தை செய்து வைத்திருந்த சிலைகளைக் காட்டத் தொடங்கினேன். நடன வடிவச் சிலைகளைப் பார்க்கும் போது தாங்கள், ‘நானும் நடனக் கலை பயில விரும்புகிறேன்’ என்றீர்கள். அந்தச் சிலைகளில் ஒன்றைப்போல் அபிநயத் தோற்றத்தில் நின்றீர்கள். அதைப் பார்த்துவிட்டு நான் கலீரென்று சிரித்தேன். ‘குழந்தைகள் அதற்குள்ளே வெகு சிநேகமாகி விட்டார்களே!’ என்று நம் தந்தைமார் பேசிக் கொண்டார்கள்.

“அன்றுமுதல் தங்களுடைய வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்க்கலானேன். குதிரையின் சத்தமோ ரதத்தின் சத்தமோ கேட்கும் போதெல்லாம் தாங்கள்தான் வந்து விட்டீர்கள் என்று என் உள்ளம் துள்ளி மகிழ்ந்தது. உதய சூரியனையும் பூரண சந்திரனையும், வண்ண மலர்களையும், பாடும் பறவைகளையும், பறக்கும் பட்டுப் பூச்சிகளையும் பார்க்கும்போது எனக்குண்டான குதூகலம் தங்களைப் பார்க்கும்போது உண்டாயிற்று. ஆனால் சூரிய சந்திரர்களிடமும், புஷ்பங்கள் பட்சிகளிடமும் பேச முடியாது. தங்களிடம் பேசுவது சாத்தியமாயிருந்தபடியால், தங்களைக் கண்டதும் பேச ஆரம்பித்தவள் மூச்சுவிடாமல் பேசிக் கொண்டேயிருப்பேன்…”

“உண்மைதான், சிவகாமி! அந்த நாளில் உன்னைப் பார்க்கும்போது, உன் தந்தையின் அற்புதச் சிலைகளில் ஒன்றைப் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி எனக்கும் உண்டாகும். ஆனால் சிலை பேசாது; நீயோ ஓயாமல் பேசுவாய். பறவைகளின் குரல் ஒலிகளில் எவ்வளவு பொருள் உண்டோ, அவ்வளவு பொருள்தான் உன் பேச்சுக்களிலும் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஒன்றும் புரியாவிட்டாலும் நெடுநேரம் கேட்டுக் கொண்டிருப்பேன்…”

“என் பேச்சைப் போலவேதான் நமது சிநேகமும் அப்போது அர்த்தமற்றதாயிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம், தாங்கள் சக்கரவர்த்தியுடன் தேச யாத்திரை சென்றீர்கள். அப்புறம் மூன்று வருஷ காலம் அரண்ய வீட்டுக்கு நீங்கள் வரவில்லை. மறுபடியும் எப்போதுமே தங்களைப் பார்க்கமாட்டோமோ என்ற ஏக்கம் எனக்குச் சிற்சில சமயம் உண்டாகும். இல்லை, தாங்கள் எப்படியும் ஒருநாள் வருவீர்கள் என்று தைரியம் அடைவேன். தாங்கள் வருவதற்குள்ளே நடனக் கலையிலே சிறந்த தேர்ச்சியடைந்துவிடவேண்டுமென்றும், தாங்கள் திரும்பி வந்ததும் அற்புதமாய் ஆட்டம் ஆடித் தங்களைத் திகைக்கச் செய்ய வேண்டுமென்றும் எண்ணுவேன். தாங்கள் மீண்டும் வரும்போது தங்களுடைய உருவம் எப்படியிருக்குமென்று கற்பனை செய்து பார்க்க அடிக்கடி முயல்வேன். ஆனால் மனத்தில் உருவம் எதுவுமே வராது…. கடைசியாக ஒருநாள் தாங்களே வந்துவிட்டீர்கள்! முற்றும் புதிய மனிதராய் வந்தீர்கள்…”

“நீயும் வெகுவாக மாறிப் போயிருந்தாய், சிவகாமி! உருவத்திலும் மாறியிருந்தாய்; குணத்திலும் மாறியிருந்தாய். நான் எதிர்பார்த்ததுபோல் என்னைக் கண்டதும் நீ ஓடிவந்து என் கரங்களைப் பற்றி வீட்டுக்குள் அழைத்துப் போகவில்லை. தூண் மறைவிலே நாணத்துடன் நின்று கடைக்கண்ணால் என்னைப் பார்த்தாய். ‘கலகல’ என்று சிரிப்பதற்கு மாறாகப் புன்முறுவல் செய்தாய்! அந்தக் கடைக்கண் பாணமும் கள்ளப் புன்னகையும் என்னைக் கொன்றன.”

“ஓடிவந்து முகமன் கூறி உங்களை வரவேற்க முடியாமல் ஏதோ ஒன்று என்னைத் தடைசெய்தது. முன்னால் வரலாமென்றால் கால் எழவில்லை. ஏதாவது பேசலாமென்றால் நா எழவில்லை. நின்ற இடத்திலேயே நின்றேன். என்னை நானே, ‘சிவகாமி! உனக்கு என்ன வந்துவிட்டது?’ என்று கேட்டுக் கொண்டேன். அதே சமயத்தில் அப்பாவும், ‘சிவகாமி! ஏன் தூண் மறைவில் நிற்கிறாய்? வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்காரம் செய்! பல்லவ குமாரரைப் பார்! எப்படி ஆஜானுபாகுவாய் வளர்ந்திருக்கிறார்?” என்றார். நான் தயக்கத்துடன் வந்து நமஸ்காரம் செய்தேன். அப்போது சக்கரவர்த்தி, ‘ஆயனரே! சிவகாமியும் வளர்ந்து போயிருக்கிறாள்! முதலில் எனக்கு அடையாளமே தெரியவில்லை . கற்சிலை செய்வதோடு நீர் தங்கச் சிலையும் செய்ய ஆரம்பித்துவிட்டீரோ என்று நினைத்தேன்’ என்றார். இதனால் என்னுடைய நாணம் இன்னும் அதிகமாகிவிட்டது. சற்று நேரம் பேசாமல் நின்றுவிட்டு அப்புறம் வீட்டிலிருந்து நழுவிக் காட்டுக்குள்ளே சென்றேன். தாமரைக் குளக்கரையில் உட்கார்ந்து எனக்கு என்ன வந்துவிட்டது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“சற்று நேரத்துக்கெல்லாம் என் பின்னால் மிருதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆனால் நான் திரும்பிப் பார்க்கவில்லை. தாங்கள் வந்து என் கண்களைப் பொத்தினீர்கள். மூன்று வருஷத்துக்கு முன்னால் இப்படிக் கண்களைப் பொத்தும் போது நான் உங்கள் பெயரைச் சொல்லிக் ‘கலகல’ என்று சிரித்துக் கைகளைத் தள்ளி விட்டுத் திரும்பிப் பார்ப்பேன். இப்போது தங்களுடைய கரங்கள் என் கண்களை மூடியபோது, என் தேகம் செயலற்று ஸ்தம்பித்தது. என் உள்ளத்திலோ ஆயிரக்கணக்கான அலைகள் எழுந்து விழுந்து அல்லோலகல்லோலம் செய்தன.

“பிறகு நீங்கள் என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து என் கையை உங்கள் கையோடு சேர்த்துக் கொண்டீர்கள். நான் செயலற்றுச் சும்மா இருந்தேன். ‘சிவகாமி! என் பேரில் கோபமா?’ என்றீர்கள். நான் மௌனமாய் உங்களைப் பார்த்தேன். ‘ஆமாம் கோபம் தான் போலிருக்கிறது!’ என்று கூறி, தங்களுடைய யாத்திரையைப் பற்றி ஏதேதோ சொல்லிக் கொண்டே போனீர்கள். ஆனால், நீங்கள் சொன்னது ஒன்றும் என் காதில் ஏறவேயில்லை. ‘நீங்கள் என் அருகில் உட்கார்ந்திருக்கிறீர்கள்; நம் இருவருடைய கரங்களும் ஒன்றுபட்டிருக்கின்றன’ என்னும் ஒரு உணர்ச்சி தான் என் மனதில் இருந்தது. அந்த நினைவு என்னை வான வெளியிலே தூக்கிக் கொண்டுபோய் மேக மண்டலங்களின் மேல், மிதக்கச் செய்தது. தடாகத்துத் தண்ணீரில் மிதக்கும் தாமரை இலைகளின் மேலே நின்று என்னை நடனமாடச் செய்தது. தண்ணீருக்குள்ளே அமுக்கிக் கீழே கீழே கொண்டு போய் மூச்சுவிட முடியாமல் என்னைத் திக்குமுக்காடச் செய்தது!…” “என்னை எத்தகைய அசடாகச் செய்துவிட்டாய் நீ! நான் சொன்னதையெல்லாம் நீ வெகு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்ததாக எண்ணியல்லவா என் யாத்திரை அனுபவங்களையெல்லாம் உனக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்?”

“கடைசியாக, நீங்கள் விடை பெற்றுச் சென்றபோது, ‘சீக்கிரத்தில் திரும்பி வருவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றீர்கள். அப்புறம் சில காலம் நான் தரையிலே நடக்கவேயில்லை. ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டேயிருந்தேன். என் வாழ்க்கையில் ஒரு மகத்தான அதிசயம் அபூர்வமான புதுமை – யாருக்கும் கிடைக்காத அற்புதமான பாக்கியம் கிடைத்துவிட்டதாகத் தோன்றியது. அதனால் என் கண்களுக்கு உலகமே புதிய தோற்றம் கொண்டது. வானத்திலும் பூமியிலும் அதுவரை காணாத வனப்புக்களையெல்லாம் கண்டேன். மல்லிகையும் முல்லையும் செண்பகமும் அதற்குமுன் நான் என்றும் அறியாத நறுமணத்தை அளித்தன. நீல வானம் புதிய மெருகுடன் பிரகாசித்தது. பட்சிகளின் கானத்தில் புதிய இனிமை தென்பட்டது. மூங்கில் காடுகள் காற்றில் அசையும்போது உண்டாகும் சத்தம் முன்னெல்லாம் அழுகைச் சத்தமாக எனக்குத் தோன்றும். இப்போது அதுவே ஆனந்த கீதமாக என் காதில் ஒலித்தது. செடிகளும் கொடிகளும் பட்சிகளும் பூச்சிகளும் ஆயிரம் ஆயிரம் குரல்களில் ‘சிவகாமி! நீ கொடுத்து வைத்தவள்; பாக்கியசாலி என்ற ஆதரவோடு சொல்வதாகத் தோன்றியது. இரவிலே வானத்து நட்சத்திரங்கள் முன் எப்போதையும்விடக் குதூகலமாக என்னைப் பார்த்துச் சிரித்தன. வெண்மதியாகிய தந்தத் தோணியின் மேலே அமர்ந்து வானக் கடலில் அந்த விண்மீன்களிடையே சுற்றி வந்தபோது, இப்போது நான் தனியாகச் சுற்றவில்லை; தோணியில் என் அருகில் நீங்களும் வீற்றிருந்தீர்கள்! எல்லையற்ற உள்ளக் கடலிலே தாலாட்டிய சிந்தனை அலைகளுக்கு மத்தியில் மிதந்த வாழ்க்கைத் தெப்பத்தில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை; பக்கத்தில் தாங்களும் இருந்தீர்கள். அப்போதெல்லாம் எனக்குத் தானாகவே பாட்டுப் பாடத் தோன்றியது. ஆட்டத்தில் அளவில்லாத உற்சாகம் உண்டாயிற்று. நடனக் கலையில் நான் அடைந்த துரிதமான அபிவிருத்தியைக் கண்டு என் தந்தையே பிரமித்துப் போனார்….”

“சக்கரவர்த்தியும் நானும் கூடத்தான் அதிசயம் அடைந்தோம். பரத சாஸ்திரம் எழுதிய முனிவருக்கே எட்டாத நடனக் கலை விந்தைகளெல்லாம் உன் ஆட்டத்தில் வெளியாவதாக என் தந்தை அடிக்கடி சொன்னார். காஞ்சி மாநகரில் இராஜ சபையில் அரங்கேற்றம் நடத்த வேண்டும் என்று அவர்தான் வற்புறுத்தினார்.” “பிரபு! அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த அரங்கேற்றம் நடக்கும் சமயத்தில் என் மன நிலை மாறிவிட்டது. அந்த மாறுதலை நினைத்தால் எனக்கே அதிசயமாயிருக்கிறது. மூன்று வருஷ பிரிவுக்குப் பிறகு தங்களைப் பார்த்ததும் எனக்குண்டான சந்தோஷம், குதூகலம் எல்லாம் சில நாளைக்குள் எங்கேயோ போய்விட்டன. வரவர, தங்களுடைய நினைவு எனக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு மாறாகத் துன்பத்தைத் தர ஆரம்பித்தது. எதைப் பார்த்தாலும் பிடிக்காமல் போய்விட்டது. சந்திரனும் நட்சத்திரங்களும் வெறுப்பை அளிக்கத் தொடங்கின. பொழுது விடிந்தால் ஏன் விடிகிறது என்று தோன்றியது. இரவு வந்தால் ஏன் இருட்டுகிறது என்று தோன்றுகிறது. பூக்களைக் கண்டால் கசக்கி எறியத் தோன்றியது. என் கண்களிலிருந்து தூக்கம் மாயமாய்ப் போய்விட்டது. அருமையாக வளர்த்த மான் குட்டியையும் கிளியையும் வெறுக்கத் தொடங்கினேன். நடனக் கலையிலே கூட எனக்கு ஆசை குன்றத் தொடங்கியது. ‘ஆட்டமும் பாட்டமும் என்ன வேண்டிக் கிடக்கிறது?’ என்று எண்ணத் தொடங்கி விட்டேன்… இந்தச் சமயத்தில்தான் அரங்கேற்றம் நடந்தது; அபசகுனம் போல் அது நடுவில் நின்றுபோனதில் எனக்குத் திருப்தியே உண்டாயிற்று…” “அரங்கேற்றத்துக்குப் பிறகு தாமரைக் குளக்கரையில் நாம் சந்தித்தபோதும் நீ ஒரு மாதிரி வருத்தத்துடனேதான் பேசினாய். என்னிடம் வாக்குறுதி கேட்டாய்! எனக்கு அதெல்லாம் பெருவியப்பாயிருந்தது..”

“பிரபு! அச்சமயம் தங்களுடைய திருமணத்தைப் பற்றிய பிரஸ்தாபம் என் காதில் விழுந்தது. ஏற்கனவே வேதனைக்குள்ளாயிருந்த என் உள்ளத்தில் அது வேலினால் குத்துவது போலிருந்தது. தாங்கள் எனக்கே முழுவதும் உரியவராயிருக்க வேண்டுமென்று கருதினேன். தங்களைப் பார்க்காமல் ஒரு கணம் போவது ஒரு யுகமாயிருந்தது. என்னுடைய தூண்டுதலினாலேதான் என் தந்தை காஞ்சிக்கு நாவுக்கரசர் பெருமானைப் பார்ப்பதற்கு வந்தார். அன்று நடந்ததைத் தாங்கள் அறிவீர்கள்…” “அன்று நடந்ததை மட்டும் அல்ல, சிவகாமி! உன் உள்ளத்தின் நிலைமையையும் அன்றைக்குத் தெரிந்து கொண்டேன். அதனாலேதான் மறுநாளே கண்ணபிரானிடம் ஓலை கொடுத்து அனுப்பினேன்.”

“அந்த ஓலையிலிருந்து நான் காஞ்சிக்கு வருவது தங்களுக்கு விருப்பமில்லையென்று அறிந்தேன். தங்களைப் பார்க்காமல் நான் கழித்த எட்டு மாதமும் எனக்கு எட்டு யுகமாயிருந்தது. நாளுக்கு நாள் என் மன வேதனையும் நெஞ்சு வலியும் அதிகமாகி வந்தன. தங்களிடமிருந்து ஓலை வந்த இரண்டொரு தினங்கள் சிறிது உற்சாகமாயிருப்பேன், பிறகு துன்பம் அதிகமாகிவிடும். தங்களை ஒரு நாளும் இனிப் பார்க்கப் போவதில்லையென்றும், என்னுடைய பகற் கனவு ஒரு நாளும் நிறைவேறப் போவதில்லையென்றும் தோன்றும். ‘இப்படி எதற்காக உயிர் வாழவேண்டும்? இந்த வாழ்நாளை முடித்துக் கொள்ளலாம்’ என்று அடிக்கடி எண்ணமிடத் தொடங்கினேன். இப்படியே கொஞ்சநாளிருந்தால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடலாம் என்று அடிக்கடி தோன்றியது…. பிரபு! தங்களுடைய விருப்பத்தின்படி அரண்ய வீட்டிலேயே காத்திராமல் ஏன் யாத்திரை கிளம்பி வந்தேன் என்று இப்போது தெரிகிறதா?” என்று சிவகாமி முடித்தாள். “தெரிகிறது, சிவகாமி! இப்படிப் பிரளய வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு இரண்டு பேரும் திண்டாட வேண்டும். இந்த ஜன சூன்யமான ஏகாந்தத் தீவிலே வந்து ஒதுங்க வேண்டும் என்பதற்காகத்தான்! இது தெரியாதா என்ன?” என்று மாமல்லர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்தத் தீவைப் பற்றிய அவருடைய வார்த்தையைப் பொய்ப்படுத்திக் கொண்டு, சற்றுத் தூரத்தில் வாத்திய கோஷங்களும் ஜனங்களின் ஆரவார ஒலிகளும் கேட்டன. இருவரும் திடுக்கிட்டு எழுந்திருந்தார்கள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 31
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 33

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here