Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 34

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 34

78
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 34 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 34 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 34: நந்தி மேடை

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 34

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 34: நந்தி மேடை

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 34

அன்றிரவு இரண்டாம் ஜாமத்தின் மத்தியில் நாவுக்கரசர் மடாலயத்தின் வாசலில் மாமல்லரும் குண்டோதரனும் பேசிக் கொண்டிருந்தார்கள். சாயங்காலமே மேகங்கள் எல்லாம் கலைந்து வானம் துல்லியமாயிருந்தது. சரத்கால சந்திரன் பொழிந்த தாவள்யமான நிலவு அந்தச் சாதாரண கிராமத்தைக் கந்தர்வலோகமாகச் செய்து கொண்டிருந்தது. சற்றுத் தூரத்தில், கிராமக் கோயிலின் தூங்கானை மாடத்துத் தங்க ஸ்தூபி ‘தக தக’ என்று பிரகாசித்தது. அதற்கப்பால் தெரிந்த தென்னை மரங்களின் உச்சியில் பச்சை மட்டைகளின் மீது நிலாமதியின் கிரணங்கள், ரசவாத வித்தை செய்து கொண்டிருந்தன. தென்னை மட்டைகள் இளங்காற்றில் இலேசாக அசையும் போது, பச்சை ஓலைகள் பளிச்சென்று வெள்ளி ஓலைகளாக மாறுவதும், மீண்டும் அவை பச்சை நிறம் பெறுவதும் ஏதோ ஒரு இந்திரஜாலக் காட்சியாகவே தோன்றின.

“பிரபு! குபேர சம்பத்து வாய்ந்த அரண்மனை உப்பரிகையில் பஞ்சணை மெத்தையில் படுத்து உறங்க வேண்டிய தாங்கள், இந்த ஆண்டி மடத்துத் திண்ணையில் அனாதைப் பரதேசியைப் போல் படுத்து உறங்குவதா? அந்த எண்ணத்தையே என்னால் சகிக்க முடியவில்லையே!” என்றான் குண்டோதரன். “குண்டோதரா!! இத்தனை நேரமும் ஆயனரோடு விவாதம் செய்து ஒருவாறு முடிந்தது. நீயும் அதே பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டாயா?” என்றார் மாமல்லர். குண்டோதரன் ஏதோ சொல்ல ஆரம்பித்தான், அதற்கிடங்கொடாமல் மாமல்லர் மறுபடியும் கூறினார்.

“என் தந்தை அப்படி என்னை அரண்மனை உப்பரிகையிலேயே எப்போதும் படுக்க வைத்து வளர்க்கவில்லை. குண்டோதரா! பஞ்சணை மெத்தையில் பரப்பிய முல்லைப் புஷ்பங்களின் மீது படுத்தும் எனக்குப் பழக்கம் உண்டு; நடு காட்டிலே மரத்தின் வேரைத் தலையணையாய்க் கொண்டு தரையில் படுத்தும் எனக்குப் பழக்கம் உண்டு. இந்த மடத்துத் திண்ணை வழ வழவென்று தேய்ந்து எவ்வளவு மிருதுவாக இருக்கிறது?” என்றார் மாமல்லர். “பிரபு! தாங்கள் பரிகாசம் செய்கிறீர்கள் எனக்கோ வேதனையாயிருக்கிறது. இந்தக் கஷ்டம் தங்களுக்கு என்னால் வந்ததுதானே என்பதை எண்ணும்போது என் மனம் பதைக்கிறது. நான் மட்டும் ஒரு வார்த்தை இந்த ஊர் வாசிகளிடம் தாங்கள் இன்னார் என்பது பற்றிச் சொல்லியிருந்தால்?…” “குண்டோதரா! பிசகான காரியம் செய்துவிட்டுப் பிறகு வருத்தப்படுகிறவர்களை நான் கண்டதுண்டு. நல்ல காரியம் – புத்திசாலித்தனமான காரியம் – செய்ததற்காக வருத்தப்படுகிறவர்களை நான் பார்த்ததில்லை; இப்போது உன்னைத்தான் பார்க்கிறேன். நான் சக்கரவர்த்தி குமாரன் என்பது தெரியாதபடி ஜனங்களுடன் கலந்து பழகும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எவ்வளவோ ஆவல் கொண்டிருந்தேன். அந்த ஆவல் இப்போது உன்னால் நிறைவேறுகிறது. ஆஹா! சிவகாமியின் நடனக் கலையின் புகழ் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறதென்பதை இன்று தெரிந்து கொண்டதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா?..”

“பிரபு! சிவகாமி தேவியின் நடனக் கலையின் புகழ் மட்டும் இங்கே பரவியிருக்கவில்லை. புள்ளலூர்ப் போரின் கீர்த்தியும் இந்தக் கிராமம் வரையில் வந்து எட்டியிருக்கிறது!” “மெய்யாகவா, குண்டோதரா!” “ஆம் பிரபு! அந்தச் சண்டையிலே குமார சக்கரவர்த்தி நிகழ்த்திய மகத்தான வீர சாகசச் செயல்களைப் பற்றியும் இங்கேயெல்லாம் தெரிந்திருக்கிறது. அதையெல்லாம் பற்றிச் சவிஸ்தாரமாகச் சொல்ல வேண்டுமென்று கிராமவாசிகள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு இராத்திரி சாவகாசமாய்ச் சொல்லுவதாக வாக்களித்திருக்கிறேன். இப்போது கோவில் பிராகாரத்திலே அவர்கள் கூடியிருப்பார்கள், நீங்களும் வருகிறீர்களா?” என்று குண்டோதரன் கேட்டான். “வருகிறேன்; ஆனால் நீ ஏதாவது விஷமம் செய்து என்னைக் காட்டிக் கொடுத்துவிடக் கூடாது!” என்றார் மாமல்லர்.

கோயில் பிரகாரத்தில் நந்தி மேடையின் படிக்கட்டில் குண்டோதரனும் மாமல்லரும் உட்கார்ந்திருந்தார்கள். நந்தி மேடை பலிபீடம் இவற்றைச் சுற்றிப் பிரகாரத்தில் செங்கல் சுண்ணாம்பினால் தளவரிசை போடப்பட்டிருந்தது. அந்தச் சுத்தமான தளத்தில் கிராமவாசிகள் பலர் உட்கார்ந்திருந்தார்கள். புள்ளலூர்ச் சண்டையைப் பற்றி அவர்களிடம் குண்டோதரன் சண்டப் பிரசண்டமாக வர்ணனை செய்தான். அந்தச் சண்டையிலே முக்கியமாகக் குமார சக்கரவர்த்தி மாமல்லர் காட்டிய தீர சாகசங்களைப் பற்றி உற்சாகமாக விவரித்தான்.

“மாமல்லர் எப்படிப் போர் செய்தார் தெரியுமா? இந்தக் கணம் பார்த்தால் இங்கே இருப்பார்; மறுகணம் பார்த்தால் அதோ அந்த மதில்சுவருக்கு அப்பால் இருப்பார். அந்தப் பெரிய போர்க்களத்திலே மாமல்லர் எங்கே போரிட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை எந்த நேரத்திலும் கண்டுபிடித்துவிடலாம். மகாவிஷ்ணுவின் சக்கராயுதத்தைப்போல் எங்கே ஒரு ஜொலிக்கும் வாள் அதிவேகமாகச் சுழன்று எதிரிகளின் தலைகளை வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறதோ, அங்கே மாமல்லர் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி மின்னல் வேகத்தில் வாளைச் சுழற்றிப் பகைவர்களை ஹதாஹதம் செய்யக்கூடிய வீராதி வீரர் வேறு யார்? மாமல்லருடைய வாளிலே அன்றைக்கு யமனே வந்து உட்கார்ந்திருந்தான். அவர் சக்கராகாரமாகச் சுழன்று வாளை வீசியபோது, ஒன்று, பத்து, ஆயிரம் என்று எதிரிகள் உயிரற்று விழுந்தார்கள்!…”

“ஆஹா! அபிமன்யு செய்த யுத்தம் மாதிரி அல்லவா இருக்கிறது!” என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார். அந்த ஊரிலும் சில காலமாக மகாபாரதம் வாசிக்கப்பட்டு வந்தது. அதனால் எல்லாரும் அருச்சுனன் – அபிமன்யு நினைவாகவே இருந்தார்கள்! குண்டோதரன் கூறினான்; “ஆம், மாமல்லர் அன்று அபிமன்யு மாதிரிதான் போர் புரிந்தார். ஆனால் ஒரு வித்தியாசம், அபிமன்யு போர்க்களத்தில் மாண்டு போனான். புள்ளலூர்ச் சண்டையிலோ மாமல்லரின் வாளுக்கு முன்னால் நிற்க முடியாமல் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடத் தொடங்கினார்கள். எல்லோருக்கும் முன்னால் ஓட்டம் பிடித்தவன் கங்க நாட்டு அரசன் துர்விநீதன் தான்!” “துர்விநீதன் எந்தப் பக்கம் ஓடினானோ?” என்று ஒரு கிராமவாசி கேட்டான். “தெற்கு நோக்கி ஓடி வந்ததாகத்தான் கேள்வி. தென் பெண்ணை நதி வரையில் அவனைப் பின்தொடர்ந்து மாமல்லரும் தளபதி பரஞ்சோதியும் வந்ததாகக் கூடக் கேள்வி” என்று சொல்லி வந்த குண்டோதரன், மாமல்லர் பக்கம் திரும்பிப் பார்த்து, “ஏன் ஐயா, என் கையைக் கிள்ளுகிறீர்?” என்றான்.

மாமல்லரின் கண்களில் கோபக் குறி காணப்பட்டது. இதற்குள் கூட்டத்தில் இன்னொருவர், “ஆமாம், இந்த விவரமெல்லாம் உனக்கு எப்படி அப்பா தெரிந்தது? ஆயனரின் சீடனுக்குப் போர்க்களத்தில் என்ன வேலை?” என்று கேட்டார். “நல்ல கேள்விதான்; உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் முடியாது போலிருக்கிறது!” என்று சொல்லிக் கொண்டே குண்டோதரன் எழுந்து மாமல்லரிடமிருந்து சற்று அப்பால் போய் நின்றான்.

“இதோ இருக்கிறாரே, என் பக்கத்தில், இவர்… இவர்தான்… ஏன் ஐயா, இப்படி என்னை உறுத்துப் பார்க்கிறீர்… இவர்தான் உண்மையில் ஆயனருடைய உத்தம சிஷ்யர். நான் பல்லவ சைனியத்தைச் சேர்ந்தவன். துர்விநீதனைத் தொடர்ந்து வந்த மாமல்லருடன் நானும் வந்தேன். வழியில் என் குதிரையின் கால் ஒடிந்து விழுந்து விட்டபடியால் பின் தங்கிவிட்டேன். பிறகு வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டு இவர்களுடைய தெப்பத்தில் ஏறி உயிர் தப்பினேன்!”

உடனே, கூட்டத்திலிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் விலாவிலே விரலால் சீண்டியும் வேறுவிதமாகக் கவனத்தை இழுத்தும் காதோடு இரகசியம் பேசிக் கொண்டார்கள். குண்டோதரன் ஆயனரின் சிஷ்யனாக இருக்க முடியாது’ என்று அவர்களில் பலர் முன்னாடியே ஊகித்ததாகச் சொல்லிக் கொண்டார்கள். “மாமல்லரும் ஒரு வேளை இந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கலாமோ?” என்று ஒருவர் கூறினார். “அதை நினைத்தால் எனக்கு ரொம்பவும் கவலையாயிருக்கிறது!” என்றான் குண்டோதரன். “ஒருவேளை இங்கேயே அவரும் வந்து ஒதுங்கினாலும் ஒதுங்கலாம்” என்று இன்னொருவர் சொன்னார். “ஒதுங்கினாலும் ஒதுங்கலாம்!” என்றான் குண்டோதரன்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 33
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 35

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here