Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 36

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 36

75
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 36 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 36 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 36: புதிய பிறப்பு

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 36

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 36: புதிய பிறப்பு

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 36

மண்டபப்பட்டுக் கிராமத்துக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள் சாயங்காலம் ஆயனர், சிவகாமி, மாமல்லர் ஆகிய மூவரும் கிராமத்துக்கு வெளியே உலாவி வரக் கிளம்பினார்கள். பாறையில் படகு மோதி அவர்கள் நீரில் மூழ்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். வெள்ளம் இன்றைக்கு ரொம்பவும் வடிந்து போயிருந்தது. அன்று தண்ணீரில் மூழ்கியிருந்த இடங்களில் இன்று நீ வடிந்து பாறைகள் நன்றாய்த் தெரிந்தன. கரையோரத்து மரங்கள் அன்று பாதிக்கு மேலே வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. இன்றைக்கு அதே மரங்களின் வேரின் மீது தண்ணீர் ‘சலசல’வென்று அரித்தோடிக் கொண்டிருந்தது. பாறைப் பிரதேசமாதலால் வெள்ளத்திற்குப் பிறகு இடங்கள் வெகு சுத்தமாயிருந்தன.

அந்தப் பாறைகளைச் சுற்றிச் சுற்றி வந்து பார்ப்பதில் ஆயனர் அடங்காத ஆர்வம் கொண்டவராயிருந்தார். இந்தப் பாறையை இன்னின்ன மாதிரி கோவிலாக அமைக்கலாம், இன்னின்ன சிற்ப வடிவங்களாகச் செய்யலாம் என்று அவர் உள்ளம் கற்பனை செய்து கொண்டிருந்தது. சிவகாமியும் மாமல்லருமோ, மகிழ மரத்தடியில் பாறையின் மீது உட்கார்ந்து மௌனம் சாதிப்பதில் அடங்காத பிரியம் கொண்டவர்களாகத் தோன்றினார்கள்.

பகலும் இரவும் மயங்கிக் கலந்திருந்த அந்த நேரத்தில் ஆயனர் அரை மனதாக “போகலாமா, சிவகாமி?” என்று கேட்டார். “அப்பா! இன்றைக்கு இருட்டி இரண்டு நாழிகைக்குப் பிறகு சந்திரோதயம் ஆகுமல்லவா? அதைப் பார்த்துவிட்டுப் போகலாமே?” என்றாள் சிவகாமி. “அதற்கென்ன, அப்படியே செய்யலாம்!” என்று கூறி ஆயனர் அவர்களுக்கு அருகில் தாமும் உட்கார்ந்தார். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.

“இந்த ஊரை விட்டுப் போகவே எனக்கு மனம் வராதென்று தோன்றுகிறது!” என்றார் ஆயனர். “இந்த ஊர் அதிர்ஷ்டம் செய்த ஊர், கிராமவாசிகள் சொன்னார்களே, அது உண்மைதான்!” என்றார் மாமல்லர். “ஏன் அப்பா, அவ்வளவு தூரம் இந்த ஊர் உங்களுக்குப் பிடித்துவிட்டதின் காரணம் என்ன?” என்று சிவகாமி கேட்டாள். “இந்தப் பாறைகளைப் பார்க்கும்போது எனக்கு ஆசையாயிருக்கிறது. திவ்வியமான கோயில்கள் அமைப்பதற்குக் கை ஊறுகிறது.” “இன்னும் எத்தனையோ ஊர்களிலேயும் பாறைகள் இருக்கின்றன!” என்றாள் சிவகாமி. “இந்தக் கிராமவாசிகள் நல்ல ரசிகர்கள்; நேற்று உன் நடனத்தைப் பார்த்து எவ்வளவு ஆனந்தப்பட்டார்கள்!”

“ஐயா! காஞ்சியில் ரசிகர்கள் இல்லையென்று கூறுகிறீர்களா?” என்று மாமல்லர் பொய்க் கோபத்துடன் கேட்டார். “மகேந்திர பல்லவரும் அவருடைய திருக்குமாரரும் இருக்கும் காஞ்சியில் ரசிகர்கள் இல்லாமற் போய் விடுவார்களா? அந்த எண்ணத்துடன் நான் சொல்லவில்லை. எங்கேயோ போகலாமென்று யாத்திரை கிளம்பியவர்களைக் கடவுளே பார்த்து இந்த ஊரில் கொண்டுவிட்டிருக்கிறார். நாங்கள் இங்கேயே இருப்பதுதான் இறைவனுடைய சித்தம் என்று தோன்றுகிறது!” “அப்பா! நாகநந்தி பிக்ஷு வெள்ளம் வந்த இரவு போனாரே, அவர் என்ன ஆகியிருப்பார்?” என்று சிவகாமி கேட்டாள். “ஐயோ! பாவம்! என்ன ஆனாரோ, தெரியவில்லை. அந்த வயோதிக பிக்ஷுவின் கதியும் என்ன ஆயிற்றோ, தெரியவில்லை!”

அப்போது மாமல்லர் தம்முடன் வந்த சைனியத்தின் கதி என்ன ஆயிற்றோ என்று நினைத்தார். குண்டோதரன் படகு சம்பாதித்துக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டுக் காலையிலேயே போனவன், இன்னும் ஏன் திரும்பி வரவில்லை..? சற்று நேரத்துக்கெல்லாம் கீழ் அடிவானத்தில் ஏறக்குறைய வட்டவடிவமான சந்திரன் உதயமானான். அவனுடைய கிரணங்களினால் வெண்ணிறம் பெற்ற வெள்ளப் பரப்பு தேவர்கள் அமுதத்திற்காகக் கடைந்த பாற்கடலைப்போல் ஜொலித்தது. வெள்ளத்திலிருந்து சந்திரன் மேலே கிளம்பியது, அந்தப் பாற்கடலிலிருந்து அமுதம் நிறைந்த தங்கக் கலசம் எழுந்தது போலிருந்தது. சிறிது நேரம் சந்திரோதயத்தின் அழகைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஆயனருக்கு இருப்புக் கொள்ளவில்லை. “நிலா வெளிச்சத்தில் ஒரு தடவை இந்தப் பாறைகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

மாமல்லரும் சிவகாமியும் வெகுநேரம் மௌனமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய இரு கைகள் மட்டும் ஒன்று சேர்ந்து அந்தரங்கம் பேசிக் கொண்டிருந்தன. அவர்களைச் சுற்றி வெளியிலே மகிழம் பூவின் நறுமணம் நிறைந்து மூச்சுத் திணறும்படிச் செய்தது. அவர்களுடைய உள்ளங்களிலே இன்ப உணர்ச்சி ததும்பி மூச்சுத் திணறும்படிச் செய்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அவர்களுக்குக் கீழேயிருந்த பூமி இலேசாக நழுவி அவர்களை அந்தரத்தில் விட்டுச் சென்றது.

அவர்களுடைய தலைக்கு மேலே வானமானது, சந்திர மண்டலம் நட்சத்திரங்களுடன் திடீரென்று மறைந்துவிட்டது! எங்கேயோ, எங்கேயோ, எங்கேயோ எல்லையில்லாத வெள்ளத்தில் மிதந்து மிதந்து அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். அவ்விதம் அவர்கள் செய்த ஆனந்த யாத்திரை ஒரு கண நேரமா அல்லது நீண்ட பல யுகங்களா என்பது தெரியாதபடி காலாதீத நிலையை அடைந்து, மேலே இன்னும் மேலே, அதற்கும் மேலே போய்க் கொண்டிருந்தார்கள். திடீரென்று அமுதமளாவிய குளிர்ந்த இளங்காற்று வீசி, மகிழ மரத்தின் கிளைகளில் சலசலப்பை உண்டுபண்ணியது. அந்த கிளைகளிலிருந்து மகிழம் பூக்கள் பொல பொலவென்று அவர்களுடைய தலைமேல் உதிர்ந்தன.

இருவரும் தடாலென்று பூலோகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். மண்டபப்பட்டுக் கிராமத்துப் பாறையின் மேல் மகிழ மரத்தினடியில் தாங்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டார்கள். “சிவகாமி! என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாய்?” என்று மாமல்லர் கேட்டபோது, வெகு வெகு வெகு தூரத்திலிருந்து அவருடைய குரல் கேட்டது போலிருந்தது. “பிரபு! கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; விழுந்து விடுவேன் போலிருக்கிறது!” என்றாள் சிவகாமி. “ஏன் சிவகாமி உன் உடம்பு இப்படி நடுங்குகிறது? குளிர் காற்றினாலா?” என்று மாமல்லர் கேட்டார். “இல்லை, பிரபு! குளிர் இல்லை; என் உடம்பு கொதிக்கிறதைப் பாருங்கள்!” என்று சிவகாமி சொன்னபோது அவளுடைய குரலும் நடுங்கிற்று. “பின் ஏன் இவ்விதம் நடுங்குகிறாய்?” “ஏதோ பயமாயிருக்கிறது நான் உயிரோடுதானிருக்கிறேனா?” “இது என்ன கேள்வி? உயிரோடு இல்லாவிட்டால் எப்படி என்னுடன் பேசமுடியும்?”

“சற்று முன்னால் எனக்கு எங்கேயோ வானமார்க்கத்தில் பிரயாணம் போவதுபோல் தோன்றியது. சத்தமில்லாத ஒரு தெய்வீக சங்கீதம் எங்கிருந்தோ வந்து கொண்டிருந்தது. அதன் தாளத்துக்கிணங்க என் ஆத்மா நடனமாடிக் கொண்டு மேலுலகம் சென்றது… அதெல்லாம் பிரமைதானே? உண்மையாக நான் இறந்து போய்விடவில்லையே?” “ஆம்; சிவகாமி! ஒரு விதத்தில் நாம் இருவருமே இறந்து விட்டோம். ஆனால், மறுபடியும் பிறந்திருக்கிறோம். இருவருக்கும் இது புனர்ஜன்மந்தான். மூன்று நாளைக்கு முன்னால் நாம் இந்தக் கிராமத்துக்கு வந்தபோது தனித்தனி உயிருடனும் உள்ளத்துடனும் இருந்தோம். இன்று அந்தச் சிவகாமி இல்லை நீ; நானும் அந்த நரசிம்மவர்மன் இல்லை. என் உயிரிலும் உள்ளத்திலும் நீ கலந்திருக்கிறாய். அப்படியே உன் உயிரிலும் உள்ளத்திலும் நான் கலந்து போயிருக்கிறேன். ஆகையால், நாம் இருவரும் மரணமடைந்து மறு பிறப்பும் அடைந்துவிட்டோம்; எல்லாம் மூன்றே நாளில்!…”

“நிஜமாக மூன்று நாள்தானா? என்னால் நம்பமுடியவில்லை. எத்தனையோ நீண்ட காலம் மாதிரி தோன்றுகிறது!” “அதுவும் உண்மையே, இந்த மூன்று நாள் வெறும் மூன்று நாள் அல்ல. இதற்கு முன் எத்தனையோ ஜன்மங்களில் நாம் ஒருவரையொருவர் பார்த்திருக்கிறோம்; காதலித்திருக்கிறோம்; பிரிந்திருக்கிறோம்; சேர்ந்திருக்கிறோம். அவ்வளவு அனுபவங்களையும் இந்த மூன்று தினங்களில் திரும்ப அனுபவித்தோம்.” “இதோடு எல்லாம் முடிந்து போய்விட்டதா?” “எப்படி முடிந்துவிடும்? பல ஜன்மங்களில் தொடர்ந்து வந்த உறவு இந்த ஜன்மத்தோடு மட்டும் எப்படி முடியும்?” “வருகிற ஜன்மங்களைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்த ஜன்மத்தைப்பற்றித்தான் கேட்கிறேன். இந்த ஜன்மத்தில் எப்போதும் இப்படியே இருக்குமா?” “எது இப்படி இருக்குமா என்று கேட்கிறாய்?” “உங்களுடைய அன்பைத்தான் கேட்கிறேன்!”

மாமல்லர் தமக்கு அருகில் பாறையில் உதிர்ந்து கிடந்த மகிழம் பூக்களைத் திரட்டிச் சிவகாமியின் கையில் வைத்தார். “சிவகாமி என்னுடைய அன்பு மல்லிகை – முல்லை மலர்களைப் போல் இன்றைக்கு மணத்தை வாரி வீசிவிட்டு நாளைக்கு வாடி வதங்கி மணமிழந்து போவதன்று. என் அன்பு மகிழம் பூவை ஒத்தது; நாளாக ஆக அதன் மணம் அதிகமாகும். வாடினாலும் காய்ந்து உலர்ந்தாலும் அதன் மணம் வளர்ந்து கொண்டுதானிருக்கும்…. அன்றைக்குத் தாமரைக் குளக்கரையில் என்னிடம் வாக்குறுதி கேட்டாயே, ஞாபகம் இருக்கிறதா?” “இருக்கிறது!” “அந்த வாக்குறுதியை இப்போதும் கோருகிறாயா?” “வேண்டாம் பிரபு! வாக்குறுதி வேண்டாம்! தங்களுடைய மன்னிப்புத்தான் வேண்டும்!” “எதற்கு மன்னிப்பு?” என்றார் மாமல்லர். “தங்களைப் பற்றிச் சந்தேகம் கொண்டதற்குத் தான். தங்களைப் பற்றி ஒரு துஷ்ட நாகம் கூறிய விஷங்கலந்த மொழிகளை நம்பியதற்காகத்தான்!” என்றாள் சிவகாமி.

அப்போது இலேசாகச் சரசரவென்ற சத்தம் சமீபத்தில் கேட்கவே, சிவகாமி மிரண்டுபோய்ச் சுற்றுமுற்றும் பார்த்தாள். மரக்கிளைகளின் நிழலும் நிலா வெளிச்சமும் மாறி மாறித் தரையில் படிந்திருந்த இடத்தில் அவர்களுக்குச் சமீபத்தில் ஒரு பாம்பு நௌிந்து நௌிந்து போய்க் கொண்டிருந்தது. “ஐயோ! அப்பா! பாம்பு!” என்று சிவகாமி அலறிக் கொண்டு எழுந்தாள். மாமல்லரும் குதித்து எழுந்து, சிவகாமியை ஆதரவுடன் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். “பயப்படாதே, சிவகாமி! நானிருக்கும்போது என்ன பயம்?” என்றார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 35
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 37

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here