Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 38

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 38

62
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 38 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 38 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 38: சந்திரன் சாட்சி

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 38

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 38: சந்திரன் சாட்சி

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 38

இரவு ஜாம நேரத்துக்கு மேல் மாமல்லர், சிவகாமி, ஆயனர் ஆகியோர் திரும்பிக் கிராமத்தை அடைந்தபோது, நாவுக்கரசர் மடத்து வாசலில் பெருங்கூட்டம் நிற்பதைக் கண்டார்கள். நிலாவொளியில் அந்தக் கூட்டத்தின் மத்தியில் கத்தி கேடயங்களும், வாள்களும் மின்னின. மூன்று பேரும் துணுக்கமடைந்து வீதி முனையில் கோயில் மதில் ஓரமாக ஒதுங்கி நின்றார்கள். மடத்து வாசலில் நின்ற வீரர்கள் யாராயிருக்கும் என்ற கேள்வி மூவருடைய மனத்திலும் எழுந்தது.

அன்று காலையில் குண்டோதரனுக்கும் மாமல்லருக்கும் ஒரு சிறு வாக்குவாதம் நடந்தது. மேலே நடக்கவேண்டிய காரியத்தைப் பற்றித்தான். வராக நதியில் வெள்ளம் வடிந்து விட்டபடியால், பானைத் தெப்பம் ஒன்று கட்டி, அதில் தம்மை வராக நதிக்கு அக்கரையில் கொண்டுபோய் விட்டுவிட்டுக் குண்டோதரன் திரும்பி வந்துவிட வேண்டும் என்றும், தாம் அங்கிருந்து காஞ்சிக்குப் போய் விடுவதென்றும், குண்டோதரன் ஆயனருக்கும் சிவகாமிக்கும் துணையாக மண்டபப்பட்டுக் கிராமத்திலேயே சில காலம் இருக்க வேண்டும் என்றும் மாமல்லர் சொன்னார்.

குண்டோதரன் இதை மறுத்து, தான் முதலில் அக்கரை சென்று பல்லவ சைனியத்தைப் பற்றித் தகவல் விசாரித்து வருவதாகவும், அதற்குப் பிறகு என்ன செய்வதென்பதை முடிவு செய்து கொள்ளலாமெனவும் கூறினான். மாமல்லரும் இன்னும் ஒருநாள் சிவகாமியுடன் இருக்கலாம் என்ற ஆசையினால் அதற்கு இணங்கினார். ஆனாலும் அன்றைக்கெல்லாம் அவருக்கு அடிக்கடி மனதில் பரபரப்பு உண்டாகிக் கொண்டிருந்தது. சாயங்காலம் ஆக ஆக, “குண்டோதரன் ஏன் இன்னும் வரவில்லை?” “எத்தனை நாள் இங்கே சும்மா உட்கார்ந்திருப்பது?” என்ற எண்ணங்கள் அவ்வப்போது அவர் உள்ளத்தில் தோன்றி அல்லல் செய்தன. மோகன நிலவொளியில் சிவகாமியுடன் பேசிக் கொண்டிருந்த போதுகூட நடுநடுவே மாமல்லரின் மனம், “குண்டோதரன் இதற்குள் வந்திருப்பானோ? என்ன செய்தி கொண்டு வந்திருப்பான்?” என்று எண்ணமிட்டுக் கொண்டுதான் இருந்தது.

இப்போது மடத்து வாசலில் கூட்டத்தைக் கண்டதும், அதிலும் வாள்கள் வேல்களின் ஒளியைக் கண்டதும், மாமல்லருடைய மனத்தில் ஏக காலத்தில் பல கேள்விகள் எழுந்தன. இவர்கள் யார்? பகைவர்களா? பல்லவ வீரர்களா? பல்லவ வீரர்களாயிருந்தால் இங்கு நாம் இருப்பது தெரிந்து வந்திருக்கிறார்களா? தெரிந்தவர்களாயிருந்தால், திடீரென்று நம்மைக் கண்டதும் கோஷம் இடுவார்களே? கிராமவாசிகளுக்குத் தெரிந்து போய்விடுமே? மாமல்லருடைய மனத் தயக்கத்தையும் அதன் காரணத்தையும் ஒருவாறு அறிந்துகொண்ட ஆயனர், “பிரபு! தாங்களும் சிவகாமியும் சற்று இவ்விடமே நில்லுங்கள். நான் முன்னால் சென்று வந்திருப்பவர்கள் யார் என்று பார்க்கிறேன்” என்று கூறிச் சென்றார்.

சிவகாமியும் மாமல்லரும் கோயில் மதில் ஓரத்தில் மதிலுக்குள்ளிருந்து கொப்புங் கிளையுமாய் வெளியே படர்ந்திருந்த மந்தார மரத்தின் அடியில் நின்றார்கள். அப்போது மாமல்லர் மடத்து வாசலில் நின்ற கூட்டத்திலிருந்து வந்த சத்தத்தைக் காது கொடுத்துக் கவனமாய்க் கேட்டார். கலகலவென்று எழுந்த பல பேச்சுக்குரல்களுக்கிடையில் தளபதி பரஞ்சோதியின் குரல் கணீரெனக் கேட்டது. கிராமவாசிகள் பலர் ஏக காலத்தில் மறு மொழி கூறினார்கள். அந்தப் பல குரல்களுடன் சுகப்பிரம்ம முனிவரும் சேர்ந்து, “மாமல்லா! மாமல்லா!” என்று கீச்சுக் குரலில் கூவிய சத்தம் எழுந்தது.

மாமல்லரின் மனக் குழப்பமெல்லாம் ஒரு நொடியில் நீங்கிவிட்டது. “நமது தளபதி பரஞ்சோதிதான் வந்திருக்கிறார்! வா! சிவகாமி! நாமும் போகலாம்!” என்று அவர் உற்சாகம் ததும்பும் குரலில் கூறி மேலே நடக்கத் தொடங்கியபோது, சிவகாமி அவருடைய கரத்தை மெதுவாகத் தொட்டு, பிரபு!” என்றாள். மந்தார மரத்துக் கிளைகளின் வழியாக வந்த பால் நிலவின் ஒளியில் அவளுடைய கண்களில் துளித்திருந்த இரு கண்ணீர்த் துளிகளும் முத்துப்போல் பிரகாசித்ததை மாமல்லர் பார்த்தார். “என் கண்ணே! இது என்ன?” என்று மாமல்லர் அருமையுடன் கூறி, தமது அங்கவஸ்திரத்தினால் கண்ணீரைத் துடைத்தார். “உங்கள் தளபதியின் குரல் கேட்டதும் இந்தப் பேதைப் பெண் அவசியமில்லாமல் போய் விட்டேனல்லவா?” என்று சிவகாமி விம்மினாள்.

இவ்விதம் நேரும் என்று சற்றும் எதிர்பாராத மாமல்லர் அவளுக்கு எவ்விதம் தேறுதல் சொல்லுவதென்று தெரியாமல் சற்றுத் திகைத்து நின்றார். பின்னர், “என் ஆருயிரே! ஏன் இவ்விதம் பேசுகிறாய்? சற்று முன்னால் நீதானே உன் வாயார வீரமொழிகள் புகன்று என்னைப் போர்க்களத்துக்குப் போகும்படி ஏவினாய்? போகவேண்டிய சமயம் வந்திருக்கும்போது இவ்விதம் நீ கண்ணீர்விட்டால், நான் என்ன தைரியத்துடன் போவேன்?” என்று கூறி, சிவகாமியின் அழகிய முகவாயைப் பிடித்து நிமிர்த்தினார். அப்போது சிவகாமியின் முகத்தில் நிலாமதியின் கிரணங்கள் நேராக விழ, அவளுடைய இயற்கைப் பொன்னிற முகம் தந்த நிறம் பெற்றுத் திகழ்ந்தது.

சிவகாமி அவருடைய கரத்தைத் தன் முகவாயிலிருந்து எடுத்துத் தன் கண்களிலே சேர்த்துக் கண்ணீரால் நனைத்த வண்ணம் “இந்தப் பேதை நெஞ்சம் ஏனோ காரணமில்லாத பீதி கொண்டிருக்கிறது. என் வாணாளின் இன்பம் இன்றோடு முடிந்து விட்டதுபோல் தோன்றுகிறது. பிரபு! என்னை மறக்க மாட்டீர்கள் அல்லவா? மத்த யானையின் மேலேறி யுத்த களத்தில் சத்ருக்களைத் துவம்ஸம் செய்யும்போதும் அகில சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகி மணிமுடி தரித்து ரத்தின சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும் போதும் இந்த ஏழைச் சிற்பியின் மகளை மறவாமலிருப்பீர்கள் அல்லவா?” என்று கேட்டாள்.

மாமல்லர் வானக்கடலிலே மிதந்த பூரணச் சந்திரனைச் சுட்டிக்காட்டி, “சிவகாமி! அதோ, அமுத நிலவைச் சொரிந்து கொண்டு வானவீதியில் பவனி வரும் சந்திரன் சாட்சியாகச் சொல்கிறேன், கேள்! இந்த ஜன்மத்தில் உன்னை நான் மறக்க மாட்டேன் என்று வாக்குறுதி கூறுவதில் பொருள் இல்லை. நான் முயன்றாலும் அது முடியாத காரியம். உன் மனத்தில் காரணம் இன்றித் தோன்றும் பீதிக்கு ஏதாவது உண்மையில் காரணம் இருக்குமானால் ஒன்றே ஒன்றுதான் இருக்க முடியும். ஒருவேளை போர்க்களத்தில் நான் வீரமரணம் அடைவேன்…” “ஐயோ! அப்படிச் சொல்லாதீர்கள் ஒருநாளும் அப்படி நேராது!” என்று விம்மலுடன் உரத்துக் கூவினாள் சிவகாமி.

மாமல்லர் சொன்னார்; “அப்படி நேரவில்லையென்றால், உன்னை நான் மறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. யுத்தமெல்லாம் முடிந்து இந்தப் பரந்த பல்லவ சாம்ராஜ்யத்துக்குச் சக்கரவர்த்தியாகி நான் ரத்தின சிங்காதனத்தில் வீற்றிருக்கும் காலம் வரும் போது, நீயும் என் அருகிலேதான் வீற்றிருப்பாய். ஆனால் போர்க்களத்துக்குப் போகும்போது, வெற்றி அல்லது வீர மரணத்தை எதிர்பார்த்துத்தான் போக வேண்டும். நான் போர்க்களத்தில் உயிர் துறக்க நேர்ந்தால்தான் என்ன, சிவகாமி! எதற்காகக் கவலைப்படவேண்டும்? இந்த ஒரு பிறப்போடு, நமது காதல் முடிந்து விட்டதா? ஒருநாளும் இல்லை. போர்க்களத்தில் உயிர் போகும்போது எனக்கு நினைவிருந்தால் பிறை சூடும் பெருமானைத் தியானித்து, ‘இந்தப் புண்ணிய பாரத பூமியிலே பாலாறும் பெண்ணையும் காவேரியும் அமுதப் பிரவாகமாய்ப் பெருகும் தமிழகத்திலே, மீண்டும் வந்து பிறக்கும் வரம் தாருங்கள்’ என்று கேட்பேன். அவ்விதமே இந்தத் தமிழகத்திலே பிறந்து, ஊர் ஊராய் அலைந்து திரிவேன். பூர்வ ஜன்மங்களிலே நான் காதலித்த சௌந்தரிய வடிவத்தை, மோகன உருவத்தை, ஜீவனுள்ள தங்க விக்கிரகத்தைத் தேடிக்கொண்டு அலைவேன். இம்மாதிரி கார்த்திகை மாதத்துத் தாவள்யமான நிலவொளியிலே உன்னை மீண்டும் காண்பேன். கண்டதும் தெரிந்து கொள்வேன் நீதான் என்று. ‘இந்தப் பெண்ணின் முகத்திலே ததும்பும் சௌந்தரியம், இவளுக்குச் சொந்தமானதில்லை. பல ஜன்மங்களிலே தொடர்ந்து வந்த என் காதலின் சக்திதான் இந்த மோகனத்தை அளித்திருக்கிறது’ என்று தெரிந்து கொள்வேன். உன் கண்களில் ஜொலிக்கும் மின் ஒளியிலே என் உயிரின் சுடரைக் கண்டு தெரிந்து கொள்வேன். உன் இதழ்களின் புன்னகையில் என் இருதயத்தின் தாபம் தணிவதை உணர்ந்து அறிந்து கொள்வேன் இவள்தான் என் சிவகாமி! ஜன்ம ஜன்மங்களிலெல்லாம் என் உயிரிலே கலந்த இன்ப ஒளி இவள்தான்; சரத்கால சந்திரனின் மோகன நிலவில் நான் பார்த்துப் பார்த்து மகிழ்ந்த சௌந்தரிய வதனம் இது தான்! இந்தக் கருங்குவளைக் கண்களிலேதான் என்னுடைய விழிகளாகிய வண்டுகள் ஓயாது மொய்த்து மதுவருந்தி மயங்கின!’ என்று தெரிந்து தெளிவேன். சிவகாமி, வாக்குறுதி போதுமா? திருப்தியடைந்தாயா?”

மாமல்லரின் கவி இருதயத்திலிருந்து பிரவாகமாய்ப் பொழிந்த அமுதச் சொற்கள் சிவகாமியைத் திக்குமுக்காடச் செய்தன. அவளுடைய தேகம் சிலிர்த்தது! புளகாங்கிதம் உண்டாயிற்று; தரையிலே நிற்கிறோமா, வானவெளியில் மிதக்கிறோமா என்று தெரியாத நிலையை அவள் அடைந்தாள். திடீரென்று கலகலத்வனியையும், “அதோ மாமல்லர்!” “அதோ பல்லவ குமாரர்!” என்ற குரல்களையும், “மாமல்ல பல்லவேந்திரர் வாழ்க!” “வாழ்க! வாழ்க!” என்ற கோஷங்களையும் கேட்டுச் சிவகாமி சுயப் பிரக்ஞை அடைந்தாள். “எனக்கு திருப்திதான்! ஜனங்கள் இங்கு வருவதற்குள் தாங்கள் முன்னால் செல்லுங்கள்!” என்று கூறினாள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 37
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 39

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here