Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 39

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 39

71
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 39 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 39 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 39: விடு படகை!

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 39

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 39: விடு படகை!

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 39

கூட்டத்தில் எல்லாருக்கும் முன்னதாகத் தளபதி பரஞ்சோதி விரைந்து வந்து மாமல்லருக்கு வணக்கம் செலுத்தி, “பிரபு! இதென்ன இப்படி செய்து விட்டீர்களே! எங்களையெல்லாம் கதிகலங்க அடித்து விட்டீர்களே?” என்றார்.

மாமல்லர் பரஞ்சோதியை ஆர்வத்துடன் ஆலிங்கனம் செய்து கொண்டு, “உங்களுக்கெல்லாம் ரொம்பவும் கவலைதான் அளித்துவிட்டேன். அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்? வெள்ளத்தினால் நமது படையில் சேதம் அதிகம் உண்டா?” என்று கேட்க, பரஞ்சோதி, “சூலபாணியின் அருளால் நல்ல சமயத்தில் எச்சரிக்கப்பட்டோ ம். அதனால் உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை, எத்தனையோ விஷயங்கள் சொல்ல வேண்டும், பேச வேண்டும். வாருங்கள் பிரபு! இந்தக் கோயிலுக்குள் சிறிது போய்ப் பேசலாம்!” என்று கூறினார். இருவரும் கைகோத்துக் கொண்டு உற்சாகமாக நடந்து சென்று முன் கோபுர வாசல் வழியாகக் கோயிலுக்குள் பிரவேசிக்க பின்னோடு கூட்டமாக வந்த கிராமவாசிகளைக் கோயிலுக்குள் செல்லாதபடி வீரர்கள் தடுத்து நின்றார்கள்.

மாமல்லரும் பரஞ்சோதியும் அவ்விதம் குதூகலமாகப் பேசிக் கொண்டு போனதையும், சற்றுப் பின்னால் மரத்தடியில் நின்ற தன்னை யாரும் கவனியாததையும் கண்ட சிவகாமிக்குப் பெரும் மனோவேதனை உண்டாயிற்று. ஆயனரும் அவரோடு ரதியும் சுகரும் மட்டும் சிவகாமி நிற்குமிடம் வந்தார்கள். “இனிமேல் நீங்கள்தான் என் உண்மையான சிநேகிதர்கள்!” என்று கூறுவது போல், ரதியையும் சுகரையும் சிவகாமி தடவிக் கொடுத்தாள். முன்னால் சென்ற கூட்டத்தின் ஆரவாரம் சற்று அடங்கியதும் இவர்கள் மடத்தை நோக்கிச் சென்றார்கள்.

வழியில் கோயில் வாசலை நெருங்கிச் சென்றபோது, அங்கே கூடியிருந்த கிராமவாசிகள் சிலர் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகள் சிவகாமியின் காதில் விழுந்தன.

“பல்லவ குமாரர் இப்படி நம்மை ஏமாற்றி விட்டாரே?”

“நான்தான் சொன்னேனே, முகத்தில் இராஜ களை வடிகிறதென்று? கேவலம் சிற்பியின் முகமா அது?”

“தகப்பனாரைப் போலவே புதல்வரும் வேஷம் போடுவதில் வெகு சமர்த்தர் போலிருக்கிறது!”

“ஆயனர் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகவே இந்த வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டாராமே?”

“என்னதான் அபிமானம் இருந்தாலும் அவ்வளவு தூரத்துக்குப் போயிருக்கக்கூடாது. ஏதாவது அபாயம் நேர்ந்திருந்தால் பல்லவ சாம்ராஜ்யத்தின் கதி என்ன ஆகிறது?”

“மாமல்லரைவிடப் பரஞ்சோதி பெரிய வீரராமே?”

“அதெல்லாம் இல்லை. இரண்டு பேரும் சமம்தான்!”

“யார் சொன்னது? மாமல்லருக்குச் சமமான வீரர் உலகத்திலேயே கிடையாது. பரஞ்சோதியை போர்க்களத்திற்குச் சக்கரவர்த்தி அழைத்துப் போயிருந்தார். அதனால் அவருடைய வீரம் வெளியாயிற்று. மாமல்லர் முதன் முதலில் புள்ளலூர்ச் சண்டையில் தானே கலந்து கொண்டார்? அங்கே பரஞ்சோதி இருந்த இடம் தெரியாமல் போய்விடவில்லையா?”

“அவர்களுக்குள்ளே வித்தியாசமே கிடையாதாம். அவ்வளவு அந்நியோன்னிய நண்பர்களாம். நாம் ஏன் வித்தியாசப்படுத்திப் பேசவேண்டும்?”

“எது எப்படியாவது இருக்கட்டும். இரண்டு பேரும் நம் ஊரில் விருந்துண்ணாமல் திரும்பிப் போகக் கூடாது!”

இந்த மாதிரி பலவிதமான பேச்சுக்களையும் காதில் வாங்கிக் கொண்டு சிவகாமி மடத்துக்குப் போய்ச் சேர்ந்தாள். அவளுடைய உள்ளம் அளவில்லாத பெருமையையும் சொல்ல முடியாத வேதனையையும் மாறி மாறி அடைந்து கொண்டிருந்தது.

கிராமவாசிகளின் விருப்பத்தின்படியே மாமல்லரும் பரஞ்சோதியும் மற்ற வீரர்களும் கிராமவாசிகள் அவசரமாகப் பக்குவம் செய்து அன்புடன் அளித்த விருந்தை உண்டார்கள். விருந்து முடியும்போது அர்த்த ராத்திரிக்கு மேலே ஆகிவிட்டது. பொழுது விடிந்த பிறகு போகலாம் என்று கிராமப் பெரியோர்கள் கேட்டுக்கொண்டது பயன்படவில்லை. இரவுக்கிரவே கிளம்ப வேண்டியது அவசியமாயிருந்தது.

புறப்படுகிற சமயம் வந்தபோது, ஆயனரிடமும் சிவகாமியிடமும் விடைபெற்றுக்கொள்ள மாமல்லர் மடத்துக்குள்ளே சென்றார். “ஆயனரே! உங்களிடம் விடைபெறுவது எனக்குச் சங்கடமாய்த்தானிருக்கிறது. ஆயினும் என்ன செய்யலாம்! புலிகேசியின் படைகள் காஞ்சியை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனவாம். உடனே வரும்படி சக்கரவர்த்தி சொல்லியனுப்பியிருக்கிறார்” என்றார் மாமல்லர்.

மாமல்லரிடம் அளவில்லாத அன்பும் மரியாதையும் கொண்டவரான ஆயனர், “பிரபு! இவ்வளவு நாள் தாங்கள் இங்கிருந்தது நாங்கள் செய்த பாக்கியம். இதற்குமேல் நாங்கள் ஆசைப்படக்கூடாது போய் வாருங்கள். உங்களை வழி அனுப்ப நாங்களும் நதிக்கரை வரையில் வரலாமல்லவா?” என்றார்.

“அவ்வளவு தூரம் வருவது அவசியமில்லை. இஷ்டப்பட்டால் வாருங்கள்!” என்றார் மாமல்லர். மாமல்லர் சிவகாமியை நோக்கியபோது அவள் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த அபூர்வான காதலர்க்கு மத்தியில் திடீரென்று ஒரு திரை விழுந்துவிட்டது போலிருந்தது.

இரவு மூன்றாம் ஜாமம் முடியும் சமயத்தில், சந்திரன் மேற்கு வானவட்டத்தின் அடியில் பிரகாசித்துக் கொண்டிருந்தபோது, வராக நதியில் ஆயத்தமாக நின்ற படகுகளில் மாமல்லர், பரஞ்சோதி முதலியோர் ஏறிக் கொண்டார்கள்.

கரையிலே கிராமவாசிகளும் ஆயனரும் சிவகாமியும் நின்றார்கள். இத்தனை நேரமும் எங்கேயோ போய்விட்டு அப்போது தான் ஓட்ட ஓட்டமாய்த் திரும்பி வந்திருந்த குண்டோ தரனும் பின்னால் நின்றான்.

நதிக்கரையிலும் மாமல்லர் சிவகாமியுடனும் பேசுவதற்கு வசதி கிடைக்கவில்லை! படகில் ஏறிக் கொண்டதும் அவர் கரையிலிருந்த சிவகாமியை உற்று நோக்கினார். சிவகாமியும் அவரை அப்போது ஆர்வத்துடன் ஏறிட்டுப் பார்த்தாள். ஏதாவது சொல்லவேண்டுமென்று மாமல்லருடைய உதடுகள் துடித்தன; ஆனால், வார்த்தை ஒன்றும் வரவில்லை.

தளபதி பரஞ்சோதி, “விடு படகை!” என்று கட்டளையிட்டார்.

படகு சென்றதும், சிவகாமிக்கு தன் வாழ்நாளில் இன்பத்தையெல்லாம் அந்தப் படகு கொண்டு போவது போல் தோன்றியது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 38
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 40

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here