Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 4

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 4

81
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 4 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 4 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 4: சிவகாமியின் பிறந்தநாள்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 4

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 4: சிவகாமியின் பிறந்தநாள்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 4

ஆகா! சிவகாமியை நாம் பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது! காஞ்சியை விட்டு வெளியே போகக் கூடாது என்று மாமல்லருக்குத்தான் சக்கரவர்த்தி கட்டளை இட்டிருக்கிறாரே தவிர நாம் போவதற்கு எவ்விதத் தடையுமில்லையல்லவா? எனவே, அரண்ய மத்தியிலுள்ள ஆயனரின் சிற்ப மாளிகைக்கு உடனே செல்வோம்.

ஆயனரின் வீட்டை நெருங்கும்போது எட்டு மாதத்துக்கு முன்பு அங்கே நாம் கண்ட காட்சிக்கும் இப்போது நாம் காணும் காட்சிக்கும் உள்ள வித்தியாசம் நம்மைத் தூக்கி வாரிப் போடுகிறது. அப்போது நாம் கண்ட கலகலப்பு இப்போது அங்கே இல்லை. ‘கல் கல்’ என்ற கல்லுளியின் சத்தம் கேட்கவில்லை. ஆயனரின் சீடர்கள் ஆங்காங்கு மரங்களின் அடியில் உட்கார்ந்து சிற்பவேலை பயின்று கொண்டிருக்கவில்லை.

காட்டு மரங்களின் தோற்றத்திலேகூட வித்தியாசம் இருக்கிறது. முன்னே நாம் வந்திருந்தபோது வஸந்த காலம். விருட்சங்கள் புதிய தளிர்கள் விட்டிருந்தன. மாமரங்களில் இளம் தளிர்களுடனே பூங்கொத்துக்கள் குலுங்கின. அரச மரங்களும் ஆல மரங்களும் தங்கநிற இலைகளால் மூடப்பட்டிருந்தன. இப்போதோ, மரங்களில் முற்றிய கரும் பசுமை பொருந்திய இலைகளும் பாதி காய்ந்த சருகுகளும் காணப்படுகின்றன. பூமியெல்லாம் இலைச்சருகுகள் பரவிக் கிடந்தன. சில இடங்களில் குட்டை குட்டையாக மழைத் தண்ணீர் தேங்கியிருக்கிறது.

முதல்நாள் இரவு பெய்த மழைநீர் மரங்களின் இலைகளில் தங்கியிருந்தது, குளிர்ந்த வாடைக்காற்று அடிக்கும்போது ‘சலசல’வென்று பூமியில் உதிர்கிறது. அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த மாறுதலை நினைத்து மரங்களும் துயரப்பட்டுக் கண்ணீர் உதிர்ப்பது போலத் தோன்றுகிறது. வன விருட்சங்களில் வாழ்ந்த பட்சிகளின் அமுதகானத்துக்கு மட்டும் எவ்விதக் குறையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விதவிதமான மதுரக் குரல்களில் எத்தனை எத்தனையோ கீதங்கள் கேட்கின்றன. ஆனால், அந்தக் குரல்களிலும் ஒரு வேற்றுமை தெரிகிறது. முன்னே அக்குரல்களில் தொனித்த குதூகலக் களிப்பை இப்போது காணவில்லை. சென்றுபோன ஆனந்தமான காலத்தை நினைத்து மனங்கசிந்து பாடும் சோககீதமாகத் தொனித்தது!

வீட்டை நெருங்கிச் சென்றோமானால் ஒரே ஒரு விருட்சத்தினடியில் மட்டும் யாரோ இரண்டு பேர் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பது கண்ணுக்குப் புலனாகிறது. ஆம்! அவர்களில் ஒருவர் ஆயனச் சிற்பிதான்! ஆனால் அந்த மேதையின் முகத்தில் முன்னம் நாம் பார்த்த சாந்தம் இப்போது எங்கே? அந்தக் கண்களிலே இந்த ஆவல் வெறி எப்போது குடிகொண்டது? அவரும் அவருடன் இருக்கும் இன்னொருவனும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏதேதோ பச்சிலைகளைச் சேர்த்து அவர்கள் கல்லில் வைத்து இடித்தும் அரைத்தும் சாறு இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அருகில் அடுப்பு ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு சட்டியில் பச்சிலைச் சாறு கொதித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுப்புறத்தில் பற்பல சட்டிகளில் வர்ணக் குழம்புகள் இருக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது ஆயனச் சிற்பியார் சித்திரம் எழுதுவதற்குரிய வர்ணச் சேர்க்கை முறைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறார் என்று ஊகிக்கலாம்.

போர்க்களத்திலிருந்து சக்கரவர்த்தி மாமல்லபுரத்திலும் மற்ற இடங்களிலும் நடந்து கொண்டிருந்த சிற்பப் பணிகளையெல்லாம் நிறுத்தி விடும்படி கட்டளை அனுப்பிய பிறகு ஆயனர் தமது அருமை மகளை அழைத்துக் கொண்டு பழைய அரண்ய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தம்முடைய சீடர்களைத் தொண்டை மண்டலத்திலுள்ள எல்லாக் கோயில்களிலும் பாரத மண்டபங்களைக் கட்டுவதற்காக அனுப்பிவிட்டார். ஒரே ஒரு சிற்றாளை மட்டும் தம்முடைய உதவிக்கு வைத்துக் கொண்டிருந்தார்.

சில காலமாகவே ஆயனருடைய உள்ளமானது சிற்பக்கலையிலும் நாட்டியக் கலையிலும் ஈடுபடவில்லை. நாகார்ஜுன பர்வதத்துக்கு அனுப்பிய பரஞ்சோதி திரும்பி வருவதை அவர் வெகு ஆவலுடன் எதிர்பார்க்கலானார். சில நாளைக்கெல்லாம் அவருக்குப் பரஞ்சோதியைப் பற்றிய வெகு விசித்திரமான செய்திகள் கிடைத்தன. அவன் பல்லவ சைனியத்தில் சேர்ந்து, பல்லவக் குதிரைப்படையின் தளபதியாகி விட்டான் என்றும் அதிசயமான வீரச் செயல்களைப் புரிந்து வருகிறான் என்றும் வதந்திகள் உலாவின.

அதற்குப் பிறகு நாகநந்தியடிகளும் அங்கு வரவில்லை. ஆயனருக்கு என்றுமழியாத வர்ண இரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவல் ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பெருகியது. எனவே அவர் சிற்பக்கலை முதலியவற்றையெல்லாம் ஒரு பக்கத்தில் கட்டிவைத்து விட்டு வர்ணச் சேர்க்கை சம்பந்தமான பரிசோதனைகளை ஆரம்பித்தார். சிவகாமியின் நாட்டியக்கலை வளர்ச்சியிலே கூட அவருக்குச் சிரத்தை குறைந்துவிட்டது. இது சிவகாமிக்கும் சௌகரியமாகவே இருந்தது. ஏனெனில் அவளுடைய வாழ்க்கையாகிய வானத்திலே ஜகஜ்ஜோதியாக உதயமாகி அவளுடைய இதயத் தாமரையை மலரச் செய்திருந்த பிரேம சூரியனைப் பாடிப் பரவி வாழ்த்தி வணங்குவதற்கே அவளுக்குக் காலம் போதாமலிருந்தது. உலகத்தில் இதுகாறும் யாரும் கண்டும் கேட்டுமறியாத அதிசயக் காதற் செல்வம் தனக்குக் கிட்டியிருப்பதாக எண்ணிய சிவகாமி அந்தக் காதலையும் காதலனையும் பற்றிச் சிந்திப்பதிலும், மனோராஜ்யம் செய்வதிலும் வருங்காலத்தைப் பற்றிய ஆகாசக் கோட்டைகள் கட்டுவதிலும் எல்லையற்ற இன்பத்தை அடைந்து வந்தாள். அந்த மனோராஜ்ய வாழ்க்கையிலேதான் எத்தனை ஆனந்தம்! எத்தனை ஏமாற்றம்! கூடிக் குலாவும் நேரம் எவ்வளவு! சொல்லம்புகளினால் துன்புறுத்தல் எவ்வளவு? அந்த எட்டு மாதத்து மனோராஜ்ய வாழ்விலே எத்தனையோ யுக யுகாந்திரங்களில் அனுபவிக்க வேண்டிய சோகச் சாயை படர்ந்த ஆனந்தங்களையும் இன்ப ரேகை கலந்த வேதனைகளையும் சிவகாமி அனுபவித்து விட்டாள் என்றே சொல்ல வேண்டும்.

இருக்கட்டும்; இப்போது சிவகாமியைப் போய்ப் பார்ப்போம். அவள் அநேகமாக வீட்டுக்குள்ளே தன்னந்தனியாக இருக்கலாம். உள்ளே போய் நேரிலேயே சிவகாமியைப் பார்த்து அவளுடைய நிலையைத் தெரிந்து கொள்வோம்.

வீட்டை அணுகும்போது, உள்ளே பேச்சுக் குரலைக் கேட்டுச் சற்றுத் திகைத்து நிற்கிறோம். சிவகாமி ஏகாந்தமாயிருப்பாள் அவளுடன் மனம் விட்டுப் பேசி அவளது மனோநிலைமையை அறியலாம் என்றல்லவா நினைத்தோம்? அவளுடன் பேசிக் கொண்டிருப்பது யார்? ஒருவேளை அவளுடைய செவிட்டு அத்தையாயிருக்குமோ? இல்லை; ஆடவரின் குரல், அதிலும் இரண்டு மூன்று ஆடவர் குரல்கள் அல்லவா கேட்கின்றன?

உள்ளே நுழைவதற்கு முன்னால் வாசற்படிக்கு அருகில் நின்று சம்பாஷணையைச் சற்று ஒட்டுக் கேட்டு விட்டு உள்ளே போகக் கூடிய சந்தர்ப்பந்தானா என்பதை தெரிந்து கொள்வோம்.

“அம்மணி! எங்களிடம் கோபித்துக் கொண்டு என்ன பயன்? பல்லவ குமாரரின் கட்டளையைத்தானே நிறைவேற்றுகிறோம்?” என்று ஒரு ஆண்குரல் சொல்லிற்று.

“பல்லவகுமாரரும் ஆயிற்று! கட்டளையும் ஆயிற்று! மாமல்லருக்கு இன்றைக்கு வேறு வேலை இல்லை போலிருக்கிறது! திடீரென்று சிற்பியின் மகளை நினைத்துக் கொண்டாராக்கும். இருக்கட்டும்; அந்தத் தந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது? திறந்து காட்டுங்கள்!” என்று கோபங்கொண்ட கோமகளின் அதிகாரக் குரலில் சிவகாமி ஆக்ஞாபித்தாள்.

“தென்பாண்டி நாட்டிலே கொற்கைத் துறைமுகத்தில் குளித்து எடுத்த அற்புதமான முத்துமாலைகள் இந்தத் தந்தப் பெட்டியில் இருக்கின்றன. அம்மணி! இதோ பாருங்கள்! கன்யா குப்ஜத்து ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியின் பட்ட மகிஷி கழுத்திலேகூட இம்மாதிரி முத்துமாலை கிடையாது! எப்படி ஜொலிக்கிறது, பார்த்தீர்களா?” என்று ஏவலாளன் கூறினான்.

“போதும், போதும்! இந்த முத்துமாலைகள் யாருக்கு வேண்டும்? உங்கள் குமார சக்கரவர்த்தியிடம் நான் சொன்னதாகச் சொல்லு; ஆயனச் சிற்பியின் வீட்டுக்கு அருகே தாமரைக் குளக்கரையில் புன்னை மரம் ஒன்று புஷ்பித்திருக்கிறது. காலை நேரத்தில் அம்மரத்தடிக்குச் சென்றால் தரையிலே ஆயிரமாயிரம் முத்துக்கள் சொரிந்து கிடக்கும். அந்தப் புன்னை மலர் முத்துக்களின் அழகுக்கு உறைபோடக் காணாது இந்தக் கொற்கை முத்து என்று சொல்லு. வேண்டுமானால், ஒருநாள் காலையில் வந்து பார்த்து விட்டுப் போகட்டும். அதோ! அந்தத் தங்கப் பேழையில் என்ன இருக்கிறது?” என்று சிவகாமி கேட்டாள்.

“அம்மணி! அலைகடலின் ஆழத்திலே சௌந்தரிய தேவதை ஒளித்து வைத்திருந்த பவளங்கள், சமுத்திர ராஜனின் கடுங்காவலை மீறி அபகரித்துக் கொண்டு வரப்பட்டவை, மன்னாதி மன்னர்களெல்லாம் தங்கள் மணிமகுடத்தில் புனைவதற்கு ஆசைப்படக்கூடியவை, ஒப்பற்ற பவளங்கள், இந்தத் தங்கப் பேழையில் இருக்கின்றன. பாரத நாடெங்கும் புகழ்பெற்ற பரத சாஸ்திர ராணியின் மேனியை அலங்கரிப்பதற்கு உகந்தவை என்று இந்தப் பவள மாலைகளைப் பல்லவ குமாரர் அனுப்பி இருக்கிறார்….”

“அழகுதான்! இந்தப் பவள மாலைகள் உங்கள் பல்லவ குமாரருக்கு அதிசயமாய்த் தோன்றலாம். ஆனால் அவரிடம் நீ போய்ச் சொல்லு, ஆயனச் சிற்பி வீட்டின் இரண்டாம் கட்டிலே அந்தச் சிற்பியின் மகள் வளர்க்கும் கிளிகள் இருக்கின்றன. அந்தக் கிளிகளின் வாயில் உள்ள செம்பவளத்துக்கு எப்பேர்ப்பட்ட கடல் பவளமும் இணையாகாது. வேண்டுமானால் நேரிலே வந்து பார்த்துவிட்டுப் போகும்படிச் சொல்லு. இருக்கட்டும்; அதோ அந்தக் கூடைகளிலே என்ன?”

“அரண்மனை உத்தியானவனத்திலே மலர்ந்த சண்பகப் பூக்கள், குண்டு மல்லிகைகள், பிச்சி மலர்கள்…”

“வேண்டாம், வேண்டாம்! உடனே எல்லாவற்றையும் வெளியே கொண்டு போங்கள். உங்கள் பல்லவ குமாரரிடம், ‘சிவகாமி ஒரு காலத்தில் பூ என்றால் பிராணனாயிருந்ததுண்டு, ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் இப்போது பூவைக் கண்டால் பிடிப்பதேயில்லையாம்!’ என்று தெரியப்படுத்துங்கள்… ஆமாம்; இதையெல்லாம் எதற்காக இப்போது பல்லவ குமாரர் அனுப்பினாராம்?”

“இன்றைக்குத் தங்களுடைய பிறந்த தினம் என்பதற்காக அனுப்பியுள்ளார், அம்மணி!”

“அப்படியா? மிகவும் சந்தோஷம் இந்த ஏழைச் சிற்பி மகளின் பிறந்த தினத்தைக் குமார சக்கரவர்த்தி நினைவு வைத்துக் கொண்டிருப்பது பற்றி நிரம்பச் சந்தோஷம். ஆனால், அவருடைய ஞாபக சக்தியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். நீங்கள் இந்தப் பொருள்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய் ‘இன்று சிவகாமியின் பிறந்த நாள் இல்லை’ என்று சொல்லி விடுங்கள். ‘சிவகாமி என்கிற பெண் பூமியில் பிறக்கவே இல்லை’ என்று பல்லவ குமாரரிடம் சொல்லிவிடுங்கள்!”

இதென்ன விந்தை? சற்று முன்னால், ஆயனச் சிற்பியை வீட்டுக்கு வெளியே மரத்தடியில் பார்த்தோமல்லவா? இப்போது வீட்டுக்குள்ளேயிருந்து அவருடைய கனிந்த குரலைக் கேட்கிறோம்:-

“குழந்தாய்! சிவகாமி! உனக்கு என்ன வந்து விட்டது? ஏன் இப்படி இவர்களை விரட்டியடிக்கிறாய்? குமார சக்கரவர்த்தியே உன்னுடைய பிறந்த தினத்தை ஞாபகம் வைத்துக் கொண்டிருந்து வரிசைகள் அனுப்பியிருக்கும்போது..”

“சும்மா இருங்கள், அப்பா! குமார சக்கரவர்த்தியை இலேசுப்பட்டவர் என்று நினைக்காதீர்கள். முத்துமாலையையும், ரத்தின ஹாரத்தையும், புஷ்பக் கூடைகளையும் அனுப்பி நம்மை ஏமாற்றிவிடப் பார்ப்பார். யாரை நம்பினாலும் மாமல்லரை நம்பக் கூடாது. ஏவலாளர்களே! ஏன் நிற்கிறீர்கள்? எடுங்கள் இவற்றை எல்லாம்! உடனே நடையைக் கட்டுங்கள் எடுக்கிறீர்களா, இல்லையா!”

“இதோ எடுத்துக்கொண்டு போகிறோம், அம்மா! இதோ எடுத்துக்கொண்டு போகிறோம்.”

இவ்வாறு பயந்து நடுங்கிக் கொண்டு கூறிய ஏவலர்கள், வரிசைப் பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வருவார்களென்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், யாரும் வெளியே வருகிற வழியைக் காணோம்! நல்ல மர்மம் இது! வீட்டுக்குள்ளே பேச்சுக் குரல் மட்டும் கேட்கிறதே தவிர, வேறு நடமாடும் சந்தடியைக் காணோமே? வியப்பாக அல்லவா இருக்கிறது! உள்ளே போய்ப் பார்த்து விடலாம்.

உள்ளே போனால், நமது வியப்பு ஒன்றுக்குப் பதின்மடங்காகிறது. ஏனெனில், உள்ளே சக்கரவர்த்திக்காக ஆயனர் அமைத்திருந்த சிற்ப சிம்மாசனத்திலே சிவகாமி மட்டுந்தான் தன்னந்தனியாக உட்கார்ந்திருக்கிறாள்! இத்தனை நேரமும் அவள் சம்பாஷணை நடத்தியதெல்லாம் யாருடன்?

இதோ மர்மம் வெளியாகிறது. சிவகாமி பேசுகிறாள். தனக்குத் தானே பேசிக் கொள்கிறாள்.

“ஏவலாளர்களே, இங்கே வாருங்கள்!” என்கிறாள்.

ஒருவரும் வரவில்லை ஆனாலும் எதிரில் யாரோ இருப்பதாக எண்ணிக் கொண்டு பேசுகிறாள்.

“உங்கள் பல்லவ குமாரரிடம் இதையும் சொல்லுங்கள். ‘மாமல்லர் என்றைக்கு மனம் கனிந்து சிற்பி மகள் சிவகாமியைப் பார்ப்பதற்கு வருகிறாரோ, அன்றைக்குத்தான் அவளுக்குப் பிறந்த தினம்’ என்று சொல்லுங்கள், தெரிகிறதா?”

இவ்விதம் சொல்லிவிட்டுச் சிவகாமி சற்றுச் சும்மா இருந்தாள். பிறகு மறுபடியும் பேசினாள். ஆனால் இந்தத் தடவை குரல் மாறுபட்டிருந்தது. இப்போது நாம் கேட்பது ஆண்பிள்ளைக் குரல். ஏற்கனவே கேட்ட ஏவலாளனின் குரல்தான்.

“அம்மணி! மன்னிக்க வேண்டும் தங்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வரிசைப் பொருள்களை அனுப்பிய பல்லவ குமாரர், சற்று நேரத்துக்கெல்லாம் தாமே தங்க ரதத்தில் வருவதாகவும் தெரியப்படுத்தச் சொன்னார்.”

மறுபடியும் சிவகாமியின் மகிழ்ச்சி ததும்பிய உண்மைக் குரல் “ஆஹா! மாமல்லரே வருவதாகச் சொன்னாரா! அப்படியானால் இன்றைக்கு என் பிறந்தநாள்தான்!… அப்பா! இன்றைக்கு உங்கள் மகளின் பிறந்தநாள் தெரிகிறதா? என்ன பேசாமல் இருக்கிறீர்கள்! இன்றைக்கு ஒரு நாளாவது பச்சிலை அரைப்பதை நிறுத்துங்கள்… அதோ ரதம் வரும் சத்தம் கேட்கிறதே!”

சிவகாமி, சிம்மாசனத்திலிருந்து துள்ளி எழுந்தாள். அப்போது, உண்மையாகவே வீட்டுக்கு வெளியில் ரதம் வரும் சத்தம் கேட்டது. முகத்தில் சொல்ல முடியாத ஆவல் ததும்பப் பரபரப்புடன் வாசற்புறம் ஓடிவந்து பார்த்தாள்.

வீட்டை நெருங்கி ரதம் வந்து கொண்டிருந்தது. அது குமார சக்கரவர்த்தியின் தங்கரதம்தான். ரதசாரதியும் கண்ணபிரான் தான். ஆனால், ரதத்தில் இருப்பது யார்? வேறு யாரோபோல் இருக்கிறதே!

ஆஹா! என்ன ஏமாற்றம்! வருகிறவர் யாராயிருந்தாலும், நிச்சயமாக மாமல்லர் அல்ல! சிவகாமி, அந்தச் சிற்ப வீட்டின் வாசல் தூணைப் பிடித்துக் கொண்டு கற்சிலையைப் போல் நின்றாள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 3
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here