Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 41

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 41

67
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 41 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 41 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 41: பிழைத்த உயிர்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 41

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 41: பிழைத்த உயிர்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 41

வராக நதியில் சென்று கொண்டிருந்த படகுகளையே சிவகாமி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில், ஆயனர் பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்தது யார் என்று திரும்பிப் பார்த்தார். குண்டோ தரன் பின்னால் நிற்பதைக் கண்டு, “அப்பனே! இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்?” என்று கேட்டார்.

“அதை ஏன் கேட்கிறீர்கள், ஐயா! அக்கரைக்கு நான் போய்த் தளபதியிடம் மாமல்லர் இங்கு பத்திரமாயிருப்பதைத் தெரிவித்துவிட்டுத் திரும்பினேன். தளபதியும் வீரர்களும் படகுகள் சம்பாதித்துக்கொண்டு வருவதற்குள்ளே நான் முன்னால் வந்துவிட வேண்டுமென்றுதான் விரைந்து வந்தேன். வந்து பார்த்தால் ஆற்றங்கரையில் நான் கட்டிவிட்டுப் போன பானைத் தெப்பத்தைக் காணோம். மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்தில் யாரோ ஒருவர் தெப்பத்தைச் செலுத்திக் கொண்டு இந்தக் கரையண்டை வந்து கொண்டிருந்தது தெரிந்தது. மொட்டைத் தலையையும் காவித் துணியையும் பார்த்தால், புத்த பிக்ஷு மாதிரி இருந்தது. நம்ம நாகநந்தியடிகள் தானாக்கும் என்று கூப்பிட்டுப் பார்த்தேன். பிக்ஷு திரும்பிப் பார்க்கவே இல்லை. எனக்கு அசாத்திய கோபம் வந்துவிட்டது. உலகத்திலேயுள்ள காவித்துணி அணிந்த புத்த பிக்ஷுக்களையெல்லாம் வாயில் வந்தபடி உரத்த குரலில் திட்டினேன். என்னுடைய குரலைக் கேட்டுவிட்டு, நதிக் கரையோடு வந்த இரண்டு பேர் என்னிடம் வந்து, ‘என்ன அப்பா சமாசாரம்?’ என்று விசாரித்தார்கள். நான் விஷயத்தைச் சொன்னேன். நாகநந்தி பிக்ஷுவைத் தேடிக்கொண்டுதான் அவர்களும் வந்தார்கள் என்று தெரிந்தது. அப்புறம் நாங்கள் மூன்று பேருமாக மரக் கட்டைகளையும் கொடிகளையும் கொண்டு தெப்பம் கட்டிக்கொண்டு இக்கரைக்கு வந்து சேர்ந்தோம். உடனே, அவசர அவசரமாக நமது மடத்துக்கு ஓடினேன். அதற்குள் மாமல்லர் புறப்பட்டு விட்டார் என்றும், நீங்களும் வழியனுப்பப் போயிருக்கிறீர்கள் என்றும் தெரிந்தது. மறுபடியும் இவ்விடம் ஓடிவந்து பார்த்தால், அதற்குள் எல்லாரும் படகிலே ஏறிக்கொண்டு விட்டார்கள். பாருங்கள் ஐயா! இராஜ குலத்தினரை மட்டும் நம்பவே கூடாது. மாமல்லர் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே கிளம்பி விட்டார் பார்த்தீர்களா? ஏதடா, மூன்று நாளாய் உயிருக்குயிரான சிநேகிதனைப்போலப் பழகினோமே என்ற ஞாபகம் கொஞ்சமாவது இருந்ததா?”

இவ்விதம் மூச்சு விடாமல் குண்டோ தரன் பேசியதையெல்லாம் ஒரு காதினால் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமி, “ஆமாம் குண்டோ தரா! ‘இராஜ குலத்தவரை நம்பவே கூடாதுதான்!” என்றாள்.

ஆயனர், “அதெல்லாம் இருக்கட்டும், குண்டோதரா! நாகநந்தி இந்தக் கிராமத்துக்கு வந்தாரென்றா சொல்லுகிறாய்? நான் பார்க்கவில்லையே?”

“நாகப்பாம்பு அவ்வளவு சுலபமாக வெளியிலே தலைகாட்டி விடுமா? புற்றிலே ஒளிந்து கொண்டிருக்கும்” என்றான் குண்டோதரன்.

“பெரியவர்களைப் பற்றி அப்படியெல்லாம் சொல்லாதே, குண்டோ தரா! நாகநந்தி பெரிய மகான். உண்மையில், அவரும் இந்தக் கிராமத்திலேயே தங்கிவிட்டால் எனக்கு வெகு சந்தோஷமாயிருக்கும். பாறைக் கோயில்கள் அமைப்பது பற்றி அவர் நல்ல நல்ல யோசனைகள் கூறுவார்!” என்றார் ஆயனர்.

பிறகு, “இன்னும் யாரோ இரண்டு பேர் நாகநந்தியைத் தேடிக் கொண்டு வந்தார்கள் என்றாயே! அவர்கள் யார்?” என்று கேட்டார்.

“குருநாதரே! அந்த மனிதர்கள் கூடச் சிற்பக் கலையிலே ரொம்பப் பிரியம் உள்ளவர்கள் போலிருக்கிறது. நம்முடைய பானைத் தெப்பம் பாறையிலே மோதி உடைந்ததே, அதே இடத்தில்தான் நாங்களும் மரக் கட்டைத் தெப்பத்தில் வந்து இறங்கினோம். பாறைகளைப் பார்த்ததும் அந்த மனிதர்களில் ஒருவர் என்ன சொன்னார் தெரியுமா. உங்களைப் போலவே ‘இந்தப் பாறைகளைக் குடைந்து எவ்வளவு அழகான கோயில்கள் அமைக்கலாம்!’ என்றார். எனக்கு அதிசயமாயிருந்தது ‘என் குருவும் அப்படித்தான் சொன்னார்!’ என்றேன். ‘யார் உன் குரு?’ என்று அந்த மனிதர் கேட்டார். உங்கள் பெயரைச் சொன்னதும் அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். உங்களைக் கூட அவருக்குத் தெரியும் போலிருக்கிறது, குருவே!”

“அப்படி யார், என்னைத் தெரிந்தவர்? பாறைகளைப் பார்த்ததும் கோயில் ஞாபகம் வரக்கூடியவர் நான் அறிந்த வரையில் ஒரே ஒருவர்தான் உண்டு. அவர் இங்கே வருவதற்கு நியாயம் இல்லையே! வேறு யாராயிருக்கும்?” என்றார் ஆயனர்.

“அவர்கள் இந்த ஆற்றங்கரை ஓரத்திலேதான் எங்கேயோ படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் தேடிப் பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறேன். நீங்கள் முன்னால் போங்கள், குருவே!” என்றான் குண்டோதரன்.

இதற்குள் படகுகள் வராக நதியில் பாதிக்கு மேல் கடந்து சென்று விட்டபடியால், மண்டபப்பட்டு வாசிகள் ஒருவருக்கொருவர், “திரும்பிப் போகலாமா?” என்று கேட்டுக் கொண்டு, கிராமத்தை நோக்கிக் கிளம்பத் தொடங்கினார்கள். அவர்களுடன் ஆயனரும் சிவகாமியும் புறப்பட்டுச் சென்றார்கள்.

போகும்போது அந்த கிராமவாசிகள் மாமல்லரின் அரிய குணங்களைப் பற்றியும், பரஞ்சோதிக்கும் அவருக்கும் உள்ள சிநேகத்தைப் பற்றியும் பாராட்டிப் பேசிக்கொண்டு போனது சிவகாமியின் காதில் விழுந்து கொண்டிருந்தது. மாமல்லரின் பிரிவினால் வறண்டு உலர்ந்துபோன அவள் உள்ளத்தில் அந்த வார்த்தைகள் இன்ப மழைத் துளிகளைப் போல் விழுந்தன.

ஆயனர் முதலியவர்களைப் பிரிந்து நதிக்கரையோடு சென்ற குண்டோ தரன் நிலா வெளிச்சத்தில் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே சென்றான். பாறைகள் நிறைந்த இடத்தை அணுகிய போது இன்னும் சர்வஜாக்கிரதையாக முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு சென்றான். சட்டென்று பாறை மறைவிலிருந்து இருவர் வெளிப்பட்டதும் ஒருகணம் திகைத்துவிட்டு, அவர்கள் இன்னார் என்று தெரிந்து கொண்டதும், எதிரில் வணக்கத்துடன் நின்றான்.

“குண்டோதரா! நல்ல காரியம் செய்தாய்! எங்களை இப்படிக் காக்க வைத்துவிட்டுப் போயே போய்விட்டாயே? நீ உயிரோடிருக்கிறாயா, அல்லது யமலோகத்துக்கே போய் விட்டாயா என்றே எங்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது!” என்றார் ஒற்றர் தலைவர் சத்ருக்னன்.

“எஜமானனே! உங்கள் புண்ணியத்தினால் உயிர் பிழைத்தேன். கொஞ்சம் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் நிஜமாகவே யமலோகத்துக்குப் போயிருப்பேன். இந்தக் கூரிய கத்தி என் நெஞ்சிலே பதிந்திருக்கும்!” என்று குண்டோ தரன் கூறி, நாகவடிவமாகப் பிடி அமைந்திருந்த ஒரு அபூர்வமான சிறு கத்தியை எடுத்து நீட்டினான்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 40
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 42

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here