Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 42

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 42

105
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 42 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 42 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 42: விஷக் கத்தி

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 42

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 42: விஷக் கத்தி

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 42

குண்டோதரன் நீட்டிய கத்தியைச் சத்ருக்னன் வாங்குவதற்காகக் கையை நீட்டியபோது, “ஜாக்கிரதை! சத்ருக்னா! கத்தியை ஜாக்கிரதையாக வாங்கு!” என்றார் வஜ்ரபாஹுவின் வேஷத்திலிருந்த மகேந்திர பல்லவர்.

பிறகு குண்டோ தரனைப் பார்த்து “இவ்வளவு அஜாக்கிரதையாக இந்தக் கத்தியை மடியில் கட்டிக் கொண்டு வந்தாயே? இது நெஞ்சில் பதிய வேண்டிய அவசியமில்லை. இதன் முனை உடம்பிலே பட்டுச் சிறுகாயம் ஏற்பட்டால் போதும்; இரத்தத்தில் விஷங்கலந்து ஆள் ஒரு முகூர்த்தத்தில் செத்துப் போவான்,” என்றார்.

“ஐயோ!” என்றான் குண்டோதரன்.

“போகட்டும்! பிக்ஷுவை எங்கே விட்டுவிட்டு வந்தாய் சீக்கிரம் சொல்லு!” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

குண்டோதரன் அவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல், “கடவுள்தான் காப்பாற்றினார்!” என்று கூறினான் அவனுடைய உடம்பு நடுங்கிற்று.

சத்ருக்னன் கோபமாக, “ஆம், குண்டோதரா! உன்னுடைய தாமதத்தினால் காரியம் கெட்டுப் போகாமல் கடவுள்தான் காப்பாற்றினார். பல்லவேந்திரர் கேட்பதற்கு மறுமொழி சீக்கிரம் சொல்லு. இத்தனை நேரம் நாங்கள் காஞ்சி மார்க்கத்தில் பாதி தூரம் போயிருக்க வேண்டும்” என்றான்.

குண்டோதரன் இன்னும் கலக்கம் தீராதவனாய், “என்ன சொல்லவேண்டும்?” என்று கேட்டான். சத்ருக்னனுடைய கையிலிருந்த கத்தியை நோக்கியபோது, அவனுடைய தேகமெல்லாம் மீண்டும் பதறி நடுங்கியது. “நாசமாய்ப் போயிற்று! இன்றைக்கு உனக்கு என்ன வந்து விட்டது, குண்டோ தரா! உடனே பிரபுவின் கேள்விக்கு மறுமொழி சொல்லு. இல்லாவிட்டால் இந்த விஷக்கத்தி உன் நெஞ்சில் பாயப் போகிறது!” என்று சத்ருக்னன் கத்தியை ஓங்கினான்.

“எஜமானனே! என் முட்டாள்தனத்துக்குத் தக்க தண்டனை தான். இந்த ஏழையின் உயிர் போனால் மோசம் ஒன்றுமில்லை .நஞ்சுண்ட கண்டரின் அருளினால் பல்லவ குமாரருக்கு ஒன்றும் நேராமல் போயிற்றே!” என்றான் குண்டோதரன்.

இதைக் கேட்டு, எதற்கும் கலங்காமல் மலைபோல் நிற்கும் வழக்கமுடைய மகேந்திர பல்லவர்கூடச் சற்று நடுங்கி விட்டார்.

“குண்டோ தரா! இந்த விஷக்கத்தி மாமல்லன் மேல் பாய்வதற்கிருந்ததா!”

“ஆம், பிரபு! ஐந்தாறு தடவை புத்த பிக்ஷு இந்தக் கத்தியை வைத்துக் கொண்டு, மாமல்லரின் முதுகை நோக்கிக் குறி பார்த்தார். அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மாயிருந்தேன். தங்களுடைய கட்டளையினாலேதான்! இல்லாவிட்டால்?…” என்று குண்டோதரன் பற்களை ‘நறநற’ வென்று கடித்தான்.

உண்மையிலேயே, மாமல்லர் அன்று இரவு தப்பிப் பிழைத்தது தமிழகம் செய்திருந்த தவப் பயன் என்றுதான் சொல்லவேண்டும். மகிழ மரத்தினடியில் மாமல்லரும் சிவகாமியும் அமர்ந்து மதுரத் தமிழ்மொழியிலும் மௌன பரிபாஷையிலும் காதல் சம்பாஷணை நடத்திக் கொண்டிருந்தபோது, அவர்கள் இருந்த பாறைக்குப் பின்னாலிருந்த புத்த பிக்ஷு விஷக் கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு குறிபார்த்த வண்ணமிருந்தார். ஆனால் எக்காரணத்தினாலோ எறிவதற்குத் தயங்கினார். மாமல்லரின் பக்கத்திலே சிவகாமி இருந்ததும், தப்பித் தவறிக் கத்தி அவள் மேல் விழுந்து விடுமோ என்ற எண்ணமும்தான் பிக்ஷுவுக்கு அத்தகைய தயக்கத்தை அளித்ததோ என்னமோ, யாருக்குத் தெரியும்?

பிறகு, சிவபெருமான் உகந்தணியும் ஆபரணமான நாகப் பாம்பு அங்கு வந்து சேர்ந்தது. சிவகாமியும் மாமல்லரும் மகிழ மரத்தடியிலிருந்து கிளம்பி நிலா வெளிச்சம் பளிச்சென்று எரிந்த விசாலமான பாறையில் போய் உட்காருவதற்குக் காரணமாயிற்று. புத்த பிக்ஷுவும் தாம் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளிக் கிளம்பி வேறிடத்துக்குப் போய் மறைந்து கொண்டார்.

இதையெல்லாம் இன்னொரு பாறை மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குண்டோதரனுடைய கை ஊறியது. பின்புறமாகச் சென்று புத்த பிக்ஷுவின் கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொன்றுவிட வேண்டுமென்ற அடங்காத ஆர்வம் அவனுக்கு உண்டாயிற்று. அந்த ஆர்வத்தை அவன் அடக்கிக் கொண்டு பொறுமையுடன் இருந்ததன் காரணம் மகேந்திர சக்கரவர்த்தியின் கண்டிப்பான கட்டளைதான்.

அன்று மாலை சக்கரவர்த்தியும் சத்ருக்னனும் குண்டோதரனும் மரக்கட்டைத் தெப்பத்தில் வராக நதியைத் தாண்டிக் கரையில் இறங்கியபோது, சற்றுத் தூரத்தில் ஒரு பாறையின் மேல் புத்த பிக்ஷு நின்று சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது சக்கரவர்த்தி குண்டோதரனைப் பார்த்துச் சொன்னார்: “குண்டோ தரா! இத்தனை காலமாக நீ செய்திருக்கும் வேலையெல்லாவற்றையும் விட முக்கியமான வேலை உனக்கு இப்போது தரப் போகிறேன். அதில் ஒரு அணுவளவுகூடப் பிசகாமல் சர்வ ஜாக்கிரதையாய்ச் செய்து முடிக்கவேண்டும். இந்த பிக்ஷுவை ஒரு கண நேரங்கூட விடாமல் நீ பின் தொடர்ந்து போக வேண்டும். உன் கண்பார்வையிலிருந்து அவர் அகலுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. நீ அவரைப் பின் தொடர்கிறாய் என்பதும் அவருக்குத் தெரியக்கூடாது. ஆற்றுக்கு அக்கரையில் எங்களுக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. திரும்பிப் போய் அதை முடித்துவிட்டு இதே இடத்திற்கு மறுபடியும் வந்து சேருகிறோம். இவ்விடத்தில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். சந்திரன் தலைக்குமேல் வரும்போது நீ இங்கே வந்து எங்களுக்குச் சமாசாரம் தெரிவிக்க வேண்டும். பிக்ஷு எங்கே போனார், என்னென்ன செய்தார் என்று தெரியப்படுத்த வேண்டும். ஆனால் அவர் முன்னால் மட்டும் நீ எதிர்ப் படவே கூடாது.”

இவ்விதம் கட்டளையிட்டு, “நான் சொன்னதையெல்லாம் நன்றாய் மனதில் வாங்கிக் கொண்டாயா, குண்டோதரா! எல்லாம் தவறின்றிச் செய்வாயா?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“அப்படியே செய்வேன், பிரபு!” என்று ஒப்புக்கொண்டு பிக்ஷுவைத் தொடர்ந்தான் குண்டோதரன்.

இதன் காரணமாகத்தான் பிக்ஷுவின் மேல் பொங்கி வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு குண்டோதரன் பலமுறையும் சும்மா இருக்க வேண்டியதாயிற்று.

ஆயனரும் சிவகாமியும் மாமல்லரும் பாறைப் பிரதேசத்திலிருந்து கிராமத்தை நோக்கிப் புறப்பட்ட போது, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் பாதை ஓரத்து மரஞ்செடிகளிலும் புதர்களிலும் மறைந்து புத்த பிக்ஷு சென்றார். புத்த பிக்ஷு அறியாமல் அவரைப் பின்தொடர்ந்து குண்டோதரனும் போகலானான்.

கிராமத்தின் முனையிலேயிருந்த கோயிலின் மதிலை நெருங்கியதும், மடத்து வாசலில் கூட்டமாக நிற்பவர்கள் யார் என்று பார்த்து வர ஆயனர் சென்றாரல்லவா? அப்போது சிவகாமிக்கும் மாமல்லருக்கும் அன்பு மொழிகள் பேசவும், பரஸ்பரம் பிரதிக்ஞை செய்து கொள்ளவும் மறுபடி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் நின்ற இடம் கோயில் மதில் திருப்பத்தின் ஒரு முனை, அதே முனையின் மற்றொரு திருப்பத்தில் நின்ற புத்த பிக்ஷுவுக்கும் தமது கத்தி முனையைக் குறிபார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் குறிபார்த்த கத்தியை எறிவதற்கு மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஏனெனில், பிக்ஷுவின் கை எட்டக் கூடிய இடத்திலே சிவகாமியும் அவளுக்கு அந்தண்டைப் புறத்தில் மாமல்லரும் நின்று கொண்டிருந்தார்கள். சிவகாமியும் மாமல்லரும் இடம் மாறி நிற்கும் நேரத்தைப் பிக்ஷு எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

கோயில் மதிலுக்கு எதிர்ப்புறத்திலே இருந்த தோட்ட வேலிக்குப் பின்னால் மறைந்து நின்று மேற்படிக் காட்சியைக் குண்டோதரன் பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு மூன்று தடவை பிக்ஷு கத்தியை ஓங்கியதைப் பார்த்த பிறகு இனிமேல் பொறுக்க முடியாதென்று குண்டோதரன் அவர்மேல் பாய்வதற்குச் சித்தமானபோது, நல்லவேளையாக ஊர்ப் பக்கமிருந்து தளபதி பரஞ்சோதியும் மற்ற வீரர்களும் திடுதிடுவென்று வந்து விட்டார்கள். பிக்ஷுவும் உடனே நகர்ந்து பின்னால் போய் விட்டார்.

மாமல்லரைப் பரஞ்சோதி அழைத்துக்கொண்டு போனதையும் அவர்களுக்குப் பின்னால் ஆயனரும் சிவகாமியும் சென்றதையும் பார்த்துக் கொண்டிருந்தான் குண்டோதரன். சற்றுப் பின்னர் புத்த பிக்ஷு அதே மதில் முனைக்கு அருகில் வந்து நிற்பதையும் கண்டான். பின்னர், குண்டோதரன் சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்றைப் புத்த பிக்ஷு செய்தார். கோயில் பிரகாரத்துக்கு உட்புறமிருந்து வெளியே படர்ந்திருந்த மரக்கிளைகளை இலேசாகப் பிடித்துக்கொண்டு மதிலின் மேல் ஏறி உட்புறம் குதித்தார்.

அடுத்த கணத்தில் குண்டோதரன் புத்த பிக்ஷு சற்று முன் நின்ற இடத்துக்கு வந்து சேர்ந்தான். ஒரு வினாடி நேரம் அவனுடைய நெஞ்சு தொண்டைக்கு வந்துவிட்டது. ஏனெனில், அவன் நின்ற இடத்துக்கு வெகு சமீபத்தில் ஒரு சிறு பாம்பு நெளிவதைக் கண்டான். அங்கிருந்து துள்ளி நகர்ந்து கொண்டு மறுபடியும் பாம்பு இருந்த இடத்தைப் பார்த்தபோது அவனுக்குச் சிறிது வியப்புண்டாயிற்று. ஏனெனில் பாம்பு அசையாமல் கிடந்த இடத்திலேயே கிடந்தது. மறுபடியும் உற்றுப் பார்த்தபின், ‘களுக்’ என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். உண்மையில் அது பாம்பு இல்லையென்றும், நாகம் போன்ற பிடியமைந்த கத்தி என்றும் தெரிந்தது. அந்தக் கத்தியை விரைந்து எடுத்து மடியிலே கட்டிக் கொண்ட பிறகு, மதில்மேல் ஏறுவதற்காக அண்ணாந்து பார்த்தான்.

அச்சமயம் மதிலுக்கு அப்புறத்தில் மரக்கிளைகள் அசையும் சத்தம் உண்டாகவே, சட்டென்று ஒரு சந்தேகம் உதித்தது. உடனே மதில் முனையின் இன்னொரு பக்கத்துக்கு நகர்ந்து சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு நின்றான். அவன் அப்படி நகர்ந்து நின்றதுதான் தாமதம், புத்த பிக்ஷுவின் தலை மதில் சுவர் மேலே காணப்பட்டது. பிக்ஷு வெளிப்புறம் இறங்குவதற்கு அதிக நேரம் ஆகவில்லை. இறங்கியவர் தரையிலே உற்றுப் பார்த்த வண்ணம் எதையோ தேடத் தொடங்கினார்.

அவர் எதைத் தேடுகிறார் என்பதை ஊகித்து உணர்ந்து கொண்ட குண்டோதரன் சிறிதும் சத்தமில்லாதபடி மதில்மேல் ஏறிக் கோயிலுக்குள்ளே குதித்தான். அவன் குதித்த இடத்துக்கு வெகு சமீபத்தில் மதில் சுவரை ஒட்டிக் கோயில் மடைப்பள்ளி இருந்தது. மடைப்பள்ளி சுவருக்குப் பின்னால் அவன் மறைந்து நின்று கொண்டான்.

சற்று நேரத்துக்குப் பிறகு புத்த பிக்ஷு மறுபடியும் கோயில் பிராகாரத்துக்குள்ளே குதித்தார். குதித்த இடத்தில் பன்னீர் மரத்தடியில் குனிந்து தேடினார். அதிலும் பயனின்றி அவர் நிமிர்ந்தபோது, அவருடைய மூச்சு நாகப் பாம்பின் சீறலைப் போல் தொனிப்பதைக் கேட்டு, அஞ்சா நெஞ்சமுடைய குண்டோதரன் கூட நடுங்கினான்.

புத்த பிக்ஷு பன்னீர் மரத்தடியில் சற்று நேரம் நிற்பதும், பிராகாரத்தில் கொஞ்ச தூரம் நடந்து சென்று வெளிப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புவதுமாயிருந்தார். இடையிடையே கோயிலுக்கு வெளியிலிருந்து போர் வீரர்களின் ஜயகோஷமும் கிராமவாசிகளின் ஆரவார முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன.

ஏறக்குறைய அர்த்தராத்திரி ஆனபோது, சந்தடி அடங்கியது. கோயிலின் கர்ப்பக்கிருஹக் கதவுகளைச் சாத்தித் தாளிடும் சத்தம் கேட்டது. இதற்குப் பிறகு நாகநந்தியடிகள் மரத்தடியிலிருந்து எழுந்து கோயில் பிராகாரத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கினார். மடைப்பள்ளியின் கதவு திறந்திருப்பதைப் பிக்ஷு பார்த்து விட்டு உள்ளே நுழைந்ததைக் கண்டான் குண்டோதரன். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தான். இரண்டே எட்டில் மடைப்பள்ளி வாசலுக்குச் சென்று கதவை லேசாகச் சாத்தி வாசற்புறத்துத் தாழ்ப்பாளை இழுத்துப் போட்டான்.

உடனே மதில் சுவர் ஏறிக் குதித்து வெளியில் வந்து வராக நதியின் தோணித் துறையை நோக்கி விரைந்து சென்றான். படகுகள் கிளம்பிய பிறகே குண்டோதரன் தோணித் துறைக்கு வந்து சேர்ந்தான் என்பதை முன் அத்தியாயத்தில் பார்த்தோம்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 41
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 43

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here