Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 43

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 43

59
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 43 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 43 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 43: பிக்ஷு யார்?

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 43

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 43: பிக்ஷு யார்?

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 43

பிக்ஷுவிடம் தான் கவர்ந்து கொண்டு வந்தது விஷக் கத்தி என்று தெரிந்து நடுங்கிய குண்டோ தரனைப் பார்த்து, “பிக்ஷுவை எங்கே விட்டுவிட்டு வந்தாய்? சீக்கிரம் சொல்!” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“கோயில் மடைப்பள்ளிக்குள்ளே அடைத்துத் தாளிட்டு வந்திருக்கிறேன், பிரபு!” என்றான் குண்டோதரன்.

“நல்ல காரியம் செய்தாய்! வா, போகலாம்! கிராமத்துக்கு வழி காட்டு!” என்றார் மகேந்திர பல்லவர்.

அப்போது சத்ருக்னன், “பிரபு! கிராமத்துக்கு நாம் ஏன் இப்போது போக வேண்டும்? நாம் வந்த காரியம் ஆகிவிட்டது. புத்த பிக்ஷுவைக் குண்டோதரன் கவனித்துக் கொள்ளுவான் நாம் போகலாம், வாருங்கள்!” என்று கவலை தொனித்த குரலில் கூறினான்.

மகேந்திர பல்லவர், “இல்லை சத்ருக்னா! நாம் வந்த காரியம் இன்னும் ஆகவில்லை. வாதாபிப் படைகளைத் தடுப்பதைக் காட்டிலும் முக்கியமான காரியம் இங்கே நமக்கு இருக்கிறது. துரோகி துர்விநீதனைச் சிறைப்படுத்தியது பெரிய காரியமில்லை. நாகநந்தி பிக்ஷுவைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனோமானால், இந்த யுத்தத்தில் நமக்கு முக்கால் பங்கு வெற்றி கிடைத்து விட்டது” என்றார்.

“பிரபு! அவ்வளவு முக்கியமான காரியமாயிருந்தால், பிக்ஷுவை வெகு நாளைக்கு முன்பே சுலபமாகச் சிறைப்படுத்தியிருக்கலாமே? ஆயனர் வீட்டிலேயே பிடித்திருக்கலாமே?”

“இத்தனை நாளும் பிக்ஷு சுயேச்சையாக இருத்தல் நான் உத்தேசித்திருந்த காரியங்களுக்கு அவசியமாயிருந்தது. இனிமேல் அவர் வெளியில் இருந்தால் பாதகம் விளையும்.”

“பிரபு! பிக்ஷுவைச் சிறைப் பிடிக்கும் வேலையை என்னிடமும் குண்டோ தரனிடமும் ஒப்படையுங்கள். தாங்கள் உடனே புறப்பட்டுச் செல்லுங்கள். ஆற்றுக்கு அக்கரையில் கண்ணபிரான் ரதத்தைப் பூட்டி ஆயத்தமாய் வைத்திருந்தான்.”

“இந்த வேலையை உங்கள் இருவரிடம் கூட ஒப்படைக்க முடியாது சத்ருக்னா! நானேதான் செய்தாக வேண்டும். குண்டோ தரா! போ முன்னால்!” என்றார் மகேந்திர பல்லவர்.

அதற்கு மேல் சத்ருக்னன் வாய் திறக்கவில்லை. மூன்று பேரும் ஏறக்குறைய பொழுது புலரும் சமயத்தில் மண்டபப்பட்டுக் கிராம எல்லையை அடைந்து, கோயில் வெளி மதிலைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்றார்கள்.

மடைப்பள்ளியின் கதவு வெளித் தாளிட்டபடி இருந்தது. சற்று கர்வத்துடனேயே குண்டோதரன் அந்த வெளித் தாளை அப்புறப்படுத்திக் கதவைத் திறந்தான். மூவரும் உள்ளே பிரவேசித்தார்கள் நாலாபுறமும் நன்றாய்ப் பார்த்தார்கள்.

மடைப்பள்ளியின் உட்புறம் சூனியமாயிருந்தது! மேற்கூரையில் சில ஓடுகள் எடுக்கப்பட்டபடியினால் உண்டாகியிருந்த துவாரம், பிக்ஷு எவ்விதம் அங்கிருந்து தப்பிச் சென்றார் என்பதை துலாம்பரமாகத் தெரியப்படுத்தியது.

“நினைத்தேன், சத்ருக்னா! பிக்ஷுவைச் சிறைப் பிடிக்கும் வேலையை உங்களிடம் நான் ஒப்புவியாததன் காரணம் இப்போது தெரிகிறதா?” என்றார் மகேந்திர பல்லவர்.

“குண்டோ தரா! பல்லவேந்திரர் கூறியது காதில் விழுந்ததா? காஞ்சி ஒற்றர் படைக்கு நீ அழியாத அவமானத்தை உண்டு பண்ணிவிட்டாய்!” என்றான் சத்ருக்னன்.

“எஜமானே! அந்த அவமானத்தை இன்றைக்கே போக்கி விடுகிறேன். கருணை புரிந்து தங்களிடமுள்ள கத்தியை இங்கே கொடுங்கள். நாகநந்தி பிக்ஷு இந்த கிராமத்திலேதான் இன்னும் இருக்கவேண்டும். நாளைப் பொழுது விடிவதற்குள் அவரைக் கண்டுபிடித்து அவருடைய தேகத்தில் இந்த விஷக் கத்தியைப் பதித்துக்கொல்லாவிட்டால், என்னுடைய நெஞ்சிலே இதைப் பதித்துக் கொண்டு உயிரை விடுவேன்” என்றான் குண்டோதரன்.

சத்ருக்னன் கத்தியைக் குண்டோ தரனிடம் கொடுக்க யத்தனித்தபோது, மகேந்திர பல்லவர் குறுக்கிட்டு அதை வாங்கிக் கொண்டார்.

“குண்டோ தரா! இந்த மாதிரி அசட்டுத்தனமான சபதம் இனிமேல் செய்யாதே! புத்த பிக்ஷுவின் உடம்பில் இந்தக் கத்தியை நீ செலுத்த முடியாது! அவருடைய தேகம் வஜ்ர தேகம். அவரைக் குத்தினால் கத்தியின் முனைதான் மழுங்கும். அப்படி அவரை நீ காயப்படுத்தினாலும், இந்தக் கத்தியிலுள்ள விஷம் அவரைக் கொல்லாது…” என்றார் மகேந்திர சக்கரவர்த்தி.

“அது எப்படி, பிரபு! பிக்ஷு மந்திரவாதியா? மந்திர சாதனங்களில் உங்களுக்குக்கூட நம்பிக்கை உண்டா?” என்று கேட்டான் சத்ருக்னன்.

“மந்திரமும் இல்லை; மாயமும் இல்லை. விஷத்தை விஷம் ஒன்றும் செய்ய முடியாதல்லவா? புத்த பிக்ஷுவின் தேகத்தில் ஓடும் இரத்தம் விஷம் கலந்த இரத்தம். எத்தனையோ காலமாக விஷ மூலிகைகளை அருந்தி உடம்பையே விஷமயமாகச் செய்து கொண்டவர் அந்த மகான்!”

“ஐயோ! என்ன பயங்கரம்!” என்றான் சத்ருக்னன்.

“புத்த பிக்ஷுவின் தேகக் காற்றுப் பட்டதும் அக்கம்பக்கத்திலுள்ள நாகங்கள் மிரண்டு அங்குமிங்கும் ஓடும்!”

“ஆம், எஜமானே! நானும் பார்த்திருக்கிறேன். அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது!” என்று குண்டோதரன் கூறியபோது, அவனுடைய உடம்பு நடுங்கிற்று.

“கெடில நதிக்கரையில் அந்தப் பயங்கரமான சர்ப்பக் குகையைப் பார்த்தோமே, ஞாபகமிருக்கிறதா, சத்ருக்னா?”

“அதை மறக்க முடியுமா, பிரபு!”

“அதன் மர்மம் என்னவென்பதைக் கண்டுபிடித்தாயா?”

“என்ன யோசித்தாலும் ஊகிக்க முடியவில்லை.”

“நான் சொல்லுகிறேன். காஞ்சிக் கோட்டையை வேறு வழியில் பிடிக்க முடியாவிட்டால், கோட்டைக்குள் இருக்கும் குடி தண்ணீரிலெல்லாம் விஷத்தைக் கலந்துவிடலாம் என்பதற்காகத்தான்…!”

“என்ன கொடுமை? இவ்வளவும் கருணாமூர்த்தியான புத்த பெருமானின் பெயரால், ஒரு புத்த பிக்ஷுவால் செய்யப்படுகிறதா? என்னால் நம்ப முடியவில்லையே!” என்றான் சத்ருக்னன்.

“நம்ப முடியாத காரியந்தான். ஆனால் புத்த பிக்ஷு நிஜமான புத்த பிக்ஷு இல்லையே! காவித் துணியையும் பௌத்த சங்கங்களையும் தன்னுடைய காரியங்களுக்காக உபயோகப்படுத்திக் கொள்ளும் மிக மிகச் சாமர்த்தியசாலியான ஒற்றன் அல்லவா?”

“அப்பேர்ப்பட்ட கிராதகக் கொலைபாதகனைக் கொல்லாமல் விடவேண்டும் என்கிறீர்களே?”

“கொல்லுவதனால் பயனில்லை சிறைப்பிடித்து வைத்தோமானால் புலிகேசியுடன் நாம் நடத்தும் யுத்தத்தில் ஒரு பெரிய ஆயுதமாகப் பிக்ஷு உபயோகப்படுவார்.”

“பிரபு! பிக்ஷு யார்?” என்று கேட்டான் சத்ருக்னன்.

“ஓர் ஊகம் இருக்கிறது. நிச்சயமாகத் தெரிந்த பிறகு சொல்கிறேன், சத்ருக்னா! நீயும் உன் சீடன் குண்டோ தரனும் இதுவரையில் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு எவ்வளவோ மகத்தான சேவைகளைப் புரிந்திருக்கிறீர்கள். ஆனால், அவையெல்லாவற்றையும் விடப் பரம முக்கியமான காரியம் உங்களால் இப்போது ஆக வேண்டியிருக்கிறது. நான் சொல்லுவதை இருவரும் கவனமாகக் கேட்டு அந்தப்படி செய்தால், காரியம் ஜயமாகலாம், என்ன சொல்லுகிறீர்கள்?”

“தங்கள் சித்தம், பிரபு! கட்டளைப்படி அணுவும் பிசகின்றி நடந்துகொள்கிறோம்” என்றான் சத்ருக்னன்.

பொழுது புலரும் நேரத்தில் பன்னீர் மரத்திலே மலர்ந்து குலுங்கிய புஷ்பங்கள் ‘கம்’மென்று மணம் வீசின. ஏறக்குறைய வட்டவடிவமாயிருந்த சந்திரன் பொன்னிறத்தை இழந்துவெண்தாமரையின் நிறத்தைப் பெற்று மேற்குத் திசையின் அடியில் அமிழ்ந்துகொண்டிருந்தான்.

அந்த அதிகாலை நேரத்தில் கோயில் பிராகாரத்தில் மடைப்பள்ளி வாசலில் மகேந்திர சக்கரவர்த்தி அமர்ந்து சத்ருக்னனையும் குண்டோ தரனையும் அருகில் உட்காரச் சொல்லி, அவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைப்பற்றிக் கூறினார்.

ஒற்றர்கள் இருவரும் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 42
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 44

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here