Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 44

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 44

92
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 44 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 44 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 44: சிங்க இலச்சினை

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 44

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 44: சிங்க இலச்சினை

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 44

மறு நாள் பொழுது விடிந்து சூரியன் வானவெளியில் இரண்டு நாழிகை பிரயாணம் செய்திருந்தும், மண்டபப்பட்டுக் கிராமத்து வீதிகளில் ஜன நடமாட்டமும் கலகலப்பும் இல்லை. இரண்டு நாளாக இரவில் நடந்த களியாட்டங்களில் ஈடுபட்டதனாலும், எதிர்பாராத விந்தைச் சம்பவங்களினால் உள்ளக் கிளர்ச்சியடைந்து தூக்கமின்றி இரவு நேரங்களைக் கழித்ததனாலும், அந்தக் கிராமவாசிகள் அன்று காலை கொஞ்சம் மந்தமாகவே இருந்தார்கள். பல வீடுகளில் வாசற் கதவுகள் இன்னும் திறக்கப்படாமலே இருந்தன. திருநாவுக்கரசர் மடத்து வாசற்கதவும் அவ்வாறு உட்புறம் தாழிடப்பட்டுத்தான் இருந்தது. ஆனால் உள்ளே பேச்சுக் குரல் கேட்டது.

குண்டோதரன், சத்ருக்னன், வஜ்ரபாஹு ஆகிய மூவரும் அந்த வேளையில் மடத்து வாசலுக்கு வந்தார்கள். குண்டோதரன் கதவை இடித்தான். உள்ளே கேட்டுக் கொண்டிருந்த பேச்சுக் குரலின் சத்தம் உடனே நின்றது. மனிதர் நடமாடும் சத்தமும், கதவுகள் திறந்து மூடப்படும் சத்தமும் கேட்டன. பிறகு, வாசற் கதவு திறந்தது.

ஆயனர் வெளியிலே வந்து, “நீதானா, குண்டோ தரா! இராத்திரியெல்லாம் எங்கே போயிருந்தாய்? உன்னை நம்பினால்…” என்று சொல்லிக்கொண்டு வந்தவர், வஜ்ரபாஹுவையும் சத்ருக்னனையும் பார்த்துவிட்டு, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.

“நேற்றிரவு, இரண்டு பேர் வந்திருந்தார்கள் – சிற்பக் கலையில் ஊக்கம் உள்ளவர்கள் என்று சொன்னேனே, அவர்கள்தான். இராத்திரியெல்லாம் இவர்களைத் தேடிக் கடைசியில் பொழுது விடியும் சமயத்தில் கண்டுபிடித்தேன். தங்களைப் பார்க்க வேண்டும் என்று சொன்னபடியால் அழைத்து வந்தேன்” என்றான் குண்டோதரன்.

“அப்படியா! உள்ளே வாருங்கள்! அம்மா, சிவகாமி! மணை எடுத்துப் போடு” என்றார் ஆயனர்.

ஆயனருக்குப் பின்னால் நின்று சிவகாமி உடனே மணைகளை எடுத்துப் போட்டாள். ஆயனரும், வந்தவர்கள் இருவரும் உட்கார்ந்தார்கள். சிவகாமியை வற்புறுத்தி உட்காரச் சொல்லியும் அவள் உட்காரவில்லை. புதிதாக வந்த இருவரையும் ஆவலுடன் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உங்களைப்பற்றி குண்டோதரன் சொன்னான் – சிற்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் என்று. உங்கள் இருவருக்கும் எந்த ஊரோ?” என்று ஆயனர் கேட்டார்.

“குருவே! என்னைத் தெரியவில்லையா?” என்றான் சத்ருக்னன்.

“தெரியவில்லையே, அப்பா! நீ எப்போதாவது என்னிடம் சிற்பம் கற்றுக்கொண்டாயா, என்ன?”

“ஆம், ஐயா! சிவகாமி அம்மையை வேணுமானால் கேளுங்கள் அவருக்கு ஞாபகம் இருக்கும்.”

“ஆமாம், அப்பா! இரண்டு மூன்று நாள் இவர் உங்களுடைய சீடராயிருந்தார்!” என்றாள் சிவகாமி.

“என் அதிர்ஷ்டம் அப்படி! நான் வந்த சில நாளைக்கெல்லாம் தாங்கள் மாமல்லபுரத்துக்குப் போனீர்கள்…” என்றான் சத்ருக்னன்.

“பிறகு, கொஞ்ச நாளைக்கெல்லாம் எல்லா வேலையும் நின்றுவிட்டது. இந்தப் பாழும் யுத்தம் எதற்காக வந்ததோ, எப்போது முடியப் போகிறதோ தெரியவில்லை!” என்று ஆயனர் கூறிப் பெருமூச்சு விட்டார்.

“இன்னும் கொஞ்சம் பொறுமையாயிருங்கள், ஆயனரே! யுத்தம் சீக்கிரத்தில் முடிந்துவிடும். தாங்கள் பழையபடி தங்கள் அரண்ய வீட்டுக்குப் போகலாம்” என்றார் வஜ்ரபாஹு.

அந்தக் குரலைக் கேட்டதும் ஆயனர் சிறிது திடுக்கிட்டவராய், வஜ்ரபாஹுவை உற்று நோக்கி, “ஐயா! தாங்கள் யாரோ?” என்றார்.

“என்னை நிஜமாகவே தெரியவில்லையா, ஆயனரே!”

“பார்த்த ஞாபகமாய் இருக்கிறது.”

அப்போது சிவகாமி தந்தையின் அருகில் வந்து அவருடைய காதோடு, “சக்கரவர்த்தி, அப்பா, தெரியவில்லையா?” என்றாள்.

ஆயனர் அளவிடமுடியாத வியப்புடன் ஒருகணம் வஜ்ரபாஹுவின் முகத்தை உற்று நோக்கினார். பின்னர், அவசரமாகப் பீடத்தை விட்டு எழுந்து, “பிரபு! இது என்ன வேஷம்? அடையாளமே தெரியவில்லையே?” என்றார்.

“வேஷம் போடும் கலையில் என்னுடைய சாமர்த்தியம் இப்போதுதான் எனக்குத் திருப்தி அளித்தது. போர்க்களத்தில் புலிகேசியின் முன்னால் நின்று தூது சொல்லிவிட்டுத் திரும்பியபோது கூட இவ்வளவு திருப்தி எனக்கு உண்டாகவில்லை!” என்றார் மகேந்திரர்.

ஆயனர், “பல்லவேந்திரா! குண்டோதரன் நேற்றிரவே என்னிடம் சொன்னான், யாரோ இருவர் வந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்தக் கிராமத்துப் பாறைகளைப் பார்த்துவிட்டுக் கோயில் அமைப்பதுபற்றிப் பேசினார்கள் என்று. உடனே தங்களுடைய ஞாபகம் எனக்கு வந்தது. அப்படிப்பட்ட சிற்ப மனோகற்பனை உள்ளவர்கள் நம் சக்கரவர்த்தியைத் தவிர யார் உண்டு என்று எண்ணினேன். கடைசியில் தாங்களாகவே இருக்கிறீர்கள்! பிரபு! இந்த ஏழைச் சிற்பியைப் பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் தேடி வந்தீர்கள்? தங்களைப் பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது? ஒரு யுகம் மாதிரி இருக்கிறது” என்றார் ஆயனர்.

“ஆயனரே! உங்களிடம் பொய் வேஷத்துடனே வந்தேன். அதோடு பொய் சொல்லவும் விரும்பவில்லை. நான் இங்கே வந்தது உங்களைப் பார்ப்பதற்காக அல்ல. என் மகன் மாமல்லனைத் தேடிக் கொண்டு வந்தேன்” என்றார் சக்கரவர்த்தி. சிவகாமி நாணத்தினால் தலை குனிந்து கொண்டாள்.

ஆயனர் சிறிது தடுமாறிவிட்டு, “பல்லவேந்திரா! மாமல்லர் நேற்று இரவே புறப்பட்டுச் சென்று விட்டாரே! குண்டோதரன் சொல்லவில்லையா?” என்று கேட்டார்.

“மாமல்லனும் பரஞ்சோதியும் இத்தனை நேரம் காஞ்சிப் பாதையில் போய்க்கொண்டிருப்பார்கள். வந்த இடத்தில் உங்களையும் பார்த்துவிட்டு, மாமல்லனைக் காப்பாற்றியதற்காக நன்றி சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார் சக்கரவர்த்தி.

“பிரபு! மாமல்லரை நாங்கள் காப்பாற்றவில்லையே? வெள்ளத்தில் முழுகிப் போக இருந்த எங்களையல்லவா குமார சக்கரவர்த்தி தக்க சமயத்தில் வந்து காப்பாற்றினார்!”

“ஆம், ஆயனரே! அதுவும் எனக்குத் தெரியும். ஆனால், மாமல்லனுடைய உயிரை நீங்கள் காப்பாற்றியதும் உண்மைதான்; ‘நீங்கள்’ என்றால், முக்கியமாக உங்கள் குமாரியைச் சொல்லுகிறேன். இதோ பார்த்தீர்களா, இந்தக் கத்தியை!” என்று சக்கரவர்த்தி கூறி, நாகப் பிடி அமைந்த கத்தியை எடுத்துக் காட்டினார்.

ஆயனர், சிவகாமி இருவரும் அந்தக் கத்தியை இன்னதென்று விளங்காத பயங்கரத்துடன் பார்த்தார்கள்.

“இந்த விஷக்கத்தி மாமல்லன் மேல் பாய்வதற்கு இருந்தது. அப்போது சிவகாமி பக்கத்தில் இருந்தபடியால் மாமல்லன் அந்த அபாயத்திலிருந்து தப்பினான்!”

சிவகாமி நடுங்கினாள். அவளுடைய இருதய பீடத்தில் வீற்றிருக்கும் தெய்வத்தின்பேரில் விஷக்கத்தி பாய்வதற்கு இருந்தது என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சில் அந்தக் கத்தி பாய்ந்துவிட்டது போன்ற வேதனை உண்டாயிற்று. அவ்விதம் நேராமல் தன்னால் மாமல்லரைக் காப்பாற்ற முடிந்தது என்ற எண்ணம் சொல்ல முடியாத உள்ளக்கிளர்ச்சியை உண்டாக்கிற்று. ஆனால், தான் காப்பாற்றியது எப்படி என்பது தெரியாதபடியால் திகைப்பும் ஏற்பட்டது.

“பிரபு! என்ன சொல்கிறீர்கள்? குமார சக்கரவர்த்தியின் மேல் விஷக்கத்தி ஏன் பாயவேண்டும்? அவ்விதம் செய்ய எண்ணிய பாதகன் யார்? அதை எவ்விதம் சிவகாமி தடுத்தாள்? எல்லாம் ஒரே மர்மமாயிருக்கிறதே? சிவகாமி! உனக்கு ஏதேனும் தெரியுமா?” என்று ஆயனர் கேட்டார்.

“சிவகாமியைக் கேட்பதில் பயனில்லை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. சமயம் நேரும்போது நானே எல்லாம் சொல்கிறேன். இப்போதைக்கு அபாயம் நீங்கி விட்டது. மாமல்லன் காஞ்சிப் பாதையில் வெகு தூரம் இதற்குள் போயிருப்பான். நானும் போக வேண்டியதுதான். ஆயனரே! இந்த மண்டப்பட்டுக் கிராமம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதல்லவா? யுத்தம் முடியும் வரையில் இங்கேயே நீங்கள் தங்கியிருக்கலாமல்லவா?”

“ஆம், பிரபு! அப்படித்தான் உத்தேசம். இந்தக் கிராமவாசிகள் மிகவும் நல்லவர்கள். கலை அபிமானம் உள்ளவர்கள், பாறைக் கோவில்கள் அமைக்க உதவி செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.”

“நானும் அதற்கு ஏற்பாடு செய்கிறேன். உங்களுக்கு வேண்டிய திரவியமும், ஆட்களும், கருவிகளும், கொடுத்து உதவும்படி திருக்கோவலூர்க் கோட்டத்து அதிகாரிகளுக்குக் கட்டளை அனுப்புகிறேன்.”

“பல்லவேந்திரா! தாங்கள் ஒரு நாளாவது இங்கே தங்கலாமா? இன்று சாயங்காலம் பாறைகளைப் போய்ப் பார்த்து எப்படி எப்படிக் கோயில் அமைக்கலாம் என்று தீர்மானிக்கலாமே?”

மகேந்திர சக்கரவர்த்தி சிரித்துவிட்டு, “ஆயனரே! காஞ்சிக்கு மூன்று காத தூரத்தில் வாதாபிப் படைகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். அந்தப் படைகள் காஞ்சிக்கு வருவதற்குள் நான் போயாகவேண்டும்” என்றார்.

“அப்படியா! இங்கிருந்து காஞ்சி ஏழு காத தூரம் இருக்குமே? எப்படிப் போவீர்கள்?” என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.

“அதைப்பற்றிக் கவலையில்லை. நதியின் அக்கரையில் கண்ணபிரான் ரதத்துடன் காத்திருக்கிறான்.”

அப்போது சிவகாமி ஆயனரைப் பார்த்து, “கமலி சௌக்கியமாயிருக்கிறாளா என்று கேளுங்கள் அப்பா!” என்றாள்.

“கமலி சௌக்கியம், அம்மா! கண்ணபிரான் உன்னைப் பார்த்துக் கமலியைப் பற்றிச் சொல்லவேண்டுமென்று எவ்வளவோ ஆவலுடன் இருந்தான். நான்தான் வரக்கூடாதென்று தடுத்து விட்டேன்.”

சிவகாமி மறுபடியும் ஆயனரைப் பார்த்து, “அப்பா! கமலிக்கு குழந்தை பிறந்ததும் சொல்லி அனுப்பச் சொல்லுங்கள்!” என்றாள்.

எக்காரணத்தினாலோ, மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்க்கவே அவளுக்குச் சங்கோசமாயிருந்தது.

“ஆகட்டும், சிவகாமி! அப்படியே சொல்லியனுப்பச் சொல்லுகிறேன். ஆயனரே! நான் புறப்படட்டுமா? போகும் வழியில் வேணுமானால் சுற்றுப் பாறைகளைப் பார்த்து விட்டுப் போகலாம். நீரும் வருகிறீரா?” என்று சக்கரவர்த்தி கேட்டார்.

“ஆகட்டும் பிரபு! அதைவிட எனக்கு என்ன வேலை?” என்று ஆயனர் எழுந்தார்.

“இன்னும் ஒரு விஷயம் மறந்துவிட்டேன்” என்று கூறி, மகேந்திர பல்லவர் தமது அங்கிப் பையிலிருந்து அறுகோண வடிவமான பதக்கம் ஒன்றை வெளியில் எடுத்தார். அதைக் காட்டி, “ஆயனரே! இது என்ன தெரிகிறதா?” என்று சக்கரவர்த்தி கேட்கவும், “தெரிகிறது, பிரபு! சிங்க இலச்சினை” என்றார் ஆயனர்.

“ஆமாம், ஆயனரே! இந்த இலச்சினை பல்லவ இராஜ்யத்தில் மொத்தம் பதினொரு பேரிடந்தான் இருக்கிறது. பன்னிரண்டாவது இலச்சினையை உம்மிடம் கொடுக்கிறேன். இதைக் காட்டினால், இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் எந்த மூலை முடுக்கிலுள்ள அதிகாரியும் நீர் விரும்பியதைச் செய்வார். எந்தக் கோட்டைக் கதவும் உடனே திறக்கும். இதை வைத்துக் கொண்டு என்னையும் மாமல்லனையும் எந்த நேரத்திலும் பார்க்கலாம். இந்த யுத்த காலத்தில் உம்மிடம் இது இருக்கட்டும் என்று கொடுக்கிறேன். சர்வ ஜாக்கிரதையாய் வைத்துக்கொள்ள வேண்டும், ஏதாவது மிகவும் முக்கியமான காரணம் ஏற்பட்டாலன்றி இதை உபயோகிக்கக் கூடாது” என்று கூறிச் சக்கரவர்த்தி இலச்சினையை நீட்டினார்.

“பிரபு! இந்த ஏழைச் சிற்பிக்கு எதற்காக இந்தச் சிங்க இலச்சினை?” என்று ஆயனர் அதை வாங்கிக் கொள்ளத் தயங்கினார்.

“ஆயனரே! இந்தப் பெரிய இராஜ்யத்தில் உம்மையும் உம்முடைய குமாரியையும் காட்டிலும் எந்தச் செல்வத்தையும் நான் பெரிதாய்க் கருதவில்லை. ஏதாவது ஒரு சமயத்திற்கு வேண்டியதாயிருக்கலாம். ஆகையால், வாங்கிப் பத்திரமாய் வைத்துக்கொள்ளும்” என்று மகேந்திரபல்லவர் கையை நீட்டிக் கொடுக்க, அதற்கு மேல் ஆயனரால் அதை மறுக்க முடியவில்லை.

பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு, “அம்மா சிவகாமி! இதை உன் பெட்டியில் பத்திரமாய் வைத்துவிட்டு வா!” என்று சொல்லிக் கொடுத்தார்.

சிவகாமி அந்தச் சிங்க இலச்சினையை வாங்கிக்கொண்டு அடுத்த அறைக்குள் அதைப் பத்திரப்படுத்தப் போனாள். அங்கே அந்தக் கிராமத்துப் பெரிய வீட்டுப் பெண்மணிகள் அவளுடைய ஆடை ஆபரணங்களை வைத்துக் கொள்வதற்காக அளித்திருந்த அழகிய வேலைப்பாடமைந்த பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து அதற்குள்ளே சிங்க இலச்சினையைச் சிவகாமி பத்திரப்படுத்தினாள்.

அவ்விதம் அவள் பெட்டியைத் திறந்து சிங்க இலச்சினையை வைத்ததை அதே அறையில் தூணுக்குப் பின்னால் மறைந்திருந்த நாகநந்தி பிக்ஷு கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்!

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 43
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 45

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here