Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 45

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 45

70
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 45 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 45 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 45: பிக்ஷுவின் மனமாற்றம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 45

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 45: பிக்ஷுவின் மனமாற்றம்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 45

பாறைகளைப் பார்வையிடுவதற்காக மகேந்திர பல்லவர், ஆயனர், சத்ருக்னன் ஆகிய மூவரும் மடத்திலிருந்து புறப்பட்ட போது, வாசலில் சிவகாமி வந்து நின்றாள். மகேந்திர பல்லவர் தற்செயலாக அவளைப் பார்ப்பது போலப் பார்த்து, “சிவகாமி, நீ கூட எங்களுடன் வருகிறாயா?” என்று கேட்டார்.

சிவகாமி மறுமொழி சொல்லத் தயங்கினாள். ஆயனர் அப்போது, “வா, சிவகாமி! போய் விட்டு வரலாம், இங்கே நீ தனியாக என்ன செய்யப் போகிறாய்?” என்றார்.

எனவே, சிவகாமியும் புறப்பட்டாள். அவளைத் தொடர்ந்து ரதியும் சுகரும் கிளம்பினார்கள்.

சிவகாமி பின் தங்கியதற்குக் காரணம் இருந்தது.

பெட்டிக்குள் சிங்க இலச்சினையை வைத்துவிட்டுச் சிவகாமி நிமிர்ந்தபோது தூண் மறைவில் காவித்துணி தெரிந்தது. தூணில் மறைந்திருப்பது புத்த பிக்ஷுதான் என்பதையும் உணர்ந்தாள்.

அன்று அதிகாலையில் வந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த புத்த பிக்ஷு வாசலில் வேற்று மனிதர் குரல் கேட்டதும், “பின்புறமாகப் போய்விடுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். போனவர், எப்படித் திரும்பி வந்தார். ஏன் மறைந்து நிற்கிறார்?” என்று சிவகாமிக்குச் சற்று வியப்பாயிருந்தது.

நேற்று வரைக்கும் இம்மாதிரி சந்தர்ப்பம் நேரிட்டிருந்தால் அவள் உடனே கூச்சல் போட்டிருப்பாள். ஆனால், காலையில் புத்த பிக்ஷுவுடன் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து அவளுடைய மனம் அவர் விஷயத்தில் அடியோடு மாறிப் போயிருந்தது. அவர் மேல் முன்னம் அவளுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் எல்லாம் நீங்கி நல்ல எண்ணமே உண்டாகியிருந்தது. இந்த மனமாறுதலுக்குக் காரணமாயிருந்தது என்னவென்றால் குமார சக்கரவர்த்தி மாமல்லரைப்பற்றிப் பிக்ஷுவின் அபிப்பிராயம் அடியோடு மாறிவிட்டதாக அவர் கூறியது தான்.

“மூட ஜனங்கள் கூறியதைக் கேட்டு, மாமல்லரைப் பயங்கொள்ளி என்றும், கோழை என்றும் சொன்னேன். அப்படிச் சொன்ன நாவை அறுத்துக் கொள்ளலாம் என்று இப்போது தோன்றுகிறது. போர்க்களத்தில் நானே நேரில் பார்த்தேன். அடடா! ‘வீரத்துக்கு அர்ச்சுனன்’ என்ற பேச்சை இனிமேல் விட்டு விட்டு, ‘வீரத்துக்கு மாமல்லன்’ என்று வழங்க வேண்டியதுதான். ஆயிரம் பேருக்கு மத்தியில் தன்னந்தனியாக நின்று வாளைச் சுழற்றி எப்படி வீரப்போர் புரிந்தான்! அசகாயசூரன் என்றால் மாமல்லன்தான்.”

இவ்விதம் புத்த பிக்ஷு மாமல்லருடைய வீரத்தை வர்ணித்ததுடன், அவருடைய குணத்தையும் பாராட்டினார். மாமல்லனை ‘ஸ்திரீலோலன்’ என்று தாம் கூறியதும் பெருந்தவறு என்று அறிந்து கொண்டதாகவும், பெண்களைக் கண்ணெடுத்தே பார்க்காத பரிசுத்தன் என்றும், அப்பேர்ப்பட்ட உத்தம வீர புருஷனைக் காதலனாகப் பெறுவதற்கு எந்த இராஜகுமாரி பாக்கியம் செய்திருக்கிறாளோ என்றும் சொல்லச் சொல்ல, சிவகாமி தன்னுடைய மகத்தான பாக்கியத்தை எண்ணி இறும்பூது அடைந்ததுடன், புத்த பிக்ஷுவின் மீது முன்னெப்போதுமில்லாத நல்ல எண்ணமும் விசுவாசமும் கொண்டாள்.

அசோகபுரத்தில் திடீரென்று புத்த பிக்ஷு மறைந்த காரணத்தை ஆயனர் கேட்டதற்கு, நாகநந்தி கூறியதாவது: “அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? கங்க நாட்டுத் துர்விநீதனை நான் அறிவேன். பௌத்த சங்கத்தைச் சேர்ந்தவன், என்னிடமும் அவனுக்குப் பக்தியுண்டு. குண்டோ தரன் அன்று ஓர் ஓலை கொண்டு வந்து கொடுத்தானல்லவா? ‘துர்விநீதன் காஞ்சி மேல் படை எடுத்து வருகிறான்’ என்ற செய்தி அந்த ஓலையில் இருந்தது. அத்தகைய விபரீத முட்டாள்தனமான காரியத்தை அவன் செய்யாமல் தடுக்கலாம், திரும்பிப் போகச் சொல்லலாம் என்ற எண்ணத்துடன்தான் இரவுக்கிரவே ஓடினேன். குண்டோ தரனுடைய குதிரையைக் கூட அதற்காகத்தான் எடுத்துக் கொண்டேன். ‘என் முயற்சி பயன்படவில்லை, நான் போவதற்குள் போர் மூண்டுவிட்டது. நான் எதிர்பார்த்தபடியே துர்விநீதன் வீர மாமல்லனால் முறியடிக்கப்பட்டு ஓட நேர்ந்தது. எங்கே ஓடினானோ, என்ன கதி அடைந்தானோ தெரியாது!”

இப்படியெல்லாம் மாமல்லருடைய புகழைக் கேட்கக் கேட்கச் சிவகாமிக்கு உள்ளம் குளிர்ந்ததுடன் புத்த பிக்ஷுவின் மீது அவளுடைய விசுவாசம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

“சுவாமி! தாங்களும் இந்தக் கிராமத்தில் எங்களுடனேயே தங்கியிருந்து விடுங்களேன்!” என்று சொன்னாள்.

அதற்குப் பிக்ஷு; “இல்லை அம்மா, இல்லை! ஓரிடத்தில் தங்கியிருப்பது என்னுடைய தர்மத்துக்கே விரோதம். தென்னாடு இப்போது என்னைப் போன்ற பிக்ஷு யாத்திரிகர்களுக்குத் தகுந்த இடம் இல்லை. தெற்கேயிருந்து பாண்டியன் படையெடுத்து வருகிறான். வடக்கேயிருந்து சளுக்கன் படையெடுத்து வருகிறான். உங்கள் இருவரையும் பத்திரமான இடத்தில் விடவேண்டுமென்றுதான் கவலைப்பட்டேன். இந்தக் கிராமம் உங்களுக்குத் தகுந்த இடம்தான். புத்த மகாப் பிரபுவின் அருள் இருந்தால் யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மறுபடியும் உங்களைப் பார்ப்பேன். ஆயனரே! அடுத்த தடவை உங்களைப் பார்க்க வரும்போது, அஜந்தா இரகசியத்தைக் கட்டாயம் அறிந்துகொண்டு வருவேன். சிவகாமி! இங்கேயே உங்களுடன் தங்கி, உன்னுடைய தெய்வீக நடனக் கலையைப் பார்த்துக் கொண்டிருக்க எவ்வளவோ இஷ்டந்தான். ஆனால் அதற்குக் கொடுத்து வைக்க வேண்டாமா?…” என்று பிக்ஷு கூறியபோது, அவருடைய குரலில் தொனித்த கனிவு, சிவகாமியின் உள்ளத்தை உருக்கிவிட்டது.

இந்தச் சந்தர்ப்பத்திலேதான், வாசலில் குண்டோ தரன் கதவை இடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது பிக்ஷு, “ஆயனரே! உங்களுடைய சிஷ்யன் குண்டோ தரன் என் பேரில் அநாவசியமான சந்தேகம் ஏதோ கொண்டிருக்கிறான். என்னை இங்குப் பார்த்தானானால் வீணாக வலுச் சண்டைக்கு வருவான். இன்னும் யாரோ வேற்று மனிதர்கள் வாசலில் வந்திருப்பதாகக் கூடத்தோன்றுகிறது. நான் இப்படியே பின்புறமாகப் போய் விடுகிறேன். விடை கொடுங்கள்” என்று கூறிப் புறப்பட்டார்.

போகும்போது, “சிவகாமி! மறுபடியும் உங்களைப் பார்க்கிறேனோ என்னவோ? ஆனால், நான் எங்கே போனாலும், என்ன செய்தாலும் உன்னை மறக்க முடியாது. உன்னை மறந்தாலும் உன் நடனத்தை மறக்க முடியாது” என்று கனிந்த குரலில் சொல்லிவிட்டுப் போனார்.

அப்படிப் போனவரைத் திடீரென்று உள் அறையில் தூண் மறைவில் பார்த்ததும் சிவகாமிக்குச் சிறிது வியப்பாய்த்தானிருந்தது. ஆயினும் மறுபடியும் தன்னிடம் ஏதோ சொல்வதற்காக ஒரு வேளை காத்திருக்கிறாரோ என்னவோ. சக்கரவர்த்தி போன பிறகு விசாரித்துக் கொள்ளலாம் என்று வெளி அறைக்கு வந்துவிட்டாள். உண்மையில் பிக்ஷு போகாமல் தங்கியிருந்தது, சிவகாமிக்குச் சிறிது மகிழ்ச்சியை அளித்தது என்றே சொல்ல வேண்டும்.

இப்போது மடத்து வாசலில் சக்கரவர்த்தி “நீயும் எங்களுடன் வருகிறாயா?” என்று கேட்டதும், தூண் மறைவிலிருந்த புத்த பிக்ஷுவை நினைத்துக் கொண்டு சிவகாமி ஒருகணம் தயங்கினாள். ஆனால் ஆயனரும் சேர்ந்து அழைத்ததும், தடுத்துச் சொல்ல முடியாமல், “ஆகட்டும், அப்பா!” என்று சொல்லிப் புறப்பட்டாள்.

நாகநந்தி பிக்ஷு தான் திரும்பி வரும்வரையில் ஒருவேளை அங்கேயே இருக்கலாம் என்ற எண்ணமும் அவள் மனத்தில் இருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 44
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 46

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here