Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 47

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 47

82
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 47 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 47 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 47: மழையும் மின்னலும்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 47

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 47: மழையும் மின்னலும்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 47

சிவகாமிக்குச் சுய உணர்வு வந்தபோது தான் பாறையில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்திருப்பதையும், சக்கரவர்த்தி தனக்கு அருகில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்துவதையும் கண்டாள். பயபக்தியுடன் சட்டென்று எழுந்திருக்க அவள் முயன்றபோது மகேந்திரர் அவளுடைய கரத்தைப் பிடித்து உட்காரவைத்து, “வேண்டாம்!” என்று கூறினார்.

சற்று முன்னால் தன் காதில் விழுந்த விஷயம் உண்மைதானா அல்லது தன்னுடைய சித்தப்பிரமையா என்று கேட்பவள்போல் மகேந்திர பல்லவரைச் சிவகாமி இரங்கி நோக்கினாள்.

சக்கரவர்த்தி, “குழந்தாய்! மாமல்லனிடம் உன்னுடைய அன்பு எத்தகையது என்பதைக் காட்டிவிட்டாய். அவனுக்கு உன்னால் அபாயம் நேர்ந்தது என்றதும் உன் உணர்வையே இழந்துவிட்டாய். இத்தகைய அன்பு நிறைந்த உன் இருதயத்தை நான் மேலும் புண்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன்” என்றார்.

“ஐயோ! இன்னும் என்ன?” என்று சிவகாமி விம்மினாள்.

“முக்கியமான விஷயத்தை இன்னும் உனக்கு நான் சொல்லவில்லை, சிவகாமி! உன்னிடம் ஒரு வாக்குறுதி நான் கேட்கப் போகிறேன்! மாமல்லனுடைய க்ஷேமத்துக்காகக் கேட்கப் போகிறேன். நீ மறுக்காமல் தரவேண்டும்” என்றார் மகேந்திரர்.

சிவகாமியின் குழம்பிய உள்ளத்தின் அடிவாரத்தில் ஒரு சிறிது தெளிவு ஏற்படத் தொடங்கியது. சக்கரவர்த்தியின் பேரில் அவளுக்கு ஏற்கனவே இருந்த சந்தேகங்கள் மீண்டும் தோன்றின. ‘இவர் நம்மை ஏமாற்றி ஏதோ ஒரு சூழ்ச்சியில் அகப்படுத்தப் பார்க்கிறார். ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும்!’ என்று எண்ணினாள்.

தன்னால் மாமல்லருக்கு அபாயம் நேர்ந்ததாகச் சற்றுமுன் சக்கரவர்த்தி கூறியதில்கூட அவநம்பிக்கை ஏற்பட்டது. தன்னைத் தனிமைப்படுத்தி வைத்துக் கொண்டு எதற்காக இப்படியெல்லாம் இவர் பேசுகிறார்? இவருடைய நோக்கங்கள் என்ன? தலை குனிந்த வண்ணம், “பல்லவேந்திரா! தாங்கள் சொல்லுவது ஒன்றும் என் மனத்தில் பதியவில்லை. மாமல்லருக்கு என்னால் அபாயம் நேர்ந்தது என்று சொன்னீர்களே? அது எப்படி?” என்று கேட்டாள்.

“குழந்தாய் உன் மனத்தை அதிகமாக வருத்தப்படுத்த வேண்டாம் என்று அதை நான் சொல்லவில்லை. நீயே கேட்கிறபடியால் சொல்கிறேன். காஞ்சியில் உன்னுடைய அரங்கேற்றம் நடந்த இரண்டு நாளைக்கெல்லாம் உங்கள் அரண்ய வீட்டுக்கு நான் வந்தேனல்லவா? அப்போது உன் தந்தையிடம் சில விஷயங்கள் சொன்னேன். நீயும் கேட்டுக் கொண்டிருந்தாய். உன்னுடைய கலை தெய்வீகக் கலையென்றும், அதைத் தெய்வத்துக்கே அர்ப்பணமாக்க வேண்டும் என்றும் சொன்னேன் உனக்கு நினைவு இருக்கிறதா?”

சிவகாமிக்கு நினைவு வந்தது. அதை இப்போது எதற்காகச் சொல்கிறார் என்று அவள் உள்ளம் சிந்தித்தது. முகத்தை நிமிர்த்தாமல் குனிந்தவண்ணம், “நினைவு வருகிறது!” என்றாள்.

“குழந்தாய்! தெய்வத்துக்கு உரிமையாக்க வேண்டிய பொருளை மனிதர்களுக்கு உரிமையாக்க முயன்றால், அதனால் தீங்குவராமல் என்ன செய்யும்? ஏதோ இந்தமட்டும் மாமல்லன் உயிர்தப்பிப் பிழைத்தது பல்லவ ராஜ்யம் செய்த பாக்கியந்தான்!”

அப்போது சிவகாமி சட்டென்று தலையை நிமிர்த்தி நீர் ததும்பிய கண்களினாற் சக்கரவர்த்தியை ஏறிட்டுப் பார்த்து, “பல்லவேந்திரா! தாங்கள் ஏதோ கூடமாகப் பேசுகிறீர்கள். நான் கல்வி கேள்வியற்றவள். ஏழைச் சிற்பியின் மகள் என்னைச் சோதிக்க வேண்டாம்!” என்று விம்மினாள்.

மகேந்திரர் அப்போது சிவகாமியின் விரிந்த கூந்தலை அருமையுடன் தடவிக்கொடுத்து, அன்பு ததும்பும் குரலில் கூறினார்: “அம்மா! சிவகாமி! உன்னை நான் சோதிக்கவில்லை. உன் தந்தை ஆயனருக்கும் எனக்கும் எப்பேர்ப்பட்ட சிநேகம் என்பது உனக்குத் தெரியாதா? அவருடைய மகளாகிய நீ எனக்கும் மகள்தான்! கனவிலும் உனக்குக் கெடுதல் எண்ணமாட்டேன். உன் தந்தை எப்படிச் சிற்பக் கலையில் ஈடு இணையும் இல்லாத பெருமை வாய்ந்தவரோ, அதேபோல் நீயும் பரதக்கலையில் சிறந்து விளங்குகிறாய். உன்னுடைய கலைத் திறமை இன்னும் மகோன்னதத்தை அடைந்து பரத கண்டமெங்கும் உன்னுடைய புகழ் விளங்கவேண்டும் என்பது என் மனோரதம். அதற்கு எதுவும் குறுக்கே நிற்கக் கூடாது. யாரும் தடையாயிருக்கக் கூடாது என்பது என் எண்ணம். அப்படிக் குறுக்கே தடையாக நிற்பவன் என்னுடைய சொந்த மகனாகவே இருந்த போதிலும், அந்தத் தடையை நான் நீக்க முயல்வேன்.”

சிவகாமி திடுக்கிட்டவளாய் முகத்தில் அவநம்பிக்கை தோன்ற மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்த்தாள். “கொஞ்சம் பொறு, குழந்தாய்! முழுமையும் சொல்லிவிடுகிறேன், பிறகு, உன் இஷ்டம்போல் தீர்மானம் செய்துகொள். சற்று முன் நான் ஏதோ கூடமாய்ப் பேசுகிறேன் என்று கூறினாய். உண்மைதான், உன்னிடம் வெளிப்படையாய்ச் சொல்வதற்குச் சங்கோசப்பட்டுக் கொண்டுதான் அவ்விதம் கூறினேன். நீ அறிவாளி ஆகையால் தெரிந்து கொள்வாய் என்று நினைத்தேன். ஆனால், தற்சமயம் உன் மனம் பல காரணங்களினால் குழம்பிப் போய் இருக்கிறது. அதனால் நீ தெரிந்து கொள்ளவில்லை. எனவே, நான் சொல்ல விரும்பியதை உன்னுடைய நன்மைக்காகச் சொல்ல வேண்டியிருப்பதை பச்சையாகவே சொல்லி விடுகிறேன். அதனால் உன் மனத்திற்கு வருத்தம் நேர்ந்தால், என்னை மன்னித்து விடு!” என்று கூறி மகேந்திர பல்லவர் ஒரு பெருமூச்சு விட்டார். அச்சமயம் அவருடைய முகக்குறி மிகவும் கடினமான காரியத்தைச் செய்வதற்கு ஆயத்தமாகிறவரைப் போலக் காணப்பட்டது.

சிவகாமி மறுபடியும் தலைகுனிந்து தரையைப் பார்த்த வண்ணம் இருந்தாள். ஏதோ ஒரு பெரிய விபரீதத்தை எதிர் பார்த்து அவளுடைய இருதயம் விம்மிற்று. இடையிடையே இரண்டொரு சொட்டுக் கண்ணீர் பூமியில் விழுந்தது.

“சிவகாமி கேள்! உன் தந்தை கல்லைக் கொண்டு உயிர்ச்சிலைகளைச் சமைக்கிறார். அதுபோலவே பிரம்ம தேவன் மண்ணைக் கொண்டு பூலோகத்திலுள்ள சகல ஜீவராசிகளையும் படைக்கிறான். ஆனால், அசாதாரண அழகு படைத்த ஸ்திரீகளைப் பிரம்மதேவன் சிருஷ்டிக்கும் போது தன்னுடைய நாலிருகண்களிலிருந்தும் சொட்டும் கண்ணீரையும் மண்ணுடனே கலந்து சிருஷ்டிப்பதாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட அசாதாரண சௌந்தரியவதிகளால் உலகத்திலே எத்தனையோ துன்பங்கள் உண்டாகுமென்று பிரம்மதேவனுக்குத் தெரிந்தபடியினாலேதான் அப்படி அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அவர்களைப் படைப்பானாம்! குழந்தாய் உன்னைப் படைக்கும்போது பிரம்மதேவன் கண்ணீர் பெருக்கிக் கொண்டுதான் படைத்தானா என்று நான் சில சமயம் எண்ணுவதுண்டு. அத்தகைய அற்புத சௌந்தரியம் உன் மேனியில் குடிகொண்டிருக்கிறது. அது போதாதென்று உலகிலேயே இணையற்ற சௌந்தரியக் கலையும் உன்னிடம் சேர்ந்திருக்கிறது. நீ குழந்தையாயிருந்த வரையில் இதெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. ஆயனரைப் போலவே நானும் உன்னை என் செல்வக் கண்மணியாக எண்ணி மடியில் வைத்துக் கொண்டும், தோளில் போட்டுக் கொண்டும் கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தேன். ஆனால், நீ யௌவனப் பிராயம் அடைந்த பிறகு, உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, ‘ஐயோ! இந்தப் பெண்ணால் உலகில் விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்கவேண்டும்!’ என்ற பச்சாதாபம் உண்டாகும். இரண்டு வருஷத்துக்கு முன்னால் விபரீதத்துக்கு அறிகுறிகள் தோன்றின. குழந்தைப் பிராயத்தில் உனக்கும் மாமல்லனுக்கும் ஏற்பட்டிருந்த குற்றமற்ற சிநேகம் திடீரென்று காதலாக மாறியதைக் கண்டேன். இந்தத் தகாத காதலை எப்படித் தடுப்பது, உங்கள் இருவருடைய மனமும் புண்படாமல் எப்படி உங்களைப் பிரிப்பது என்று நான் யோசித்துக் கொண்டிருந்த போதே, இந்த மகாயுத்தம் வந்தது. நான் அவசரமாகப் போர்க்களத்துக்குப் போக வேண்டியதாயிற்று. நான் இல்லாத சமயத்தில் நீயும் மாமல்லனும் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே அவன் காஞ்சிக் கோட்டைக்கு வெளியே வரக் கூடாதென்று கண்டிப்பான திட்டம் போட்டுவிட்டுப் போனேன்….”

குனிந்துகொண்டிருந்த சிவகாமி தன்னையறியாத ஆத்திரத்துடன் மகேந்திர பல்லவரை ஏறிட்டுப் பார்த்தாள். கண்ணீர் ததும்பிய அவளுடைய கூரிய கண்களிலே தோன்றிய கோப ஜுவாலை, ‘சோ’வென்று மழை பெய்து கொண்டிருக்கும் போது இருண்ட வானத்தில் பளிச்சிடும் மின்னலைப்போல் ஜொலித்தது! அதனால் ஒருகணம் தயங்கிவிட்டுச் சக்கரவர்த்தி பின்னர் தொடர்ந்து கூறினார்: “சிவகாமி! உன்னையும் மாமல்லனையும் அவ்வாறு பிரித்து வைத்த போது, அதனால் உங்களுடைய நேயம் குன்றிவிடும் என்ற எண்ணம் எனக்கில்லை. காற்றினால் பெரு நெருப்புக் கொழுந்து விட்டுக் கிளம்புவதுபோல் கட்டாயப் பிரிவினால் உங்களுடைய காதல் இன்னும் ஜுவாலையிட்டு வளரக்கூடும் என்பதை ஒருவாறு நான் எதிர்பார்த்தேன். எனவே உங்களுடைய காதலைத் தடுக்கும் எண்ணத்துடன் உங்களை நான் பிரித்து வைக்கவில்லை. நான் இல்லாத சமயத்தில் மாமல்லனும் நீயும் சந்தித்தால் அதனால் வேறு பெரும் அபாயம் நேரும் என்று என்னுடைய உள்ளுணர்ச்சி சொல்லிற்று. புதையலைப் பூதம் காக்கிறதென்றும், ஜீவரத்தினத்தை நாக சர்ப்பம் காக்கிறது என்றும் சொல்வார்களே, – அதுபோல், கலைப் பொக்கிஷமாகிய உன்னைக் காப்பாற்றுவதற்கோ அல்லது கபளீகரம் செய்வதற்குத்தானோ, ஏதோ ஒரு மாயசக்தி உன்னைத் தொடர்வதாக எனக்குத் தோன்றியது. அதனாலேயே மாமல்லன் உன்னை நெருங்க முடியாதபடி நான் ஏற்பாடு செய்துவிட்டுப் போனேன். நான் எதிர்பார்த்தபடியே, உங்களைப் பிரித்து வைத்ததனால் உங்கள் காதல் குன்றாமல் கொழுந்துவிட்டு வளர்ந்தது. இதை மாமல்லன் உனக்கு எழுதிய ஓலைகளினால் அறிந்தேன்.”

“என்ன?” என்று சிவகாமி அளவில்லாத வியப்புடனும் அருவருப்புடனும் சக்கரவர்த்தியை நோக்கினாள்.

“ஆமாம், சிவகாமி! மாமல்லன் உனக்கு எழுதிய ஓலைகள் – நீ மரப்பொந்தில் பத்திரப்படுத்தியிருந்த ஓலைகள் – என்னிடந்தான் வந்து சேர்ந்தன. அவ்வளவு நீசத்தனமான காரியத்தை நான் செய்யவேண்டியிருந்தது. எல்லாம் இந்தப் பல்லவ இராஜ்யத்துக்காகத்தான். குழந்தாய்! சாதாரண மனிதர்களுக்குத் தர்மம் வேறு. அரச குலத்தினருக்குத் தர்மம் வேறு. உன் தந்தையைக் கேட்டால் இதைச் சொல்வார். மாமல்லன் ஒரு வியாபாரியின் மகனாகவோ அல்லது சிற்பியின் மகனாகவோ இருந்தால், அவனுக்கும் உனக்கும் நடுவில் நான் ஒருநாளும் நிற்க மாட்டேன். உங்களுடைய தெய்வீகமான காதலைக் கண்டு நான் களித்துக் கூத்தாடுவேன். ஆனால், இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் நன்மைக்காக உங்கள் இருவரையும் பிரித்து வைக்கும் கொடுமையான கடமை எனக்கு ஏற்பட்டது..”

சிவகாமிக்கு அப்போது எங்கிருந்தோ அசாத்தியமான தைரியம் பிறந்தது. முகபாவத்திலும், குரலிலும் நிகரில்லாத கர்வம் தோன்ற, “பிரபு! எங்களைத் தாங்கள் பிரித்துவைக்கப் பார்த்தீர்கள். ஆனால் அரசர்களைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த விதி எங்கள் பக்கத்தில் இருந்தது. ஏரி உடைப்பையும் வெள்ளத்தையும் அனுப்பி எங்களை இந்தக் கிராமத்தில் சேர்த்து வைத்தது!” என்றாள்.

“ஆம், சிவகாமி! ஆனால், உங்களைச் சேர்த்துவைத்த அதே விதி நான் செய்திருந்த ஏற்பாடு எவ்வளவு அவசியமானது என்பதையும் எடுத்துக் காட்டியது. இந்த விஷக் கத்தியே அதற்கு அத்தாட்சி!” என்று மகேந்திர பல்லவர் கூறி, மீண்டும் அந்த விஷக்கத்தியை எடுத்துச் சிவகாமியின் கண் முன்னால் காட்டினார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 46
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 48

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here