Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 54

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 54

69
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 54 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 54 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 54: சபை கலைந்தது

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 54

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 54: சபை கலைந்தது

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 54

சபா மண்டபத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி ஒருவாறு அடங்கிச் சற்று அமைதி ஏற்பட்டதும் மகேந்திர பல்லவர் மேலும் தொடர்ந்து கூறலானார்.

“சபையோர்களே! நீங்கள் சொல்கிறபடி பல்லவ சாம்ராஜ்யம் என் ஒருவனையே நம்பியிருப்பதாக நான் ஒத்துக் கொள்ளவில்லை. இதோ என் வீர மகன் மாமல்லன் பல்லவர் குலப்பெருமையை நிலைநாட்டுவதற்கு இருக்கிறான். ஆனாலும் வாதாபி மன்னனை நான் அவனுடைய படை வீட்டில் சந்தித்தது வெறும் சாகஸத்துக்காக அல்ல. புலிகேசியை நான் நேரில் பார்ப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. சற்று முன்னால் உங்களையெல்லாம் பெருங்கலக்கத்துக்கு ஆளாக்கிய நாகநந்தியடிகள் ஒன்பது மாதத்துக்கு முன்னால் நமது கோட்டைத் தளபதியிடம் ஒரு ஓலை கொடுத்துப் புலிகேசிக்கு அனுப்பியிருந்தார். ஆயனரிடம் சிற்பக்கலை கற்க வந்திருந்த இந்த வீர வாலிபர் அந்த ஓலையில் உள்ள செய்தி இன்னதென்று அறியாமல் எடுத்துக்கொண்டு போனார். வழியில் இவரிடமிருந்து அந்த ஓலையை நான் வாங்கிக் கொண்டு புலிகேசியின் கூடாரத்துக்குச் சென்றேன். ஆனால், நான் புலிகேசியிடம் கொடுத்தது நாகநந்தியின் ஓலை அல்ல. நான் மாற்றி எழுதிய ஓலையைக் கொடுத்தேன். அதன் பயனாகவும், நமது வீர சேனாதிபதி கலிப்பகையாரின் போர்த் திறமை காரணமாகவுந்தான் வாதாபி சைனியத்தை வடபெண்ணை கரையில் எட்டு மாதத்துக்கு மேல் நிறுத்திவைக்க முடிந்தது.”

“பிரபு! நாகநந்தியின் ஓலையில் என்ன எழுதியிருந்ததோ!” என்று முதன் மந்திரி சாரங்கதேவர் கேட்டார்.

“காஞ்சி நகரைப்போன்ற பாதுகாப்பு அற்ற நகரம் வேறு இருக்க முடியாதென்றும், வாதாபி சைனியம் வழியில் எங்கும் தங்காமல் நேரே காஞ்சிக்கு வந்து சேர வேண்டுமென்றும், மூன்றே நாளில் காஞ்சியைப் பிடித்துவிடலாம் என்றும் எழுதியிருந்தது.”

சபையின் நாலா பக்கங்களிலிருந்தும் அப்போது கோப கர்ஜனை முழக்கங்கள் ஒருமிக்க எழுந்து ஒலி செய்தன.

சக்கரவர்த்தி கையமர்த்திக் கூறினார்: “நாகநந்தி அச்சமயம் எழுதியிருந்தது முற்றும் உண்மை. அப்போது வாதாபியின் பெரும் சைனியம் நேரே காஞ்சிக்கு வந்திருந்தால் மூன்று நாளைக்கு மேல் நாம் எதிர்த்து நின்றிருக்க முடியாது. சளுக்கரின் பதினையாயிரம் போர் யானைகளிலே ஒரு பதினைந்து யானைகள் நமது கோட்டைக் கதவுகளையெல்லாம் தகர்த்தெறிந்திருக்கும். அப்போது வைஜயந்தி பட்டணத்துக்கு நேர்ந்த கதி காஞ்சிக்கும் நேர்ந்திருக்கும். சபையோர்களே! கதம்பகுல மன்னர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து அரசு செலுத்திய வைஜயந்தி பட்டணம் இருந்த இடத்திலே இப்போது கரியும் சாம்பலும் மேடிட்டிருப்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?”

சபையில் மறுபடியும் வியப்பொலிகளும் இரக்கக் குரல்களும் எழுந்தன. மகேந்திர பல்லவர் மீண்டும் தொடர்ந்து சொன்னார்: “இந்தக் காஞ்சி மாநகரம் உலகம் உய்ய அவதரித்த புத்த பகவானுடைய காலத்திலிருந்து ஆயிரம் வருஷமாகச் சீரும் சிறப்பும் பெற்று விளங்குகிறது. ‘கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகரம்’ என்று நமது புலவர் பெருமான் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்தத் திருநகரின் புகழானது சீன தேசம், சாவகத் தீவு, யவனர் நாடு, ரோமாபுரி ஆகிய தூர தூர தேசங்களிலெல்லாம் நெடுங்காலமாகப் பரவியிருக்கிறது. இப்பேர்ப்பட்ட நகரம் என்னுடைய காலத்தில் அழிந்தது என்னும் அபகீர்த்தியை நான் அடைய விரும்பவில்லை. இந்தக் காஞ்சி நகரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய முதற் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு நீங்கள் என்னுடன் ஒத்துழைப்பீர்களா?”

இவ்வாறு சக்கரவர்த்தி கேட்டபோது, சபையினர் ஒருமுகமாக, “அப்படியே! அப்படியே!” என்று கோஷித்தார்கள்.

சக்கரவர்த்தி மறுபடியும் கையமர்த்தி! “இந்த யுத்தம் நேர்ந்ததற்கு மூலகாரணம் இன்னதென்று உங்களுக்குத் தெரிவித்தேன். இது என்னால் நேர்ந்த யுத்தம், ஆகையால், என் போக்கில் இதை நடத்தி முடிப்பதற்கு உங்களிடம் அனுமதி கோருகிறேன்” என்றார்.

“அப்படியே!” என்று மீண்டும் சபையில் கோஷம் எழுந்தது.

பின்னர் மகேந்திரர், சபையில் பின் வரிசையில் இருந்த தென் பல்லவ நாட்டின் கோட்டத் தலைவர்களைக் குறிப்பாகப் பார்த்து, “கோட்டைக்குள்ளே இருக்கப்போகும் எங்களைக் காட்டிலும் கோட்டைக்கு வெளியில் கிராமங்களில் இருக்க வேண்டிய நீங்கள்தான் அதிகமான கஷ்ட நஷ்டங்களுக்கு உள்ளாகும்படியிருக்கும். காஞ்சியைக் காப்பாற்றுவதற்காக எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்ள நீங்கள் சித்தமாயிருக்கிறீர்களா?” என்று கேட்க, “சித்தம், சித்தம்!” என்று கோட்டத் தலைவர்கள் ஒரே குரலில் முழங்கினார்கள்.

“நாளைச் சூரியோதயத்துக்குள்ளே வாதாபி சைனியம் நமது கோட்டையை நெருங்கிவிடும். அதற்கு முன்னால் நீங்கள் எல்லாரும் நகரைவிட்டு, வெளியேறிவிட வேண்டும். அவரவர்களுடைய ஊருக்கு விரைந்து செல்ல வேண்டும். காஞ்சி நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும்போது உங்களுக்கும் கோட்டைக்குள்ளேயிருக்கும் எங்களுக்கும் எவ்விதப் போக்குவரவும் இராது. கோட்டையைக் கைப்பற்ற முயன்ற புலிகேசி தோல்வியடையும்போது அவனுடைய கோபத்தையெல்லாம் சுற்றிலுமுள்ள நாட்டுப்புறங்களின் மீது காட்டுவான். அதற்கெல்லாம் நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும். கோட்டத் தலைவர்களே! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். காஞ்சியைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் சகலவிதமான தியாகங்களுக்கும் சித்தமாயிருக்கிறீர்களா? வாதாபி அரக்கர் படையினால் நேரக்கூடிய கொடுமைகளையெல்லாம் பொறுத்துக் கொள்வீர்களா? நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடந்து மடிய நேர்ந்தாலும் நீங்கள் மனம் கலங்காமல் இருப்பீர்களா?” என்று சக்கரவர்த்தி கம்பீரமான குரலில் கேட்க, செஞ்சிக் கோட்டத் தலைவன் சடையப்ப சிங்கன் எழுந்து நின்று கூறினான்.

“பல்லவேந்திரா! யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. பல்லவ இராஜ்யத்தின் மணிமகுடமாக விளங்குவது காஞ்சி மாநகரம். காஞ்சி அழிந்தால் பிறகு யார் உயிரோடிருந்து என்ன பயன்? காஞ்சி நகரைக் காப்பாற்றுவதற்காக எந்த விதமான தியாகங்களைச் செய்யவும் நாங்கள் சித்தமாயிருக்கிறோம். தங்களுடைய சித்தம் எதுவோ அதன்படி நடந்து கொள்கிறோம். நான் கூறியதுதான் இங்கேயுள்ள எல்லோருடைய அபிப்பிராயமும்!”

“ஆம்! ஆம்!” என்று கோட்டத் தலைவர்கள் அனைவரும் ஏக மனதாக ஆமோதித்தார்கள்.

இச்சமயத்தில் சபாமண்டபத்தின் வாசற் புறத்திலிருந்து தூதன் ஒருவன் வந்தான். அவன் சக்கரவர்த்தியை நெருங்கிப் பணிந்துவிட்டு, கிழக்குத் திசையில் ஒரு பெரும் புழுதிப் படலம் தெரிகிறதென்றும், கடல் புரண்டு வருவது போன்ற பெரு முழக்கம் கேட்கிறது என்றும் தெரியப்படுத்தினான்.

மகேந்திரர், இடிமுழக்கம் போன்ற குரலில், “சபையோர்களே! வாதாபிச் சைனியம் வந்துவிட்டது! நம்மில் ஒவ்வொருவரும் தம் வீர சாகஸங்களைக் காரியத்தில் காட்ட வேண்டிய சமயமும் வந்துவிட்டது. அமைச்சர்களே! மந்திரிகளே! இத்துடன் இன்று சபை கலைகிறது. நாளை முதல் முற்றுகை நீடித்திருக்கும் வரையில் ஒவ்வொரு நாள் இரவும் இரண்டாம் ஜாமத்தில் இங்கே மந்திராலோசனை சபை கூடும். இப்போது போய் அவரவர்களுடைய காரியங்களைப் பாருங்கள்!” என்று கூறியதும் அமைச்சர்களும் மந்திரிமார்களும் துரிதமாக வெளியேறினார்கள்.

“கோட்டத் தலைவர்களே! நீங்கள் சற்றுமுன் கொடுத்த வாக்குறுதியினால் மிக்க சந்தோஷம் அடைந்தேன். அந்த வாக்குறுதியைமட்டும் நீங்கள் நிறைவேற்றி வைத்தால் புலிகேசியைக் கட்டாயம் வென்று ஜயக்கொடி நாட்டுவேன்” என்று கூறி, தளபதி பரஞ்சோதியைப் பார்த்து, “தளபதி! இவர்களைத் தெற்குக் கோட்டை வாசலுக்கு அழைத்துக் கொண்டு போங்கள்! இவர்கள் அகழியைத் தாண்டிச் சென்றதும், பாலத்தை உடைத்து எறிந்து விட வேண்டும். மற்றபடி கோட்டைப் பாதுகாப்புச் சம்பந்தமாக நாம் தீர்மானித்தபடி காரியங்கள் செய்கிறீர்கள் அல்லவா?” என்று கேட்க, “ஆம், பிரபு! தெற்கு வாசலைத் தவிர மற்ற மூன்று வாசல்களையும் முழுதும் அடைத்தாகிவிட்டது; பாலங்களையும் தகர்த்தாகிவிட்டது. மதில்சுவரின் மேல் வரிசையாகப் பதினாயிரம் வீரர்கள் வேலும் கையுமாய் ஆயத்தமாயிருக்கிறார்கள்!” என்றார் தளபதி பரஞ்சோதி.

பரஞ்சோதியும் கோட்டத் தலைவர்களும் சென்ற பிறகு சபாமண்டபத்தில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் மட்டும் தனித்திருந்தார்கள். மாமல்லரின் முகம் உற்சாகம் இன்றி வாட்டமுற்றிருந்தது. சக்கரவர்த்தி மாமல்லர் அருகிலே சென்று அவருடைய தோளின் மீது கையை வைத்து, “மாமல்லா! இந்த யுத்தத்தை என் போக்கிலேயே நடத்த எனக்கு நீயும் அனுமதி கொடுக்கிறாயல்லவா?” என்று கேட்டார்.

“அப்பா! என்னை ஏன் கேட்கிறீர்கள்? உங்கள் விருப்பம் எதுவோ அதுவே எனக்கும் சம்மதம்!” என்றார் மாமல்லர்.

“சந்தோஷம், குமாரா! அரண்மனைக்குப் போய் உன் தாயாரிடம் நான் பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்டதைச் சொல்லு. பொழுது விடிவதற்குள் இன்னும் ஒரு முக்கியமான காரியம் நான் செய்யவேண்டியிருக்கிறது. அதையும் முடித்து விட்டு அரண்மனைக்கு வந்து சேருகிறேன்” என்று கூற, மாமல்லர் அந்தப்புரத்தை நோக்கிச் சென்றார்.

சக்கரவர்த்தியோ அரண்மனை வாசலில் ஆயத்தமாய் நின்ற குதிரை மீதேறி இராஜ விஹாரத்தை நோக்கி விரைந்தார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 53
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 55

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here