Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 6

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 6

76
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 6 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 6 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 6: கலை வெறி

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 6

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 6: கலை வெறி

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 6

ஆயனர் வீட்டுச் சிற்ப மண்டபமானது கிட்டத்தட்ட எட்டு மாதத்துக்கு முன்பு பார்த்தது போலவே இருப்பதையும், ஆயனர் அப்போது அரைகுறையாக வேலை செய்து விட்டிருந்த சிலைகள் இன்னும் அரைகுறையாகவே இருப்பதையும் பரஞ்சோதி பார்த்தபோது, அவருடைய மனத்தில் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு சோர்வு உண்டாயிற்று. “இந்த யுத்தம் என்னத்திற்காக வந்தது?” என்ற எண்ணமும் அவருடைய வீர உள்ளத்தில் தோன்றியது. தாழ்வாரத்தின் முனையில் ஆயனரும் பரஞ்சோதியும், உட்கார்ந்திருந்தார்கள். சிவகாமி முன்னொரு சமயம் நின்றது போலவே இப்போதும் அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

“உங்களுக்குத் தெரியுமா, அப்பா! இவர்தான் இப்போது காஞ்சிக் கோட்டையின் தளபதி!” என்றாள் சிவகாமி.

“அப்படியா! தம்பியின் முகக் களையைப் பார்த்து, இவன் பெரிய பதவிக்கு வருவான் என்று அப்பொழுதே நாகநந்தியடிகள் சொன்னார்…” என்று கூறிய ஆயனர், சட்டென்று நினைத்துக் கொண்டு, “தம்பி! ஓலையை என்ன செய்தாய்?” என்று கேட்டார்.

“ஐயா, அது விஷயத்திலேதான் ஏமாந்து போய்விட்டேன். தாங்களும் நாகநந்தியும் எவ்வளவோ எச்சரித்திருந்தும் பயனில்லாமல் போய்விட்டது, ஓலை…”

“அடாடா! அதைச் சக்கரவர்த்தியிடம்…”

“ஆம் ஐயா! ஓலை சக்கரவர்த்தியிடம் சிக்கிவிட்டது.”

“ஆஹா!” என்ற ஆயனர், பிறகு, “மகேந்திர வர்மர் அதைப் பற்றி என்ன சொன்னார்?” என்று கேட்டார்.

“மகேந்திரவர்மரா? நான் பல்லவ சக்கரவர்த்தியைச் சொல்லவில்லையே. வாதாபி சக்கரவர்த்தியையல்லவா சொன்னேன்? வழியில் என்னை வாதாபி வீரர்கள் பிடித்துக் கொண்டுபோய்ப் புலிகேசியின் முன்னால் நிறுத்தினார்கள். ஓலையையும் அவர்கள்தான் பலாத்காரமாய் கைப்பற்றிக் கொண்டார்கள்…”

ஆயனர் வாயிலிருந்து மீண்டும், ‘ஆ!’ என்னும் வியப்பொலி எழுந்தது. அதே சமயத்தில் எங்கேயோ, யாரோ, பெருமூச்சு விடுவதுபோல் சத்தம் கேட்டது. பாம்பின் சீறல் போன்ற அந்தச் சத்தத்தைப் பரஞ்சோதி கவனித்தார். ஆனால், ஆயனராவது சிவகாமியாவது கவனிக்கவில்லை. சிவகாமி அப்போது வாசற்பக்கத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அங்கே உள் வாசற்படியண்டை நின்ற கண்ணபிரான் சிவகாமியை நோக்கி ஏதோ சமிக்ஞை செய்து கொண்டிருந்தான்.

“தம்பி! உண்மையாகவே நீ வாதாபி புலிகேசி சக்கரவர்த்தியைப் பார்த்தாயா?” என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.

“ஆம், ஐயா! அதோ, அந்த புத்த விக்கிரகம் உள்ள தூரத்தில் வாதாபி சக்கரவர்த்தி இருந்தார்…”

“சக்கரவர்த்தி என்ன சொன்னார்?”

“யாருக்குத் தெரியும்? நான் அறியாத பாஷையில் அவர் பேசினார்… தங்களுக்கு இருக்கும் ஆவலைப் பார்த்தால், வாதாபி சக்கரவர்த்தியைப் பார்க்க விரும்புவதாய்த் தோன்றுகிறதே!”

“ஆம், தம்பி! உன்னை அனுப்பாமல், நானே ஓலையை எடுத்துக் கொண்டு போயிருக்கக்கூடாதா என்று கூடத் தோன்றுகிறது!”

“ஏன் அவ்வளவு ஆர்வம், ஐயா?”

“வாதாபி சக்கரவர்த்தி இளம்பிராயத்தில் அஜந்தா மலையில் இரண்டு வருஷம் இருந்தாராம். ஆகையால் அவருக்கு அஜந்தா வர்ணத்தின் இரகசியம் தெரிந்திருக்குமல்லவா?”

வஜ்ரபாஹு கலைகளை இகழ்ந்து கூறியதெல்லாம் பரஞ்சோதிக்கு அப்போது நினைவு வந்தது. அது எவ்வளவு உண்மை? ஆயனரின் கலை வெறி அவரை எப்படிப் பைத்தியமாக அடித்திருக்கிறது? புலிகேசி பகை அரசன் என்பதைக்கூட, மறந்து அவனைப் பார்க்கும் ஆவலை உண்டாக்கியிருக்கிறதல்லவா?”

“ஐயா! நான் முக்கியமாக எதற்காக வந்தேனோ, அந்தக் காரியத்தை இன்னும் சொல்லவில்லை. சக்கரவர்த்தி தங்களிடம் ஒரு செய்தி தெரிவிக்கச் சொல்லி எனக்கு ஆக்ஞாபித்தார்…”

“எந்தச் சக்கரவர்த்தி?” என்றார் ஆயனர்.

“மகேந்திர பல்லவர்தான்!”

“ஆ! மகேந்திர பல்லவர்! அவரைப் பற்றி நான் என்னவெல்லாமோ நினைத்திருந்தேன். ஒரு சமயம் இந்தப் பல்லவ இராஜ்யத்திலுள்ள சிற்பிகள் எல்லாம் சேர்ந்து சபைகூடி மகேந்திர பல்லவருக்கு ‘விசித்திர சித்தர்’ என்று பட்டம் கொடுத்தோம். அதைக் காட்டிலும் ‘சபல சித்தர்’ என்று அவருக்குப் பெயர் கொடுத்திருக்கலாம்.”

“ஏன் இப்படிச் சொல்கிறீர்கள், ஐயா?”

“பார், தம்பி! இங்கிருந்து என்னை மாமல்லபுரத்துக்குப் போகச் சொன்னார். ‘ஐந்து மலைக் கோயில்களும் ஆறு மாதத்தில் முடிய வேண்டும்’ என்றார். ஒரு மாதத்திற்குள்ளாக, ‘கோயில் வேலையை நிறுத்து!’ என்று கட்டளையிட்டார். சக்கரவர்த்தி முன்போல் இல்லை, தம்பி; ரொம்பவும் மாறிப் போய் விட்டார்!”

“அப்படியொன்றும் அவர் மாறவில்லை ஐயா! யுத்தம் காரணமாகச் சிற்சில காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது..”

“யுத்தம்! பாழும் யுத்தம்! இப்போது நடக்கிற யுத்தம் போதாதென்று பழைய பாரத யுத்தத்தை வேறே கட்டிக் கொண்டு அழ வேண்டுமாம். ஒவ்வொரு ஊரிலும் பாரத மண்டபங்கள் கட்ட வேண்டுமாம். நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா, தம்பி! உண்மையில் மாமல்லபுரத்துச் சிற்ப வேலையை சக்கரவர்த்தி நிறுத்தியது பாரத மண்டபம் கட்டுவதற்காக அல்ல. சிற்பிகளுக்கும் சிற்றாள்களுக்கும் படி கொடுத்து வந்த அரிசி, பருப்பு மிச்சமாகட்டும் என்றுதான்! துறைமுகப் பண்டக சாலைகளில் இருந்த அவ்வளவு தானியங்களையும் காஞ்சிக்குக் கொண்டு போய் விட்டார்களாம்!”

“யுத்தம் நடத்துவதற்கு இவையெல்லாம் அவசியமான காரியங்கள், ஐயா! காஞ்சிக் கோட்டை ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ கூட முற்றுகைக்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். வாதாபியின் சமுத்திரம் போன்ற சைனியம் திரண்டு வருவதை நீங்கள் மட்டும் பார்த்திருந்தால்…”

“வாதாபி சைனியம் வருகிறது, வருகிறது என்று எட்டு மாதமாய்த்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்!”

“ஆனால், இன்னும் ஏன் அந்தப் பிரம்மாண்டமான சைனியம் இங்கே வந்து சேரவில்லை தெரியுமா? மகேந்திர பல்லவர் மட்டும் அப்போது போர்க்களத்துக்குப் போயிராவிட்டால், இதற்குள் காஞ்சி மாநகர் இருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும், ஐயா! வாதாபி சைனியத்தில் வரிசை வரிசையாக, மலை மலையாக, நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நின்ற ஆயிரக்கணக்கான போர் யானைகளை என் கண்ணாலேயே நான் பார்த்தேன். பல்லவ சைனியத்திலோ மொத்தம் நூறு யானைகளுக்கு மேல் கிடையாது. அப்படியிருந்தும் எட்டு மாத காலம் வாதாபி சைனியத்தை வடபெண்ணைக் கரையிலே நிறுத்தி வைத்திருந்தோம். இது எதனால் சாத்தியமாயிற்று தெரியுமா? பாரத யுத்தத்தில் பஞ்சபாண்டவர்களின் வெற்றி, ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய அறிவு பலத்தினாலும் அர்ச்சுனனுடைய வில்லின் வீரத்தினாலும் சாத்தியமாயிற்று. இந்த நாளில் கிருஷ்ண பகவானும் அர்ச்சுனனும் ஒரே உடம்பில் மகேந்திர பல்லவராக அவதரித்திருக்கிறார்கள், ஐயா!”

“தம்பி! சக்கரவர்த்தியிடம் உன்னுடைய பக்தியைக் குறித்து மிகவும் சந்தோஷம். எனக்குச் சக்கரவர்த்தி என்ன சொல்லி அனுப்பினார்? அதைச் சொல்லு!” என்று ஆயனர் கேட்க, பரஞ்சோதி கூறினார்.

“புலிகேசியின் படைகள் வடபெண்ணையைக் கடந்து விட்டன ஐயா! வேங்கியை வென்ற புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் படைகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன. இனி, அவற்றை வெகுகாலம் தடுத்து நிறுத்துவது அசாத்தியம்! ஆகையினால்தான், காஞ்சிக் கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தம் செய்ய என்னைச் சக்கரவர்த்தி அனுப்பி வைத்தார். ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ முற்றுகை நீடித்திருக்கலாம். ஆகையால் கோட்டைக்குள்ளிருந்து அநாவசியமான ஜனங்களையெல்லாம் வெளியேற்றப் போகிறோம் கோட்டையைச் சுற்றிலுமுள்ள கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வெளியேறும்படி இருக்கும். இதுபற்றித்தான் தங்களுடைய விருப்பத்தைத் தெரிந்துகொள்ளும்படி சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். எதிரி சைனியம் வரும் சமயம் தாங்கள் இங்கே இருப்பது உசிதமாயிராது…”

“ஆஹா! இந்த அரண்ய வீட்டிலேயிருந்தும் சக்கரவர்த்தி என்னைத் துரத்திவிடப் பார்க்கிறாரா? எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்கு வந்தாலென்ன, போனாலென்ன? இந்தக் காட்டுக்குள்ளே வந்து என்னை யார் எட்டிப் பார்க்கப் போகிறார்கள்? பார்த்தால்தான் இங்கிருந்து என்னத்தை எடுத்துக் கொண்டு போகப் போகிறார்கள்? இந்தக் கற்சிலைகளையும் கல்லுளிகளையும் வேணுமானால் கொண்டு போகட்டும். சுவரிலே எழுதிய சித்திரங்களை வேணுமானாலும் சுரண்டிக் கொண்டு போகட்டும்!…”

“ஐயா! தாங்கள் ஏதோ கோபத்தில் பேசுகிறீர்கள். பல்லவ இராஜ்யத்துக்கு எப்பேர்பட்ட ஆபத்து வந்திருக்கிறதென்பதைத் தெரிந்துகொள்ளாமல் பேசுகிறீர்கள்…”

“சக்கரவர்த்தி எங்களுக்கு என்னதான் கட்டளையிடுகிறார்?”

“தாங்களும் தங்கள் குமாரியும் காஞ்சிக் கோட்டைக்குள்ளேயே வந்து இருந்தாலும் இருக்கலாம்! அல்லது சோழ நாட்டுக்குப் போய்த் தங்கள் சிநேகிதர் நமச்சிவாய வைத்தியருடன் சில காலம் தங்கியிருந்தாலும் இருக்கலாம். திருவெண்காட்டுக்குப் போவதாயிருந்தால், தக்க பாதுகாப்புடன் தங்களை அனுப்பி வைக்கும்படி எனக்குக் கட்டளை இட்டிருக்கிறார். தங்கள் விருப்பம் எதுவோ, அப்படிச் செய்யலாம்” என்றார் பரஞ்சோதி.

“சிவகாமி! நீ என்ன அம்மா சொல்லுகிறாய்?” என்று கேட்டார் ஆயனர், திரும்பிப் பார்த்து. ஆனால் சிவகாமி நின்ற இடத்தில் அவளைக் காணவில்லை.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 5
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 7

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here