Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 7

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 7

63
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 7 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 7 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 7: சின்னக் கண்ணன்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 7

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 7: சின்னக் கண்ணன்

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 7

ஆயனரும் பரஞ்சோதியும் பேசிக் கொண்டிருக்கையில், வாசற்படியருகில் நின்ற கண்ணபிரான் சமிக்ஞை செய்ததைச் சிவகாமி கவனித்தாள் என்று சொன்னோமல்லவா? சற்று நேரத்துக்கெல்லாம், பேசிக் கொண்டிருந்தவர்களின் கவனம் தன் மீது செல்லாதபடி சிவகாமி மெல்ல நடந்து வீட்டுக்கு வெளியே வந்தாள்.

“அண்ணா! என்னை அழைத்தீர்களா? ஏதாவது விஷேசம் உண்டா?” என்று கேட்டாள்.

“ஆமாம்; உண்டு!” என்றான் கண்ணன்.

“கமலி அக்கா ஏதாவது சொல்லியனுப்பினாளா?”

கண்ணபிரான் குரலைத் தாழ்த்திக்கொண்டு, “அதோ உள்ளே வந்திருக்கிறாரே, அந்த வாலிபருக்கு உடனே விஷம் கொடுத்துக் கொல்லும்படி சொல்லச் சொன்னாள்” என்றான்.

சிவகாமி, “இதென்ன வேடிக்கை அண்ணா? எதற்காக விஷம் கொடுக்க வேண்டும்?” என்று புன்னகையுடன் கேட்டாள்.

“அம்மணி! விஷம் கொடுப்பது வேடிக்கையான விஷயமா?”

“இல்லை, அதனால்தான் ‘எதற்காக’ என்று கேட்கிறேன்.”

“மாமல்லருக்கு இவர் போட்டியாக வந்திருக்கிறார், தாயே!”

“என்னத்தில் போட்டி?”

“இராஜ்யத்துக்குத்தான்! ஊரிலே எல்லாம் சொல்லிக் கொள்ளுகிறார்கள். ‘சக்கரவர்த்தி, பரஞ்சோதியைத் தத்து எடுத்துக் கொண்டு விட்டார். பரஞ்சோதிக்குத்தான் இராஜ்யத்தைக் கொடுக்கப் போகிறார்! மாமல்லருக்கு இராஜ்யம் இல்லை’ என்று.”

“ஆஹா! இதுமட்டும் உண்மையாயிருந்தால்…?”

“தங்கச்சி, அப்படி நேர்ந்தால் உனக்கு அதில் மிக்க சந்தோஷம் போலிருக்கிறதே?” என்றான் கண்ணபிரான்.

“அப்படித்தான், அண்ணா! இந்த இராஜ்யந்தானே எனக்கும் அவருக்கும் குறுக்கே நிற்கிறது? எனக்கு அவரும் அவருக்கு நானும் இருந்தால் போதுமே! இராஜ்யம் என்னத்திற்கு!”

“எல்லாப் பெண்களும் ஒரே மாதிரிதான் போலிருக்கிறது! கமலிகூட இப்படியேதான் சொல்கிறாள்.”

“என்ன சொல்கிறாள்!”

“நீ இப்போது சொன்னது போலத்தான் சொல்கிறாள். ‘கண்ணா! உனக்கு நானும் எனக்கு நீயும் போதாதா? அரண்மனை சேவகம் என்னத்திற்கு? வா! எங்கேயாவது கிராமத்துக்குப் போய் நிம்மதியாயிருக்கலாம்’ என்கிறாள்.”

“அப்படிச் செய்யப் போகிறீர்களா, அண்ணா?”

“அப்படிச் செய்வதில் எனக்கும் இஷ்டந்தான், ஆனால், சின்னக் கண்ணன் குறுக்கே நின்றான்.”

“அது யார் அண்ணா, சின்னக் கண்ணன்?”

கண்ணன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, “கொஞ்சம் மூளையைச் செலுத்தி யோசித்துப் பார், தங்கச்சி!” என்றான்.

சிவகாமி, “என்னத்தை யோசிக்கிறது?” என்றாள்.

“இவ்வளவுதானா தங்கச்சி? இவ்வளவு புத்திசாலியாயிருந்தும் சின்னக் கண்ணன் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே?” என்று கண்ணன் கேட்டுவிட்டு, இன்னும் தாழ்ந்த குரலில் “சின்னக் கண்ணன் கமலியின் வயிற்றில் இருக்கிறான்” என்று கூறிப் புன்னகை புரிந்தபோது அவன் முகத்தில் அசடு வழிந்தது.

கமலி கர்ப்பமாயிருக்கிறாள் என்பதைச் சிவகாமி தெரிந்து கொண்டு, “அப்படியா அண்ணா! சந்தோஷம்” என்றாள். அவள் உடம்பை அப்போது என்னவோ செய்தது. கமலியை உடனே பார்க்க வேண்டும், அவளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் உண்டாயிற்று.

கண்ணபிரான், “தங்கச்சி, அந்தச் சந்தோஷத்தை நீ நேரிலேயே வந்து சொல்லிவிட்டால் தேவலை. கமலிக்கு இன்னும் கொஞ்சகாலம் காஞ்சியைவிட்டுப் புறப்பட முடியாதாம். தங்கச்சியிடம் சொல்வதற்கு என்னவெல்லாமோ சமாசாரம் மூட்டைக் கட்டி வைத்திருக்கிறாளாம்!” என்றான்.

“எனக்கும் அக்காவைப் பார்க்க ஆசைதான், அண்ணா! ஆனால் அது எப்படி முடியும்?” என்றாள் சிவகாமி.

“ஆமாம், தங்கச்சி! முடியாதுதான்! அதனால்தான் நான் கூடக் கமலியிடம் சொன்னேன். அவர்களெல்லாம் நம்முடைய ஏழைக் குடிசையில் வந்து தங்கியிருப்பார்களா என்று…”

“அண்ணா! அப்படிச் சொல்லவேண்டாம் நீங்களும் கமலியும் இருக்கும் இடத்தில் ஏழ்மை ஏது? உங்களுடைய குடிசை எனக்கு அரண்மனையைவிட ஆயிரம் மடங்கு மேல்”…என்று சொல்லி வந்தவள் சட்டென்று நிறுத்தினாள். ஏதோ ஓர் எண்ணம் குறுக்கிட்டு அவளைத் தடை செய்ததாகத் தோன்றியது. “அதற்கென்ன பார்த்துக்கொள்ளலாம், அண்ணா! அப்பாவிடம் சொல்கிறேன்…வேறு ஒன்றும் விஷயமில்லையா?” என்றாள்.

“அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை ஒரே ஒரு சின்ன விசேஷம் மட்டும் உண்டு; இன்று காலை நான் ரதத்தை ஓட்டிக் கொண்டுபோய் அரண்மனை வாசலில் நிறுத்தியதும், மாமல்லர் என்னைத் தனியாகக் கூப்பிட்டார். ‘பிரபு, என்ன விசேஷம்?’ என்று கேட்டேன். ‘ஒன்றுமில்லை, கண்ணா! இராத்திரி தூங்கவில்லை’ என்றார். ‘அதுதான் முகத்தைப் பார்த்தால் தெரிகிறதே, ஏன் தூங்கவில்லை?’ என்றேன். ‘புது தளபதியுடன் பேசிக் கொண்டிருந்தேன்’ என்றார். ‘அவ்வளவுதானா?’ என்று கேட்டேன். ‘அப்புறம் ஓலை எழுதினேன்’ என்றார். ‘யாருக்கு’ என்றேன். ‘அப்பாவுக்கு’ என்று சொன்னார். ‘சரி’ என்றேன். பிறகு மெல்ல மெல்ல, ‘இன்னோர் ஓலையும் எழுதினேன்’ என்றார்.”

“அண்ணா! ஓலையைக் கொடுங்கள்” என்று சிவகாமி கேட்டபோது, அவள் தொண்டையை அடைத்துக் கொண்டது.

“கொடுக்கிறேன், தங்கச்சி! கொடுக்கிறேன்! ஆனால், ஓலையை வாங்கிக் கொண்டதும் நீ ஓடிப்போய் என்னைத் திண்டாட்டத்தில் விட்டுவிடக் கூடாது…”

“என்ன திண்டாட்டம், அண்ணா?”

“போன தடவை மாமல்லரின் ஓலையை வாங்கிக் கொண்டதும் ஒரே ஓட்டமாய் ஓடிப் போய்விட்டாயல்லவா? அதனால் எனக்கு எவ்வளவு சங்கடமாய்ப் போய்விட்டது தெரியுமா! ‘ஓலையை வாங்கிக் கொண்டதும் சிவகாமி என்ன செய்தாள்? அவள் முகம் எப்படி இருந்தது? கண் எப்படியிருந்தது?’ என்றெல்லாம் மாமல்லர் கேட்டபோது நான் விழித்தேன்…”

“போதும், அண்ணா, வேடிக்கை! ஓலையைக் கொடுங்கள்!”

இன்னும் கொஞ்சம் வேணுமென்றே தவக்கம் செய்து விட்டுக் கடைசியாகக் கண்ணபிரான் ஓலையை எடுத்துக் கொடுத்தான்.

அப்புறம் ஒரு கணநேரங்கூட அங்கே சிவகாமி நிற்கவில்லை. வீட்டின் வலப்பக்கத்தில் சென்ற பாதை வழியாகப் பழைய தாமரைக் குளத்தை நோக்கி விரைந்து சென்றாள்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 6
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here