Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 8

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 8

57
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 8 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 8 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 8: நாகம் சீறுகிறது!

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 8

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 8: நாகம் சீறுகிறது!

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 8

அரண்யத்தினால் சூழப்பட்ட தாமரைக் குளக்கரையில், மகிழ மரத்தினடியில் போட்டிருந்த மரப்பலகைச் சிங்காதனத்தில் சிவகாமி அமர்ந்து, தன் மார்புக்கச்சில் சேர்த்துச் செருகியிருந்த ஓலையை எடுத்தாள்.

“பொல்லாத ஓலையே! பல்லவ குமாரரின் காதல் என் உள்ளத்தைக் குத்திப் புண் செய்வது போதாதென்று நீயும் என் நெஞ்சைக் குத்துகிறாயா?” என்று சொல்லிக்கொண்டே, அந்த ஓலையைக் கண்ணிலே ஒற்றிக்கொண்டாள். பிறகு சற்றுத் தயங்கி, சட்டென்று தன் செவ்விதழ்களில் அதை ஒரு தடவை வைத்து எடுத்துவிட்டு, வெறுமையாயிருந்த மேல் ஓலையை அப்புறப்படுத்தினாள். உள் ஏட்டில் முத்துப்போல் பொறித்த அழகிய சின்னஞ்சிறு எழுத்துக்கள் காணப்பட்டன. கண்களில் ஆர்வம் ததும்பச் சிவகாமி படிக்கத் தொடங்கிய போது, “அக்கா! அக்கா!” என்று பின்னாலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டாள். திரும்பிப் பார்த்தால், அந்த மரச் சிங்காதனத்தின் கைப்பிடிமீது ஒரு பச்சைக் கிளி உட்கார்ந்து அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது!

கிண்கிணி ஒலிப்பதுபோல் சிவகாமி கலகலவென்று சிரித்து விட்டு, அந்தக் கிளியைப் பார்த்து, “சுகப்பிரம்ம முனிவரே, உமக்கு என்ன இங்கே வேலை? இளம்பெண்கள் தனிமையாக இருக்கும் அந்தப்புரத்துக்குள் ரிஷிகள் வரலாமா? அதிலும், பூஜை வேளையில் கரடி புகுந்ததுபோல், ஒரு கன்னிப் பெண் தன் காதலரின் ஓலையைப் படிக்கப் போகும் தருணத்திலா நீர் வந்து சேருவது? போம்! போம்!” என்று கையை ஓங்கி வீசியபோது, அந்தக் கை வீச்சானது, கன்னத்தை நெருங்கிவரும் காதலனுடைய கரத்தைத் தள்ளும் அபிநயமாகவே தோன்றியது.

அதற்கேற்றாற்போல் அந்தச் சுக மகாமுனிவரும் “மாட்டேன்! மாட்டேன்!” என்றார்.

சிவகாமி மறுபடியும் சிரித்துவிட்டுக் கூறினாள்: “வேஷதாரி ரிஷியே! கதைகளிலே வரும் அரசிளங்குமரிகள் எல்லாரும் அந்தப்புரத்தில் உம்மை வைத்துக்கொண்டு எப்படித்தான் இரகசியம் பேசினார்களோ, தெரியவில்லை! இருக்கட்டும், இருக்கட்டும். நான் பல்லவ இராஜ்யத்தின் மகாராணியாகும் போது, உங்களுக்கெல்லாம் அரண்மனையில் இடமில்லாமல் செய்து விடுகிறேன்…”

அப்போது அந்த விஷமம் நிறைந்த சுகப்பிரம்மம், “மாமல்லா! மாமல்லா!” என்று உச்சஸ்தாயியில் கீச்சுக் குரலில் கத்திற்று.

“ஓஹோ! அப்படியா சேதி? நான் அந்தப்புரத்திலிருந்து உங்களைத் துரத்தியடித்தால், மாமல்லரிடம் சலுகைக்குப் போவோம் என்று சொல்கிறீரா? நடக்காது முனிவரே, நடக்காது! பல்லவ சிங்காதனத்திலே சிவகாமி தேவி அமர்ந்தவுடனே முதல் காரியமாக, அந்த ராஜ்யத்திலே சோம்பித் திரியும் ஆண்டிகள், பிக்ஷுக்கள், காவித்துணி தரித்த சந்நியாசிகள், மண்டை ஓட்டு மாலை அணிந்த காபாலிகர்கள் இவர்களையெல்லாம் நாட்டை விட்டு ஓட்டி விடப்போகிறாள். யோக்கியமாகக் கல்யாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துகிறவர்களுக்குத்தான் பல்லவ இராஜ்யத்தில் அப்புறம் இடம் இருக்கும், தெரியுமா? நான் இந்த ஓலையைப் படிக்கும் வரையில் உம்முடைய திருவாயை மூடிக் கொண்டு சும்மா இரும்…!”

சும்மா இருக்க முடியாது என்பது போல், சுகர், “ரதி! ரதி!” என்றார். சிவகாமி திரும்பிப் பார்த்தாள் அங்கே ரதி துள்ளி ஓடி வந்து கொண்டிருந்தது.

“ரதி! அந்தப்புரத்துக்கு தகுந்த சகி நீதான். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வாயைத் திறக்காமல் மௌனமாயிருப்பாய். இந்த ரிஷியோ எதையும் அரையும் குறையுமாய்க் கேட்டுக்கொண்டு நாலுபேர் இருக்கும்போது மானத்தை வாங்கி விடுவார்! இந்த வேஷதாரி முனிவர் இங்கிருந்து தொலைந்து போன பிறகு உனக்கு மாமல்லரின் ஓலையைப் படித்துக் காட்டுகிறேன், ரதி!” இவ்விதம் கூறி, ரதியின் மோவாய்க்கட்டையைத் தடவிக் கொடுத்துவிட்டுச் சிவகாமி மீண்டும் ஓலையைப் பார்த்தாள். கையிலே பணியாரத்தை வைத்துக் கொண்டிருக்கும் குழந்தை, அதைச் சாப்பிட்டால் ஆகிப் போய்விடுமே என்ற பயத்தினால் தயங்குவது போல் சிவகாமியும், ஓலையைப் படிக்கும் இன்பத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்து கடைசியில் படிக்கலானாள். ஓலையில் பிராகிருத பாஷையில் எழுதியிருந்தது பின்வருமாறு:

“பாரதநாட்டில் புகழ்பெற்ற சிற்ப சக்கரவர்த்தியின் செல்வக் குமாரியும், சௌந்தரிய தேவதை அடிபணிந்து போற்றும் சுகுமாரியும், பரத நாட்டிய சாஸ்திரம் வலம் வந்து தொழுது வணங்கும் கலைவாணியும், மாமல்ல பல்லவனின் இருதய சிம்மாசனத்தில் கொலு வீற்றிருந்து தனியரசு புரியும் மகாராணியும் ஆகிய சிவகாமி தேவிக்கு: இனிமேல் ஓலை எழுத மாட்டேன், நானே நேரில் வந்து விடுவேன் என்று முன் ஓலையில் எழுதியிருந்தேன். அதற்கு மாறாக இதை நான் எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. என் ஆருயிரே! முந்தா நாள் இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதை நினைத்தாலே என் தேகமெல்லாம் சிலிர்க்கிறது. கற்பனைக்கு எட்டாத இன்பம் நிறைந்த அந்த அதிசயக் கனவைக் கேள்.

கனவிலே நான் தூங்கிக் கொண்டிருந்தேன். ஆகாயவெளியில் அந்தரத்தில் காற்றுப் படுக்கையில் மிதந்து கொண்டே தூங்கியதாகத் தோன்றியது. அந்த அதிசயமான சொப்பனத் தூக்கம் எதனாலோ திடீரென்று கலைந்தது. கண்களை விழித்துப் பார்க்க முயன்றேன். ஆனால், ஏற்கனவே கண்கள் விழித்துத் தானிருந்தன. மேலும் கீழும் நாற்புறமும் ஒரே காடாந்தகாரமாயிருந்தபடியால், என் கண்கள் திறந்திருந்தும், மூடியிருந்தனவோ என்று நான் ஐயப்பட நேர்ந்தது.

உன் கண் இமையில் தீட்டிய மையைக் காட்டிலும் கரியதாய் என்னைச் சுற்றிலும் படர்ந்திருந்த அந்த அதிசயமான இருட்டைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கையில், எனக்குச் சற்று மேலே வட்ட வடிவமான ஓர் ஒளி தோன்றக் கண்டேன். வர வர அந்த ஒளிவட்டம் அகன்றுகொண்டு வந்ததோடு, அதன் ஜோதியும் அதிகமாகி வந்தது. கண்களைக் கூசச் செய்யாமல் குளிர்ந்து விளங்கிய அந்தப் பொன்னிற ஒளி வரவர என்னை நெருங்கி நெருங்கி வந்ததைக் கண்டேன்.

அருகே வந்ததும், அந்த ஒளி வட்டம் உன்னுடைய திவ்ய வதனந்தான் என்று தெரிந்தபோது, எனக்குண்டான வியப்பையும் களிப்பையும் எவ்வாறு சொல்வேன்? சிவகாமி! விரைவிலே உன்னுடைய உருவம் முழுவதுமே தெரிந்தது. எல்லையில்லா அந்தகாரத்தின் நடுவில் உன் பொன் உருவத்தைப் பார்க்கப் பார்க்க, எனக்கு ஒரு விசித்திரமான எண்ணம் உதயமாயிற்று. உன்னுடைய உருவமானது சாதாரண மனித தேகத்தைப் போல் இரத்தம், சதை, எலும்பு, தோல் இவைகளினால் ஆனதாக எனக்குத் தோன்றவில்லை. நிலாமதியின் இளங்கதிரையும் மல்லிகைப் பூவின் இன்ப மணத்தையும், அன்னப் பட்சியின் இறகிலுள்ள மென்மையையும், செவ்வழி ராகத்தின் இன்னிசையையும் கலந்து உன் தூய திருமேனியைப் பிரமன் படைத்திருக்க வேண்டுமென்று கருதினேன்.

இவ்வாறு நான் உன் மேனி அழகாகிய மதுவை அருந்தி மயங்கி நிற்கையில், நீ என் அருகே நெருங்கி வந்தாய். என் முகத்துக்கு வெகு சமீபத்தில் உனது பொன் முகத்தைக் கண்டேன். காலையில் மலர்ந்த குவளை மலர்களில் பனித்துளி நிற்பதுபோல் உன் நீண்ட கண்களின் முனையில் இரு கண்ணீர்த் துளிகள் நின்றன. உன்னுடைய மூச்சுக்காற்று என் முகத்திலே பட்டது. அவ்வளவு அருகில் வந்திருந்த உன்னைத் தழுவி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய தேகத்தின் ஒவ்வோர் அணுவும் துடிதுடித்தது. ஆனாலும், நான் அவ்விதம் செய்யவில்லை.

என் உள்ளத்தில் ஒரு சந்தேகம் தோன்றியிருந்தது. உன்னைத் தொட்டேனானால், உன் திருமேனியானது நிலா மதியின் கதிராகவும், மல்லிகையின் மணமாகவும், அன்னப் பட்சியின் மென்மையாகவும், செவ்வழியின் இன்னிசையாகவும் தனித் தனியே பிரிந்து மறைந்து விடுமோ என்ற பயம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பயத்தை அறிந்து கொண்டவளைப் போல நீ உன் செவ்விதழ்கள் சிறிது அகல, முத்துப் போன்ற பற்களின் நுனி தெரிய, குறுநகை புரிந்தாய்! உன் பொன் வதனம் என்னை அமுத போதையில் ஆழ்த்திக்கொண்டு இன்னும் அருகே நெருங்கிற்று.

ஆ என்ன சொல்வேன் என் துரதிர்ஷ்டத்தை! அந்தச் சமயத்தில் எங்கேயோ ஒரு நாகப் பாம்பின் சீறல் கேட்டது. சட்டென்று திரும்பிப் பார்த்தேன். ஒரு மரக்கிளையில் இரண்டு பட்சிகள் உட்கார்ந்து, ஒன்றின் மூக்கை ஒன்று தொட்டும், ‘கலகல’ என்று சப்தித்தும் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த மரத்தின் அடிக்கிளையிலிருந்து ஒரு நாகப் பாம்பு – கருநிறமும் மஞ்சள் நிறமும் கலந்த உடலுடைய நீண்ட பாம்பு அந்தப் பட்சிகள் இருந்த கிளையை நோக்கிச் ‘சரசர’ என்று ஏறிக் கொண்டிருந்தது. அந்த நாகத்தின் சீறலைத்தான் நான் கேட்டதாகத் தெரிந்து கொண்டேன். அந்தக் கணத்தில் உன்னைக் கூட மறந்து, என் உடைவாளை அவசரமாய் எடுத்தேன்.

அவ்வளவுதான் விழித்துக்கொண்டேன். என் கண்ணில் வளரும் பெண்ணரசியே! சொப்பனங்களிலும் அவற்றின் பலன்களிலும் நம்பிக்கை இல்லாதவன் நான். ஆனாலும் இந்தக் கனவுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா என்று அடிக்கடி என்னையறியாமல் எண்ணம் உண்டாகிறது. உனக்கு ஏதேனும் அபாயம் வருமென்பதைக் குறிப்பிடுகிறதோ என்று ஐயுறுகிறேன். யுத்தம் நெருங்கி வருகிறபடியால் நீ ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஆனால், எவ்விதக் கவலையோ, பயமோ வேண்டாம். என் கையிலே வாள் இருக்கும் வரையில் உனக்கும் உன் தந்தைக்கும் அபாயம் எதுவும் நேராது.

பொழுது விடியப்போகிறது கீழ்வானம் வெளுக்கிறது. நான் சொல்ல விரும்பிய இன்னொரு செய்தியைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன். எனக்கு ஒரு புதிய தோழன் கிடைத்திருக்கிறான். அவன் யார் தெரியுமா? மதயானை மேல் வேல் எறிந்து உன்னையும் உன் தந்தையையும் காப்பாற்றிய வீர வாலிபன்தான். அவனைக் கோட்டைக் காவலுக்காகச் சக்கரவர்த்தி அனுப்பியிருக்கிறார். நேற்றிரவெல்லாம் நானும் அவனும் பேசிக் கொண்டிருந்தோம். பெரும்பாலும் உன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

சக்கரவர்த்தியிடமிருந்து உங்களுக்கு அவன் சேதி கொண்டு வருகிறான். நீங்கள் காஞ்சிக் கோட்டைக்காவது வந்துவிட வேண்டும், அல்லது சோழ நாட்டுக்குப் போய்விட வேண்டும் என்று சக்கரவர்த்தி சொல்லியனுப்பியிருக்கிறார். ஆனால் நான் அங்கு வந்து உங்களைப் பார்த்துப் பேசும் வரையில் அதைப்பற்றி ஒரு முடிவும் செய்ய வேண்டாம். யுத்தம் நெருங்கி வருகிறதானது ஒரு காரியத்துக்கு ரொம்பவும் நல்லதாயிருக்கிறது. கூடிய சீக்கிரம் எனக்கு விடுதலை கிடைத்துவிடும். கோட்டைக்கு வெளியே போகக் கூடிய நாள் விரைவிலே வரும். அந்த நாள் வந்தவுடன் நான் நேரே அங்கு வந்து உன்னைப் பார்த்துவிட்டு வேறு காரியங்களைக் கவனிப்பேன்.

என் செல்வமே! ஒவ்வொரு சமயம் நினைத்தால் இந்த இராஜ்யம் என்னத்திற்கு, யுத்தம் என்னத்திற்கு என்றெல்லாம் தோன்றுகிறது. இதெல்லாம் சொப்பனமாயிருக்கக் கூடாதா? திடீரென்று கண் விழித்து எழுந்ததும், நான் சக்கரவர்த்தி குமாரன் இல்லை, உன் தகப்பனாரிடம் சிற்பக் கலை கற்றுக் கொள்ளும் சீடன் என்று ஏற்பட்டால், எவ்வளவு ஆனந்தமாயிருக்கும்? அப்போது உனக்கும் எனக்கும் இடையே ஒரு தடையும் இராதல்லவா? இவ்வாறு எட்டு மாத காலமாக உன்னை வந்து பார்க்காமல் இருந்திருப்பேனா?”

ஓலையை ஒரு தடவை முழுதும் படித்த பின்னர், இன்னொரு தடவையும் சிவகாமி படித்தாள். பிறகு ரதியைப் பார்த்து, “ரதி, பல்லவ குமாரரிடமிருந்து வந்த ஒவ்வோர் ஓலையையும் உனக்குப் படித்துக் காட்டினேன் அல்லவா? இந்தத் தடவை முடியாது! படித்துக் காட்டினாலும் உனக்கு விளங்காது!” என்றாள்.

பிறகு ஓலையை எடுத்துக்கொண்டு, பின்னால் இருந்த மகிழ மரத்தின் மேல் இரண்டு அடி ஏறினாள். மேலே கிளைகள் முளைத்திருந்த இடத்தில் காணப்பட்ட பொந்தில் கையைவிட்டுத் திரும்ப எடுத்தபோது அவளுடைய கையில் ஏழெட்டு ஓலைகள் இருந்தன. அந்த ஓலைகளை ஒவ்வொன்றாய் எண்ணிப் பார்த்து விட்டுத் தன்னிடமிருந்ததையும் சேர்த்து மறுபடியும் பொந்திற்குள் வைத்து விட்டுக் கீழே இறங்கினாள்.

“ரதி! வா! போகலாம்; சுகப்பிரம்மரிஷியே! வாரும், வீட்டுக்குப் போகலாம். அப்பா சாப்பிடக் காத்துக் கொண்டிருப்பார். மாமல்லரின் ஓலையைப் படித்துக் காட்டவில்லையென்று என் பேரில் கோபமா? நாளைக்கு வந்து உங்கள் இருவருக்கும் படித்துக் காட்டுகிறேன். நாளைக்கு மட்டுந்தானா? என் வாழ்நாள் உள்ள வரையில் ஒவ்வொரு நாளும் படித்துக் காட்டுவேன். ரதி! குமார சக்கரவர்த்தியைப் பற்றி நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சுக மகாமுனிவரே! மாமல்லர் மகாகவி என்பதைத் தெரிந்து கொள்ளுவீராக. காளிதாசனையும் பாரவியையும் போன்ற பெரிய கவி மாமல்லர். அவருடைய கவிதைக்குப் பாத்திரமான பெண் யார் தெரியுமா? இந்த ஏழைச் சிற்பியின் மகள் சிவகாமிதான்!”- இவ்விதம் ரதியுடனும் சுக முனிவருடனும் மாறி மாறிப் பேசிக் கொண்டே சிவகாமி வீட்டை நோக்கிச் சென்றாள்.

காட்டு மரங்களுக்குள்ளே சிவகாமி மறைந்ததும், தாமரைக் குளத்தின் அருகில் இருந்த மற்றொரு பெரிய மரத்தின் மறைவிலிருந்து நாகநந்தி அடிகள் வெளிப்பட்டார். அவர் மெல்ல நடந்து வந்து, சிவகாமி ஓலைகளை ஒளித்து வைத்த மரப் பொந்திலிருந்து அவற்றை எடுத்தார். ஒவ்வொன்றாக அவற்றை விரைவாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார். அவ்விதம் வாசித்து வந்தபோது அவர் விட்ட பெருமூச்சானது, நாகப் பாம்பின் சீறலைப் போலத் தொனித்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 7
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 9

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here