Home Kalki Read Sivagamiyin Sabatham Part 2 Ch 9

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 9

62
0
Read Sivagamiyin Sabatham Part 2 Ch 9 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 2 Ch 9 சிவகாமியின் சபதம் இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை அத்தியாயம் 9: ரதியின் புன்னகை

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 9

சிவகாமியின் சபதம்

இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை

அத்தியாயம் 9: ரதியின் புன்னகை

Read Sivagamiyin Sabatham Part 2 Ch 9

மாமல்லரின் ஓலையில் ஒரு பகுதியைச் சிவகாமி நினைத்து நினைத்து ஆனந்தித்துக் கொண்டே வீடு நோக்கி நடந்தாள். அப்படி அவளை மெய்மறக்கச் செய்தது ஓலையின் கடைசிப் பகுதியேயாகும். சக்கரவர்த்தியின் குமாரனாயிராமல் ஆயனரிடம் சிற்பக்கலை கற்கும் சீடனாயிருக்க விரும்புவதாக மாமல்லர் தெரிவித்திருந்தாரல்லவா! ஆகா இந்த விஸ்தாரமான பரத கண்டத்தில் மூன்றில் ஒரு பாகத்தைத் தனி அரசு புரியும் சக்கரவர்த்தியின் குமாரர், தமக்குரிய அந்த மகத்தான சாம்ராஜ்யத்தை வேண்டாமென்று வெறுத்துத் தள்ளச் சித்தமாயிருக்கிறார்! எதற்காக? அரண்மனை மான்யம் பெற்று ஜீவனம் செய்யும் ஆயனச் சிற்பியின் மகளுக்காக! அந்தப் பெண்ணிடம் தாம் கொண்ட காதல் நிறைவேறுவதற்கு இந்தச் சாம்ராஜ்யம் தடையாயிருக்கிறதென்பதற்காக! இம்மாதிரி அதிசயத்தைக் கதையிலோ காவியத்திலோ கேட்டதுண்டா?

“ரதி! உன் தோழி சிவகாமியைப் போல் பாக்கியசாலியான பெண் இந்த ஈரேழு பதினாலு லோகத்திலும் இல்லையடி!” என்று கூறிச் சிவகாமி தன்னைத் தொடர்ந்து வந்த மானின் முகத்தை இரு கரங்களாலும் பிடித்து நிமிர்த்தினாள். ரதியோ தன் அழகிய கண்களை அகல விரித்து அவளை ஆவலுடன் நோக்கிற்று. “இதோ பார், ரதி! நீயும் அதிர்ஷ்டசாலிதான்! எட்டு மாதத்துக்கு முன்பு உன்னிடம், மாமல்லரைப்பற்றி நான் குறைவாகக் கூறியதை மறந்துவிடு. ‘இன்று இவர் கமலி வீட்டுக்கு நான் போகக் கூடாது’ என்கிறார். நாளைக்கு ரதியை உன்னுடன் அரண்மனைக்கு அழைத்து வரக்கூடாது என்பார். இப்படிப்பட்ட பெரிய மனிதர்களின் உறவு நமக்கு ஒத்துவராதடி, அம்மா!” என்று சொன்னேனல்லவா? அதே பல்லவ குமாரர்தான் இன்றைக்கு ‘இராஜ்யம் என்னத்திற்கு சிவகாமி! எனக்கு நீயே போதும்!’ என்கிறார். அவர் சொல்வது நியாயந்தானே ரதி! எனக்கு அவரும், அவருக்கு நானும் இருந்தால் போதாதா? இராஜ்யம் என்னத்திற்கு? சண்டை, கொலை, சாவு எல்லாம் என்னத்திற்கு?”

இவ்விதம் கூறி ரதியின் இரண்டு தூக்கிய காதுகளுக்கும் நடுவில் சிவகாமி முத்தமிட்டுவிட்டு, மறுபடியும் சொல்லுவாள். “ரதி, உன்பாடு யோகந்தான்! மாமல்லரும் நானும் மனித சஞ்சாரமே இல்லாத நடுக்காட்டில் பர்ணசாலை கட்டிக் கொண்டு ஆனந்த வாழ்க்கை நடத்தப் போகிறோம். அப்போது இந்தச் சுகப்பிரம்மரிஷியை அடித்துத் துரத்திவிட்டு உன்னை மட்டுந்தான் எங்களுடன் வைத்துக் கொள்ளப் போகிறேன். உனக்கு வேலை நிரம்ப இருக்கும், ரதி! எனக்கும் மாமல்லருக்கும் இடையில் நீ அடிக்கடி தூது போக வேண்டியதாயிருக்கும்!”

ரதி கண்களினாலேயே ஒரு புன்னகை புரிந்து விட்டு, ‘போதும் இந்த அசட்டுத்தனம்!’ என்பதுபோல் தலையை ஆட்டி விட்டு, சிவகாமியின் கையிலிருந்து திமிறிக்கொண்டு புல் மேயச் சென்றது.

“அம்மா! சிவகாமி!” என்ற குரலைக் கேட்டதும் சிவகாமி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்த்த இடத்தில் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு ஆயனர் நிற்பதைக் கண்டாள்.

தான் ரதியுடன் பேசிக் கொண்டிருந்தது அவர் காதிலே விழுந்ததோ என்ற எண்ணத்தினால் அவளுடைய முகத்தில் நாணமும் அச்சமும் கலந்து தோன்றின.

ஆனால், மலர்ந்த முகத்துடன் ஆயனர் கூறிய வார்த்தைகள் அவளுடைய பயத்தைப் போக்கின. “குழந்தாய் ! எனக்குத் தூக்கிவாரிப் போட்டு விட்டது. நடுக்காட்டிலே யாரோடு பேசிக்கொண்டிருக்கிறாய் என்று பார்த்தேன். ரதியுடன் பேசிக் கொண்டிருக்கிறாயா? பாவம்! நீ என்ன செய்வாய்? உன்னோடு பேசுவதற்குக்கூட இவ்விடத்தில் யாரும் இல்லை. பொழுது போவதே உனக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும். காஞ்சியிலாவது உன் தோழி கமலி இருக்கிறாள்..”

இப்படிப் பேசிக்கொண்டே நெருங்கி வந்த ஆயனரைச் சிவகாமி கட்டித் தழுவிக்கொண்டு, “அப்பா உங்களுக்குத் தெரியுமா? கமலி… கமலி…” என்று மென்று விழுங்கினாள்.

ஆயனர் பதறலுடன், “ஐயோ கமலிக்கு என்ன, அம்மா? ஏதாவது உடம்புக்கு வந்திருக்கிறதா?” என்று கேட்டார்.

“ஆமாம், அப்பா! கமலிக்கு உடம்பிலேதான் வந்திருக்கிறதாம்!” என்று கூறிவிட்டுச் சிவகாமி இடி இடியென்று சிரித்தாள்.

அதைப் பார்த்த ஆயனர் விபரீதமாக ஒன்றுமிராது என்று தீர்மானித்துக்கொண்டு, “பின்னே என்ன, சிவகாமி? ஒரு வேளை இங்கே வருகிறதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறாளோ?” என்றார்.

“இல்லை, அப்பா, இல்லை” என்று சொல்லிக்கொண்டே சிவகாமி ஆயனரின் காதினருகில் நெருங்கி, “கமலி வயிற்றில் சின்னக்கண்ணன் வந்திருக்கிறானாம்!” என்றாள்.

ஆயனர் சற்று நிதானித்து விஷயம் இன்னதென்று தெரிந்து கொண்டார். முன்னைவிட அருமையுடன் சிவகாமியை அணைத்துத் தழுவிக் கொண்டு “சந்தோஷம் அம்மா! சிவகாமியின் கல்யாணத்தின்போதே நான் ஆசீர்வாதம் பண்ணினேன்…” என்றார்.

“அப்பா! உங்கள் செல்வக் குமாரிக்கு எப்போது கல்யாணம் ஆயிற்று?” என்றாள் சிவகாமி. தாம் வாய் தவறிச் ‘சிவகாமி’ என்று சொல்லிவிட்டது ஆயனருக்குச் சட்டென்று புலப்பட்டது.

அவர் ஓர் அசட்டுப் புன்னகை செய்துவிட்டு, “என்ன அம்மா சொன்னேன்? ‘சிவகாமியின் கல்யாணத்தின்போது’ என்று சொல்லி விட்டேனா? அதனால் என்ன? உனக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கத்தான் போகிறது. நான் சொல்லவந்தது என்னவென்றால், கமலியின் கல்யாணத்தின் போது நான் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தேன்; ‘சீக்கிரத்தில் உனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டும். அவன் என்னிடத்தில் சிற்பக்கலை கற்றுக்கொள்ள வரவேண்டும்’ என்று…” என்றார்.

இவ்விதம் கூறிய ஆயனர் பேச்சை நிறுத்திவிட்டு மௌனத்தில் ஆழ்ந்தார். அவருடைய உள்ளமானது சிவகாமியின் விவாகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. பரஞ்சோதிக்கு அவளை மணம் செய்விக்கலாம் என்று தாம் முன்னம் எண்ணியது நினைவு வந்தது. அவனோ இப்போது பெரிய போர் வீரனாகவும் கோட்டைத் தளபதியாகவும் ஆகியிருக்கிறான். கேவலம் ஒரு சிற்பியின் மகளை அவன் மணந்து கொள்ள இணங்குவானா?

“அப்பா! என்ன யோசிக்கிறீர்கள்?” என்று சிவகாமி கேட்கவும், “ஒன்றுமில்லை அம்மா! பரஞ்சோதியுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது நீ திடீரென்று எங்கே போய் விட்டாய்? அவனிடம் சக்கரவர்த்தி ஒரு முக்கியமான சமாசாரம் சொல்லியனுப்பியிருக்கிறார். அதைப்பற்றி உன் அபிப்பிராயத்தைக் கேட்கலாமென்று பார்த்தால், உன்னைக் காணோம். வா, வீட்டுக்குப் போய்ச் சாவகாசமாகப் பேசலாம். உன் அத்தை நாம் இரண்டு பேரும் சாப்பிடாமல் எங்கே தொலைந்து போய் விட்டோ ம் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பாள்!” என்றார்.

இருவரும் ஒற்றையடிப்பாதையில் மௌனமாக நடந்தார்கள். ஆயனரின் உள்ளம் சிவகாமியின் வருங்காலத்தைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

சிவகாமியின் உள்ளமோ, தேன் மலரை மொய்க்கும் வண்டைப்போல் மகிழ மரப்பொந்தில் இருந்த மாமல்லரின் ஓலையைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 8
Next articleRead Sivagamiyin Sabatham Part 2 Ch 10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here