Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 11

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 11

69
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 11 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 11 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 11: வரவேற்பு

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 11

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 11: வரவேற்பு

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 11

அன்றிரவு வெகு நேரத்துக்குப் பிறகு அந்தப்புரத்தில் மகேந்திர பல்லவர் தம் பட்டமகிஷியைச் சந்தித்த போது, புவனமகாதேவி தனது மனக் கவலையைத் தெரிவித்தாள். “பிரபு! இன்றைக்கு மந்திராலோசனை சபையில் தங்களுக்கும் மாமல்லனுக்கும் பெரிய வாக்குவாதம் நடந்ததாமே! நாலு பேருக்கு முன்னால் தந்தையும் புதல்வரும் சண்டை போட்டுக் கொள்ளலாமா?” என்று சக்கரவர்த்தினி கேட்டாள். “தேவி! யார் என்ன வேணுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். எனக்கு இன்று இருக்கிற பெருமையையும் பூரிப்பையும் சொல்லி முடியாது. அர்ஜுனனும் அபிமன்யுவும், லக்ஷ்மணனும் இந்திரஜித்தும் பேசுவதற்குரிய வீர வார்த்தைகளை இன்று மாமல்லன் பேசினான். உள்ளுக்குள் எவ்வளவோ எனக்கு ஆனந்தமாயிருந்தது. ஆனாலும், என்னுடைய நோக்கத்தை நான் கைவிடுவதற்கு இல்லை. ஆகையால், என்னுடைய ஆனந்தத்தை வௌியே காட்டாமல் கடுமையாகவும், கண்டிப்பாகவும் பேச நேர்ந்தது” என்றார் சக்கரவர்த்தி. “உங்களுடைய நோக்கந்தான் என்ன? தாங்கள் செய்யப் போகும் காரியம் எனக்கும் பிடிக்கவில்லை. நம்முடைய கொடிய சத்துருவைக் காஞ்சி நகருக்குள் வரவேற்பது உசிதமான காரியமா?” என்றாள் பல்லவச் சக்கரவர்த்தினி.

“தேவி! இது என்ன வார்த்தை? சத்துருவாக வந்தவரை மித்திரராக்கித் திருப்பியனுப்புவது பல்லவ வம்சத்துக்குப் பெருமை அல்லவா? என்னுடைய நோக்கம் என்னவென்று கேட்டாயே? சொல்கிறேன் கேள். என்னுடைய வாழ்நாளில் உலகத்தில் மீண்டும் சத்திய யுகம் பிறப்பதைக் காண வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் புண்ணிய பாரத பூமியில் இன்றைய தினம் மூன்று பெரிய சாம்ராஜ்யங்கள் இருக்கின்றன. நர்மதைக்கு வடக்கே ஹர்ஷவர்த்தனர்; நர்மதைக்கும் துங்கபத்ராவுக்கும் மத்தியில் புலிகேசி, துங்கபத்ரைக்குத் தெற்கே மகேந்திர பல்லவன். இந்த மூன்று பேரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்தப் புண்ணிய பூமி நரக பூமியாயிருக்கும். பஞ்சமும் பிணியும் ஜனங்களைப் பிடுங்கித் தின்னும். அப்படியில்லாமல் இந்த மூன்று பேரும் சிநேக தர்மத்துக்குக் கட்டுப்பட்டவர்களாயிருந்தால், இந்தப் பாரத பூமியே சொர்க்க பூமியாகிவிடும். தேசத்தில் வறுமை, பட்டினி, பஞ்சம் ஒன்றும் தலை காட்டாது. கல்வியும் கலைகளும் ஓங்கி வளரும்; சகல ஜனங்களும் சௌக்கியமாக வாழ்வார்கள். தேவி! என் இளம் பிராயத்தில் நான் ஒரு பகற்கனவு காண்பது உண்டு. சளுக்கச் சக்கரவர்த்தியின் விருந்தினனாக நான் சென்று அஜந்தாவின் வர்ண சித்திர அதிசயங்களைக் கண்டு களிப்பதாகக் கனவு கண்டேன். அப்புறம் வடக்கே கன்யாகுப்ஜத்துக்குச் சென்று ஹர்ஷவர்த்தனர் மூன்று வருஷத்துக்கு ஒரு தடவை நடத்தும் ஆனந்தக் கலைவிழாவைப் பார்த்து மகிழ்வதாகக் கனவு கண்டேன். மாமல்லபுரத்தை ஒரு சொப்பனச் சிற்ப உலகமாகச் சிருஷ்டித்து அதைப் பார்ப்பதற்காக ஹர்ஷரையும் புலிகேசியையும் அழைப்பதாகக் கனவு கண்டேன். அதெல்லாம் இப்போது நிறைவேறுமெனத் தோன்றுகிறது. நாங்கள் மூவரும் சிநேகர்களாகிவிட்டால் அப்புறம் இந்த நாட்டில் சமயச் சண்டை என்பது ஏது? யுத்தந்தான் ஏது?”

“பிரபு! அன்பு மதத்தையும் சிநேக தர்மத்தையும் பற்றிப் பேசும் தாங்கள் பாண்டியனைத் தண்டிப்பதற்கு மாமல்லனை எதற்காக ஏவுகிறீர்கள்?” என்று சக்கரவர்த்தினி குறுக்கிட்டுக் கேட்டாள். “அது வேறு விஷயம், சிநேகம் என்பது சமநிலையில் உள்ளவர்களுக்கிடையேதான் ஏற்பட முடியும். அறிவாளிகளுக்குள்ளே தான் அன்பு வளர முடியும். அறிவற்ற மூடர்களையும் அதிகப்பிரசங்கிகளையும் தண்டோபாயத்தைக் கைக்கொண்டே சீர் திருத்தியாக வேண்டும்” என்று கூறினார் மகேந்திர பல்லவர்.

மறுநாள் முதல் காஞ்சி நகரம் ஒரு புதிய தோற்றத்தை மேற்கொண்டது. ஏதோ ஒரு பெரிய முக்கியமான திருவிழாவை எதிர்பார்ப்பது போல ஜனங்களிடையே அபரிமிதமான உற்சாகம் காணப்பட்டது. வீதிகளையும் வீடு வாசல்களையும் ஜனங்கள் சிங்காரிக்கத் தொடங்கினார்கள். கடை வீதிகள் பழையபடி சோபை பெற்று விளங்கின. கோயில்களில் உற்சவங்கள் ஆரம்பமாயின. சிற்ப மண்டபங்களில் பழையபடி சிற்பிகள் வேலை செய்யத் தொடங்கினார்கள். நாற்புறமும் மேள வாத்தியங்கள் முழங்கின. சமஸ்கிருதக் கடிகைகளில் முன்போல வேதகோஷங்கள் கேட்டன. தமிழ்க் கல்லூரிகளில் பாசுரங்கள் பாடப்பட்டன. நடன அரங்கங்களும் நாடக மேடைகளும் புத்துயிர் பெற்றன. தாளச் சத்தத்துடன் கலந்து பாதச் சதங்கையொலியும் எழுந்தது.

ஜனங்களின் முக மலர்ச்சியோ சொல்ல வேண்டியதில்லை. எல்லாரும் ஒரே ஆனந்தமயமாய்க் காணப்பட்டார்கள். புருஷர்களும் ஸ்திரீகளும் முன்போல ஆடை ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினார்கள். பெண்களின் கூந்தலில் புஷ்பக் காடுகள் மலர்ந்து நாற்புறமும் சுகந்தத்தைப் பரப்பின. மாமல்லர் எதிர்பார்த்ததுபோல் காஞ்சி நகர மக்கள் அதிருப்தியடைந்தவர்களாகத் தெரியவில்லை. யுத்தம் நின்று விட்டதில் பெரிதும் மகிழ்ச்சியடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். அதைக் காட்டிலும், சளுக்கச் சக்கரவர்த்தி காஞ்சிக்கு விஜயம் செய்யப் போவதை நினைத்து நகரவாசிகள் அபரிமிதமான களிப்படைந்தவர்களாகத் தோன்றினார்கள்.

புலிகேசியின் சமாதானத்தூதன் வந்த ஐந்தாவது நாள் பிற்பகலில், காஞ்சி நகரின் வடக்குக் கோட்டை வாசல் எட்டு மாதத்திற்குப் பிறகு மீண்டும் திறந்தது. பேரிகைகளும், நகராக்களும் சமுத்திர கோஷம் கடுமுகம் என்னும் வாத்தியங்களும் நெடுந்தூரத்திற்கு நெடுந்தூரம் உள்ளவர்களின் காது செவிடுபடும்படி முழங்கின. வாதாபிச் சக்கரவர்த்தி தாம் இளம் பிராயத்திலிருந்து பார்க்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்த ‘கல்வியிற் பெரிய காஞ்சி’ மாநகரத்திற்குள் பிரவேசம் செய்தார். அவருடைய முக்கிய பரிவாரத்தைச் சார்ந்த ஐம்பது பேர் அவருடனே வந்தார்கள்.

வெளிவாசலைத் தாண்டி உள்ளே பிரவேசித்ததும், அங்கே தம்மை வரவேற்பதற்கு ஆயத்தமாகக் காத்துக் கொண்டிருந்த மகேந்திர பல்லவச் சக்கரவர்த்தியைப் புலிகேசி பார்த்தார். அவ்விரண்டு பேரரசர்களின் கண்களும் சந்தித்தன. மகேந்திரரின் முகத்தில் அரும்பியிருந்த இளம் புன்னகையைத் தவிர வேறு எவ்வித உணர்ச்சியும் வௌியாகவில்லை. ஆனால், புலிகேசியின் முகமானது அவருடைய கொதிப்படைந்த உள்ளத்தின் கொந்தளிப்பை நன்கு காட்டுவதாய் இருந்தது. ‘என்னுடைய வம்ச சத்துரு, நான் போட்டுக் கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் தோல்வியடையச் செய்த மகேந்திர பல்லவன் இவன்தானா?’ என்று புலிகேசியின் உள்ளத்தில் உண்டான ஆத்திரத்தை அவருடைய கண்கள் பிரதிபலித்தன. இந்த எண்ணங்களோடு, ‘ஆகா! கள்ளங் கபடு அறியாதது போலப் பாவனை செய்யும் இந்தக் கம்பீரமான முகத்தை இதற்கு முன் எங்கேயோ பார்த்தாற் போல் இருக்கிறதே!’ என்ற நினைவும் புலிகேசியின் மனத்தில் தோன்றியது.

இரு சக்கரவர்த்திகளின் விருதுகளும் முறையே கூறப்பட்ட பிறகு, இருவரும் அவரவருடைய குதிரையிலிருந்து கீழே இறங்கி ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கொண்டார்கள். அதே சமயத்தில் புலிகேசியின் கண்கள் மகேந்திர பல்லவருக்குப் பின்னால் நின்ற பரிவாரங்களைத் துருவி ஆராய்ந்தன. “சத்தியாச்ரயா! யாரைத் தேடுகிறீர்கள்?” என்று மகேந்திர பல்லவர் கேட்க, “பல்லவேந்திரா தங்களுடைய வீரப் புதல்வர் மாமல்லரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மகாவீரர், இங்கு நிற்பவர்களிலே யாரோ?” என்று சளுக்கச் சக்கரவர்த்தி கேட்டார். மகேந்திர பல்லவர் அப்போது இலேசாகச் சிரித்துவிட்டு, “இல்லை, சத்தியாச்ரயா! மாமல்லன் இங்கே இல்லை; அவன் வேறு முக்கிய காரியமாக வெளியூருக்குச் சென்றிருக்கிறான்!” என்றார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 10
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 12

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here