Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 19

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 19

78
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 19 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 19 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 19: சுரங்க வழி

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 19

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 19: சுரங்க வழி

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 19

ஆயனர் அஜந்தா வர்ண ரகசியத்தில் மனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கையில், சக்கரவர்த்தி அசுவபாலரைப் பார்த்து, “என்ன யோகியாரே, யோகப் பயிற்சியெல்லாம் இப்போது எப்படியிருக்கிறது? இந்த வாதாபி மன்னர் வந்தாலும் வந்தார்; யோக சாதனத்தில் மனதைச் செலுத்தவே அவகாசம் இல்லாமல் போய்விட்டது!” என்று கூறி கண்களினால் சமிக்ஞை செய்யவே, அசுவபாலர் சக்கரவர்த்தியைப் பின்தொடர, இருவரும் வீட்டுக்குப் பின்னால் அரண்மனை உத்தியானவனத்தில் இருந்த யோக மண்டபத்துக்குச் சென்றார்கள். அவர்கள் போனதும், சிவகாமி கமலியைப் பார்த்து, “அக்கா! சக்கரவர்த்தி கற்ற கலை எல்லாம் போதாதென்று யோகக் கலை வேறு கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறாரா?” என்று கேட்டாள். அதற்குக் கமலி, கண்ணை விஷமமாகச் சிமிட்டிக் கொண்டே இரகசியம் பேசும் குரலில், “யோகமாவது, மண்ணாங்கட்டியாவது; எல்லாம் மோசம்! அப்புறம் சொல்கிறேன்” என்றாள்.

சற்று நேரத்துக்கெல்லாம் மகேந்திர பல்லவர் யோக மண்டபத்திலிருந்து திரும்பி அந்த வீட்டின் வழியாக வௌியே சென்ற போது ஆயனர் சென்று குறுக்கிட்டு வணங்கி “பல்லவேந்திரா! இங்கே நாங்கள் வந்த காரியம் ஆகிவிட்டதல்லவா? இனி மண்டபப்பட்டுக்குத் திரும்பலாமா?” என்று இரக்கமான குரலில் கேட்டார். மகேந்திரர் புன்னகையுடன், “ஆயனரே! சிவகாமியின் அற்புத நடனத்துக்கு இன்னும் நான் வெகுமதிகள் அளிக்கவில்லையே? கொஞ்சம் பொறுத்திருங்கள். மேலும் மண்டபப்பட்டுக்கு நீங்கள் திரும்பிப் போகவேண்டிய அவசியமே நேராது. உங்களுடைய பழைய அரண்ய வீட்டுக்கே போகலாம்!” என்றார்.

ஆயனர் கவலை மிகுந்த குரலில், “பிரபு ஒவ்வோரிடத்திலும் ஆரம்பித்த வேலை அப்படி அப்படியே நடுவில் நிற்கிறதே! இந்தத் துரதிர்ஷ்டசாலியின் பாக்கியம் போலிருக்கிறது. மண்டபப் பட்டில் ஆரம்பித்த திருப்பணியும் அப்படியே நின்றுவிட்டால்…” என்று கூறி வந்தபோது, மகேந்திர பல்லவர் குறுக்கிட்டு, “மகா சிற்பியாரே! மனித வாழ்க்கை அற்பமானது. இதில் நாம் ஒவ்வொருவரும் ஆரம்பித்த காரியத்தைப் பூர்த்தி செய்துவிட முடிகிறதா? நான் தொடங்கிய காரியங்களும் எத்தனையோ நடுவில் நின்றுதான் போயிருக்கின்றன. அதனால் என்ன? நமக்குப் பின்வரும் சந்ததிகள் நிறைவேற்றி வைப்பார்கள், அதற்காகக் கவலைப்பட வேண்டாம். மேலும் நமது அரண்மனையில் கூடிய சீக்கிரத்தில் ஒரு கல்யாணம் நடக்கப் போகிறது. அப்போது உம் குமாரி நாட்டியம் ஆட வேண்டியிருந்தாலும் இருக்கும்!” என்று கூறி விட்டு, மேலே நடந்து சென்றவர், வாசற்படியண்டை சற்றுத் தயங்கி நின்று, “ஆயனரே! உங்கள் விருப்பத்துக்கு விரோதமாக இருக்கும்படி கட்டாயப்படுத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு அவசியம் போக வேண்டுமானால் கோட்டை வாசல் கதவுகள் திறந்ததும் போய் வாருங்கள், தேவை ஏற்படும்போது சொல்லி அனுப்புகிறேன்” என்று கூறி விட்டு, விரைந்து வாசற்படியைக் கடந்து சென்றார்.

சக்கரவர்த்தி போன பிறகு, சிவகாமி திடீரென்று தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள். கமலி அவளுடைய தலையைத் தூக்கித் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, “என் கண்ணே! நீ ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ சொல்! எந்தப் பாடுபட்டாவது, உயிரைக் கொடுத்தாவது நான் செய்து கொடுக்கிறேன். நீ கண்ணீர் விட்டால் என் நெஞ்சு உடைந்துவிடும் போலிருக்கிறது!” என்றாள்.

சிவகாமி மறுமொழி சொல்லாமல் விம்மவே, “அசடே! நீ எதற்காக அழுகிறாய் என்று எனக்குத் தெரியும். சக்கரவர்த்தி கலியாணத்தைப் பற்றிச் சொன்னதற்காகத்தானே? அது எப்படி நடக்கும், சிவகாமி? மாமல்லர் உனக்கு வாக்குக் கொடுத்திருக்கும் போது, எப்படி நடக்கும்? இந்த மகேந்திர சக்கரவர்த்தி என்ன தான் சூழ்ச்சி செய்தாலும் மாமல்லர் வேறொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள மாட்டார். மாமல்லரின் குணம் எனக்கு நன்றாய்த் தெரியும். அவரிடம் இந்தச் சக்கரவர்த்தியின் சூழ்ச்சி ஒன்றும் பலிக்காது!” என்றாள் கமலி.

சென்ற சில நாளாகக் காஞ்சி நகரில் மாமல்லரின் விவாகத்தைப் பற்றிப் பலவித வதந்திகள் உலாவி வந்தன. பாண்டியனைப் புலிகேசியிடமிருந்து பிரிக்கும் பொருட்டு, பாண்டிய குமாரியை மாமல்லருக்குக் கலியாணம் செய்து கொள்வதாகச் சக்கரவர்த்தி ஓலை அனுப்பியிருக்கிறார் என்று சிலர் சொன்னார்கள். இன்னும் சிலர் வாதாபிச் சளுக்கர் குலத்திலேயே மாமல்லருக்குப் பெண் கொள்ளப் போவதாகப் பிரஸ்தாபித்தார்கள். இதெல்லாம் கமலியின் காதுக்கும் எட்டியிருந்தபடியால், அவளுடைய மனமும் ஒருவாறு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகையினால்தான் மாமல்லரின் மன உறுதியைப் பற்றி அவ்வளவு வற்புறுத்தி, சிவகாமிக்கு அவள் தேறுதல் கூறினாள். ஆனால் சிவகாமி தேறுதல் அடையவில்லை. மாமல்லரின் பெயரைக் கேட்ட பிறகு இன்னும் விசித்து அழலானாள். “இல்லை, அக்கா, இல்லை! மாமல்லர் என்னை வெறுத்து விடுவார். என்னிடம் அவருக்கிருந்த ஆசையெல்லாம் விஷமாகிவிடப் போகிறது. அவருக்கு அப்படித் துரோகம் செய்து விட்டேன், இந்தப் பாவி! முன்னமே ஒரு தடவை அவர் என்னை வீட்டிலேயே இருக்கச் சொல்லியிருக்க, நான் ஊர் சுற்றப் போய்விட்டேன். இப்போது என்னை மண்டபப்பட்டிலேயே இருக்கும்படி சொல்லியிருக்க, இங்கே நாட்டியம் ஆட வந்துவிட்டேன். அக்கா! அவர் பாண்டியனை வென்று விட்டு நேரே மண்டபப்பட்டுக்கு வருவார்! வந்து என்னைத் தேடுவார்! அங்கே என்னைக் காணாமற் போனால், அவருக்கு எப்படி இருக்கும்? நான் இங்கே புலிகேசிக்கு முன்னால் நாட்டியம் ஆடவந்துவிட்டேன் என்று கேள்விப்பட்டால் அவருக்கு என்னமாய் இருக்கும்? ஆஹா! இந்தச் சக்கரவர்த்தி என்னை எப்படி வஞ்சித்து விட்டார்!” என்று விம்மிக் கொண்டே கூறினாள் சிவகாமி.

கமலி சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். “சிவகாமி! இதற்கு ஏன் இவ்வளவு கவலை? கோட்டை வாசல் திறந்ததும் நீ போகலாம் என்றுதான் சக்கரவர்த்தியே சொல்லி விட்டாரே!” என்றாள். “ஆஹா! அவருடைய சூழ்ச்சி உனக்குத் தெரியாது! எனக்காகவே கோட்டை வாசலை வெகு நாள் வரையில் சாத்தி வைத்திருப்பார், அக்கா! மாமல்லர் இங்கு வந்து சேரும் வரையில் திறக்கமாட்டார்! நீ வேணுமானால் பார்!” என்று சிவகாமி விம்மினாள். “தங்கைச்சி! நீ கவலைப்படாதே! கோட்டை வாசல் திறக்காவிட்டால் போகட்டும்; நான் உன்னை எப்படியாவது வௌியே அனுப்பி வைக்கிறேன்!” என்றாள் கமலி.

உடனே, சிவகாமி விம்மலை நிறுத்தி எழுந்து உட்கார்ந்து, “அக்கா! நிஜமாகத்தானா? அது சாத்தியமா? என்று கேட்டாள். “நான் மனம் வைத்தால் எது தான் சாத்தியமாகாது? என்னை யார் என்று நினைத்தாய்? இந்த மகேந்திர சக்கரவர்த்தியின் சூழ்ச்சியெல்லாம் என்னிடம் பலிக்குமா?” “அக்கா! எப்படி என்று சொல்! எங்களை எவ்விதம் வௌியில் அனுப்பி வைப்பாய்?” என்று சிவகாமி பரபரப்புடன் கேட்க, கமலி அவள் காதண்டைத் தன் வாயை வைத்து, “சுரங்க வழி மூலமாக!” என்றாள். சிவகாமி, ஏற்கெனவே காஞ்சியிலிருந்து வௌியே போக இரகசியச் சுரங்க வழி இருக்கிறதென்று கேள்விப்பட்டதுண்டு. எனவே, இப்போது கரை கடந்த ஆவலுடன், “சுரங்க வழி நிஜமாகவே இருக்கிறதா? உனக்கு நிச்சயமாய்த் தெரியுமா?” என்று கேட்டாள்.

கமலி மீண்டும் இரகசியக் குரலில் கூறினாள்; “இரைந்து பேசாதேயடி! மாமாவின் யோக சாதனத்தைப் பற்றிச் சொல்கிறேன் என்றேன் அல்லவா? யோகம் என்பதெல்லாம் பொய். தங்கச்சி! சுத்தப் பொய்! அந்த மண்டபத்திலே சுரங்க வழி இருக்கிறது! அதற்குள்ளேயிருந்து குண்டோதரன் அடிக்கடி வௌி வருவதை நான் பார்த்திருக்கிறேன்; சக்கரவர்த்தி கூடச் சில சமயம்…..” “என்ன அக்கா சொல்கிறாய்? குண்டோதரனா?” “ஆமாமடி தங்கச்சி! ஆமாம்! குண்டோதரன் என்று சக்கரவர்த்தியின் ஒற்றன் ஒருவன் இருக்கிறான். சத்ருக்னன் என்று இன்னொருவன் இருக்கிறான். இரண்டு பேரும் பொல்லாத தடியர்கள்!….என்னடி யோசிக்கிறாய்?”

“ஒன்றுமில்லை, சொல், அக்கா! அந்தச் சுரங்க வழி உனக்கு எப்படித் தெரிந்தது?” “அந்த யோக மண்டபத்தின் பக்கம் நான் வரவே கூடாது என்று என் மாமனார் சொல்லியிருந்தார். அதனாலேயே அவருக்குத் தெரியாமல் நான் அடிக்கடி போய்ப் பார்ப்பேன். ஒரு நாள் நான் போய் எட்டிப் பார்த்தபோது, மண்டபத்தின் மத்தியில் இருந்த சிவலிங்கம் அப்பால் நகர்ந்திருந்தது. லிங்கம் இருந்த இடத்தில் ஒரு பெரிய துவாரம் தெரிந்தது. அதற்குள்ளேயிருந்து குண்டோதரன் வௌியே வந்து கொண்டிருந்தான். அப்போது மண்டபத்திற்குள்ளே யார் இருந்தது என்று நினைக்கிறாய்? என் மாமனாரோடு சக்கரவர்த்தியும் நின்று கொண்டிருந்தார்!”

சிவகாமி சற்றுச் சிந்தித்துவிட்டு “கமலி அக்கா! எப்படியாவது அந்தச் சுரங்கத்தின் வழியாக எங்களை நீ வௌியே அனுப்பி விட்டால், உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. என்றென்றைக்கும் நான் உன் அடிமையாயிருப்பேன்!” என்றாள். “பேச்சைப் பார், பேச்சை! எனக்கு அடிமையாயிருக்கப் போகிறாளாம்! அடி பொல்லாத நீலி! நீ இந்த இராஜ்யத்துக்கே இராணியாகப் போகிறாய்; எனக்கு அடிமையாகி விடுவாயா நீ! வாக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் திண்டாடாதே!” என்றாள்.

பிறகு, “ஆகட்டும், தங்கச்சி கொஞ்சம் பொறுமையாயிரு! அந்த மண்டபத்தின் மத்தியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை இடம் விட்டு நகர்த்தினால் சுரங்க வழி தெரியும். லிங்கத்தை எப்படி இடம் விட்டு நகர்த்துவதென்பதை இன்றைக்கு அல்லது நாளைக்குள் எப்படியாவது தெரிந்து கொள்கிறேன். ஆனால் நீ இவ்வளவு அவசரப்பட்டு என்ன பிரயோஜனம்? உன் தகப்பனார் உன்னுடன் வருவதற்குச் சம்மதிக்க வேண்டுமே?” என்று கமலி கவலையுடன் கேட்டாள். “என்னைவிட அவர்தான் வௌியே போவதற்கு அதிக அவசரப்படுவார்! அதற்குக் காரணம் இருக்கிறது” என்றாள் சிவகாமி. அதே சமயத்தில் வாசற் பக்கமிருந்த ஆயனர் அவர்களின் அண்டையில் வந்து, “இன்னும் எத்தனை நாளைக்கு இந்தக் கோட்டைக்குள் அடைப்பட்டுக் கிடக்க வேண்டுமோ தெரியவில்லை… சிவகாமி! உனக்குத் தெரியுமா? முன்னொரு நாள் அந்தப் பரஞ்சோதி என்கிற பிள்ளையிடம் நாகநந்தி ஓலையைக் கொடுத்து அனுப்பினாரே, அஜந்தா வர்ண இரகசியத்துக்காக? புலிகேசி மகாராஜாவுக்குத்தான் அந்த ஓலையைக் கொடுத்து அனுப்பினாராம்; அடாடா! வாதாபி மகாராஜா காஞ்சியில் இருக்கும் போதே இதைச் சொல்லியிருந்தால், நான் அந்தச் சளுக்க குலசிரேஷ்டரிடம் கெஞ்சிக் கூத்தாடி அஜந்தா வர்ண இரகசியத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பேனல்லவா?” என்று புலம்பினார். “புலிகேசி மகாராஜாவுக்கு அந்த இரகசியம் தெரிந்திருப்பது என்ன நிச்சயம் அப்பா?” என்று சிவகாமி குறுக்கிட்டுக் கேட்டாள். “கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும், சிவகாமி! புலிகேசியின் இளம் பிராயத்தில் அவர் அஜந்தா மலைக் குகையிலேயே கொஞ்ச காலம் ஒளிந்து கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் ஆயனர். அப்போது கமலியும் சிவகாமியும் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள். ஆயனர் மேற்கண்டவாறு பேசப் பேச அவர்களுக்கு உற்சாகம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 18
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here