Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 29

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 29

67
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 29 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 29 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 29: காற்றும் நின்றது!

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 29

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 29: காற்றும் நின்றது!

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 29

மறுநாள் அதிகாலையில் நமசிவாய வைத்தியரிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் விடைபெற்றுக் கொண்டு மாமல்லரும் பரஞ்சோதியும் புறப்பட்டார்கள். பாண்டிய சைனியத்தை முறியடித்துச் சின்னா பின்னமாக்கித் துரத்தி அடித்த வீரபல்லவ சைனியம் கொள்ளிட நதியைக் கடந்து அக்கரையில் ஆயத்தமாயிருந்தது. அதிர்ஷ்டவசமாக நதியில் தண்ணீர் குறைவாயிருந்தபடியால் நதியைக் கடப்பது எளிதாயிருந்தது. மாமல்லரும் பரஞ்சோதியும் கொள்ளிடத்தைக் கடந்ததும் குதிரைப் படையை மட்டும் தங்களைத் தொடர்ந்து வரும்படியும், காலாட்படையைப் பின்னால் சாவகாசமாக வரும்படியும் கட்டளையிட்டு விட்டு மேலே சென்றார்கள். சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் தென் பெண்ணைக் கரையை அடைந்தார்கள். அன்றைய தினம் வழிப் பிரயாணத்தின் போது மாமல்லர் அவ்வளவு குதூகலமாயில்லை. அவர் உள்ளம் கவலை கொண்ட சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை அவரது முகக்குறி காட்டியது.

கவலைக்கும் சிந்தனைக்கும் தக்க காரணம் இருந்தது. முதல் நாள் மாலை மாமல்லர் திருநாவுக்கரசரைத் தரிசிக்கச் சென்றிருந்த போது அந்தப் பெருந்தகையார் எல்லையற்ற அன்புடன் மாமல்லருக்கு ஆசி கூறினார். பாண்டியனைப் புறங்கண்டது பற்றி வாழ்த்தினார். வாதாபிச் சக்கரவர்த்தி சண்டையை நிறுத்திச் சமாதானத்தைக் கோரியது பற்றியும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மாமல்லரின் வேண்டுகோளின்படி காஞ்சிக்குக் கூடிய சீக்கிரத்தில் திரும்பி வருவதாகவும் வாக்களித்தார். அப்போது காஞ்சி மடத்தில் கடைசியாக மாமல்லரைப் பார்த்த சம்பவம் நாவுக்கரசருக்கு நினைவு வந்தது. “பல்லவ குமாரா! ஆயனர் சுகமாயிருக்கிறாரா? அவருடைய மகள் சிவகாமி சௌக்கியமா? அன்றைக்கு மடத்தில், ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்’ என்ற பாடலுக்கு அந்தப் பெண் அபிநயம் பிடித்த காட்சி அப்படியே என் மனக் கண்முன்னால் நிற்கிறது. முடிவில் உணர்ச்சி மிகுதியால் மூர்ச்சித்தல்லவா விழுந்து விட்டாள்? தந்தையும் மகளும் சௌக்கியமாயிருக்கிறார்களா?”

இவ்விதம் சுவாமிகள் கேட்டுக் கொண்டிருந்தபோது மாமல்லருக்கும் ஏதேதோ பழைய ஞாபகங்கள் வந்தன. சிறிது தயக்கத்துடன், “காஞ்சி முற்றுகைக்கு முன்னால் அவர்களை நான் பார்த்ததுதான். வராக நதிக்கரையில் மண்டபப்பட்டுக் கிராமத்தில் இருக்கிறார்கள். போகும்போது அவர்களைப் பார்க்க எண்ணியிருக்கிறேன்” என்றார். அதைக் கேட்ட நாவுக்கரசர், “அப்படியா? மண்டபப்பட்டு வெகு அழகான கிராமம். அவர்களைப் பார்த்தால் நான் ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்ல வேணும். அந்தப் பெண் சிவகாமியை நினைத்தால் என் மனம் ஏனோ உருகுகிறது. பல்லவ குமாரா! ஆயனரிடம் அப்போதே சொன்னேன். சிவகாமியை அன்றைக்குப் பார்த்தபோது, எதனாலோ ‘இந்தப் பெண்ணுக்கு ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே!’ என்ற கவலை எனக்கு உண்டாயிற்று. ஏகாம்பரநாதர் கருணை புரிய வேண்டும்” என்றார்.

மேற்கூறிய மொழிகள் மாமல்லருடைய உள்ளத்தில் பதிந்து அவருடைய உற்சாகத்தையெல்லாம் போக்கடித்து விட்டன. “சிவகாமிக்கு ஒன்றும் நேராமலிருக்க வேண்டுமே” என்பதை ஒரு மந்திரம் போல் அவருடைய மனம் ஜபித்துக் கொண்டிருந்தது. அந்த நிமிஷமே சிவகாமியைப் பார்க்க வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை அவருடைய இருதயத்தின் அந்தரங்கத்திலிருந்து பொங்கி எழுந்து அவருடைய உடம்பின் ஒவ்வோர் அணுத்துவாரம் வழியாகவும் வெளியே வியாபித்தது. அவருடன் கிளம்பிய குதிரைப்படை வெகுதூரம் பின்தங்கும்படியாகத் தம் குதிரையை அவர் எவ்வளவோ வேகமாகச் செலுத்திக் கொண்டு போனபோதிலும் அந்த வேகங் கூட அவருக்குப் போதவில்லை. “பிரபு! குதிரையைக் கொன்று விடுவதாக உத்தேசமா?” என்று பல தடவை பரஞ்சோதி எச்சரிக்கை செய்து அவரை நிறுத்த வேண்டியதாயிருந்தது.

இரண்டுநாள் முன்னதாகவே மண்டபப்பட்டுக்கு அவர் அனுப்பியிருந்த கண்ணபிரான் எதிரே வந்து ஏன் செய்தி சொல்லக் கூடாது என்று அடிக்கடி எண்ணமிட்டார். இந்த எண்ணம் அவர் தென் பெண்ணையைத் தாண்டிச் சிறிது தூரம் போனதும் நிறைவேறியது. கண்ணபிரான் ரதத்தை வேகமாக ஓட்டிக் கொண்டு எதிரே வந்தான். ஒரு கணம் ரதத்தில் வேறு யாராவது இருப்பார்களோ என்று ஆவலுடன் மாமல்லர் பார்த்தார். உடனே, அவ்விதம் எதிர்பார்ப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லையென்று தாமே சமாதானம் செய்து கொண்டார்.

கண்ணபிரான் கொண்டு வந்த செய்தி மாமல்லருக்கு முதலில் ஏமாற்றத்தையளித்தது. பிறகு, அதுவே ஓரளவு ஆறுதலையும் மனச் சாந்தியையும் அளித்தது. அந்தச் செய்தியானது, மகேந்திர பல்லவர் இரண்டு வாரத்துக்கு முன்பே தூதர்களை அனுப்பி ஆயனரையும் சிவகாமியையும் காஞ்சிக்கு வரவழைத்துக் கொண்டார் என்பதுதான். இதனால் தாம் போகிற வழியில் சிவகாமியைப் பார்க்க முடியாமலிருப்பது உண்மையே. அதனால் என்ன? காஞ்சியில் அவர்கள் பத்திரமாயிருப்பார்கள் அல்லவா?

யுத்தம் முடிந்ததும் முதல் காரியமாக மகேந்திர பல்லவர் ஆயனரையும் சிவகாமியையும் நினைவு கூர்ந்து அவர்களைக் காஞ்சிக்குத் தருவித்துக் கொண்டது மாமல்லருக்கு மிக்க திருப்தியையளித்தது. இதிலிருந்து பல ஆகாசக் கோட்டைகளைக் கட்டத் தொடங்கினார். எதற்காக அவர்களை அவ்வளவு அவசரமாக மகேந்திர பல்லவர் காஞ்சிக்கு வருவித்துக் கொண்டார்? எதற்காகத் தம்மையும் பாண்டிய சைனியத்தைத் தொடர்ந்து போகாமல் திரும்பி வரும்படி கட்டளையிட்டிருக்கிறார்? ஒருவேளை தமது மனோரதத்தை அறிந்து விரைவிலேயே விவாகத்தை நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணமாயிருக்குமோ? இத்தகைய பற்பல மனோராஜ்யங்களிலும், அவற்றைக் குறித்துத் தளபதி பரஞ்சோதியிடம் பேசுவதிலுமாக மாமல்லருக்கு அன்றிரவு நேரம் வராக நதிக்கரையில் சென்றது. இதற்குள் பின் தங்கிய குதிரைப் படையும் வந்து சேர்ந்தது. மறுநாள் அதிகாலையில் எல்லோருமாகக் காஞ்சியை நோக்கிக் கிளம்பினார்கள். அன்றிரவே காஞ்சியை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்தினால் எல்லோருக்குமே பரபரப்பு அதிகமாயிருந்தது.

வராக நதியிலிருந்து ஒரு காத தூரம் போனவுடன், எதிரே இரண்டு குதிரை வீரர்கள் வருவதைப் பார்த்ததும் எல்லாருடைய பரபரப்பும் உச்ச நிலையையடைந்தது. வருகிறவர்கள் காஞ்சியின் தூதர்களாகத்தான் இருக்கவேண்டும்; என்ன செய்தி கொண்டு வருகிறார்கள்? அருகில் நெருங்கியதும் வந்தவர்கள் குதிரை மீதிருந்து குதித்திறங்கி மாமல்லருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ஒருவன் மாட்டுக் கொம்பில் வைத்துப் பத்திரமாய்க் கொண்டு வந்திருந்த ஓலையைப் “பிரபு! சக்கரவர்த்தியின் ஓலை!” என்று கூறிய வண்ணம் மாமல்லரிடம் கொடுத்தான். இன்னொருவன் தான் கொண்டு வந்திருந்த மற்றோர் ஓலையைப் பரஞ்சோதியிடம் கொடுத்தான். இருவரும் உடனே ஓலைகளைப் படிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் ஏறியிருந்த குதிரைகள் நின்றன. ஓலைகளைக் கொண்டு வந்திருந்த தூதர்கள் நின்றார்கள். மாமல்லரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் நின்றார்கள். அவர்களுக்குக் கொஞ்ச தூரத்துக்குப் பின்னால் பெரும் புயலைப் போலப் புழுதிப் படலத்தைக் கிளப்பிக் கொண்டு வந்த பதினாயிரம் குதிரைப்படை வீரர்களும் நின்றார்கள். சற்று நேரம் காற்றுக்கூட வீசாமல் நின்றது. மரக்கிளைகளும் இலைகளும் அசையாமல் நின்றன.

மகேந்திர பல்லவரின் ஓலையின் முதல் சில வரிகளைப் படித்ததும் மாமல்லருக்குச் சந்தேகம் உண்டாயிற்று. ஓலையை முன்னும் பின்னும் புரட்டி அந்தரங்க அடையாளாம் சரியாயிருக்கிறதா என்று பார்த்தார். தூதனையும் உற்றுப் பார்த்தார், சந்தேகமில்லை; உண்மையாகவே தந்தை எழுதிய ஓலைதான். உடம்பெல்லாம் படபடக்க, புருவங்கள் நெறிந்தேற, முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிக்க, கண்கள் கலங்கிக் கண்ணீர் பெருகி அடிக்கடி எழுத்தை மறைக்க, ஒருவாறு ஓலையை மாமல்லர் படித்து முடித்தார்; ஓலையில் எழுதியிருந்ததாவது. “அருமைப் புதல்வன் வீர மாமல்லனுக்கு, கர்வபங்கமடைந்த தந்தை மகேந்திரவர்மன் கண்ணில் கண்ணீருடனும் மனத்தில் துயரத்துடனும் எழுதிக் கொண்டது. “குழந்தாய்! என்னுடைய சாணக்கிய தந்திரமெல்லாம் கடைசியில் பயனற்றுப் போய் விட்டன. நான் ஏமாந்து விட்டேன்; உன்னுடைய நேர்மையான யோசனையைக் கேட்காமல் போனதற்காக அளவற்ற துயரமடைந்திருக்கிறேன். மகனே! அந்தப் பாதகப் புலிகேசி என்னை வஞ்சித்துவிட்டான். இரண்டு வாரம் காஞ்சி அரண்மனையில் விருந்துண்டு நட்புரிமை கொண்டாடிச் சல்லாபம் செய்து விட்டுப் போனவன், மகத்தான துரோகம் செய்து விட்டான். தொண்டை மண்டலத்துக் கிராமங்களையும், பட்டணங்களையும் கொளுத்தவும், சிற்பங்களையெல்லாம் உடைக்கவும், குடிகளை இம்சிக்கவும் அந்த மூர்க்க ராட்சதன் கட்டளையிட்டிருக்கிறானாம். ஐயோ! குமாரா! எப்படி உன்னிடம் சொல்வேன்? பல்லவ ராஜ்யத்தின் சிறந்த கலைச் செல்வம் பறிபோய் விட்டதோ என்றும் ஐயுறுகிறேன்.

“மாமல்லா! என்னை மன்னித்துவிடு! இதோ என்னுடைய தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்து கொள்ளப் புறப்படுகிறேன். மூர்க்க சளுக்க வீரர்களின் கொடுமைகளிலிருந்து நமது குடிகளைக் காப்பாற்றப் புறப்படுகிறேன். கோட்டையிலுள்ள சைனியங்களை அழைத்துக்கொண்டு கிளம்புகிறேன். சேனாபதி கலிப்பகையும் என்னுடன் வருகிறார். “குமாரா! காஞ்சி சுந்தரி பாதுகாப்பாரின்றி அனாதையாக இருக்கிறாள். நீயும் உன் தோழன் பரஞ்சோதியுந்தான் அவளைக் காப்பாற்ற வேண்டும். காஞ்சிக் கோட்டைக்கு நான் திரும்பி வருவேனா என்பது சந்தேகம். உன்னை உயிரோடு பார்ப்பேன் என்பதும் நிச்சயமில்லை. போர்க்களத்தில் எனக்கு வீர மரணம் கிடைத்தால், அதைக் காட்டிலும் நான் பெறக் கூடிய பேறு இனிமேல் வேறு ஒன்றும் இல்லை.” “மகனே! நான் செய்த துரோகத்தை மன்னித்து, மறந்து விடு! என்னையும் அடியோடு மறந்து விடு! ஆனால் அறுநூறு ஆண்டுகளாக வாழையடி வாழையாய் வந்த பல்லவ வம்சத்துக்கு இனிமேல் உன்னைத் தவிர வேறு கதியில்லையென்பதை மட்டும் மறந்து விடாதே!”

மாமல்லர் மேற்படி ஓலையைப் படித்து முடிப்பதற்கு வெகு நேரத்துக்கு முன்னாலேயே தளபதி பரஞ்சோதி தமக்கு வந்த ஓலையைப் படித்து விட்டார். அது மாமல்லருக்கு வந்த ஓலையைப் போலன்றி மிகவும் சுருக்கமாயிருந்தது. “அருமைப் பரஞ்சோதிக்கு! “நீ என்னைப் பல தடவை ‘நீங்கள் வாழ்க்கையில் தவறே செய்தது கிடையாதா?’ என்று கேட்டதுண்டு. நானும் அகம்பாவத்துடன் ‘கிடையாது’ என்று சொல்லி வந்தேன். இப்போது என் வாழ்க்கையில் மகா பயங்கரமான தவறைச் செய்து விட்டேன். இராஜ தந்திரத்தினால் சத்துருவை நண்பனாகச் செய்து கொள்ளப் பார்த்தேன். நேர்மாறான பலன் கிடைத்தது. அந்தத் தவறுக்குப் பிராயச்சித்தம் செய்வதற்காக இதோ போர்க்களத்துக்குப் புறப்படுகிறேன். “இச்சமயம் என் பக்கத்தில் நீ இல்லையே என்று வருத்தமாயிருக்கிறது. ஆனாலும் மாமல்லன் அருகில் இச்சமயம் நீ இருப்பதுதான் அதிக அவசியமானது. “நான் பல தடவையும் உன்னிடம் சொல்லியிருப்பதை மறந்து விடாதே. பல்லவ வம்சம் சந்ததியின்றி நசித்துப் போகக் கூடாது; மாமல்லனை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.”

மாமல்லர் ஓலையை இரண்டு மூன்று தடவை படித்த பிறகு பரஞ்சோதியிடம் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் வார்த்தைகள் வரவில்லை; எனவே ஓலையைச் சிநேகிதரின் கையில் கொடுத்தார். பரஞ்சோதி அதை விரைவிலேயே படித்து முடித்துவிட்டு, “ஐயா! நான் குதிரைப் படையுடன் முன்னதாகப் போகிறேன். தாங்கள் இங்கேயே தங்கிப் பின்னால் வரும் காலாட் படையையும் அழைத்துக் கொண்டு வந்து சேருங்கள்!” என்றார். “நல்ல காரியம் தளபதி! என் உடம்பு இங்கே இருக்கிறதே தவிர என் உயிர் ஏற்கெனவே என் தந்தைக்கருகில் போய் விட்டது. இனிமேல் வழியில் தங்குவது என்பது கிடையாது. காலாட்படை வருகிறபடி வரட்டும். குதிரைப் படையுடன் நாம் முன்னதாகப் போக வேண்டியதுதான்” என்றார் மாமல்லர். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பிரதேசமானது நாலு கால் பாய்ச்சலில் சென்ற ஆயிரக்கணக்கான குதிரைகளின் காலடியினால் அதிர்ந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே புழுதிப் படலமாயிற்று.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 28
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 30

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here