Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 32

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 32

70
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 32 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 32 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 32: இரத்தம் கசிந்தது

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 32

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 32: இரத்தம் கசிந்தது

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 32

மாமல்லர் ‘கீழே விழுந்து விடுவாரே என்ற பயத்தினால் பரஞ்சோதி அவருடைய கரத்தைப் பிடித்துக் கொண்டார். இருவரும் பேச நாவெழாமல் ஆயனரைப் பார்த்தபடியே நின்றார்கள். மீண்டும் ஆயனர், “பல்லவ குமாரா! சிவகாமி எங்கே? என் செல்வக் கண்மணி எங்கே? ஆயனச் சிற்பியின் அருமைக் குமாரி எங்கே? மகேந்திர பல்லவரின் சுவீகார புத்திரி எங்கே? பரத கண்டத்திலேயே இணையற்ற நடன கலாராணி எங்கே?” என்று வெறிகொண்ட குரலில் கேட்டுக் கொண்டே போனார்.

மாமல்லருடைய உள்ளமானது பெரும் புயல் அடிக்கும் போது கடல் கொந்தளிப்பது போல் கொந்தளித்தது. ஆயினும் சிவகாமிக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆவலினால் பல்லைக் கடித்து மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு, பசையற்ற வறண்ட குரலில், “ஐயா! தயவுசெய்து மனத்தை நிதானப்படுத்திக் கொள்ளுங்கள். சிவகாமி எங்கே என்று நானல்லவா தங்களைக் கேட்க வேண்டும்? சிவகாமிக்கு என்ன நேர்ந்தது? சொல்லுங்கள்” என்று கேட்டார். ஆயனருடைய வெறி அடங்கியது; அவருடைய உணர்ச்சி வேறு உருவங் கொண்டது. கண்ணில் நீர் பெருகிற்று, “ஆமாம், பிரபு! ஆமாம்! என்னைத்தான் தாங்கள் கேட்க வேண்டும். சிவகாமியை இந்தப் பாவியிடந்தான் தாங்கள் ஒப்புவித்திருந்தீர்கள். நான்தான் என் கண்மணியைப் பறி கொடுத்து விட்டேன். ஐயோ! என் மகளே! பெற்ற தகப்பனே உனக்குச் சத்துருவானேனே!” என்று கதறியவண்ணம் தலையைக் குப்புற வைத்துக் கொண்டு விம்மினார்.

ஆயனரின் ஒவ்வொரு வார்த்தையும் நரசிம்மவர்மரின் இருதயத்தை வாளால் அறுப்பது போல் இருந்தது. சிவகாமி இறந்து போய் விட்டாள் என்றே அவர் தீர்மானித்துக் கொண்டார். பொங்கி வந்த துயரத்துக்கும், ஆத்திரத்துக்கும் இடையே சிவகாமி எப்படி இறந்தாள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் எழுந்தது. ஒருவேளை சளுக்கர்களால் அவளுடைய மரணம் நேர்ந்திருக்குமென்ற எண்ணம் மின்னலைப் போல் உதயமாகி அவருடைய உடம்பையும் உள்ளத்தையும் பிளந்தது. மீண்டும் ஒரு பெரு முயற்சி செய்து மனத்தைத் திடப்படுத்திக் கொண்டார். அதிகாரத் தொனியுடைய கடினமான குரலில், “ஆயனரே! மறுமொழி சொல்லிவிட்டு அப்புறம் அழும். சிவகாமி எப்படி இறந்தாள்? எப்போது இறந்தாள்?” என்று கர்ஜித்தார்.

“ஆஹா! என் கண்மணி இறந்து விட்டாளா?” என்று அலறிக் கொண்டு, படுத்திருந்த ஆயனர் எழுந்து நிற்க முயன்றார். அவர் கால் தடுமாறியது; பயங்கரமாக வீறிட்டுக் கொண்டு தொப்பென்று தரையில் விழுந்தார். “இறந்து விட்டாளா?” என்ற கேள்வியினால், சிவகாமி இறந்து விடவில்லை என்ற உண்மை மாமல்லரின் மனத்தில் பட்டது. ஆயனர் அப்படி நிற்க முயன்று விழுந்த போது, அவருடைய காலில் ஊனம் என்னும் விவரமும் மாமல்லருக்குத் தெரிந்தது. இதனால் அவர் கல்லாகச் செய்து கொண்டிருந்த மனம் கனிந்தது. “ஐயா! தங்களுக்கு என்ன?” என்று கேட்டுக் கொண்டே ஆயனரின் அருகில் வந்து உட்கார்ந்தார்.

“ஐயா! தங்கள் கால் முறிந்திருக்கிறதே? இது எப்படி நேர்ந்தது?” என்று இரக்கத்துடன் வினவினார். “மலையிலிருந்து விழுந்து கால் முறிந்தது. என் கால் முறிந்தால் முறியட்டும்; சிவகாமி இறந்து விட்டதாகச் சொன்னீர்களே! அது உண்மைதானா?” என்று ஆயனர் கேட்டார். “ஐயா! சிவகாமியைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. போர்க்களத்திலிருந்து நேரே வருகிறேன். நீங்களும் சிவகாமியும் காஞ்சியில் சௌக்கியமாயிருப்பதாக எண்ணியிருந்தேன். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? சிவகாமியை எப்போது பிரிந்தீர்கள்? அவள் இறந்து போய் விடவில்லையல்லவா?” என்று மிகவும் அமைதியான குரலில் பேசினார் மாமல்லர்.

இதற்கு மாறாக, அலறும் குரலில், “ஐயோ! சிவகாமி இறந்து போயிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே!” என்றார் ஆயனர். “ஐயா! சிவகாமிக்கு என்னதான் நேர்ந்தது?” “ஐயோ! எப்படி அதைச் சொல்வேன்? எல்லாம் இந்தப் பாவியினால் வந்த வினைதான்! பிரபு! சிவகாமியைச் சளுக்கர்கள் சிறைப்பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்!” “என்ன? என்ன?” என்று மாமல்லர் கேட்ட தொனியில் உலகத்திலேயே கண்டும் கேட்டுமிராத விபரீதம் நடந்து விட்டதென்று அவர் எண்ணியது புலனாயிற்று. “ஆம், பிரபு! சிறைப் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். தாங்கள் சளுக்கர்களைத் தொடர்ந்து போனது பற்றிக் கேள்விப்பட்ட போது, சிவகாமியை விடுவித்துக் கொண்டு வருவீர்களென்று நம்பியிருந்தேன். என்னை ஏமாற்றி விட்டீர்கள்! ஆனால் உங்கள் பேரில் என்ன தப்பு? எல்லாம் இந்த பாவியினால் வந்ததுதான். சித்திரம், சிற்பம் என்று பைத்தியம் பிடித்து அலைந்தேன். என் உயிர்ச் சித்திரத்தை, ஜீவ சிற்பத்தைப் பறிகொடுத்தேன்!… ஐயோ! என் மகளுக்கு நானே யமன் ஆனேனே!”

இவ்வாறெல்லாம் ஆயனர் புலம்பியது மாமல்லரின் காதில் ஏறவே இல்லை. சிவகாமியைச் சளுக்கர் சிறைப்பிடித்துச் சென்றார்கள் என்னும் செய்தி ஒன்றுதான் அவர் மனத்தில் பதிந்திருந்தது. சிறிது நேரம் பிரமை பிடித்தவர் போல் உட்கார்ந்திருந்தார். பிறகு, தொண்டையைக் கனைத்துக் கொண்டு, மிக மெலிந்த குரலில், “சிற்பியாரே! இதெல்லாம் எப்படி நடந்தது? காஞ்சியிலிருந்து நீங்கள் ஏன் கிளம்பினீர்கள்? சிவகாமி எப்படிச் சிறைப்பட்டாள்? உங்கள் கால் எப்படி ஒடிந்தது? அடியிலிருந்து எல்லாம் விவரமாகச் சொல்லுங்கள்!” என்றார். ஆயனரும் அவ்விதமே விவரமாகச் சொன்னார். தட்டுத் தடுமாறி இடையிடையே விம்மிக் கொண்டு சொன்னார். மாமல்லர் கேட்டுக் கொண்டிருந்தார்; அச்சமயம் உறையிலிருந்து எடுத்த கத்தியை அவர் கையில் வைத்துக் கொண்டிருந்தார். கத்தியின் கூரிய விளிம்பை அவர் இடக்கை விரல்கள் தடவிக் கொண்டிருந்தன. அவ்வாறு தடவிய போது விரல்களில் சில கீறல்கள் ஏற்பட்டன. அந்தக் கீறல்களில் கசிந்த இரத்தம் சொட்டுச் சொட்டாகத் தரையில் சொட்டிக் குட்டையாகத் தேங்கியது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 31
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 33

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here