Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 35

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 35

93
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 35 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 35 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 35: கலங்கிய குளம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 35

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 35: கலங்கிய குளம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 35

ஆஹா! அந்தப் பழைய தாமரைத் தடாகம்தானா இது? சிவகாமியும் தானும் எத்தனையோ இன்பமான தினங்களைக் கழித்த குளக்கரைதானா இது? ஆம்; அதுதான் ஆனால் அதன் தோற்றம் இப்போது அடியோடு மாறிப் போயிருந்தது. மாமல்லரின் மனம் அடைந்திருந்த நிலையை அந்தத் தாமரைக்குளம் நன்கு பிரதிபலித்தது. பளிங்குபோல் தெளிந்த தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்த தடாகத்தில் இப்போது பெரும் பகுதி சேறாயிருந்தது. காண்போர் கண்களையும் உள்ளத்தையும் ஒருங்கே கவர்ந்து பரவசப்படுத்திய செந்தாமரை மலர்கள், குவிந்த மொட்டுக்கள், பச்சை வர்ணக் குடைகள் போல் கவிந்து படர்ந்திருந்த இலைகள் – இவை ஒன்றும் இப்போது இல்லை. யானைகளின் காலினால் சேற்றோடு சேர்த்து மிதிக்கப்பட்ட சில தாமரை இலைகள் காணப்பட்டன. வாடி வதங்கிய இலைகளையுடைய தாமரைக் கொடிகள் துவண்டும் உலர்ந்தும் கிடந்தன.

குளக்கரையில் தழைத்துச் செழித்திருந்த விருட்சங்களின் கிளைகள் முறிக்கப்பட்டுப் பாதி மொட்டையாகக் காணப்பட்டன. ஆ! அந்த விசுப்பலகை! அதுவும் பாதியில் முறிந்து ஒரு பகுதி தரையில் துகள் துகளாய்க் கிடந்தது. இன்னொரு பாதி அப்படியே பிளந்த முனைகளுடன் நின்றது. இருதயம் உடைந்த மாமல்லர் அந்தப் பிளந்த விசுப்பலகையின் மேல் உட்கார்ந்தார். சுற்று முற்றும் பார்த்தார்; பழைய ஞாபகங்கள் ஒன்றையொன்று தள்ளிக் கொண்டு போட்டியிட்டுக் கொண்டு வந்தன.

வசந்த காலத்தில், வனத்திலுள்ள மரங்களெல்லாம் புதுத் தளிர்களும் புஷ்பங்களுமாய்க் குலுங்கிக் கொண்டிருந்த நாட்களில், எத்தனையோ தடவை சிவகாமியைத் தேடிக் கொண்டு அவர் அங்கு வந்ததுண்டு. கானகத்துப் பட்சிகள் கலகலவென்று சப்தித்துக் கொண்டிருந்த நேரங்களில், அவரும் சிவகாமியும் அதே விசுப்பலகையில் உட்கார்ந்து, கண்களோடு கண்களும் கரங்களோடு கரங்களும் இருதயத்தோடு இருதயமும் பேசும்படி விட்டு, வாய்மூடி மௌனிகளாய் நேரம் போவது தெரியாமல் இருந்ததுண்டு. கீழ் வான முகட்டில் பச்சை மரங்களுக்கிடையே பொற் குடத்தைப் போல் பூரண சந்திரன் உதயமாகும்போது, அந்த முழுமதியையும் சிவகாமியின் முகத்தையும் மாமல்லர் எத்தனை தடவை ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்! தாமரைக் குளத்திலே ததும்பிய தெளிந்த நீரின் விளிம்பிலே நின்று, மேலே தோன்றிய சிவகாமியின் உண்மை உருவத்தையும் தண்ணீரிலே தெரிந்த அவளுடைய பிரதி பிம்பத்தையும் மாறி மாறிப் பார்த்து மகிழ்ந்தது எத்தனையோ நாள்! இம்மாதிரி ஞாபகங்கள் எல்லாம் மாமல்லருக்கு ஆரம்பத்தில் இன்பத்தையளித்தன. ஆனால் இடையிடையே, “இனிமேல் அந்த மாதிரி அனுபவங்கள் நமக்குக் கிட்டப் போவதே இல்லை” என்ற நினைவு வந்ததும் மனத்தில் கொடிய வேதனை உண்டாயிற்று. இனிமேல் பொறுக்க முடியாது என்ற மனோநிலை ஏற்பட்டதும் மாமல்லர் குதித்து எழுந்தார். விரைந்து சென்று குதிரை மீது தாவி ஏறி ஆயனர் வீட்டை நோக்கிச் செலுத்தினார்.

காஞ்சியிலிருந்து புறப்பட்ட சமயம் அவர் மனத்திலிருந்த அமைதி இப்போது இல்லை. அமைதிக்குப் பதிலாக இப்போது கோபமும் ஆத்திரமும் அவர் மனத்தில் குடிகொண்டிருந்தன. சிவகாமியைக் கொள்ளை கொண்டுபோன சளுக்கப் பகைவர்கள் மீது குரோதம் எழுந்தது. மூடத்தனத்தினால் சிவகாமியைப் பறி கொடுத்த ஆயனர்மீது கோபம் கோபமாக வந்தது. புத்த பிக்ஷுவின் மீது இன்னதென்று விவரமாகாத சந்தேகமும் கோபமும் ஏற்பட்டன. ஆ! அந்தப் பாஷாண்டியினிடம் அவருக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் கிடையாது. பிக்ஷு மனம் வைத்திருந்தால் சிவகாமியைக் காப்பாற்றியிருக்கலாமல்லவா? ஏன் காப்பாற்றவில்லை? ஏன் ஆயனரிடம் செய்தி ஒன்றும் சொல்லவில்லை? பிக்ஷு என்ன ஆனார்? எப்படி மாயமாய் மறைந்தார்?

சிவகாமியின் அரங்கேற்றம் தடைப்பட்ட அன்றிரவு இராஜ விஹாரத்தின் அருகில் புத்த பிக்ஷுவைச் சுட்டிக் காட்டிச் சக்கரவர்த்தி தமக்கு எச்சரித்தது மாமல்லருக்கு நேற்று நடந்ததுபோல் ஞாபகம் வந்தது. உடனே, கோபம் தந்தையின் பேரிலேயே திரும்பிற்று. மகேந்திர பல்லவரின் மந்திர தந்திரங்கள், சூழ்ச்சிகள், வேஷங்கள் இவற்றினாலேதான் பல்லவ இராஜ்யம் இன்றைக்கு இந்தக் கதியை அடைந்திருக்கிறது! தாமும் சிவகாமியை இழக்கும்படி நேரிட்டிருக்கிறது! திடீரென்று ஒரு விபரீதமான சந்தேகம் மாமல்லரின் உள்ளத்தில் உதித்தது. ஒருவேளை சிவகாமி சிறைப்படும் வண்ணம் சூழ்ச்சி செய்தவர் மகேந்திர பல்லவர்தானோ? இல்லாவிடில் எதற்காகத் தன்னைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு, மண்டபப்பட்டு கிராமத்திலிருந்து சிவகாமியைத் தருவிக்கிறார்? எதற்காக அரண்மனைத் தோட்டத்தில் ஒரு சுரங்க வழியை ஏற்படுத்தி அதைக் கண்ணபிரானின் மனைவிக்குத் தெரியும்படி செய்திருக்கிறார்? ஒருவேளை அந்தப் பெண் கமலி கூடச் சக்கரவர்த்தியின் சதிக்கு உடந்தையாயிருந்திருப்பாளோ? எல்லாரும் சேர்ந்து தன்னை இப்படி வஞ்சித்துவிட்டார்களோ! ஆஹா! இது என்ன சதிகார உலகம்? துரோகமும், தீவினையும் நிறைந்த சதிகார உலகம்!

இத்தகைய மனோநிலையில் மாமல்லர், ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தார். சிவகாமி சிறைப்பட்டது சம்பந்தமாக மர்மமாகவும், விளங்காமலும் இருந்த சில விஷயங்களை ஆயனரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினார். வீட்டு வாசலுக்குச் சற்றுத் தூரத்திலேயே குதிரையை நிறுத்தி விட்டுத் தாமும் சற்று அங்கேயே நின்று மனத்தை அமைதிப்படுத்திக் கொண்டார். பிறகு சாவதானமாக நடந்து வந்து ஆயனர் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள்ளே பேச்சுக் குரல் கேட்டது அவருக்குச் சிறிது வியப்பையளித்தது. ஆயனர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்? உள்ளே சிற்ப மண்டபத்தில் ஆயனருக்கு அருகில் உட்கார்ந்திருந்த மனிதனைப் பார்த்ததும் மாமல்லருடைய வியப்பு அளவு கடந்தது. அந்த மனிதன் ஒற்றர் தலைவன் சத்ருக்னன்தான்!

சத்ருக்னனை அங்கே கண்டதுகூட மாமல்லருக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. சத்ருக்னனுடைய முகத்தைப் பார்த்ததும் பளிச்சென்று இன்னொரு முகம் ஞாபகத்துக்கு வந்தது. அப்படி ஞாபகத்துக்கு வந்த முகம் சற்று முன்னால் காட்டுப் பாதையில் அவர் பார்த்த பெண்ணின் முகமேதான்! என்ன அதிசயமான ஒற்றுமை? ஒருவேளை சத்ருக்னனுடைய தங்கை அல்லது தமக்கையோ அவள்? அல்லது ஒருவேளை இவனே…? சந்தேகம் தோன்றிய ஒரு கணத்திற்குள்ளேயே அது தீர்ந்து விட்டது. சத்ருக்னனுக்கு அருகில் ஒரு சேலையும், மற்றும் ஸ்திரீகளுக்குரிய சில ஆபரணங்களும் கிடந்ததை நரசிம்ம பல்லவர் பார்த்தார்.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 34
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 36

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here