Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 37

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 37

74
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 37 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 37 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 37: புலிகேசியும் சிவகாமியும்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 37

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 37: புலிகேசியும் சிவகாமியும்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 37

சத்ருக்னன் கூறிவந்த வரலாற்றில் மேற்கண்ட இடத்திற்கு வந்ததும் மாமல்லருக்கு மூச்சு நின்றுவிடும் போல் இருந்தது. மேலே நடந்ததை தெரிந்து கொள்ள அவர் அவ்வளவு ஆவலாக இருந்தார். ஒருகணநேரத்தில் அவருடைய மனம் என்னவெல்லாமோ கற்பனை செய்தது. சத்ருக்கனனும் சிவகாமியும் புறப்பட்டு ஓடிவந்திருக்கவேண்டும் என்றும், மறுபடியும் வழியில் அவளுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்க வேண்டுமென்று நினைத்தார்.அவளை அந்த ஆபத்திலிருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கு அவருடைய உள்ளம் துடித்தது.

“சத்ருக்னா ஏன் இப்படிக் கதையை வளர்த்திக் கொண்டுருக்கிறாய்? சிவகாமியை எங்கே விட்டு விட்டு வந்தாய்? சீக்கிரம் சொல்லு, என்று ஆத்திரத்துடன் கேட்டார். “பிரபு, சிவகாமியம்மை இப்போது வடபெண்ணை நதிக்கு அப்பால் போய்க்கொண்டுருப்பார்! பொன்முகலி ஆற்றுக்கும் வடபெண்ணைக்கும் மத்தியில் அவரை விட்டு விட்டு வந்தேன். பாவி!” என்று சத்ருக்னன் துயரக்குரலில் கூறினான்.மாமல்லரின் கண்களில் தழற்பொறி பறந்தது. புலிகேசியிடம் வந்த கோபத்தைக் காட்டிலும் சத்ருக்னனிடம் அதிக கோபம் வந்ததாகத் தோன்றியது.

“இதென்ன ? சிவகாமியைப் புலிகேசியிடம் விட்டுவட்டு நீ மட்டும் தப்பி வந்தாயா? சத்ருக்னா! என்னிடம் விளையாட வேண்டாம் சீக்கிரம் விஷயத்தைச்சொல்!” என்று கர்ஜனை புரிந்தார். அப்போது ஆயனர், மாமல்லருக்குக் காரணம் விளங்காத உற்சாகம் நிறைந்த குரலில் , “பிரபு! சத்ருக்னன் சொல்கிறபடிசொல்லிவரட்டும். தயவு செய்து சற்றுப் பொறுமையாகக் கேளுங்கள்!” என்றார். சத்ருக்னன் மறுபடியும் சொல்லத்தொடங்கினான்:

“சிவகாமி அம்மை உடனே என்னுடைய யோசனையைச் சந்தோஷமாய் ஒப்புக்கொண்டு தப்பிச்செல்ல இணங்குவார் என்று எதிர்பார்த்தேன். இதில் பெறும் ஏமாற்றம் அடைந்தேன். அதுவரை தைரியமாய் இருந்த சிவகாமி அம்மை என்னுடைய யோசனையைக் கேட்டதும் திடீரென்று விம்மி அழத்தொடங்கினார். முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். அப்போது சிவகாமி அம்மை என்னை வெறித்துப் பார்த்து, ‘அவருடைய வாக்குறுதியை நம்பி இந்த கதி அடைந்தேன்’. என்றார். உடனே, ‘இல்லை, இல்லை. அவர் பேச்சைக் கேளாததால் இந்த விபரீதம் வந்தது. இனி அவருடைய முகத்தில் எப்படி விழிப்பேன்?’ என்றார். இன்னும் என்னவெல்லாமோ சம்பந்தமற்ற வார்த்தைகளைச் சென்னார். இதனாலெல்லாம் என் திகைப்பு அதிகமாயிற்று.ஒருவேளை அவருக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டுவிட்டதோ என்று மிகவும் பயந்து போனேன்.

பிறகு, சளுக்கியர் படை நம் கிராமங்களில் செய்த அட்டூழியங்களைத் தம் கண்ணால் பார்த்தது பற்றி சிவகாமி அம்மை சொல்ல ஆரம்பித்தார். அப்புறந்தான் அவர் அறிவுத்தெளிவைப் பற்றி எனக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கிற்று.அவர் சொன்னவற்றையெல்லாம் சிறிது நேரம் நான் பொறுமையாகக் கேட்டேன். பிறகு, ‘அம்மா! மகேந்திர பல்லவரும் மாமல்லரும் இதற்கெல்லாம் பழிக்குப் பழி வாங்குவார்கள்!’ என்றேன். அப்போது சிவகாமி அம்மைக்கு ஏற்பட்ட ஆத்திரத்தையும் ஆவேசத்தையும் பார்க்க வேண்டுமே? ‘ஆம், சத்ருக்னா! ஆம்! பழிக்குப் பழி வாங்கியே தீர வேண்டும்’ என்று அவர் அப்போது போட்ட கூச்சலினால் காவலர்கள் சந்தேகம் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்று எனக்கு பயமாய்ப்போய்வட்டது. நல்லவேளை அங்கே ஸ்தரீகள் துக்கத்திலே புலம்புவதும் பிதற்றுவதும் சகமாய் இருந்தபடியால், சிவகாமி அம்மையின் கூச்சல் காவலர்களின் கவனத்தைக் கவரவில்லை.

பிறகு நான் அவரை மெல்ல மெல்ல சாந்தப்படுத்தினேன். மறுபடியும் தப்பிச்செல்லும் யோசனையைக் கூறினேன். அப்போது அவர் என்னை வெறித்துப் பார்த்து, “ஐயா என்னைபோல் ஆயிரம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் கட்டிய புருஷனை விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். சிலர் கைக்குழந்தைகளை கதறவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் அந்த சாளுக்கிய ராட்சதரர்கள் கொண்டுபோகும்படி விட்டுவிட்டு நான்மட்டும் தப்பிச்செல்லவேண்டுமா? எனக்கு தாலிகட்டிய கணவண் இல்லை;. வயிற்றில் பிறந்த குழந்தையும் இல்லை. நான் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? என்னை விட்டுவிடுங்கள்; இங்குள்ள கைக்குழந்தைக்காரிகளில் யாராவது ஒருத்தியைக் அழைத்துப்போங்கள் உஙகளுக்கு புண்ணியம் உண்டாகும்’ என்றார். என்மனமும் இளகிவிட்டது. ஆயினும் மனதை கெட்டிபடுத்திக்கொண்டு, ‘அம்மா! மகேந்திர சக்கிரவர்த்தி எனக்கு இட்ட கட்டளை தங்களைப் பத்திரமாய் அழைத்து வரவேண்டும் என்பதுதான் ‘நான் சக்கிரவர்த்தியின் ஊழியன். அவருடைய கட்டளையை நிறைவேற்றவேண்டியவன்’ என்றேன். இதனால் அவருக்கு மனம் மாறாது என்று எனக்குத் தெரிந்தே இருந்தது. ஆதலின் மறுபடியும் ‘அம்மா! உங்களுக்கு புருஷனில்லை. குழந்தையில்லை எனபது உண்மைதான். ஆனால் தந்தை ஓருவர் இருக்கிறார் அல்லவா? ஏகபுத்திரியாகிய தங்களைப் பிரிந்து அவர்மனம் என்ன பாடுபடும்? அதை யோசிக்க வேண்டாமா’ என்றேன்.

“சிவகாமி அம்மையின் கண்களில் அப்போது கண்களில் கண்ணீர் துளித்தது. தழுதழுத்த குரலில், ‘ஆம் என் தந்தைக்கு பெரிய துரோகம் செய்துவிட்டேன் . ஐயோ! அவர் பிழைத்தாரோ இல்லையோ?’ என்றார். ‘அம்மா! அவரை பிழைப்பிக்க விரும்பினால் நீங்கள் என்னுடன் உடனே புறப்பட வேண்டும்!’ என்றேன் நான். சிவகாமி அம்மை மறுபடியும் முகத்தைக் கையால் மூடிக்கொண்டு விம்மினாள். சீக்கிரம் கையை எடுத்துவிட்டு, ‘ஐயா இன்று ஒருநாளைக்கு அவகாசம் கொடுங்கள். என் உடம்பும் உள்ளமும் சோர்ந்து போயிருக்கின்றன. இப்போது நான் புறப்பட எண்ணினாலும் ஓர் அடி கூட என்னால் எடுத்து வைக்க முடியாது. நாளைக்கு முடிவாகச்சொல்கிறேன்’ என்றார். நானும் அவருக்கு ஒருநாள் அவகாசம் கொடுப்பது நல்லது என்று எண்ணி, ‘ஆகட்டும், அம்மா! ஒருநாளில் ஒன்றும் குடிமுழுகிப் போகவில்லை. நாளைக்கே முடிவுசெய்யலாம்’ என்று சொன்னேன்.

“மறுநாள் இராத்திரி எப்படியாவது அவருடைய மனத்தைத் திருப்பி அவரையும் அழைத்துக் கொண்டு திரும்பலாம் என்று எண்ணி இருந்தேன். ஆனால் மறுநாள் மாலை நான் சற்றும் எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது. சளுக்கிய சக்ரவர்த்தி புலிகேசி பொன்முகலியாற்றைக்கடந்து வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டார். அவருடன் சிறு சைன்யமும் வந்தது! தளபதி சசாங்கனை அங்கேயே காவலுக்கு நிறுத்தி விட்டு இவர் மட்டும் முன்னால் செல்ல தீர்மானித்து வந்திருக்கிறார் என்று ஊகித்தேன். அதன்படியே அன்று இரவுக்கிரவே எல்லோரும் வடக்கு நோக்கி பிரயாணமானோம். எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தையும் துக்கத்தையும் சொல்லி முடியாது. வழியில் சிவகாமி அம்மையோடு தனியாயிருக்க நேர்ந்த போது, ‘அம்மா! இப்படி செய்து விட்டீர்களே!’ என்றேன். ‘நானா செய்தேன்? விதி இப்படி இருக்கும் போது நான் என்ன செய்வேன்!’ என்றார் சிவகாமி.

இரண்டுநாள் பிரயாணத்திற்குப் பிறகு மூன்றாவதுநாள் திருவேங்கடமலையின் அடிவாரத்தில் சென்று தங்கினோம். முதல் இரண்டுநாள் பிரயாணத்தில் புலிகேசி நாங்கள் தங்கியிருந்த பக்கம் வரவேயில்லை. முன்றாம் நாள் நாங்கள் ஒரு பாறையின் பக்கத்தில் தங்கி இருந்தோம். சமீபத்தில் குதிரைகளின் காலடிச்சத்தம் கேட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் புலிகேசியும் இன்னும் சில குதிரை வீரர்களும் அந்தப் பாறையின் திருப்பத்தில் வந்து நின்றார்கள். சக்ரவர்த்தி குதிரை மேலிறிங்கி எங்கள் அருகில் வருவாரோ என்று நான் எதிர்பார்த்தேன். அவ்விதம் நடைபெறவில்லை. சற்று நின்று பார்த்துவிட்டுச் சக்ரவர்த்தி குதிரையை திருப்ப யத்தனித்த போதுதான் சற்றும் எதிர்பாராத அதிசயச்சம்பவம் நடைபெற்றது. கண்ணைமூடித்திறக்கும் நேரத்தில் சிவகாமி பெண்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரே பாய்ச்சலாக பாய்ந்த ஓடினார். புலிகேசியின் குதிரைக்கு எதிரில் வழிமறித்து நின்று, ‘சக்கிரவர்த்தி! ஒரு விண்ணப்பம்’ என்று அலறினார்.

“சிவகாமியம்மையின் அலறலைக்கேட்டு அந்தக் கல்நெஞ்சன் புலிகேசி மனம்கூட இளகி இருக்க வேண்டும். உடனே, சிவகாமியின் அருகில் வந்தார். ‘பெண்ணே! என்ன விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்?’ என்று கேட்டார். ஆகா! அப்போது சிவகாமி அம்மையின் வாக்கிலிருந்து வந்த ஆவேச மொழிகளை எவ்விதம் வர்ணிப்பேன்! அத்தனை தைரியமும், சாமர்த்தியமும், வாக்கு வன்மையும அவருக்கு எங்கிருந்துதான் வந்ததோ, அறியேன். கம்பீரமாகப் புலிகேசியை நிமிர்ந்து பார்த்து, தழுதழுத்த குரலில், சிவகாமி அம்மை கூறிய மொழிகளை ஏதோ எனக்கு ஞாபகம் உள்ள வரையில் கூறுகிறேன்.

“ஐயா பூமண்டத்தை ஆளும் மன்னர்களாகிய நீங்கள் உங்களுடைய வீரத்தையும் புகழையும் நிலைநாட்டிக்கொள்ள யுத்தம் செய்கிறீர்கள். இன்றைக்கு எதிரிகளாய் இருக்கிறீர்கள்; நாளைக்குச் சிநேகிதர்களாய் இருப்பீர்கள். இன்றைக்கு ஒருவனுடைய அரண்மனையில் இன்னொருவர் விருந்தாளியாயிருக்கிறீர்கள். மறுநாள் போர்களத்தில் யுத்தம் செய்கிறீர்கள். உங்களுடைய சண்டையிலே ஏழைப்பெண்களாகிய எங்களை ஏன் வாட்ட வேண்டும்? உங்களுக்கு நாங்கள் என்ன கெடுதல் செய்தோம்? கருணை கூர்ந்து எங்களையெல்லாம் திருப்பி அனுப்பி விடுங்கள். இங்கே சிறை பிடித்து வைத்திருக்கும் பெண்களில் சிலர் கைக்குழந்தைகளை கதறவிட்டு வந்திருக்கிறார்கள். இன்னும் அநேகர் கையில் திருமணக் கங்கணத்துடன் வந்திருக்கிறார்கள். இவர்களை எல்லாம் நீங்கள் விடுதலை செய்து அனுப்பாவிட்டால், தங்களுடைய நகரமாகிய வாதாபியை அடைவதற்குள் அவர்களுகஙகுப் பைத்தியம் பிடித்துவிடும். திக்விஜயம் செய்து விட்டுத் தலைநகருக்கு திரும்பும்போது சித்தப் பிரமை பிடித்த ஆயிரம் ஸ்தரீகளை அழைத்துக்கொண்டு போவீர்களா? அதில் உங்களுக்கு என்ன லாபம்? ஆயிரம் பெண்கள் மனமார வாயாரத் தங்களை வாழ்த்திக் கொண்டு வீடு திரும்பும்படி செய்யுங்கள்!’ – இப்படிக் கல்லுங் கரையுமாறு சிவகாமியம்மை கேட்டதற்கு, ‘பெண்ணே! உன்னுடைய பாவ அபிநயக்கலை சாமர்த்தியங்களையெல்லாம் நாட்டியக் கச்சேரியில் காட்டவேண்டும்; இங்கே போர்களத்திலே காட்டி என்ன பிரயோஜனம்!’ என்றான் அந்த ரஸிக்கத்தன்மையற்ற நிர்மூடன்!……”

சத்ருக்னன் இவ்வாறு சொன்னபோது, மாமல்லர் ஓர் நெடுமூச்சுவிட்டு, ஆகா! ஆயனாரின் மகள் அந்த நீசனிடம் போய்க் காலில் வீழ்ந்து வரம் கேட்டாள் அல்லவா? அவளுக்கு வேண்டுயதுதான்!” என்ற கொதிப்புடன் கூறினார்.

சத்ருக்னன் மேலே சொன்னான்: “ஆம் பிரபு! சிவகாமி அம்மையும் தங்களைபப்போலவே எண்ணியதாகத் தோன்றியது. புலிகேசியின் மறுமொழியைக்கேட்டு அவர் தலையைக் குனிந்து கொண்டார். சிறிது நேரம் தரையைப் பார்த்த வண்ணம் இருந்தார். அப்போது அந்த சண்டாளப்பாவி, ‘பெண்ணே! உன் அபிநய சாகஸத்தைக்கண்டு நான் ஏமாந்து விடமாட்டேன். ஆனால் உன் பேச்சில் கொஞ்சம் நியாயம் இருக்கிறது. ஆகையால் உன் வேண்டுகோளை நிறைவேற்ற இணங்குகிறேன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. நீ இந்தப் பெண்களுக்காக மிகவும் இரங்கிப் பேசினாய். உன்னுடைய இரக்கம் வெறும் பாசாங்கு இல்லை என்பதை நீ நிரூபிக்க வேண்டும். இவர்கள் கட்டிய கணவனை பிரிந்து வந்தார்கள் என்றும், கைக் குழந்தையைப் பிரிந்து வந்தவர்கள் என்றும் சொன்னாயல்லவா? ஆனால் உனக்கு கணவனுமில்லை. குழந்தையுமில்லை. நீ என்னுடன் வாதாபிக்கு வர சம்மதிக்கிராயா, சொல்லு! சம்மதித்தால் உன்னைத்தவிர இவர்கள் எல்லோரையுமே இந்தக்கணமே விடுதலை செய்து அனுப்பி விடுகிறேன்’ என்றான். அந்த மொழியைக் கேட்டதும் அந்தப் பாவியை கொன்றுவிடலாமா என்று எண்ணினேன்.

மாமல்லர் குறுக்கிட்டு, “நிபந்தனைக்குச் சிவகாமி சம்மதித்தாளா?” என்று குரோதம் ததும்பிய குரலில்கேட்டார். “ஆம்பிரபு! சிவகாமி ஒருகணங்கூடதாமதிக்கவில்லை. உடனே எழுந்து நின்று, “சம்மதம், சக்கிரவர்த்தி! நிபந்தனையை ஒப்புக்கொள்கிறேன்! என்றார். அச்சமயம் சிவகாமி அம்மை நின்ற நிலையும், அவருடைய முகத்தோன்றமும் தெய்வீகமாய் இருந்தது! இராவணனுக்கு முன்னால் நின்ற சீதையையும், துரியோதனன் சபையில் நின்ற பாஞ்சாலியையும், யமன் முன்னால் வாதாடிய சாவித்திரியையும், பாண்டியன் முன்னால் நின்ற கண்ணகியையும் ஒத்து அச்சமயம் ஆயனாரின் திருக்குமாரி விளக்கினார்…..”. சத்ருக்னா உன்னுடைய! பரவச வர்ணணனை அப்புறம் இருக்கட்டும், பின்னே என்ன நடந்தது?” என்று மாமல்லர் கேட்டார்.

“சற்று நேரத்திற்கெல்லாம் சக்கிரவர்த்தி எங்களை விடுதலைசெய்யும்படி உத்தரவிட்டார். பொன்முகலி ஆறு வரையில்எங்களைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிடும்படியும் சில வீரர் களுக்கு ஆக்ஞாபித்தார். அவ்வளவு நாளும் அழுத கண்ணும் சிந்தி முக்குமாய் இருந்த ஸ்தரீகள் எல்லோரும் இப்போது ஒரே சந்தோஷத்தில் ஆழ்ந்தார்கள். சிவகாமியைத் தலைக்குத்தலை வாழ்த்தினார்கள்.ஆனால் எனக்கு இடிவிழுந்தது போல் இருந்தது.சிவகாமியின் காலில் விழுந்து ‘அம்மா! உங்களைவிட்டு நான் போகமாட்டேன். சக்கிரவர்த்தியிடம் மீண்டும் வரங்கேட்டு என்னை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். சிவகாமி ஒரே பிடிவாதமாக, ‘நீதான் முக்கியமாய்ப் போகவேண்டும். என் தந்தையிடம் போய்ச்செய்தி சொல்லவேண்டும்’ என்றார். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லை என்று நானும் புறப்படத் தீர்மானித்தேன். மேலும் அங்கே நான் தாமதித்தால் என்னுடைய வேஷம் வெளிப்பட்டு சிவகாமிக்கும் உபயோகமில்லாமல் இங்கேவந்து சொல்லமுடியாமற் போய்விடலாம் என்று பயந்தேன். ஆகவே ‘தங்கள் விருப்பம் அதுவானால் போகிறேன், அம்மா! அப்பாவிற்கு என்ன சேதி சொல்லட்டும்?’ என்று கேட்டேன். ‘என்னைப்பற்றிக் கவலப்படவேண்டாம். வாதாபியில் நான் சௌக்கியமாயிருப்பேன் என்றும் சொல்லு. வாதாபியிலிருந்து திரும்பி வரும்போது அஜந்தா வர்ண ரகசியத்தைத் தெரிந்து கொண்டு வருவேன் என்றும் சொல்லு என்றார் சிவகாமியம்மை…”

இவ்விதம் சத்ருக்னன் சொன்னதும் ஆயனர் துள்ளும் உற்சாகத்துடனே “பார்த்தீர்களா? பல்லவ குமாரா! சிவகாமி சௌக்கியமாய் இருக்கிறாள். அதோடு அஜந்தா இரகசியத்தையும் அறிந்து கொண்டு வருவதாக சொல்கிறாள். அதற்காக நான் பரஞ்சோதியை அனுப்பியதெல்லாம் வீணாய்ப் போய்விட்டதல்லவா? என் அருமைக் குமாரியினால் என் மனேராதம் நிறைவேறப்போகிறது! இதுமட்டுமல்ல! வாதாபிச் சக்ரவர்த்தியைப்பற்றி நமது எண்ணத்தைக்கூட மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவர் ரஸிகத்தன்மையற்றவர், கலைஉணர்ச்சியே இல்லாதவர் என்று எண்ணிக் கொண்டிருந்தோமே? அப்படி இருந்தால், ஆயிரம் பெண்களைத் திருப்பி அனுப்பிவிட்டு சிவகாமியை மட்டும் அழைத்துப் போயிருப்பாரா? பிரபு!…..எனக்கு மட்டும் உடம்பு குணமாக வேண்டும். குணமானதும் நானே வாதாபிக்குப் போவேன்…..”

ஆயனரின் வார்த்தைகள் மாமல்லரின் செவிகளில் நாராசம் போல் விழுந்துக் கொண்டிருந்தன. சிவகாமி வாதாபிக்குப் போக சம்மதித்தாள் என்றதுமே மாமல்லரை ஆயிரம் தேள்கள் ஏக காலத்தில் கொட்டுவது போலிருந்தது. சிவகாமியிடம் அவர் கொண்டுள்ள பரிசுத்தமான அன்பில் ஒருதுளி நஞ்சு அப்போது கலந்தது என்றே சொல்ல வேண்டும். சிவகாமி மனமுவந்து புலிகேசியிடம் வாதாபிக்குச் செல்ல சம்மதித்தாள் என்னும் எண்ணத்தை அவரால் சகிக்க முடியவில்லை. இந்த எண்ணத்தில் புண்பட்டிருந்த அவருடைய இருதயத்தில் கூரிய வேலை நுழைப்பது போலிருந்தது ஆயனரின் பேச்சு. மாமல்லர் அப்போது தனிமையை விரும்பினார். பழைய தாமரைக் குளத்திற்கு போக வேண்டுமென்று அவருக்கு விருப்பம் உண்டாயிற்று. சட்டென்று ஒரு துள்ளலில் எழுந்து நின்று “சத்ருக்னா அவ்வளவு தானே விஷயம்? சிவகாமி வேறு எந்தச் செய்தியும் அனுப்ப வில்லையல்லவா?” என்றார்.

சத்ருக்னன் தயக்கத்துடன் ஆயனாரைப் பார்த்தான். அவர் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கவனித்த பின்னர், சிறிது தாழ்ந்த குரலில், “பல்லவ குமாரா! சிவகாமியம்மை தங்களுக்கும் ஒரு செய்தி சொல்லியனுப்பினார். வேலின் மீது ஆணையிட்டுக்கூறிய வாக்குறுதியைத் தங்களுக்கு ஞாபகப் படுத்தச்சொன்னார். சீதாதேவி இலங்கையில் காத்திருந்தது போல் தாங்கள் வாதாபிக்கு வந்து அழைத்துப் போகும் வரையில் காத்திருப்பேன் என்று சொன்னார்.” என்றான்.

சற்றுமுன் மாமல்லருக்கு இவ்வுலகம் ஒரு சூனியமான வறண்ட பாலைவனமாகக் காணப்பட்டது. இப்போது அந்தப் பாலைவனத்தில் பசுமையான ஜீவ பூமி ஒன்றும் இருப்பதாகத் தோனறியது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 36
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 38

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here