Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 38

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 38

75
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 38 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 38 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 38: வாதாபி மார்க்கம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 38

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 38: வாதாபி மார்க்கம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 38

புலிகேசியின் படை வாதாபியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. வாதாபியிலிருந்து கிளம்பிய போது அந்தப் படை எவ்வளவு பெரியதாயிருந்ததோ, அதில் பாதிதான் இப்போது இருந்தது. ஆயினும், இன்னமும் அது பெரும்படைதான். ஏறக்குறைய மூன்று இலட்சம் யுத்த வீரர்கள் அந்தப் படையில் இருந்தார்கள். ஏழாயிரம் போர் யானைகளும் இருந்தன. போகுமிடத்தையெல்லாம் சுடுகாடாகவும் பாலைவனமாகவும் செய்து கொண்டு அப்படை சென்றது. கிராமங்களும் பட்டணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. வீடு வாசல்களையும் உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்ள முயன்ற மக்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டார்கள், அல்லது அங்கஹீனம் செய்யப்பட்டார்கள். வீடுகளும் குடிசைகளும் வைக்கோற் போர்களும் கொளுத்தி விடப்பட்டன. ஏரிக் கரைகள் வெட்டி விடப்பட்டன.

ஒரு பக்கம் பசியினாலும் இன்னொரு பக்கம் பழி வாங்கும் வெறியினாலும் சளுக்கிய வீரர்கள் இம்மாதிரி பயங்கர அட்டூழியங்களைச் செய்தார்கள். தாங்கள் செய்வது போதாதென்று யானைகளையும் அவர்கள் அந்த நாச வேலையில் ஏவி விட்டார்கள். பசியும் வெறியும் கொண்ட போர் யானைகள் தாம் போகும் வழியிலிருந்த பசுஞ்சோலைகளை அழித்தன. பயிர் செய்த வயல்களைத் துவைத்தன. வீட்டுக் கூரையைப் பிடுங்கி வீசின; வைக்கோற் போர்களே இடறி எறிந்தன. இதனாலெல்லாம் சளுக்கர் படை திரும்பிப் போன பாதை வெகு சுலபமாகத் தெரிந்து கொள்ளும்படி இருந்தது. அந்தப் பாதையானது ஒரு பெரிய பயங்கரமான சூறைக் காற்றுப் போன வழியை போலக் காணப்பட்டது. அந்தப் பாதையில் பின்னர் வெகு காலம் அழுகுரலும் புலம்பல் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன. பருந்துகளும் கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நரிகள் பட்டப் பகலிலேயே ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

வாதாபி நோக்கிச் சென்ற சளுக்கர் படையுடன் கூடச் சிவகாமியும் போய்க் கொண்டிருந்தாள். அவளைப் பல்லக்கிலே வைத்துத் தூக்கிக் கொண்டு போனார்கள். ஆனால் பல்லக்குச் சுமப்பவர்கள் தன்னைத் தூக்கிக் கொண்டு போவதாகவே சிவகாமிக்குத் தோன்றவில்லை. தடுக்க முடியாத ஏதோ ஒரு விதியானது தன்னை எங்கேயோ அழைத்துப் போய்க் கொண்டிருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது. சளுக்கர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட உடனே அவள் மனத்தில் தோன்றியிருந்த பீதியும், தன்னுடைய கதி என்ன ஆகப் போகிறதோ என்ற கவலையும் இப்போது மறைந்து விட்டன.

அத்தகைய நிலைமையில் ஓர் அபலைப் பெண்ணிடம் சற்றும் எதிர் பார்க்க முடியாத மனோ தைரியம் அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மனோதைரியம் மட்டும் அல்ல; தன்னுடைய சக்தியைக் குறித்த ஒரு பெருமித உணர்ச்சியும் உண்டாகியிருந்தது! சிறைப் பிடிக்கப்பட்ட பெண்களை விடுதலை செய்யும்படி புலிகேசியிடம் விண்ணப்பம் செய்து வெற்றி பெற்றதிலிருந்து அந்தப் பெருமித உணர்ச்சி சிவகாமிக்கு உண்டாயிற்று. இதோ ஒரு சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி அபலையாகிய தன்னுடைய வேண்டுகோளுக்கு உடனே இணங்கினார்! இது மட்டுமல்ல; இன்னும் தான் என்ன சொன்னாலும் அந்தப்படி அவர் செய்ய ஆயத்தமாயிருந்தார் என்பதை அவருடைய முகபாவத்திலிருந்து சிவகாமி தெரிந்து கொண்டாள்.

அதே சமயத்தில் சிவகாமி இன்னோர் இரகசியத்தையும் கண்டு கொண்டிருந்தாள். (அல்லது கண்டு கொண்டிருந்ததாக எண்ணினாள்) அன்று காஞ்சியில் கூடியிருந்த சபையிலே புலிகேசியின் முகத்தைப் பார்த்த போது ஏதோ ஒரு விளங்காத மர்மம் அதில் இருப்பதாக அவளுக்குத் தோன்றியதல்லவா? அது என்ன என்பது இப்போது அவளுக்குத் தெரிந்து விட்டது. புத்த பிக்ஷு நாகநந்தியின் முகத்துக்கும் புலிகேசியின் முகத்துக்கும் இருந்த ஒற்றுமைதான் அது. ஆஹா! தெரிந்தது மர்மம்! புலிகேசி சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் ஒருவரேதான்! மகேந்திர பல்லவர் மாறுவேடம் பூண்டு தேச யாத்திரை செய்வதுண்டு என்பதைச் சிவகாமி அறிந்திருந்தாளாகையால் புலிகேசியும் அப்படி மாறுவேடம் பூணுவது இயற்கையென்று அவளுக்குத் தோன்றியது. புத்த பிக்ஷு தன்னுடைய நாட்டியக் கலையில் காட்டிய ஆர்வமெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது. ஒருவேளை தனக்காகவே புலிகேசி காஞ்சி மீது படையெடுத்து வந்திருக்கலாம் என்றும் அவள் எண்ணமிட்டாள்.

தன்னிடம் இவ்வளவு சக்தி இருக்கிறது என்பது சிவகாமிக்கே வியப்பையும் பிரமிப்பையும் அளித்தது. கொடுமைக்கும் குரூரத்துக்கும் பெயர் போன வாதாபிப் புலிகேசி தன்னுடைய விருப்பத்தின்படி நடக்கச் சித்தமாயிருக்கிறார்! இந்த நினைவு அடிக்கடி தோன்றிச் சிவகாமியின் பெருமிதத்தை வளர்த்து வந்தது. அன்றியும், தன்னுடைய பாதுகாப்பைப் பற்றி அவளுக்குக் கவலை ஏற்படாமலும் செய்தது. தன்னுடைய விருப்பத்திற்கு விரோதமாக ஒன்றும் நடவாதென்றும், தனக்குத் தீங்கு எதுவும் நேராதென்றும் அவள் தைரியம் கொண்டாள்.

இந்த நாட்களில் சிவகாமி மாமல்லரைப் பற்றி நினைத்தாளா? நல்ல கேள்வி! அவளுடைய எல்லாவித மானஸீக அனுபவங்களுக்கும் அடிப்படையில் மாமல்லரின் நினைவு இருந்து கொண்டுதானிருந்தது. ஆனால் அந்த நினைவு அவ்வப்போது விசித்திர ரூபங்களைக் கொண்டது. அன்பு ஆத்திரமாயிற்று; ஆத்திரம் துயரம் ஆயிற்று; துயரம் துவேஷத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் உண்டாக்கிற்று. பல்லவ சாம்ராஜ்யத்தை ஆளப் பிறந்த மாமல்லரால், பல்லவ நாட்டுப் பெண்களைச் சிறைப் பிடிக்கப்படாமல் காப்பாற்ற முடியவில்லை. இந்த ஏழைச் சிற்பியின் மகளால் அவர்களை விடுதலை செய்ய முடிந்தது! இந்தச் செய்தியைச் சத்ருக்னன் அவரிடம் சொல்லும் போது அவர் என்ன நினைப்பார்? மகிழ்ச்சியடைவாரா? கோபங் கொள்வாரா? அவர் என்ன நினைத்தால் இங்கு யாருக்கு என்ன? கேவலம் சிற்பியின் மகள் என்றுதானே என்னை அவர் அலட்சியம் செய்து விட்டிருந்தார்? அவருடைய தந்தை என்னை அவமானப்படுத்தியதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரல்லவா? உண்மையிலேயே என்னிடம் அன்பு இருந்தால், என்னைக் காட்டிலும் இராஜ்யத்தைப் பெரியதாய் எண்ணியிருப்பாரா? மகேந்திர பல்லவரிடம் தம் எண்ணத்தைத் தைரியமாகச் சொல்லி என்னை மணந்து கொண்டிருக்க மாட்டாரா? அப்படிச் செய்திருந்தால் இந்த விபரீதமெல்லாம் நேர்ந்திருக்குமா?

நல்லது; அவருக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன். இதோ ஒரு மகா சக்கரவர்த்தி – பல்லவ இராஜ்யத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிய ராஜ்யம் உடையவர் – நான், காலால் இட்ட பணியைத் தலையால் செய்வதற்குக் காத்திருக்கிறார்! மாமல்லர் வந்து இதைப் பார்க்கட்டும்! இப்படிப்பட்ட மகோன்னத பதவியை நான் எவ்வளவு துச்சமாகக் கருதி அவருடன் வருவதற்குச் சித்தமாயிருக்கிறேன் என்பதையும் நேரிலே தெரிந்து கொள்ளட்டும்! ஒருவேளை அவர் வராமலே இருந்து விட்டால்! இந்த எண்ணம் தோன்றியதும் சிவகாமியின் உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் ஒருகணத்தில் சுண்டிப் போய் அவளுடைய தேகம் ஒரு தோல் கூடாக மாறி விட்டது போன்ற பயங்கர உணர்ச்சி ஏற்பட்டது. அடுத்தகணம் அவள் மீண்டும் தைரியம் பெற்றாள். வராமலிருந்து விடுவாரா? ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டார். அவ்வளவு கேவலமான மனுஷர் அல்ல; அவருடைய அன்பும் அவ்வளவு மட்டமானதல்ல. வேலின் மேல் ஆணையிட்டுக் கூறிய வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக வேனும் அவர் அவசியம் வருவார்.

‘ஒருவேளை அவர் வரவில்லையானால்…’ என்பதாகச் சிவகாமி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு சிந்தனை செய்தாள். ‘வரவில்லையென்றால், அதற்கு என்ன அர்த்தம்? என்னிடம் அவருக்கு உண்மையில் அன்பு இல்லை. என்னிடம் காதல் கொண்டதாக அவர் சொன்னதெல்லாம் வெறும் நடிப்பு என்றுதான் அர்த்தம். நல்லதாய்ப் போயிற்று! அன்பில்லாதவரைப் பிரிந்து வந்ததற்காக நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? என் தந்தை எனக்களித்த அற்புதமான நாட்டியக் கலை இருக்கிறது. விஸ்தாரமான வாதாபி இராஜ்யம் இருக்கிறது. அதற்கு அப்பால் ஹர்ஷவர்த்தனருடைய சாம்ராஜ்யமும் இருக்கிறது. அன்பில்லாத ஒரு மனிதரிடம் பிரேமை வைத்து ஏன் உருகி அழிய வேண்டும்?’

இப்படிச் சிவகாமி எண்ணியபோதே, உண்மையில் அவளுடைய உள்ளம் அந்த அன்பில்லாத மனிதரைக் குறித்து உருகிக் கரைந்து கொண்டிருந்தது. சீச்சி! இது என்ன வீண் பிரமை? அவர் மட்டும் வந்து என்னை அழைத்துப் போகாவிட்டால், அப்புறம் இந்த உலக வாழ்க்கையில் என்ன இருக்கிறது? எதற்காக வாழ வேண்டும்? நாட்டியமாவது, கலையாவது, மண்ணாங்கட்டியாவது? வீணாக என்னை நானே ஏமாற்றிக் கொள்வதில் என்ன பிரயோஜனம்? சளுக்கரிடம் சிறைப்பட்டு நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது அவருக்காகத்தான். வழியில் பயங்கர அட்டூழியங்களை யெல்லாம் பார்த்துக் கொண்டு நான் வாதாபிக்குப் போவதும் அவருக்காகத்தான். அவர் வந்து இந்தப் பாதகச் சளுக்கர்களைப் பழிவாங்கி என்னை மீட்டுக் கொண்டு போவார் என்ற நம்பிக்கையினால்தான். அவருடைய அன்புக்காகவே நான் உயிர் வாழ்கிறேன். அவருடைய கௌரவத்தைப் பாதுகாக்கவே நான் வாதாபிக்குப் போகிறேன். அவர் என்னை மறந்து விட்டால்? நல்லது அப்புறம் இந்த உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனை நேரம் ஆகி விடும்? சிவகாமி நாட்டியமாடும் போது சில பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பதற்கு மின்னல் மின்னும் நேரத்தில் உணர்ச்சிகளையும் முகபாவங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிருக்கும். பார்ப்பவர்கள் அம்மாறுதல்களைத் தொடர்ந்து கவனிப்பது கூட அசாத்தியமாகி விடும். இப்போது சிவகாமியின் உள்ளமானது உண்மையாகவே அத்தகைய மின்னல் வேக உணர்ச்சி மாறுதல்களை அனுபவித்து வந்தது.

பல்லவ நாட்டுப் பெண்களை விடுதலை செய்த பிறகு, வடபெண்ணை நதிக்கரை போய்ச் சேரும் வரையில் புலிகேசிச் சக்கரவர்த்தி அவள் இருந்த பக்கம் வரவேயில்லை. புலிகேசியின் புத்த பிக்ஷு வேஷத்தைப் பற்றிய இரகசியம் தெரிந்து விடப் போகிறதே என்னும் தயக்கத்தினாலேதான் அவர் தன்னிடம் வரவில்லையென்று சிவகாமி கருதினாள். அது தனக்குத் தெரிந்திருப்பதாக இந்தப் பிரயாணத்தின் போது காட்டிக் கொள்ளக் கூடாது என்றும் அவள் தீர்மானித்துக் கொண்டாள். வடபெண்ணை நதிக்கு அக்கரையில், முன்னதாக வந்த வாதாபி சைனியத்தின் பெரும் பகுதி தங்கியிருந்தது. அந்தச் சைனியத்தோடு பின்னால் புலிகேசியோடு வந்த சிறு சைனியம் ஒன்று சேர்ந்த அன்று இரவு, சிவகாமி ஓர் அதிசயமான கனவு கண்டாள். ஆனால் அது கனவா நனவா என்பது அவளுக்கு வெகுநாள் வரையில் சந்தேகமாயிருந்து வந்தது. கனவாயிருந்தாலும் நனவாயிருந்தாலும், அதில் கண்டதும் கேட்டதும் அவளுடைய உள்ளத்தில் புதிய பல சந்தேகங்களையும் கவலைகளையும் கிளப்பி விடுவதற்கு ஏதுவாயிருந்தன.

வாதாபி சைனியம் தண்டு இறங்கியிருந்த இடத்துக்கு சற்றுத் தூரத்தில் சிவகாமியின் பல்லக்கு இறக்கப்பட்டது. பிரதேசம் இயற்கை அழகு பொருந்தியதாயும் நிசப்தமாயும் இருந்தது. பூரண சந்திரன் வானத்திலும் பூமியிலும் பால் நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். இனிய இளங்காற்று வீசிக் கொண்டிருந்தது. நீண்ட பிரயாணத்தினால் பெரிதும் களைப்புற்றிருந்த சிவகாமி ஒரு மரத்தினடியில் படுத்துக் கொண்டாள். அவளுடைய கண்கள் தாமே மூடிக் கொண்டன. சிறிது நேரத்துக்கெல்லாம் நித்திரா தேவியின் வயப்பட்டு அயர்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தாள். ஏதோ பேச்சுக் குரல் கேட்டு உறக்கம் சிறிது கலைந்தது. ஆனால் கண்ணிமைகள் திறக்க மறுத்தன. எனினும், யார் பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் அதிகமாயிருந்தது. பெரிதும் முயன்று கண்ணிமைகளைச் சிறிது திறந்தாள். எதிரே நிலவு வெளிச்சத்தில் அவள் சற்றும் எதிர்பாராத அதிசயமான காட்சி ஒன்று தென்பட்டது.

புலிகேசிச் சக்கரவர்த்தியும் புத்த பிக்ஷுவும் அருகருகே நின்று கொண்டிருந்தார்கள். ஒரே உயரம்; ஒரே உருவம்; முகத்தின் தோற்றம், மூக்கின் அமைப்பு, கண், புருவம் எல்லாம் ஒன்றே. உடைகளில் மட்டுந்தான் வித்தியாசம். ஒருவர் சக்கரவர்த்திக்குரிய கிரீடம் முதலியவை தரித்திருந்தார். இன்னொருவர் மொட்டைத் தலையுடனும் காவி வஸ்திரத்துடனும் விளங்கினார். இதைப் பார்த்த சிவகாமி தன் மனத்திற்குள், ‘ஆ! இதென்ன! புலிகேசியும் புத்த பிக்ஷுவும் ஒருவர்தானே? இங்கே தனித்தனியாய் நிற்கிறார்களே? ஆகையால், இது உண்மையான காட்சியல்ல, நாம் கனவு காண்கிறோம். கனவிலேதான் இந்த மாதிரி பிரமை நமக்கு ஏற்பட்டிருக்கிறது!’ என்று எண்ணமிட்டாள். மறுபடியும் கண்ணிமைகள் மூடிக் கொண்டன.

கண்கள் மூடிக் கொண்டபோதிலும் செவிகள் திறந்திருந்தன. பின்வரும் சம்பாஷணை அவளுடைய காதில் விழுந்தது: “அண்ணா! நீ சொன்னது இந்தப் பெண்தானே?” “இவள்தான்!” “இவள்தான் சிவகாமியா?” “ஆம், இவள்தான் சிவகாமி!” “எனக்கு நீ எழுதிய ஓலையில் காஞ்சி சுந்தரியை நீ எடுத்துக் கொள்; சிவகாமியை எனக்குக் கொடுத்து விடு’ என்று எழுதியிருந்தாயே; அது இந்தப் பெண்ணைப் பற்றித்தானே?” “ஆமாம், தம்பி, ஆமாம்!” “அப்படி, இவளிடம் நீ என்ன அழகைக் கண்டாயோ, அதுதான் எனக்குத் தெரியவில்லை. இவளை விட எத்தனையோ சுந்தரமான பெண்களை நம் வாதாபியிலே நான் பார்த்திருக்கிறேன்.” “இவள் நாட்டியமாடும்போது பார்க்க வேண்டும்; அப்போது வேறு விதமாகச் சொல்லுவாய்!” “அதையும் மகேந்திர பல்லவனுடைய சபையில் பார்த்தேனே! அப்படியொன்றும் அதிசயமாக எனக்குத் தெரியவில்லை.” “உனக்குத் தெரிந்திராது; கலை கண்களோடு பார்ப்பவர்களுக்குத் தெரியும். அஜந்தா சித்திரங்களைப் பார்த்து, ‘இது என்ன அதிசயம்?’ என்று சொன்னவனல்லவா நீ?” “போகட்டும்; நமது வம்சத்துக்கு நீ ஒருவன், கலைக் கண் உடையவன் இருக்கிறாயே, அதுவே போதும். இந்தத் தென்னாட்டுப் படையெடுப்பில் நமக்கு எல்லாம் அபஜயமாய் முடிந்தது. ஏதோ உன்னுடைய மன விருப்பமாவது நிறைவேறியதே, அந்த வரையில் எனக்கும் திருப்திதான்.”

“தம்பி! இவளை நீ சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் திரும்பி வரும் வரையில் இவளுக்கு ஒரு குறைவும் வைக்கக் கூடாது.” “இதென்ன இப்படிக் கவலைப்படுகிறாய், அண்ணா?” “நான் இவளுக்காகக் கவலைப்படவில்லை. இவளிடமிருக்கும் கலைக்காகத் தான் கவலைப்படுகிறேன். அந்தத் தெய்வக் கலைக்கு யாதொரு குறைவும் வரக்கூடாதே என்று கவலைப்படுகிறேன்.” “நல்ல கலை! நல்ல கவலை! என்னைக் கேட்டால், என்ன சொல்வேன் தெரியுமா? மகேந்திர பல்லவனிடம் சொன்னதைத்தான் உனக்கும் சொல்வேன்!” “மகேந்திர பல்லவனிடம் என்ன சொன்னாய், தம்பி!”

“இந்த அற்பர்களுக்கு இவ்வளவு மரியாதை என்ன! எங்கள் நாட்டிலேயென்றால் சாட்டையால் அடித்து நடனம் ஆடச் சொல்வோம் என்று கூறினேன்.” “பார்த்தாயா? உன்னை நம்பி இவளை எப்படி ஒப்புவித்து விட்டுப் போவது? நான் வேங்கிபுரத்துக்குப் போகவில்லை.” “இல்லை அண்ணா, இல்லை! ஏதோ விளையாட்டுக்காகச் சொன்னதை உண்மையாக எடுத்துக் கொள்ளாதே! உன் விருப்பத்துக்கு மாறாக நான் எந்தக் காரியத்திலாவது நடந்து கொண்டிருக்கிறேனா? இவளுடைய மனங்கோணாமல் எல்லா ஏற்பாடுகளும் செய்து வைக்கிறேன். நீ கவலையின்றிப் போய் விட்டு வா!” இத்துடன் சம்பாஷணை முடிந்ததாகத் தோன்றியது. சிவகாமி மறுபடி நினைவற்ற உலகத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் பொழுது விடிந்து சிவகாமி கண் விழித்து எழுந்த போது மேலே கூறிய கனவுக் காட்சியும் சம்பாஷணையும் சிறிது சிறிதாக ஞாபகம் வந்தன. அவையெல்லாம் கனவுதானா, ஒருவேளை உண்மையான நிகழ்ச்சிகளா என்ற சந்தேகமும் அவள் மனத்தில் எழுந்து குழம்பியது. வெகு நேரம் சிந்தித்துக் கனவாகத்தானிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தாள். அப்படி ஒரேவித உருவமுள்ள இரண்டு பேர் இருக்க முடியாது. இருந்தாலும் ஒருவர் பிக்ஷுவாகவும் ஒருவர் சக்கரவர்த்தியாகவும் இருக்க முடியாது. அவர்கள் தன்னெதிரே வந்து நின்று அவ்விதமெல்லாம் பேசுவது ஒருநாளும் நடந்திருக்க முடியாத காரியம். தன்னுடைய பிரமை கொண்ட மனத்தில் கற்பனையிலேதான் இவையெல்லாம் நிகழ்ந்திருக்க வேண்டும். மூர்க்கப் புலிகேசியிடம் ஒரு பக்கத்தில் கலைப்பற்றும் இருக்கும் அதிசயத்தைக் குறித்துத் தான் அடிக்கடி எண்ணமிட்டதுண்டல்லவா? அது காரணமாகவே ஒரே மாதிரி இரண்டு உருவங்கள் தன்னுடைய கனவிலே தோன்றி அத்தகைய சம்பாஷணையை நடத்தியிருக்க வேண்டும். புலிகேசியும் புத்த பிக்ஷுவும் உண்மையில் ஒருவர்தான் – இவ்விதம் சிவகாமி தீர்மானம் செய்து கொண்டபோதிலும் மேற்படி கனவு கண்டதன் காரணமாக அவளுடைய உள்ளம் பெரிதும் கலக்கமும் கவலையும் அடைந்திருந்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 37
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 39

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here