Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 40

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 40

71
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 40 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 40 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 40: அஜந்தா அடிவாரம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 40

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 40: அஜந்தா அடிவாரம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 40

சூரியன் மறைந்தால் என்ன? அதோடு உலகம் அஸ்தமித்துப் போய்விடுமா? இதோ நான் ஒருவன் இருக்கிறேனே’ என்று பறையறைந்து கொண்டு கீழ்த்திசையில் பூரண சந்திரன் உதயமானான். நெடிதுயர்ந்த இரண்டு பனை மரங்களுக்கு நடுவே தங்க ஒளி பெற்றுத் திகழ்ந்த சந்திர பிம்பமானது, மரச் சட்டமிட்ட பலகணியின் வழியாக எட்டிப் பார்க்கும் நவயௌவன நாரீமணியின் பொன் முகத்தையொத்த இன்ப வடிவமாய் விளங்கியது. புத்த பிக்ஷுவுக்கு அந்த முகம் சிவகாமியின் முகமாகவே காட்சியளித்தது.

நாகநந்தியும் புலிகேசியும் கூடாரத்துக்கு வெளியே வந்து ஒரு மொட்டைப் பாறையின் மீது உட்கார்ந்தார்கள். “அண்ணா! என்ன யோசிக்கிறாய்?” என்று புலிகேசி கேட்டார். “தம்பி! இன்றைக்கு நான் கூடாரத்துக்குள்ளே வந்தபோது உன்னைப்போல் உடை தரித்துக் கொண்டு வந்தேனல்லவா? இதே மாதிரி முன்னொரு தடவை உன்னைப் போல் வேஷம் தரித்துக் கொண்டேனே, உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” “அதை எப்படி மறக்க முடியும், அண்ணா? ஒருநாளும் முடியாது.” “இல்லை, இருபத்தைந்து வருஷம் ஆகிவிட்டதே; ஒருவேளை மறந்து விட்டாயோ என்று நினைத்தேன்.” “இருபத்தைந்து வருஷம் ஆனால் என்ன? இருபத்தைந்து யுகம் ஆனால் என்ன? இந்தப் பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும் மறக்க முடியாது, அண்ணா!”

“முதன் முதலில் நாம் சந்தித்தது நினைவிருக்கிறதா, தம்பி!” “ஏன் நினைவில்லை? சித்தப்பன் மங்களேசனுடைய கடுஞ்சிறையிலிருந்து தப்பி ஓடிவந்தேன். அந்தப் பாதகனுடைய வீரர்களுக்குத் தப்பி ஒளிந்து, காட்டிலும் மலையிலும் எத்தனையோ நாள் திரிந்தேன். ஓடி ஓடி கால்கள் அலுத்துவிட்டன, உடம்பும் சலித்துவிட்டது. பசியும் தாகமும் எவ்வளவு கொடுமையானவை என்பதை உணர்ந்தேன். கடைசியில் ஒருநாள் களைப்படைந்து மூர்ச்சையாகிவிட்டேன். மூர்ச்சை தெளிந்து எழுந்தபோது என்னை நீ மடியில் போட்டுக் கொண்டு, என் வாயில் ஏதோ பச்சிலைச் சாற்றைப் பிழிந்து கொண்டிருந்தாய். நீ மட்டும் அச்சமயம் தெய்வாதீனமாய் அங்கு வந்திராவிட்டால் என் கதி என்ன ஆகியிருக்கும்? அண்ணா! அவ்வளவு சிரமம் எடுத்து என்னைக் காப்பாற்ற வேண்டும் என்று உனக்கு எதனால் தோன்றிற்று?”

“எனக்கு வினாத் தெரிந்த நாள் முதல் நான் அஜந்தா மலைக் குகையில் புத்த பிக்ஷுக்களுடன் வாழ்ந்து கொண்டு வந்தேன். சித்திரக் கலை, சிற்பக் கலை முதலியவை தெரிந்து கொண்டிருந்தேன். ஆயினும் அடிக்கடி என் மனம் அமைதியிழந்து தவித்தது. வெளி உலகத்துக்குப் போக வேண்டுமென்றும் என்னையொத்த வாலிபர்களுடன் பழக வேண்டுமென்றும் ஆசை உண்டாகும். சில சமயம் பெரிய பிக்ஷுக்களுக்குத் தெரியாமல் நதி வழியைப் பிடித்துக் கொண்டு மலைக்கு வெளியே வருவேன். ஆனால், அங்கும் ஒரே காடாக இருக்குமே தவிர மனிதர்கள் யாரையும் பார்க்க முடியாது. இப்படி நான் ஏக்கம் பிடித்திருக்கையிலேதான் ஒரு நாள் அஜந்தாவின் அடிவாரத்தில் உள்ள காட்டிலே நீ நினைவிழந்து படுத்துக் கிடப்பதைக் கண்டேன். அந்த நிமிஷத்தில் இருபது வருஷமாக என் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த அவ்வளவு ஆசையையும் உன் பேரில் செலுத்தினேன். அந்த வயதில் நாடு நகரங்களில் உள்ள வாலிபர்கள் தங்களுடைய இளங் காதலிகளிடம் எத்தகைய அன்பு வைப்பார்களோ, அத்தகைய அன்பை உன்னிடம் கொண்டேன். பச்சிலையைச் சாறு பிழிந்து உன் வாயிலே விட்டு மூர்ச்சை தெளிவித்தேன்.”

“அண்ணா! உன்னை முதன் முதலில் பார்த்ததும் எனக்கும் அம்மாதிரியே உன் பேரில் அபிமானம் உண்டாயிற்று. தம்பி விஷ்ணுவர்த்தனரின் பேரில் எனக்கு எவ்வளவோ ஆசைதான். ஆனாலும், அதைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகமான பாசம் உன்பேரில் ஏற்பட்டது…” “உன்னைக் கண்டு பிடித்த அன்றைக்கு நான் அஜந்தா குகைக்குத் திரும்பிப் போகவில்லை. அடுத்த இரண்டு மூன்று நாளும் போகவில்லை. புது மணம் புரிந்த காதலர்கள் இணைபிரியாமல் நந்தவனத்தில் உலாவுவதுபோல் நாம் இருவரும் கைகோத்துக் கொண்டு காட்டிலே திரிந்தோம். நீ உன்னுடைய வரலாற்றையெல்லாம் எனக்கு விவரமாகச் சொன்னாய். நாம் இருவரும் அப்போதே மங்களேசனைத் துரத்தியடித்து வாதாபி இராஜ்யத்தைத் திரும்பக் கைப்பற்றும் மார்க்கங்களைப்பற்றி ஆலோசிக்கலானோம்.”

“இதற்குள் மங்களேசனுடைய ஆட்கள் என்னைத் தேடிக் கொண்டு அங்கே வந்து விட்டார்கள்.” “தூரத்தில் ஆட்கள் வரும் சத்தம் கேட்டதும் நீ பயந்தாய். ‘அண்ணா! என்னைக் கைவிடாதே!’ என்று கட்டிக் கொண்டாய். ஒரு நிமிஷம் நான் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தேன். ‘தம்பி! நான் சொல்கிறபடி செய்வாயா?’ என்று கேட்டு உன்னிடம் வாக்குறுதியொன்று வாங்கிக் கொண்டேன். பிறகு உன்னுடைய உடைகளை எடுத்து நான் தரித்துக் கொண்டேன். என்னுடைய ஆடையை நீ உடுத்திக் கொண்டாய். அதே சமயத்தில் அஜந்தா மலைக் குகைக்குள் புத்த சங்கிராமத்துக்குப் போகும் வழியை உனக்கு நான் சொன்னேன். அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதத்தையும் சொன்னேன். சற்றுத் தூரத்தில் இருந்த அடர்ந்த கிளைகள் உள்ள மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொள்ளச் சொன்னேன்.”

“மரத்தின் மேல் ஏறி நான் ஒளிந்து கொண்டதுதான் தாமதம், மங்களேசனுடைய ஆட்கள் யமகிங்கரர்களைப் போல் வந்து விட்டார்கள். அவர்களுடைய தலைவன் உன்னைச் சுட்டிக்காட்டி, ‘பிடித்துக் கட்டுங்கள் இவனை!” என்று கட்டளையிட்டான். என் நெஞ்சு துடியாகத் துடித்தது. ‘எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம்’ என்று எண்ணினேன். உன்னிடம் அளவற்ற நன்றி உணர்ச்சி உண்டாயிற்று.” “தம்பி! நம்முடைய உருவ ஒற்றுமையை நான் அதற்கு முன்னமே தெரிந்து கொண்டிருந்தேன். நதியிலும் சுனையிலும் நாம் குளித்துக் கரையேறும் போது, தண்ணீரில் தெரிந்த நமது பிரதிபிம்பங்களைப் பார்த்து அறிந்து கொண்டிருந்தேன். அப்படித் தெரிந்து கொண்டிருந்தது அச்சமயம் உன்னைக் காப்பாற்றுவதற்கு ஏதுவாயிற்று.” “அண்ணா! அந்தச் சம்பவமெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டாயே! முன்பின் அறிந்திராத எனக்காக நீ உன் உயிரைக் கொடுக்கத் துணிந்ததை என்னால் எப்படி மறக்க முடியும்?” என்று குரல் தழுதழுக்க உருக்கத்துடன் புலிகேசிச் சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய கண்களிலே கண்ணீர் துளித்தது. ‘ஆ! இதென்ன? நெஞ்சில் ஈரப் பசையற்ற கிராதகப் புலிகேசியின் கண்களிலும் கண்ணீரா? இது உண்மைதானா?’ என்று பரிசோதித்துத் தெரிந்து கொள்வதற்காகப் பூரண சந்திரன் தனது வெள்ளிக் கிரணங்கள் இரண்டை ஏவ, அது காரணமாகப் புலிகேசியின் கண்ணில் எழுந்த நீர்த்துளிகள் ஆழ்கடல் தந்த நன்முத்துக்களைப் போல் சுடர்விட்டுப் பிரகாசித்தன.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 39
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 41

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here