Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 42

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 42

85
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 42 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 42 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 42: பிக்ஷுவின் காதல்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 42

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 42: பிக்ஷுவின் காதல்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 42

புலிகேசியின் உள்ளத்தில் அசூயையென்னும் பாம்பு படமெடுத்து ஆடுவதை அறியாதவராய் நாகநந்தி பிக்ஷு தமது இருதயத்தைத் திறந்து சொல்லத் தொடங்கினார். “தம்பி! குழந்தைப் பிராயம் முதற்கொண்டு – எனக்கு அறிவு தெளிந்த நாளிலிருந்து, நான் அஜந்தா மலைக் குகைகளில் வளர்ந்து வந்தேன். அஜந்தா சங்கிராமத்தில் பிக்ஷுக்களும் அவர்களுடைய சிஷ்யர்களும் இருந்தார்கள். என் இருபதாவது பிராயம் வரையில் உயிருள்ள பெண்ணை நான் பார்த்ததில்லை. அதாவது, சதை, இரத்தம், எலும்பு, நகம் ஆகியவற்றால் ஆன மானிடப் பெண்ணைப் பார்த்ததில்லை. ஆனால், ஜீவனுள்ள பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஒருவனுடைய இருதய அந்தரங்கம் வரைக்கும் சென்று ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த விசால நயனங்களுடைய பெண்களைப் பார்த்திருக்கிறேன். மானிடக் குலத்துக்கு எட்டாத தெய்வீக சௌந்தரியம் வாய்ந்த மடமங்கையர்களைப் பார்த்திருக்கிறேன். அழகுக்கு அழகு செய்யும் திவ்விய ஆபரணங்களை அணிந்த அணங்குகளைப் பார்த்திருக்கிறேன். தங்கள் கூந்தலில் மலர் அணிந்ததனால் அம்மலருக்கு அழகைத் தந்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். சாந்தங் குடிகொண்ட பெண்களையும், கருணை வடிவான பெண்களையும், மினுக்கி மயக்கும் மோகினி ரூபம் கொண்ட மாயப் பெண்களையும் பார்த்திருக்கிறேன். இவர்களையெல்லாம் அஜந்தா விஹாரங்களில் உள்ள சுவர்களிலே பார்த்தேன். மகா சைத்திரிகர்களான பிக்ஷுக்கள் தீட்டிய அற்புத சித்திர வடிவங்களிலே பார்த்தேன். அந்த சித்திர வடிவங்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரையில் உயிர் உள்ள ஸ்திரீ புருஷர்கள்தான். நான் அவர்கள் அருகில் சென்றதும் என்னை அவர்கள் வரவேற்பார்கள்; முகமன் கூறுவார்கள்; க்ஷேமம் விசாரிப்பார்கள். அவர்களுடன் நானும் மனம் விட்டுப் பேசுவேன்; அவர்களுடைய க்ஷேம லாபங்களை விசாரிப்பேன்; வெளி உலகத்து விஷயங்களைப் பற்றியெல்லாம் அவர்களிடம் கேட்பேன். மௌன பாஷையில் அவர்கள் மறுமொழி சொல்வார்கள்.

“இப்படி நான் தினந்தோறும் பார்த்துப் பேசிப் பழகிய சித்திர வடிவங்களுக்குள்ளே முக்கியமாக ஒரு பெண்ணின் வடிவம் என் சிந்தையைக் கவர்ந்திருந்தது. அவளுடைய பொன்னிற மேனியின் சோபையை அவள் இடையில் உடுத்தியிருந்த நீல நிறப் பட்டாடையும், மாந்தளிர் நிறத்து உத்தரீயமும் அதிகமாக்கிக் காட்டின. புன்னகை பூத்த அவளுடைய இதழ்களின் செந்நிறமும், அவளுடைய கருங்கூந்தலில் குடியிருந்த செவ்வாம்பல் மலரின் சிவப்பு நிறமும் ஒன்றையொன்று தூக்கியடித்தன. தாமரை இதழ் போல வடிவம் அமைந்த அவளுடைய கண்களின் கருவிழிகள் என் இருதயத்தை ஊடுருவி நோக்கிய போது என் இருதயத்தில் நான் அதுகாறும் அறிந்திராத வேதனையும் இன்பமும் உண்டாயின. அந்தச் சித்திர உருவம் தீட்டப்பட்டிருந்த விஹாரத்தின் எந்தப் பக்கத்தில், எந்த மூலையில் நின்று பார்த்தாலும், அந்தப் பத்மலோசனியின் கண்கள் என்னையே நோக்குவது போல் இருந்தன. அவ்வளவு அற்புத வேலைத் திறமையுடன் யாரோ ஒரு சைத்திரிகப் பிரம்மா அவ்வுருவத்தைத் தீட்டியிருந்தார். அந்தச் சித்திரத்தை வரைந்து முந்நூறு வருஷங்களுக்கு மேல் ஆகியிருந்த போதிலும் வர்ணங்கள் சிறிதும் மங்காமல் நேற்று எழுதியவை போல் விளங்கின.

“அந்தச் சித்திரப் பெண்ணின் உருவத்தில் இன்னொரு விசேஷம் இருந்தது; அவள் இடை வளைந்து நின்ற நிலையும், அவளுடைய கரங்களும் கழுத்தும் அமைந்திருந்த தோற்றத்தில் காணப்பட்ட நௌிவும், அவள் ஏதோ ஒரு விசித்திரமான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தின. ஆனால், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது எனக்குப் புலப்படவில்லை. என் மனத்திற்குள் எவ்வளவோ யோசனை செய்தும் அதை என்னால் அறிய முடியவில்லை. கடைசியில் சைத்திரிக பிக்ஷு ஒருவரைக் கேட்டேன். அவர் ‘அந்தப் பெண் பரதநாட்டியம் ஆடுகிறாள்’ என்று சொன்னார். பிறகு பரதநாட்டியம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பினேன். பரத சாஸ்திரம் என்னும் ஒரு நூல் இருப்பதாகத் தெரிந்து கொண்டு அந்த நூலைச் சம்பாதித்துப் படித்தேன். பரதநாட்டியக் கலையின் பல அம்சங்களையும் நன்கு தெரிந்து கொண்டேன்.

“இதற்குப் பிறகு, அந்த ஓவியக் கன்னி என் உள்ளக் காட்சியில் பரத நாட்டியம் ஆடத் தொடங்கினாள். பரதநாட்டியக் கலைக்குரிய பலவிதத் தோற்றங்களிலும் அவள் காட்சியளித்தாள். பற்பல முத்திரைகள், ஹஸ்தங்கள், பலவித அபிநயத் தோற்றங்கள் – என் அகக் கற்பனையில் தோன்றிக் கொண்டேயிருந்தன. பகலிலும் இரவிலும் சதா சர்வகாலமும் அந்தக் கற்பனைப் பெண் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்தாள். அப்போது தான் எனக்கு முதன் முதலில் வெளி உலகத்துக்குப் போக வேண்டும், நாடு நகரங்களில் வாழும் ஸ்திரீ புருஷர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. ஒரு வேளை அந்த மாதிரி உண்மையாகவே ஒரு பெண் எங்கேனும் இருக்கலாமல்லவா என்ற சபலம் ஏற்பட்டது. இந்த ஆசை காரணமாகவே அஜந்தா நதி வழியைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து மலையடிவாரத்துக் கானகங்களிலே நான் சுற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் தம்பி, ஒருநாள் உன்னைப் பார்த்தேன். பேச்சு மூச்சற்றுக் கிடந்த உன் உடம்பில் பிராணனை ஊட்டினேன். அது முதல் என் மனப்போக்கில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. சித்திரத்தில் பார்த்துக் கற்பனையில் நான் வளர்த்து வந்த பெண் சிறிது சிறிதாக என் உள்ளத்திலிருந்து மறையலானாள். அவள் இருந்த இடத்தில் நீ வந்து சேர்ந்தாய். நீ என் சொந்த உடன்பிறந்த சகோதரன், என்னுடன் இரத்தத் தொடர்புடையவன்; என்பதை அறிந்த பிறகு என் இருதயத்தில் அந்தச் சித்திர நாட்டியக்காரிக்குச் சிறிதும் இடமில்லாமல் போய் விட்டது.

“தம்பி! சிறிது காலத்துக்கெல்லாம் நீயும் நானும் அஜந்தா மலைக் குகையை விட்டு வெளியேறினோம். நீ வாதாபிச் சிம்மாசனம் ஏறினாய். நீயும் நானுமாக எத்தனையோ யுத்தங்கள் நடத்தி ஜயித்தோம். எத்தனையோ இராஜ தந்திரங்களையும் இராணுவ தந்திரங்களையும் கையாண்டு வெற்றி பெற்றோம். துங்கபத்திரையிலிருந்து நர்மதை நதி வரையில் சளுக்க சாம்ராஜ்யம் படர்ந்து தழைத்தது. உத்தராபத ஹர்ஷவர்த்தன சக்கரவர்த்தியும் வராகக் கொடியைக் கண்டு அஞ்சலானார்.

“இந்த நாட்களில் நான் ஏற்றுக் கொண்டிருந்த பிக்ஷு விரதத்தை நிறைவேற்றுவது எனக்குக் கொஞ்சமும் கஷ்டமாயில்லை. வாதாபி நகரத்திலும், மற்றும் நான் யாத்திரை செய்த பட்டணங்களிலும் கிராமங்களிலும் எத்தனையோ ஸ்திரீகளை நான் பார்த்தேன். அஜந்தா குகைச் சுவர்களில் நான் பார்த்த சித்திரப் பெண் வடிவங்களோடு ஒப்பிடும் போது, இந்த மானிடப் பெண்கள் அழகற்ற அவலட்சண வடிவங்களாகத் தோன்றினார்கள். அந்தச் சித்திரப் பெண்களைப் பார்த்து அவர்களுடைய அழகை வியந்த கண்களினால் இந்தச் சாதாரண மானிட ஸ்திரீகளைப் பார்க்கவே முடியவில்லை. “உலகத்திலே மனிதர்கள் என்னத்திற்காக ஸ்திரீகள் மீது மோகம் கொண்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று வியந்தேன். தம்பி! ஒருவர் பின் ஒருவராக நீ ஆறு பெண்களை மணந்த போது உன்னுடைய பரிதாப நிலையைக் குறித்து இரங்கினேன்!”

இத்தனை நேரம் மௌனமாயிருந்து கேட்டுக் கொண்டிருந்த புலிகேசி இப்போது குறுக்கிட்டுக் கூறினார்: “ஆம், அண்ணா! அதையெல்லாம் நினைத்தால் ஏன் அந்தப் பைத்தியக்காரத்தனங்களில் இறங்கினோம் என்று எனக்கும் ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்? எங்களுக்கெல்லாம் அனுபவித்த பிறகுதான் புத்தி வருகிறது. நீயோ பெண் மோகம் என்பது எவ்வளவு அசட்டுத்தனம் என்பதை முன்னதாகவே கண்டு கொண்டு விட்டாய்!”

புலிகேசிச் சக்கரவர்த்தி இவ்விதம் கூறிய போது அவருடைய தொனியில் சிறிது பரிகாசம் கலந்திருப்பதாகத் தோன்றியது. ஆனால், அறிவுக் கூர்மை மிகப் படைத்த பிக்ஷுவுக்கு அச்சமயம் அது தெரியவில்லை, அவர் மேலும் கூறினார்: “இல்லை, தம்பி இல்லை! உன்னுடைய புகழ்ச்சிக்கு நான் அருகனல்ல. நீங்கள் எல்லாரும் பட்டு அனுபவித்த பிறகு, உண்மையைக் கண்டுகொண்டீர்கள். ஆனால், நானோ எத்தனையோ காலம் துறவறத்தை அனுஷ்டித்த பிறகு, யௌவனப் பிராயத்தையெல்லாம் இழந்து விட்ட பிறகு, ஒரு பெண்ணின் காதலுக்கு வயமானேன். ஆனால், என்னுடைய காதல் மற்ற உலக மாந்தரின் காதலை ஒத்ததன்று. அதைப் பற்றிச் சொல்வதற்கு முன்னால் நான் காதல் வயப்பட்ட வரலாற்றைச் சொல்லி விட வேண்டும்.

“வடக்கே ஹர்ஷ மகா சக்கரவர்த்தியுடன் நாம் ஓர் உடன்படிக்கைக்கு வந்து நர்மதைக்குத் தெற்கே அவருடைய சைனியங்கள் வருவதில்லையென்று வாக்குறுதி பெற்ற பிறகு, தென்னாட்டுப் படையெடுப்புக்கு முன் ஆயத்தம் செய்வதற்காகச் சென்றேன். தென்னாடெங்கும் பௌத்த மடங்களும் ஜைன மடங்களும் ஏராளமாக இருந்தபடியால் என்னுடைய வேலை மிகவும் சுலபமாயிருந்தது. காஞ்சி இராஜ விஹாரத்திலே கூட நமக்காக வேலை செய்யும் பிக்ஷுக்கள் கிடைத்தார்கள். பிறகுதான், உனக்குச் சைனியத்துடன் கிளம்பும்படி ஓலை அனுப்பினேன். அனுப்பி விட்டு நான் மதுரைக்குப் பிரயாணப்படுவதற்கு முன்னால் என் வாழ்க்கையிலேயே முக்கியமான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

“தம்பி! சளுக்க சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்புக்கான வேலைகளில் நான் பூரணமாய் ஈடுபட்டிருந்த போதிலும், இடையிடையே சிற்ப சித்திரக் கலைகளில் என் மனம் செல்லாமல் தடுக்க முடியவில்லை. காஞ்சியில் சில அற்புதமான சிற்பங்களைப் பார்த்தேன்; மாமல்லபுரம் என்று புதிதாகப் பெயர் பெற்ற துறைமுகத்துக்கருகில் சில அதிசயமான சிற்ப வேலைகள் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டேன். மதுரைக்குப் போகுமுன் அவற்றைப் பார்க்க வேண்டும் என்று சென்றேன். மாமல்லபுரத்துச் சிற்பங்கள் உண்மையில் அதிசயமாகவே இருந்தன. அந்த வேலைகளை நடத்தி வைக்கும் பெரிய சிற்பி ஒருவர் அரண்யத்தின் நடுவில் வீடு கட்டிக் கொண்டு வசிப்பதாகக் கேள்விப்பட்டேன். அவரைப் பார்க்க வேண்டுமென்று விரும்பி அவருடைய சிற்ப வீட்டைத் தேடிக் கொண்டு போனேன்.

“அந்த மகா சிற்பியின் வீட்டில் பல அற்புதங்களைக் கண்டேன். முக்கியமாக, ஆயனர் அப்போது செய்வதில் ஈடுபட்டிருந்த நடனச் சிலைகள் என் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. அஜந்தாவின் புத்த விஹாரத்தின் சுவரில் நான் பார்த்த நடனப் பெண்ணின் உருவத்தை அவை எனக்கு நினைவூட்டின. அந்த நடனச் சிலைகளைப் பார்த்து வியந்து கொண்டிருந்த போது ஒரு மகா அற்புதம் நிகழ்ந்தது. வீட்டின் பின்கட்டிலிருந்து ஒரு பெண் உருவம் நாங்கள் இருந்த சிற்ப மண்டபத்துக்கு வந்தது. ஊனும் உடலும் உயிரும் உள்ள உருவந்தான். ஆனால், அஜந்தா சுவரில் நான் பார்த்த சித்திரத்துக்கும் இந்த உருவத்துக்கும் அணுவளவும் வேற்றுமை இல்லை. அதே பூரண சந்திரனையொத்த முகம்; பொன்னிற மேனி; அதே வர்ணமுள்ள உடைகள்; நெஞ்சை ஊடுருவிப் பார்க்கும் நீண்ட நயனங்கள்; கூந்தலை எடுத்துக் கட்டியிருந்த விதமும் அப்படியே. சற்று நேரம் நான் காண்பது உண்மையான தோற்றமா, அல்லது சித்த பிரமையா என்று பிரமித்திருந்தேன். அந்த உருவம் அதன் செவ்விதழ்களைச் சிறிது விரித்து, ‘அப்பா! இந்தச் சுவாமிகள் யார்?’ என்று கேட்ட பிறகு தான், இதெல்லாம் உண்மை என்று உணர்ந்தேன். ஆயனச் சிற்பி என்னைப் பார்த்து, ‘இவள் என்னுடைய மகள் சிவகாமி; இவளுடைய நடனத் தோற்றங்களைத்தான் நான் சிலை வடிவங்களாக அமைக்கிறேன்’ என்றார். சற்று நேரத்துக்கெல்லாம் சிவகாமி நடனம் ஆடினாள்.

“தம்பி! அந்த நேரம் முதல் இந்த உலகமே எனக்குப் புதிய உலகமாக மாறி விட்டது. இவ்வுலகில் யுத்தத்தையும் இராஜ தந்திரத்தையும், இராஜ்ய பாரத்தையும் விட முக்கியமான காரியங்களும் இருக்கின்றன என்பதை உணர்ந்தேன். அஜந்தா அடிவாரத்தில் உன்னைச் சந்திப்பதற்கு முன்னால் சில காலம் அங்கே நான் கண்ட நடனச் சித்திரம் எப்படி என் உள்ளத்தைக் கவர்ந்ததோ, அல்லும் பகலும் அதே நினைவாக இருக்கச் செய்ததோ, அதே மாதிரி இப்போது சிவகாமியின் உருவம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. உள்ளத்தை மட்டுமா? ஊனையும் உயிரையும் உயிரின் ஒவ்வோர் அணுவையும் கவர்ந்து விட்டது.

“ஆம், தம்பி! சிவகாமியிடம் நான் காதல் கொண்டேன்; பிரேமை கொண்டேன்; மோகம் கொண்டேன். இன்னும் உலகத்துப் பாஷைகளில் என்னென்ன வார்த்தைகள் அன்பையும், ஆசையையும் குறிப்பதற்கு இருக்கின்றனவோ அவ்வளவு வார்த்தைகளையும் குறிப்பிட்ட போதிலும் காணாது என்று சொல்லக்கூடிய வண்ணம் அவள் மீது பிரியங்கொண்டேன். காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால், அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். என்னுடைய காதலில் தேக தத்துவம் என்பது சிறிதும் கிடையாது.

“சிவகாமியின் உருவத்தைக் கண்டு நான் மோகித்து விடவில்லை. அவளுடைய உருவத்தைக் காட்டிலும் அழகிய சித்திர சிற்ப வடிவங்களை நான் கண்டிருக்கிறேன். “சிவகாமியின் பசும்பொன் மேனி நிறத்துக்காக அவள் மீது நான் காதல் கொள்ளவில்லை. அந்த மேனி நிறத்தைக் காட்டிலும் பிரகாசமான பொன்னிறத்தை இதோ இந்தச் சந்திரனிடம் காணலாம். “சிவகாமியின் கண்ணழகைக் கண்டு நான் மயங்கி விடவில்லை. அவள் வளர்த்த ரதி என்னும் மான் குட்டியின் மருண்ட கண்கள் சிவகாமியின் கண்களைக் காட்டிலும் அழகானவை.

“சிவகாமியின் உடம்பின் மென்மைக்காக அவள் மீது நான் ஆசை கொள்ளவில்லை. அவளுடைய உடம்பைக் காட்டிலும் அதிக மென்மை பொருந்திய எத்தனையோ புஷ்பங்கள் உலகில் இருக்கின்றன. “ஆம், தம்பி, சிவகாமியிடம் நான் கொண்டிருக்கும் காதலில் தேக தத்துவம் என்பதே கிடையாது. “ஆகையால் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் உனக்காக நான் ஏற்றுக் கொண்ட பிக்ஷு விரதத்துக்குச் சிவகாமியினால் யாதொரு பங்கமும் நேரவில்லை..” இவ்விதம் நாகநந்தி சொல்லி வந்த போது அவருடைய முகத்தில் அசாதாரணமான ஒரு கிளர்ச்சி காணப்பட்டது. புலிகேசி தம் மனத்தில், ‘இதென்ன’ ஒருவகை விசித்திரமான பைத்தியம் போல இருக்கிறதே? மகேந்திரனுடைய சிறையில் வெகு காலம் கிடந்ததனால் புத்தி மாறாட்டமாகி விட்டதா?’ என்று எண்ணமிட்டார்.

புலிகேசியின் முகபாவத்தைக் கொண்டு இதை ஊகித்து உணர்ந்த நாகநந்தி கூறினார்: “இல்லை தம்பி, இல்லை! எனக்குப் பைத்தியம் பிடித்து விடவில்லை. இவ்வளவு தெளிவாக என்னுடைய அறிவு இதற்கு முன் எப்போதும் இருந்ததில்லை. எனக்கு உண்மையில் சிவகாமியின் மீது ஆசையே கிடையாது; அவளை ஆட்கொண்டிருக்கும் கலைத் தெய்வத்தினிடந்தான் மோகம். சிவகாமி சுயப்பிரக்ஞையை இழந்து தன்னை மறந்து ஆனந்த வெளியில் மிதந்து நடனமாடும் போது, நானும் தன் வசமிழந்து விடுகிறேன். அப்போது எனக்கு உண்டாகும் ஆனந்தம் இந்த உலகில் வேறெந்தக் காரியத்திலும் ஏற்பட்டதில்லை. தம்பி! மகேந்திர பல்லவனை நான் எவ்வளவோ பகைக்கிறேன்; துவேஷிக்கிறேன்; ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மகேந்திரனும் நானும் ஒரே அபிப்பிராயம் கொண்டவர்கள். சிவகாமி கேவலம் மனிதர்களுக்கு மனைவியாகப் பிறந்தவள் அல்லவென்றும் அவளுடைய அற்புதக் கலை தெய்வத்துக்கே அர்ப்பணமாக வேண்டிய கலையென்றும் ஒருநாள் ஆயனரிடம் மகேந்திர பல்லவன் சொன்னான். புத்தர் சிலையின் பின்னாலிருந்து அதை நான் கேட்டேன்; அவனுடைய கூற்றை மனத்திற்குள் பூரணமாக ஆமோதித்தேன். தம்பி! நீ நிச்சயமாக நம்பலாம், சிவகாமியிடம் நான் கொண்ட காதலினால் என்னுடைய பிக்ஷு விரதத்துக்கு யாதொரு பங்கமும் நேராது” என்று முடித்தார் நாகநந்தியடிகள்

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 41
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 43

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here