Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 49

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 49

64
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 49 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 49 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 49: பிக்ஷுவின் வருகை

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 49

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 49: பிக்ஷுவின் வருகை

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 49

சுக்கில பட்சத்துப் பிரதமையில் சிவகாமி வாதாபி நகரின் நாற்சந்தியில் நடனம் ஆட ஆரம்பித்தாள். சுக்கில பட்சம் முடிந்து கிருஷ்ணபட்சம் வந்தது. கிருஷ்ண பட்சம் முடிவடைந்து மீண்டும் சுக்கில பட்சம் வந்தது. சிவகாமியின் வீதி நடனம் இன்னும் நடந்து கொண்டே இருந்தது. தளபதி விரூபாக்ஷன் நடன அரங்கத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். வாதாபி நகரின் முக்கிய நாற்சந்திகளை ஒவ்வொன்றாக அவன் தேர்ந்தெடுத்து அங்கங்கே கொண்டு போய்த் தமிழகத்து ஸ்திரீ புருஷர்களை நிறுத்தினான். சிவகாமியும் அங்கங்கே போய் நடனமாடினாள். அந்தக் காட்சியைப் பார்ப்பதற்குத் தினந்தோறும் மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். ஸ்திரீகளும் புருஷர்களும் சிறுவர் சிறுமியர்களும் திரண்டு வந்தார்கள்.

அரசாங்க அதிகாரிகள் ரதம் ஏறி வந்தார்கள். அந்தப்புரத்து ராணிகளும் சேடிகளும் பல்லக்கில் ஏறி வந்தார்கள். புலிகேசிச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து சிறைப் பிடித்துக் கொண்டு வந்த நாட்டியப் பெண், வாதாபி நகரின் வீதிகளில் நடனமாடுகிறாள் என்னும் செய்தி எங்கெங்கோ பரவலாயிற்று. அதன் பயனாக அக்கம் பக்கத்து ஊர்களிலேயிருந்தும் ஜனங்கள் மேற்படி காட்சியைப் பார்க்க வந்தார்கள். தூர தூரங்களிலிருந்தெல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள். தேசமெங்கும் நானா திசைகளிலும் இதைப் பற்றியே பேச்சாயிருந்தது.

சிவகாமியின் விஷயத்தில் வாதாபி ஜனங்களின் மனோபாவம் முதலில் ஒருவிதமாயிருந்தது. போகப் போக அவர்களுடைய மனோபாவம் வேறு விதமாக மாறிக் கொண்டிருந்தது. முதலில் அந்த அற்புத நடனத்தைப் பார்த்துவிட்டு வாதாபி மக்கள் பிரமித்துப் போனார்கள். “இப்படியும் ஒரு அற்புதக் கலை உண்டா?” என்று வியந்தார்கள். ஊரை விட்டு, உற்றாரை விட்டு, சொந்த நாடு, நகரத்தை விட்டுத் தூர தேசம் வந்திருக்கும் அந்தக் கலைச் செல்வியிடம் அவர்களுக்கு அன்பும் ஆதரவும் பச்சாத்தாபமும் ஏற்பட்டன. அவர்களில் பலர் சிவகாமியுடன் வார்த்தையாட விரும்பினார்கள். தங்கள் வியப்பையும் மதிப்பையும் அன்பையும் அபிமானத்தையும் வெளியிட விரும்பினார்கள். அவள் வசித்த மாளிகைக்குப் போய் அவளுடன் சிநேகம் செய்து கொள்ள விரும்பினார்கள். தத்தம் வீட்டுக்கு அவளை அழைத்து உபசரிக்கவும் ஆசைப்பட்டார்கள். ஆனால், வாதாபி ஜனங்களின் சிநேகமனப்பான்மை சிவகாமியின் உள்ளத்தில் எவ்வித எதிரொலியையும் உண்டாக்கவில்லை. நடனம் ஆடும் போது ஏற்பட்ட கிளர்ச்சிக்குப் பின்னர் இயற்கையாகத் தோன்றும் சோர்வும் ஏற்கெனவே குடிகொண்டிருந்த மனக்கசப்பும் சேர்ந்து சிவகாமியை அவர்களுடன் முகங்கொடுத்துப் பேச முடியாமற் செய்து வந்தன.

நாளாக ஆக, “அந்தத் தமிழகத்து நடனப் பெண் ரொம்ப கர்வக்காரி!” என்ற செய்தி நகரமெங்கும் பரவிற்று. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த அபிமானம், அனுதாபம் எல்லாம் வெறுப்பும் பரிகாசமுமாக மாறலாயின. சிவகாமி வரும்போதும் போகும்போதும், ஜனங்கள் அவளைப் பற்றிப் பரிகாசமாகப் பேசுவதும் கேலி செய்து சிரிப்பதும் அதிகமாகி வந்தன. ஆரம்பத்தில் சிவகாமியின் நடனத்தை “அற்புதம்” என்றும் “தெய்வீகக் கலை” என்றும் சொல்லி வந்த அதே ஜனங்கள் கொஞ்ச நாளைக்கெல்லாம் அதைப் “பைத்தியக்காரியின் கூத்து” என்று சொல்லத் தொடங்கினார்கள்!

சிவகாமி சிவிகையில் போகும் போது சிறுவரும் சிறுமிகளும் ஊளையிட்டுக் கொண்டு பின்னால் ஓடினார்கள். சில சமயம் மண்ணையும் அவள் மீது வீசி எறிந்தார்கள். இதையெல்லாம் சிவகாமி சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவளுடைய நெஞ்சில் வைரம் பாய்ந்திருந்தது. அசைக்க முடியாத ஓர் உறுதி அவள் மனத்தில் ஏற்பட்டிருந்தது. புகழையும் இகழையும் பாராட்டையும் நிந்தனையையும் ஒன்றாகக் கருதும் மனோநிலையைச் சிவகாமி அடைந்திருந்தாள். கடவுளின் அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டு இந்தப் பூவுலகத்தில் தாமரை இலைத் தண்ணீர் போல் வாழும் முற்றும் உணர்ந்த ஞானியை அவள் ஒத்திருந்தாள்.

சிவகாமி வாதாபி வீதிகளில் நடனம் ஆட ஆரம்பித்து ஏறக்குறைய ஒன்றரை மாத காலம் ஆயிற்று. ஒருநாள் வழக்கம் போல் சிவகாமி நடனம் ஆடிக் கொண்டிருந்தாள். சூரியாஸ்தமன பேரிகை முழக்கம் கேட்டது. சிவகாமி ஆட்டத்தை நிறுத்தினாள், சற்று மூச்சு வாங்குவதற்காக நின்றுவிட்டுப் பல்லக்கை நோக்கிச் செல்லத் திரும்பினாள். அவள் திரும்பிய திக்கில் தோன்றிய ஒரு தோற்றம் அவளைச் சிறிது நேரம் மனம் குழம்பித் திகைத்து நிற்கும்படிச் செய்து விட்டது. அந்தத் தோற்றம் நாகநந்தியடிகளின் உருவந்தான்.

வியப்பினால் விரிந்த கண்களில் கோபாக்னியின் பொறி பறக்க, இமையா நாட்டத்துடன் நாகநந்தி தன்னை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைச் சிவகாமி பார்த்தாள். நாகநந்தியின் முகபாவம் கணநேரத்தில் மாறியது. கண்களில் கோபாக்னி நிறைந்து பரிதாபம் தோன்றியது. அவளுடைய கண்களின் பார்வையும் முகத்தின் பாவமும் “மன்னித்து விடு” என்று கெஞ்சுவது போன்ற உணர்ச்சியை ஊட்டின. இதனால் மேலும் திகைப்படைந்த சிவகாமி, மெதுவாகச் சுயப்பிரக்ஞை அடைந்து குழப்பத்தைச் சமாளித்துக் கொண்டு தலை குனிந்த வண்ணம் நடந்து சென்று பல்லக்கில் ஏறிக் கொண்டாள்.

பல்லக்கு வழக்கம் போல் மாளிகையை நோக்கிச் சென்றது. ஆனால், சிவகாமியின் உள்ளம், ஜனக் கூட்டத்தின் நடுவே நின்ற நாகநந்தியடிகளிடம் இருந்தது. “இந்த புத்த பிக்ஷு யார்? வேடம் பூண்ட வாதாபிச் சக்கரவர்த்திதானா? உருவம் அப்படியே இருக்கிறது, ஆனால் கண்களின் தோற்றத்திலும் முகபாவத்திலும் எவ்வளவு வித்தியாசம்? உணர்ச்சி என்பதே இல்லாத கல்நெஞ்சைப் பிரதிபலிக்கும் புலிகேசியின் முகத்துக்கும் கனிவும் இரக்கமும் கலைப் பரவசமும் ததும்பிய பிக்ஷுவின் முகத்துக்கும், எவ்வளவு வித்தியாசம்…?” பிக்ஷுவின் தோற்றம் சிவகாமிக்குப் பல்லவ நாட்டையும் அரண்ய வீட்டையும் நினைவூட்டியது. அந்தக் காலத்து வாழ்வெல்லாம் ஞாபகம் வந்தது. உண்மையில் ஒரு வருஷத்துக்கு மேல் ஆகவில்லை. ஆனால், எத்தனை யுகம் ஆகிவிட்ட மாதிரி தோன்றுகிறது!

மாளிகையை அடைந்த பிறகும் சிவகாமியின் உள்ளம் வழக்கமான அமைதியை அடையவில்லை. ஏதோ ஓர் ஆவல், அர்த்தமில்லாத பரபரப்பு, அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது. அவளுடைய உள்ளம் அப்படி யாரை எதிர்பார்த்தது? அவளுடைய கண்கள் யாரை எதிர்பார்த்து அவ்விதம் அடிக்கடி வாசற்பக்கம் நோக்கின? நாகநந்தி பிக்ஷுவையா? இரவு ஒரு ஜாமம் முடியும் தறுவாயில் நாகநந்தி அந்த மாளிகைக்குள் நுழைந்த போது, சிவகாமியின் கண்களில் தோன்றிய ஒளியும் அவளுடைய முகபாவமும் அவள் புத்த பிக்ஷுவைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்பதை உணர்த்தின. நாகநந்தியும் சிவகாமியும் ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்த்தார்கள். அவர்களுடைய கண்களின் தீக்ஷண்யம், ஒருவருடைய இருதய அந்தரங்கத்தை இன்னொருவர் ஊடுருவிப் பார்க்க முயன்றதாகத் தெரியப்படுத்தியது. சற்று நேரம் அந்த மாளிகையில் மௌனம் குடிகொண்டிருந்தது. மௌனத்தைக் கலைத்துக் கொண்டு பிக்ஷுவின் தழு தழுத்த குரல், “சிவகாமி! என்னை மன்னித்துவிடு!” என்று கூறியது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 48
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here