Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 50

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 50

82
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 50 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 50 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 50: சிவகாமியின் சபதம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 50

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 50: சிவகாமியின் சபதம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 50

உட்கார்ந்திருந்த சிவகாமி, சட்டென்று எழுந்து நின்றாள். அவளுடைய உதடுகள் துடித்தன; புருவங்கள் மேலேறின. கண்களிலிருந்து மின்னல் கிளம்பிப் புத்த பிக்ஷுவைத் தாக்கின. “கள்ள பிக்ஷுவே! எதற்காக என்னிடம் மன்னிப்புக் கேட்கிறீர்? எனக்கு என்ன அபசாரம் செய்தீர்?” என்ற சொற்கள் சீறிக்கொண்டு பாயும் அம்புகளைப் போலச் சிவகாமியின் வாயிலிருந்து புறப்பட்டன. பிக்ஷு திகைத்துப் போனார்; தவறாக எதையோ சொல்லி விட்டோம் என்ற உணர்ச்சியினால் ஏற்பட்ட தடுமாற்றத்துடன், “ஆம், சிவகாமி! நான் உனக்குப் பெருந் தீங்குதான் செய்து விட்டேன். எல்லாம் விவரமாகச் சொல்ல வேண்டும். அவசரமாக இரண்டொரு வார்த்தையில் சொல்லக்கூடிய விஷயம் அல்ல. தயவு செய்து சற்றுச் சாவதானமாக உட்கார்ந்து கேள்!” என்றார்.

“ஐயா! விவரமாக எல்லாம் சொல்லுவதற்கு முன்னால் ஒரு விவரம் சொல்லும். நீர் யார்? கருணாமூர்த்தியான கௌதம புத்தரின் சங்கத்தைச் சேர்ந்து சர்வ பரித்யாகம் செய்த துறவியா? அல்லது வஞ்சக நோக்கத்துடன் காவித் துணி வேஷம் தரித்த சளுக்க குலத்துச் சக்கரவர்த்தியா? சிற்ப சித்திரக் கலைகளிலும் பரதநாட்டியக் கலையிலும் உண்மை அபிமானங் கொண்ட பரதேசியா? அல்லது ஓர் ஏழைச் சிற்பி மகளைக் கெடுப்பதற்காகப் பிக்ஷு வேஷம் பூண்ட இராவண சந்நியாசியா? நீர் யார்? நாகநந்தியா? புலிகேசியா?” இவ்விதம் கேட்டுச் சிவகாமி நிறுத்தியபோது, வானமுகட்டில் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை வரையில் அதிர்ந்து நடுங்கும்படியாக மின்னல் மின்னி இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது.

இவ்வளவு இடி மின்னல்களும் நாகநந்தியின் முகபாவத்தில் எவ்வித மாறுதலையும் உண்டு பண்ணவில்லை. அவர் அதிசயமான அமைதியுடன், “அம்மா சிவகாமி! உன்னுடைய சந்தேகங்களுக்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. ஆனால், உண்மையிலேயே நான் உலகப் பற்றறுத்த புத்த பிக்ஷுதான். உன்னுடைய பரத நாட்டியக்கலைக்கு என் உள்ளத்தைப் பறி கொடுத்தவன்தான். விலங்கு இனத்தைச் சேர்ந்த மக்களின் முன்னால் தெரு வீதிகளில் உன்னை நடனமாடச் செய்த நிர்மூடப் புலிகேசி நான் அல்ல. பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தினால் அவனோடு உடன் பிறந்த துரதிருஷ்டசாலி நான். முன்னொரு சமயம், இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் என் தம்பி புலிகேசியைக் கொலைகாரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக அவனுடைய உடையை நான் அணிந்து நடித்தேன். மறுபடியும் இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின் உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவ்விதம் செய்தேன். ஆம், சிவகாமி காஞ்சிக் கோட்டைக்கு வெளியே காட்டின் நடுவே எனக்கு முன்னால் நீ கைகூப்பி வணங்கி, ‘என் தந்தையைக் காப்பாற்றுங்கள்!’ என்று வேண்டிக் கொண்டாய். அதை நிறைவேற்றுவதற்காகத் துறவியின் காஷாயத்தைக் களைந்து விட்டுச் சக்கரவர்த்தியின் ஆடைகளை அணிந்து கொண்டேன்….”

சிவகாமி பரபரப்புடன் பிக்ஷுவின் அருகில் ஓடிவந்தாள். மண்டியிட்டுக் கை கூப்பிய வண்ணம், “சுவாமி! இந்த அபலைப் பெண்ணின் ஆத்திர மொழிகளை மன்னித்து விடுங்கள். என் தந்தையைத் தாங்கள் காப்பாற்றினீர்களா? அவர் உயிரோடிருக்கிறாரா? எங்கேயிருக்கிறார்? எப்படியிருக்கிறார்?” என்று அலறினாள். “அம்மா! உன்னுடைய தந்தையின் உயிரைக் காப்பாற்றினேன். உனக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். கொஞ்சம் அமைதியாக உட்கார்ந்து கேட்டால் விவரங்களும் சொல்கிறேன்” என்றார் பிக்ஷு.

சிவகாமி உட்கார்ந்தாள்; புலிகேசியைப் போல் வேஷம் தரித்துச் சென்று, கையும் காலும் வெட்டப்படுவதற்கிருந்த ஆயனரைக் காப்பாற்றியதையும், ஆனால், அவர் தவறி மலை மீதிலிருந்து கீழே விழுந்ததையும், அதனால் கால் முறிந்ததையும், உணர்விழந்த நிலையில் அரண்ய வீட்டுக்குக் கொண்டுபோய் அங்கு அவருக்கு உணர்வு வந்த பிறகு விடைபெற்று வந்ததையும், புத்த பிக்ஷு சொல்லி வந்தபோது சிவகாமிக்கு அவரிடம் எல்லையற்ற நன்றி உணர்ச்சி உண்டாயிற்று. தான் அவரைக் குறித்துச் சந்தேகித்ததெல்லாம் எவ்வளவு தவறு என்று அடிக்கடி நினைத்துப் பச்சாத்தாபப்பட்டாள். நீர் ததும்பிய கண்களினால் பிக்ஷுவைப் பார்த்துச் சொன்னாள்; “சுவாமி! என் அருமைத் தந்தையைக் கொடிய தண்டனையிலிருந்து மீட்டு அவருடைய உயிரையும் காப்பாற்றிய தங்களுக்கு என் ஆயுள் உள்ள வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அப்படியிருக்கும் போது தாங்கள் இங்கு வந்ததும் என்னிடம் மன்னிப்புக் கேட்டீர்களே, அது ஏன்? தங்களை அநியாயமாகச் சந்தேகித்ததற்காக நான் அல்லவா தங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்! சளுக்க சக்கரவர்த்தியும் தாங்களும் ஒருவரேதான் என்று தவறாக எண்ணியதனால், தங்களைப் பற்றி அநியாயமாகச் சந்தேகப்பட்டேன். என்னை இந்த வாதாபிக்கு அழைத்து வந்தவரும் நாற்சந்தியில் நடனமாடச் செய்தவரும் தாங்கள்தான் என்று எண்ணிக் கோபம் கொண்டிருந்தேன். சுவாமி! என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று சிவகாமி கூறியபோது, அவளுடைய கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகியது.

“சிவகாமி! நான் உன்னை மன்னிக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையிலே நீ தான் என்னை மன்னிக்க வேண்டும். உனக்கு நான் பெரிய துரோகம் செய்திருக்கிறேன். இன்று இந்தத் தூரதேசத்தில் நீ தன்னந்தனியாகச் சிறைப்பட்டிருப்பதற்குக் காரணம் நான்தான்! என்னை மன்னித்துவிடு!” இவ்விதம் புத்த பிக்ஷு உணர்ச்சியினால் கம்மிய குரலில் கூறிய போது, சிவகாமி தன் கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நாகநந்தியின் முகத்தை வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தாள்.

“ஆம், சிவகாமி! நான் சொல்வது சத்தியம், வாதாபிச் சைனியம் காஞ்சியின் மீது படையெடுத்து வருவதற்கே காரணமாயிருந்தவன் நான்தான். என் சகோதரன் புலிகேசிக்கு முதலில் அந்த உத்தேசம் இருக்கவில்லை. வாதாபிச் சைனியம் முழுவதும் வேங்கியை நோக்கிப் போவதாயிருந்தது. வாதாபிச் சைனியத்தை இரண்டாகப் பிரித்துப் புலிகேசியைக் காஞ்சிக்கு விரைந்து வரும்படி கூறியவன் நான்தான். வேங்கி ராஜ்யத்தின் மீது படையெடுக்கத் தம்பி விஷ்ணுவர்த்தனனை அனுப்பினால் போதும் என்றும் எழுதினேன்… அதன் பலன் என்ன விபரீதமாயிற்று, தெரியுமா? விஷ்ணுவர்த்தனனுடைய பத்தினி இன்று விதவையாகியிருக்கிறாள். அவளையும், அவளுடைய சின்னஞ் சிறு புதல்வனையும் இன்றைய தினந்தான் இந்நகரில் பத்திரமாய்க் கொண்டு வந்து சேர்த்தேன்…” “சுவாமி! இத்தனை நாளும் இந்த நகரில் தாங்கள் இருக்கவில்லையா?” என்று சிவகாமி கேட்டாள். “இல்லை, சிவகாமி! இருந்திருந்தால் உன்னுடைய தெய்வீக நடனக்கலை இப்படி சந்தி சிரிப்பதற்கு விட்டிருப்பேனா? கலை உணர்ச்சியில்லாத நிர்மூடப் புலிகேசி இப்படிச் செய்துவிட்டான்! அவன் இவ்விதம் செய்வான் என்று தெரிந்திருந்தால் வடபெண்ணைக் கரையில் உன்னை அவனிடம் ஒப்படைத்திருக்க மாட்டேன்…..

பிக்ஷு வடபெண்ணைக் கரையைப் பற்றிக் கூறியதும் அன்றொரு நாள் இரவு, சிவகாமி கண்ட கனவுத் தோற்றம் அவள் நினைவுக்கு வந்தது. “வடபெண்ணைக் கரையில் என்னை விட்டு விட்டுப் போனீர்களா? அது எப்படி? உங்களைக் காஞ்சிக்குப் பக்கத்தில் அல்லவா நான் பார்த்து வரம் கேட்டேன்?” என்றாள். “சக்கரவர்த்தி வேஷம் பூண்டு உன் தந்தையைக் காப்பாற்றிய பின் உடனே என் வேஷத்தைக் கலைத்துவிடவில்லை, சிவகாமி! அதே வேஷத்தில் மகேந்திர பல்லவனுடன் போரிட்டேன். மணி மங்கலத்தில் அவனை முறியடித்துவிட்டு உன்னைத் தொடர்ந்து வந்தேன். பொன்முகலி நதிக் கரையில் நீ என்னைப் பார்த்து, சிறைப்பட்ட பல்லவ நாட்டுப் பெண்களையெல்லாம் விடுதலை செய்ய வேண்டும் என்று வரங்கேட்டாய். வாதாபிக்கு நீ மனத் திருப்தியுடன் வருவதாய் இருந்தால் அவர்களை விடுதலை செய்வதாகச் சொன்னேன்; நீயும் சம்மதித்தாய். அப்போது உன்னையும் நான் விடுதலை செய்து உன் தந்தையிடம் சேர்ப்பித்திருக்கலாம். அப்படி நான் செய்யவில்லை; உன்னை வஞ்சித்து வாதாபிக்குக் கொண்டு வந்தேன்!… ஆனால், நான் இல்லாத சமயத்தில் இந்த மூடன் புலிகேசி இப்படி உன்னை அலங்கோலப்படுத்துவான் என்று மட்டும் நினைக்கவேயில்லை. உன்னிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது ஏன் என்று தெரிகிறதா, சிவகாமி!” என்றார் பிக்ஷு.

“தெரிகிறது, சுவாமி! இதற்குமுன் எனக்குக் குழப்பம் அளித்துக் கொண்டிருந்த இன்னும் பல விஷயங்களும் விளங்குகின்றன. ஆனால், ஒரே ஒரு சந்தேகம் மட்டும் இன்னும் தீரவில்லை. எதற்காக இவ்வளவெல்லாம் நீங்கள் செய்தீர்கள்? எதற்காக இவ்வளவு சூழ்ச்சிகளும் பிரயத்தனங்களும் செய்து, இந்த அபலைப் பெண்ணை இங்கே கொண்டு வந்து சேர்த்தீர்கள்? உலகத்தைத் துறந்து பிக்ரு விரதம் பூண்ட தங்களுக்கு இந்த ஏழைப் பெண்ணால் என்ன உபயோகம்?… கால் ஒடிந்து ஆதரவற்றுக்கிடக்கும் என் தந்தையிடமிருந்து என்னைப் பிரித்துக் கொண்டு வந்ததில் தாங்கள் என்ன லாபத்தைக் கண்டீர்கள்? என்ன பலனை உத்தேசித்து என்னை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்?….”

“சிவகாமி! சொல்கிறேன், கேள்! என் சொற்படி காலமல்லாத காலத்தில் காஞ்சி மேல் படையெடுத்த காரணத்தினால் வாதாபியின் வீர சைனியத்தில் பாதிக்கு மேல் அழிந்துவிட்டது. வேங்கியை வென்று சென்ற வருஷம் மகுடம் சூடிய விஷ்ணுவர்த்தனன் அந்த வெற்றியை நிலைநாட்டிக் கொள்ள முடியாமல் மாண்டான். இந்த விபரீதங்களுக்கெல்லாம் காரணமானவள் நீதான்! உன்னை முன்னிட்டுதான் இதையெல்லாம் நான் செய்தேன், ஏன் என்று சொல்லுகிறேன், கேள்!”

இந்தப் பூர்வ பீடிகையுடன் நாகநந்தி பிக்ஷு தமது கதையைக் கூறத் தொடங்கினார். அஜந்தா குகைகளில் தாம் கழித்த இளம் பிராய வாழ்க்கையைப் பற்றிக் கூறினார். அஜந்தா குகைச் சுவரில் தாம் பார்த்த பரதநாட்டியப் பெண் சித்திரத்தைக் குறித்தும், அதைப்பற்றித் தாம் கண்ட மனோராஜ்யக் கனவுகளைக் குறித்தும் சொன்னார். தென்னாட்டின் நிலைமை எப்படியிருக்கிறதென்று அறிந்து கொள்ளத் தாம் யாத்திரை வந்தது பற்றியும், அப்போது ஆயனர் வீட்டில் அஜந்தா சித்திர கன்னிகை உயிர் பெற்று வந்து நடனமாடிய காட்சியைக் கண்டு பிரமித்தது பற்றியும் உணர்ச்சி ததும்ப விவரித்தார்.

“சிவகாமி! அன்று முதல் நான் ஒரு புது மனிதன் ஆனேன். சளுக்க சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தைப் பற்றி அதுவரை நான் கட்டிக் கொண்டிருந்த ஆகாசக் கோட்டைகள் தகர்ந்து விழுந்தன. இந்தப் பரந்த பரதகண்டம் முழுவதையும் புத்த சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்றும், அப்பேர்ப்பட்ட மகா புத்த சங்கத்துக்கு நான் தலைமைப் பிக்ஷு ஆகவேண்டும் என்றும் நான் கொண்டிருந்த மனோரதங்களும் மறைந்தன. ‘சாம்ராஜ்யங்களும் புத்த சங்கங்களும் எப்படியாவது போகட்டும். உன்னை நடனமாடச் சொல்லிப் பார்த்துக் கொண்டே என் வாழ்நாளைக் கழித்து விடுவது’ என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அதற்குப் பிறகு உன்னை எப்படி இந்த வாதாபி நகருக்குக் கொண்டு சேர்ப்பது என்பது ஒன்றே என் மனக்கவலை ஆயிற்று. அதற்காக என்னவெல்லாமோ சூழ்ச்சிகள் செய்தேன்; எத்தனையோ உபாயங்களைக் கையாண்டேன்….”

இப்படிப் பிக்ஷு சொல்லி வந்தபோது, சிவகாமியின் உள்ளத்தில் ஏற்கெனவே குடிகொண்டிருந்த பெருமிதமான கர்வமும் பரிதாப உணர்ச்சியும் சேர்ந்தாற்போல் பொங்கிக் கொண்டு வந்தன. ‘ஆகா! இந்த ஏழைச் சிற்பியின் மகள் காரணமாக இரண்டு பெரிய சாம்ராஜ்யங்கள் சண்டைபோட நேர்ந்ததல்லவா?’ என்ற பெருமித கர்வத்தை அடுத்து, ‘ஐயோ! காஞ்சியிலிருந்து வாதாபி வரும்போது நான் பார்த்த அத்தனை கொடுமைகளும் என் காரணமாக ஏற்பட்டனவா?’ என்ற பரிதாப உணர்ச்சியும் மேலிட்டு வந்தது. “சிவகாமி! உன்னுடைய கலையின் மேல் நான் கொண்ட மோகத்தினால் ஒரு பெரிய யுத்தத்தையே உண்டு பண்ணினேன். பயங்காளியும், கோழையுமான அந்த அற்பன் மாமல்லனிடமிருந்து உன்னைக் காப்பாற்ற இவ்வளவு பிரம்மப் பிரயத்தனங்களும் செய்தேன். ஆனால் அவ்வளவும், இப்போது நிஷ்பலனாயின. நான் இல்லாத சமயத்தில் உன்னைத் தெரு வீதிகளின் நாற்சந்தியில் ஆடச்செய்து, உன்னையும் உன் கலையையும் நிர்மூடன் புலிகேசி கேவலப்படுத்திவிட்டான். சிவகாமி! என்னை மன்னித்துவிடு, நீ பட்ட அவமானத்திற்கும் நீ அடைந்த துன்பத்திற்கும் பரிகாரம் செய்து விடுகிறேன். உன்னை உன் தந்தை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட ஏற்பாடு செய்கிறேன். சக்கரவர்த்தியிடம் போராடி இதற்கு அனுமதியும் பெற்று வந்துவிட்டேன்.”

இதைக் கேட்டதும் சிவகாமி நியாயமாகத் துள்ளிக் குதித்துக் குதூகலமடைந்திருக்க வேண்டுமல்லவா? விதி வசத்தினாலோ அல்லது விசித்திரக் கோணல்கள் நிறைந்த பெண் மனோபாவத்தினாலோ, சிவகாமி அவ்விதம் மகிழ்ச்சியடையவில்லை. மௌனமாகச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள். “சிவகாமி! ஏன் பேசாமலிருக்கிறாய்? எப்போது புறப்படலாம், சொல்! உன்னைப் பல்லக்கில் ஏற்றித் தக்க பாதுகாப்புடன் அனுப்பிவைக்கிறேன். உனக்குப் பணிவிடைப் புரியப் பணிப்பெண்களையும் உன்னைப் பாதுகாப்பதற்கு வீரர்களையும் அனுப்பி வைக்கிறேன். பொன்முகலி ஆறு வரையில் உன்னைக் கொண்டு போய் விட்டுவிட்டு அவர்கள் திரும்புவார்கள்…” என்று புத்த பிக்ஷு கூறி வந்தபோது, அதுகாறும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சிவகாமி சட்டென்று எழுந்து நின்று, ஆவேசம் ததும்பிய குரலில் பின்வரும் பயங்கர மொழிகளைக் கூறினாள்.

“அடிகளே! கேளுங்கள், இந்த வாதாபி நகரத்தை விட்டு நான் எப்போது கிளம்புவேன் தெரியுமா? பயங்கொள்ளி என்று நீங்கள் அவதூறு சொல்லிய வீர மாமல்லர் ஒரு நாள் இந்நகர் மீது படையெடுத்து வருவார். நரிக்கூட்டத்தின் மீது பாயும் சிங்கத்தைப் போலச் சளுக்க சைனியத்தைச் சின்னா பின்னம் செய்வார். நாற்சந்தி மூலைகளில் என்னை நடனம் ஆடச்செய்த பாதகப் புலிகேசியை யமன் உலகத்துக்கு அனுப்புவார். தமிழகத்து ஸ்திரீ புருஷர்களைக் கையைக் கட்டி ஊர்வலம் விட்ட வீதிகளில் இரத்த ஆறு ஓடும். அவர்களை நிறுத்திச் சாட்டையால் அடித்த நாற்சந்திகளிலே வாதாபி மக்களின் பிரேதங்கள் நாதியற்றுக்கிடக்கும். இந்தச் சளுக்கர் தலைநகரின் மாட மாளிகை, கூட கோபுரங்கள் எரிந்து சாம்பலாகும், இந்த நகரம் சுடுகாடாகும். அந்தக் காட்சியை என் கண்ணால் பார்த்துவிட்டுப் பிறகுத்தான் இந்த ஊரைவிட்டுக் கிளம்புவேன். சளுக்கப் பதர்களை வென்று வெற்றி மாலை சூடிய மாமல்லர் என் கரத்தைப் பிடித்து அழைத்துக்கொண்டு போவதற்கு வருவார். அப்போதுதான் புறப்படுவேன், நீர் அனுப்பிப் போக மாட்டேன். பல்லக்கில் ஏற்றி அனுப்பினாலும் போகமாட்டேன். யானைமீது வைத்து அனுப்பினாலும் போக மாட்டேன்!” இந்தப் பயங்கரமான சபதத்தைக் கேட்ட நாகநந்தியின் முகத்திலே புன்னகை தோன்றியது. தம்முடைய சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி அந்தப் பொல்லாத பிக்ஷு உள்ளுக்குள் உவகை அடைந்தார் போலும்!

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 49
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 51

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here