Home Kalki Read Sivagamiyin Sabatham Part 3 Ch 53

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 53

73
0
Read Sivagamiyin Sabatham Part 3 Ch 53 Free, Sivagamiyin Sabatham is a historical novel. Sivagamiyin Sabatham audiobook, Sivagamiyin Sabatham pdf, Sivagamiyin Sabatham full story
Sivagamiyin Sapatham Part 3 Ch 53 சிவகாமியின் சபதம் மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல் அத்தியாயம் 53: சந்தேகம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 53

சிவகாமியின் சபதம்

மூன்றாம் பாகம்: பிக்ஷுவின் காதல்

அத்தியாயம் 53: சந்தேகம்

Read Sivagamiyin Sabatham Part 3 Ch 53

அமாவாசை அன்று இரவு சிவகாமி தன்னுடைய மாளிகையில் தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தாள். அவளுக்குத் துணையாயிருந்த தோழி நோய்வாய்ப்பட்டிருந்த தன்னுடைய அன்னையைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தமையால், அதை வியாஜமாகக் கொண்டு அன்றிரவு அவளை வீட்டுக்கு அனுப்பி விட்டாள். இப்போது நுந்தா விளக்கு ஒன்றே சிவகாமிக்குத் துணையாக எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய உள்ளமோ பல்வேறு சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது. மாமல்லர் வரப்போகிறார் என்று எண்ணியபோதெல்லாம் அவளுடைய இருதயம், மேலெழும்பி வந்து தொண்டையை அடைத்துக் கொண்டது. ஆத்திரமும் ஆங்காரமும் ஒரு பக்கத்தில் பொங்கின. துக்கமும் ஆர்வமும் இன்னொரு புறத்தில் பெருகின.

மாமல்லரிடம் வைத்த காதலினாலல்லவா இந்தத் துன்பங்களுக்கெல்லாம் ஆளானோம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. தனது நிலைமைக்குகந்த சிற்பியின் மகன் ஒருவனைக் காதலித்துக் கலியாணம் செய்து கொண்டிருந்தால், தான் இந்த அவகேட்டுக்கெல்லாம் ஆளாகியிருக்க வேண்டியதில்லையல்லவா? காடு சூழ்ந்த தனி வீட்டில் வசித்த தன்னை மாமல்லர் ஏன் தேடி வந்து இப்படிப் பித்துப் பிடிக்கச் செய்ய வேண்டும்? அப்படிச் செய்தவர் மண்டபப்பட்டுக் கிராமத்தில் ஏன் தன்னைத் தன்னந்தனியாக விட்டு விட்டுப் போக வேண்டும்? மாமல்லர் மேலுள்ள ஆசை காரணமாகத் தானே காஞ்சிக்கு அவள் வர நேர்ந்தது! மறுபடியும் அவருடைய காதல் காரணமாகத் தானே கோட்டையிலிருந்து சுரங்க வழியாக வெளிவர நேர்ந்தது! ஆகா! தன்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் அவர் தான்! இப்படியாக மாமல்லரிடம் ஒருபுறம் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு வந்தாள் என்றாலும், நேரம் ஆக ஆக, ‘ஐயோ! அவர் வரவில்லையே?’ என்ற ஏக்கமும் ஒருபுறம் அதிகமாகி வந்தது.

அர்த்த ராத்திரியில் சிவகாமி ஆழ்ந்த சிந்தனையிலிருந்த போது திடீரென்று அவள் எதிரில் தாடியும் மீசையுமான முகத் தோற்றமுடைய இருவரைக் கண்டதும் திகிலடைந்தவளாய் நிமிர்ந்து உட்கார்ந்தாள். ஆனாலும் அப்படி வந்தவர்களுடைய முகத்தோற்றம் பயங்கரத்தை விளைவிப்பதாக இல்லை. எப்போதோப் பார்த்த முகங்களாகவும் தோன்றின. “யார் நீங்கள்? இந்த நள்ளிரவு வேளையில் எதற்காக இங்கே வந்தீர்கள்?” என்று அதிகாரத் தொனியில் கேட்டாள். “சிவகாமி! என்னைத் தெரியவில்லையா?” என்று மாமல்லரின் குரல் கேட்டதும், சிவகாமியின் முகத்தில் வியப்புடன் கூடிய புன்னகை மலர்ந்தது.

எத்தனையோ காலத்துக்குப் பிறகு சிவகாமியின் முகத்தில் தோன்றிய அந்தப் புன்னகை அவளுடைய முகத்திற்கு எல்லையற்ற வனப்பை அளித்தது. ஆனால், அந்த முகமலர்ச்சியானது மாமல்லரின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கவில்லை. ‘ஆ! இவள் இவ்விடம் உற்சாகமாகத்தான் இருக்கிறாள்!’ என்ற எண்ணம் அவர் அகத்தில் உண்டாகி முகம் சுருங்கும்படிச் செய்தது. “பிரபு! தாங்கள்தானா?” என்று உணர்ச்சியினால் கம்மிய குரலில் கேட்டுக் கொண்டு சிவகாமி எழுந்தாள். “ஆமாம், நான்தான்! வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையில் வைபோகமாக வாழும்போது பழைய மனிதர்களைப் பற்றி எப்படி ஞாபகம் இருக்கும்?” என்று மாமல்லர் கடுமையான குரலில் கூறினார். அந்த கொடிய மொழிகளைக் கேட்ட சிவகாமி திக்பிரமையடைந்தவள் போல் மாமல்லரைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள். இவர் உண்மையில் மாமல்லர்தானா அல்லது வேஷதாரியா என்று அவளுக்கு ஐயம் தோன்றி விட்டது.

இப்படி ஒருவரையொருவர் வெறித்துப் பார்த்துக் கொண்டு சும்மா நின்றதைக் கவனித்த தளபதி பரஞ்சோதி, அந்தச் சந்தர்ப்பத்தில் தாம் அங்கிருப்பது அனுசிதம் என்பதை உணர்ந்தார். உடனே மாமல்லரின் காதருகில் வந்து, “பிரபு! காலதாமதம் செய்யக்கூடாது! அதிக நேரம் நமக்கில்லை” என்று சொல்லி விட்டு, அப்பால் முன்கட்டுக்குச் சென்றார். பரஞ்சோதி மறைந்த பிறகு மாமல்லர், “ஓகோ! இன்னும் ஞாபகம் வரவில்லை போலிருக்கிறது. போனால் போகட்டும், உன் தந்தை ஆயனரையாவது ஞாபகமிருக்கிறதா, சிவகாமி? ஆடல் பாடல் விநோதங்களில் அவரையும் மறந்து விட்டாயா?” என்றார்.

சிவகாமியின் புருவங்கள் நெறிந்தன, கோபத்தினால் சிவந்த கண்கள் அகல விரிந்தன; இதழ்கள் துடித்தன. உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தையெல்லாம் பெரு முயற்சி செய்து அடக்கிக் கொண்டு, “இளவரசே! என் தந்தை சௌக்கியமாயிருக்கிறாரா? எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்?” என்று கேட்டாள். “ஆம்; ஆயனர் சௌக்கியமாயிருக்கிறார். கால்களில் ஒன்று முறிந்து, ஏக புதல்வியை இழந்தவர் எவ்வளவு சௌக்கியமாயிருக்கலாமோ, அவ்வளவு சௌக்கியமாயிருக்கிறார். ‘சிவகாமி எங்கே? என் அருமை மகள் எங்கே?’ என்று வந்தவர் போனவரையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்; சிவகாமி புறப்படு, போகலாம்!”

சிவகாமியின் கண்களில் நீர் ததும்பியது; ஆயினும் அவள் மாமல்லருடன் புறப்படுவதற்கு யத்தனம் செய்வதாகக் காணவில்லை. “சிவகாமி! ஏன் இப்படி நிற்கிறாய்! உன் தந்தையை உயிரோடு காண விரும்பினால் உடனே புறப்படு!” என்றார் மாமல்லர். இன்னமும் சிவகாமி அசையாமல் சும்மா நின்றாள். “இது என்ன, சிவகாமி! காஞ்சிக்கு வர உனக்கு இஷ்டமில்லையா? ஆகா! அப்போதே சந்தேகித்தேன், அது உண்மையாயிற்று!” என்று மறுபடியும் மாமல்லர் குத்தலாகச் சொன்னார்.

சிவகாமியின் மௌனம் அப்போது கலைந்தது, “பிரபு! என்ன சந்தேகித்தீர்கள்?” என்று கேட்டாள். “அதைப் பற்றி இப்போது என்ன? பிறகு சொல்கிறேன்.” “என்ன சந்தேகித்தீர்கள்! சொல்லுங்கள் பிரபு!” “இப்போதே சொல்ல வேண்டுமா?” “அவசியம் சொல்ல வேண்டும்.” “வாதாபிச் சக்கரவர்த்தியின் மாளிகையில் சுகபோகத்துடன் வாழ்ந்தவர்களுக்கு என்னோடு புறப்பட்டு வர இஷ்டமாயிராது என்று சந்தேகித்தேன்.” இதைக் கேட்டதும் சிவகாமி சிரித்தாள்! நள்ளிரவு நேரத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி மாமல்லரின் காதுக்கு நாராசமாயிருந்தது. சிரிப்பை நிறுத்தியதும் சிவகாமி உறுதியான குரலில் கூறினாள். “ஆம் பல்லவ குமாரா! உங்கள் சந்தேகம் உண்மைதான். எனக்கு இந்த மாளிகையின் சுகபோகத்தைவிட்டு வர இஷ்டமில்லை. வாதாபி நகரை விட்டு வரவும் மனம் இல்லை; நீங்கள் போகலாம்!”

இவ்விதம் சிவகாமி கூறியதும், மாமல்லர் கண்களில் தீப்பொறி பறக்க, “ஆகா பெரியவர்கள் கூறியிருப்பது எவ்வளவு உண்மை!” என்றார். “பெரியவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்?” “ஸ்திரீகள் சபல சித்தமுடையவர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.” “அந்த உண்மையை இப்போது கண்டு கொண்டீர்கள் அல்லவா? போய் வாருங்கள், பிரபு.” “ஆகா! உன்னைத் தேடி நூறு காத தூரம் வந்தேனே? என்னைப் போன்ற புத்திசாலி யார்?” என்று தமக்குத்தாமே சொல்லிக் கொண்டார் மாமல்லர். பிறகு, “சிவகாமி நீ எனக்காக வரவேண்டாம். உன் தந்தைக்காகக் கிளம்பிவா! உன் தோழி கமலிக்காகப் புறப்பட்டு வா! உன்னைக் கட்டாயம் அழைத்து வருவதாக அவர்களிடம் சபதம் செய்துவிட்டு வந்தேன்!” என்றார் மாமல்லர்.

“நானும் ஒரு சபதம் செய்திருக்கிறேன், பிரபு!” “நீயும் சபதம் செய்திருக்கிறாயா? என்ன சபதம்?” “தங்களிடம் எதற்காகச் சொல்ல வேண்டும்?” “சொல்லு சிவகாமி! சீக்கிரம் சொல்!” “சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை; சபல புத்தியுள்ள அபலைப் பெண்ணின் சபதந்தானே?” “பாதகமில்லை, சொல்! நேரமாகிறது!” “இந்த வாதாபி நகரம் தீப்பற்றி எரிந்து, இந்நகரின் வீடுகள் எல்லாம் சாம்பலாவதையும், வீதிகளிலெல்லாம் இரத்த வெள்ளம் ஓடுவதையும், நாற்சந்திகள் பிணக்காடாய்க் கிடப்பதையும் கண்ணாலே பார்த்த பிறகுதான் இந்நகரை விட்டுக் கிளம்புவேன் என்று சபதம் செய்திருக்கிறேன்!” “என்ன கோரமான சபதம்! இப்படி ஒரு சபதத்தை எதற்காகச் செய்தாய் சிவகாமி?”

“பிரபு! இந்த நகருக்கு வரும் வழியில் நான் பார்த்த கோரக் காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்திருந்தால் எதற்காகச் சபதம் செய்தேன் என்று கேட்க மாட்டீர்கள். இந்த வாதாபி நகரின் நாற்சந்திகளிலே தமிழ்நாட்டு ஸ்திரீ புருஷர்கள் கட்டப்பட்ட கரங்களுடனே கொண்டு வந்து நிறுத்தப்பட்டதையும், சாட்டையினால் அவர்கள் அடிக்கப்பட்டதையும், அவர்களுக்கு முன்னால் பல்லவ தேசத்தின் நடன கலாராணி நாட்டியமாடியதையும் தாங்கள் பார்த்திருந்தால், சபதம் ஏன் எதற்காக என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள்.” “சிவகாமி! அதையெல்லாம் நான் நேரில் பார்க்காவிட்டாலும், எனக்குத் தெரிந்தவைதான். இருந்தாலும் நீ இவ்வளவு கடுமையான சபதம் எடுத்துக் கொள்ளலாமா?”

“பிரபு! பல வருஷங்களுக்கு முன்னால், பல யுகங்களுக்கு முன்னால், என்னை இளவரசர் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னார். என்னைத் தமது பட்டமகிஷியாக்கிக் கொள்வதாக வாக்குறுதி கூறினார். என்னை ஒரு நாளும் மறப்பதில்லை என்று வேலின் மேல் ஆணையாக வாக்களித்தார். தாமரைக் குளக்கரையில் பூரண சந்திரனின் நிலவில், ‘இந்த ஜன்மத்திலும் எந்த ஜன்மத்திலும் நீயே என் வாழ்க்கைத் துணைவி’ என்று சத்தியம் செய்தார். அவர் சுத்தவீரர் என்றும், சொன்ன சொல் தவறாதவர் என்றும் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கை காரணமாகவே அத்தகைய சபதம் செய்தேன்!” என்று சிவகாமி கம்பீரமான குரலில் கூறி மாமல்லரை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வை கூரிய வேலைப்போல் மாமல்லருடைய நெஞ்சிலே பாய்ந்து அவரை நிலைகுலையச் செய்தது.

Source

Previous articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 52
Next articleRead Sivagamiyin Sabatham Part 3 Ch 54

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here